எழுத்தாளர்கள்

Monday, October 26, 2020

எழுத்தாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் 17 பாடசாலைகள் விரைவில் மீள இயங்கவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் ஆரம்பிக்கப்படாமலுள்ள 17 பாடசாலைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலுள்ள 17 பாடசாலைகளின் புனர்நிர்மானப்பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில் இவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 84 பாடசாலைகள் மீள இயங்கி வருவதாகவும், இப்பாடசாலைகளில் 26 ஆயிரத்து 649 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும், ஆயிரத்து 494 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக 150 முஸ்லிம் மக்கள் புத்தளத்திலிருந்து வருகை.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக புத்தளத்திலிருந்து ஒரு தொகுதி முஸ்லிம் மக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளனர். முதற்கட்டமாக 150 முஸ்லிம் குடும்பத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் சில தினங்களில் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்த முதற்கட்ட குழுவில் யாழ். மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ. பஷீரும் இடம்பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வசித்து வந்த இம்மக்கள் ‘வளமான சிறீலங்காவைக் கட்டியெழுப்புவோம்’, என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான செயலமர்வு.

சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பது தொடர்பாக நேற்று செவ்வாய் கிழமை மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு டேபோ மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் சுசந்த ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேசச்செயலர்கள் மற்றும், சமய சமூகத்தலைவர்கள் ஆகியோர், கலந்து கொண்டனர்.

சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதன் ஒரு கட்டமாகவே இவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அண்மைக் காலமாக பெய்து வரும் கடும்மழை காரணமாக வடபகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் இத்தகவலைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாவனைப் பொருட்களடங்கிய நிவாரணப் பாதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிவாரணப் பொதி ஒவ்வொன்றும் 4ஆயிரத்து 500 ரூபா பெறுமதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வடபகுதிக்கு சென்று நேரில் இவற்றை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி இறுதிக்கட்டப் போரில் திறமையாக பணியாற்றிய படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு.

வன்னியில் இறுதிக்கட்டப்போரில் ஈடுபட்ட படைவீரர்களில் ஆயிரம் பேருக்கு நேற்று செவ்வாய் கிழமை பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்டப் போரில் மிகவும் திறமையாக செயற்பட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படைவீரர்களுக்கே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத்தைச்சேர்ந்த 680 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 170 பேருக்கும், விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும், பொலிஸ் துறையைச் சேர்ந்த 65 பேருக்குமே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் – புலி ஊடகங்கள் (1) ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Orupaper_Titleஇடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந்த தகைமை யவர்
                       (குறள் 447)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சியும் அழிவும் பல்வேறு காலகட்டங்களில் நியாயமான விமர்சனங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வந்ததுடன் எவ்வாறான அணுகுறைகள் தவறானவை என்பதும் எவ்வாறான அணுகுமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மிகத் தெளிவாகவே சுட்டிகாட்டப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்களை எல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது என்றும் அவ்வாறான விமர்சனங்களை வைத்தவர்களை எல்லாம் துரோகிகளாக முத்திரை குத்தி ஒதுக்குவதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் முன்நின்றன.

இந்த ஊடகங்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் கேள்வியோ விமர்சனமோ இல்லை என்பதல்ல. ஆனால் கேள்வியை எழுப்பினால், விமர்சனத்தை முன் வைத்தால், எங்கே தங்களை ‘கழற்றி’ விடுவார்கள், தங்கள் பிழைப்பு படுத்துவிடும் என்ற பயம். இந்த ஊடகங்களும் கட்டுரையாளர்களும் செய்தது முற்று முழுதான ஊடக விபச்சாரம். இந்த ஊடகங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக்கொண்ட இவர்கள், தாயக மக்களின் பெருமூச்சில் குளிர்காய்ந்தனர். அங்கு நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றையும் காசாக்கிக் கொண்டனர். அதற்காக தங்களை புலியாக்கிய பச்சோந்திகள் இவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத எந்தவொரு அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு எதிரான அல்ல ஆதரவு இல்லாத எந்தவொரு அமைப்பையும் அவர்கள் இயங்க அனுமதிக்கவில்லை. தங்களுக்கு ஆதரவான அமைப்புகளையும் அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலை இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர்கள், ஆயுதம் தரிக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும். ஒரு பேப்பர், ஈழமுரசு, தமிழ் கார்டியன், ரிரிஎன் (ஜிரிவி), ஐபிசி (ஐஎல்சி) போன்றனவும் இணையங்களும் இதில் முன்னின்றன.

தங்களுக்கு எதிரானதும் ஆதரவு இல்லாததுமான அமைப்புகளை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளும் வெகுவிரைவிலேயே, அதே அமைப்பைச் சார்ந்தவர்களாலேயே வீழ்ச்சி அடைந்து. அதன் தலைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர் நாடுகளில் 300 மில்லியன் டொலர்கள் வரை ஆண்டு வருமானத்தைக் கொண்ட 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்கள் மே 18 2009ல் காணாமல் போனது. இதற்கு மேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் எப்படியானவர்கள் இருந்தனர், உள்வாங்கப்பட்டனர் எனபதற்கு விளக்கம் அவசியமில்லை. (லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி விடயங்களுடன் தொடர்பு உடையவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டு உள்ளது. மேலதிக தகவல் வைத்துள்ளவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும். வெகுவிரைவில் தேசம்நெற் இல் இப்பட்டியலைக் காணலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய வீழ்ச்சிக்கு மாத்தையா, கருணா பிளவு மட்டும் காரணமல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுக்குப் புலம்பெயர்ந்த பல பச்சோந்திகள் தங்கள் சுயலாப நோக்கங்களுக்காக, புலித்தோல் அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளிலும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறான கட்டமைப்புகளில் இந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் முக்கியமானவை. இந்த ஊடக ஒட்டுண்ணிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவான அத்தனை சிந்தனைகளையும் விவாதங்களையும் ஓரம்கட்டி ‘ஜிஞ்சா’ கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்து, உடுக்கடித்து உடுக்கடித்து புலியை முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டனர்.

இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் உணர்வாளர்களோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உணர்வாளர்களோ அல்ல. தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்கள் சொந்த லாபங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியிலும், அழிவிலும், வன்னி மக்களுடைய அழிவிலும் இவர்களுடைய கரங்கள் இரத்தம் தோய்ந்தவை. இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய எதிரி. ஆனால் அவர்களுடன் கூட இருந்த புலித்தோல் போர்த்திய இப்பச்சோந்திகள் கூட இருந்தே குழி பறித்த மோசடியாளர்கள்.

இவர்களைப் பற்றி தொண்ணூறுக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.  கேணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதிலும் வேறுபல படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் தொடர்பில் அவருக்கு இருந்த பலவீனமே அவருடைய கால் கைக்குண்டில் பறிபோனதற்குக் காரணம். லண்டன் வந்திருந்த வேளையில் அவருடைய மரணத்துக்கு அண்மையாக சில மாற்றங்கள் அவரிடம் இருந்தது. கிட்டு லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவத்தில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் கூட்டி ஒரு கூட்டம் வைத்தார். அதற்கு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். கிட்டுவினால் சித்திரவதைக்கு உட்பட்டவர்களும் வந்திருந்தனர்.

கிட்டுவின் கவனத்தை ஈர்க்க பலர், சிலரை தமிழினத் துரோகிகள், புலிகளுக்கு எதிரானவர்கள் என முண்டியடித்துக் கொண்டு வசைபாடிக் கொண்டிருந்தனர். கிட்டு அனைத்தையும் செவிமடுத்துவிட்டுச் சொன்னார் “ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக எழுதினால் அதில் எமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்டவரின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று எமக்கு தெட்டத்தெளிவாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரை யார் ஆபத்தானவர்கள் என்றால் எம்மைத் துதிபாடிக்கொண்டு, எமக்கு விசுவாசமானவர்கள் போல் நடித்துக் கொண்டு தமது சொந்த அபிலாசைகளை எம்மை வைத்துக் கொண்டு நிறைவேற்றுபவர்கள் தான் எனக்கு கவலை அளிக்கின்றது” எனக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அன்று கிட்டு கூறியது இன்றும் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது. புலி ஊடகங்களுக்கு குறிப்பாக ஒரு பேப்பர் கோஸ்டிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
                      (குறள் 448)

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு இடித்துக் கூறும் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டி வழிபடுத்துவோர் அவசியம். அவ்வாறான ஆலோசனையைப் பெற்று திருத்திக் கொள்ளும்போது அவர்கள் நல்லமுறையில் நிர்வாகத்தை ஆட்சியை நடத்த முடியும். ஆனால் அவ்வாறு இடித்துரைப்பவர்கள் இல்லையாயின் பகைவரின்றியே அரசு கெடும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலும் மேலேயும் குறிப்பிடப்பட்டுள்ள இரு குறள்களும் இதனையே விளக்குகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடிப்பாரையாக இருந்து குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் தாங்களும் இடிப்பாரையாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிப்படுத்தவில்லை. இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்திருந்தால் புலிகளுக்கு கசப்பான விடயங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை வழிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு வழிப்படுத்த முயன்றவர்களையும் அதனைச் செய்ய விடவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஊடகங்களால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைக்குள் சிக்கி வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கப்பட்டனர். இந்தப் புலி ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இருந்த உறவு ஊடக விபச்சாரமே.

11 – 17 டிசம்பர் ஈழமுரசு பத்திரிகையில் இருந்து: ”….. அண்மையில் பிரித்தானிய வெளியிட்ட காணொளி ஆவணத்தில் காணப்படும் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி ரமேஸ்க்கு கொடுக்கப்பட்ட பணியும் அதுதான். அதாவது இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய உத்திகள் என்பது ஸ்ரீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்க வைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது…..

தான் அவமானப்படுத்தப்பட்டு கோரமாகக் கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார்.

….. நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப் போர் எனவும் அதில் 50000ற்கும் மேற்பட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப் புலிகள் முன்னரே எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் அவர்களின் கணிப்புகள் இதுதான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை.”

ஈழமுரசு என்ன சொல்ல வருகிறது. தேசியத் தலைவரின் போரியல் வழிகாட்டலில் போரிட்டோம். தலைவரின் இராணுவத் தந்திரோபாய வழிகாட்டலில் பின்வாங்கினோம். தலைவரின் வியூகத்தில் உள்ளுக்கு விட்டு அடித்தோம். பிறகு தலைவனின் கட்டளையை ஏற்று கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றோம்.

ஈழமுரசு ஒரு பேப்பர் மற்றும் புலி மீடியா,
ஐயாமாரே அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே உந்தத் தலைவன் உதை ஒரு மாசத்துக்கு முதல் தன்னும் சொல்லி இருந்தா எத்தினை ஆயிரம் உயிர்கள் பிழைச்சு இருக்கும். நாங்கள் சொன்னம் துரோகிகள் நீங்கள் கேக்கமாட்டியல். நீங்கள் உங்கட மீடியாக்கள் எல்லாம் காவடி எடுத்தியளே சிவாஜிலிங்கம் அந்தாள் மூன்று மாதத்துக்கு முதல் சொல்லிச்சே. கேட்டியளோ. நாசமாய் போவாரே உங்கட சொந்தப் பிள்ளையளா இருந்தால் இப்பிடியா செய்வியல்? அந்த வன்னிச் சனம் எல்லாம் வெள்ளைக் கொடியோட புலிகளைத் தாண்டிப் போக சுட்டுக் கொன்றான்கள். தப்பிப் போக நிண்ட சனத்தை செல் அடிச்சு கொன்றியளே. அப்பிடிப் போன சனத்தை கூச்சமில்லாமல் துரோகி என்றியள். சிங்கள இராணுவத்தை எதிரிப்படை என்று சனத்துக்கு தெரியும். ஆனால் 300 000 வன்னி மக்களை மந்தைகளாக அடைத்து வைத்து எதிரியை வைச்சு 50 000 சனத்தை கொன்று அதை வைச்சு மனித உரிமை அரசியல் செய்கிறம் என்று சொல்லுறியளே இதைவிட ஒரு பொறுக்கி அரசியல் உலகத்தில எங்கேயும் நடகேல்லை.

தளபதி ரமேஸ் மட்டுமல்ல தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்.

இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி மாயைவலை கட்டமைத்து அவர்களே தங்கள் பலம், பலவீனங்களை அறிய முடியாத அளவுக்கு அவர்களை உசுப்பேத்திய ஜம்பவான்கள் இந்த ஒரு பேப்பர் மற்றும் புலித்தோல் போர்த்திய பச்சோந்திகள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அழிக்கவில்லை அவர்களுக்காக வன்னி மக்களையும் அழித்து, தங்கள் சுய இருப்பையும், சுயலாபத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் மே 18 2009 வரை எழுதி வந்த பொய், புரட்டுக்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து, அவர்களுடைய ஒவ்வொரு செய்தியும் கட்டுரைகளுமே அம்மணமாகி உள்ளது. ஆனாலும் தங்கள் சுய இருப்பையும் எதிர்கால சுயலாபத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைகளை மறைத்து தொடர்ந்தும் மாயைகளையே கட்டமைக்கின்றனர்.

மற்றையவர்களை ‘பொறுக்கிகள்’, ‘நக்குபவர்கள்’ என்றும் விமர்சிக்கும் இவர்கள், தங்கள் ‘மேதகு தேசியத் தலைவர்’ இலங்கை இராணுவத்தின் பூட்ஸ்களை நக்குகின்ற நிலைக்கு தள்ளியவர்கள் என்பதனை வரலாறு குறித்துக் கொள்ளும்.

இன்னும் தொடரும்…..

(அடுத்த பாகத்தில்: ஒரு பேப்பர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் ஸ்ரீபார்த்தீபன் (பார்த்தீபன்), பொறுப்பாசிரியர் கோபால் தேவதாசஸன் கோபிரட்ணம் (கோபி), ஆசிரியர் குழு மன்மதக்குஞ்சு இரவி அருணாச்சலம், சாந்தி வவுனியன், சுகிர்தகலா கோபிரட்ணம், தமிழ் உணர்வாளரும் சீலை வியாபார நிபுணருமான சிவானந்த சோதி ஆகியோருடைய அரசியல் பற்றி அலசி ஆராயப்படும்.)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவருமே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது என கடந்த சனிக்கிழமை பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இதற்காக இருதரப்பிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தங்கள் சார்பில் மூவரைத் தெரிவு செய்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பிலும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரு இறங்குதுறைகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன.

புனர்நிர்மானம் செய்யப்பட்ட காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய இரு இறங்குதுறைகளும் மக்களின் பாவனைக்குத் விடப்படவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி வைபவ ரீதியாக இப்பாதைகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட வுள்ளதாகவும், இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனத்தின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவ்விரு இறங்குதுறைகளும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்துள்ளார். இதன்படி சிறு வீதிகளும் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள வீதிகள் துரிதகதியில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்.ஸ்ரான்லி வீதி இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வருடங்களின் பின் களுவாஞ்சிக்குடியில் நீதவான் நீதிமன்றினை இயங்கச் செய்ய நீதிஅமைச்சர் இணக்கம்

களுவாஞ்சிக்குடியில் 26 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தை இயங்கச் செய்வதற்கு புதிய நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்நீமன்றம் யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. இந்த நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றினை மீண்டும் இயங்கச் செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.