எழுத்தாளர்கள்

Saturday, January 23, 2021

எழுத்தாளர்கள்

காணாமற்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காணாமற் போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பிரதேசசெயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மேலதிக பதிவாளர் நாயகம் என். சதாசிவம் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த போர்க்கால சம்பவங்களின் போது காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு நடாளுமன்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது சட்டநடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதும் அது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசு வெளியிடும். அதனைத் தொடர்ந்து விரைவில் காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொள்வது பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாழ், முல்லை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

santira_sri.jpgயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிருத்தித் திட்டங்களுக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ்விரு மாவட்டங்களிலும் 115 உள்ளூர் வீதிகள் 39 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும், கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச சபைக் கட்டடங்களும் இந்நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இன்று கடமைகளைப் பொறுப்பெற்றார்.

புதிய நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பதவியேற்றுள்ளார். இன்று திங்கள்கிழமை காலை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இக்கைதிகளின் விடுதலை குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இன்று முதல் நீதிஅமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறினார். நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திருடர்களால் தொல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்ள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கதவுகள், யன்னல்களற்ற நிலையில் காணபடுவதாலும் பல வீடுகள் முற்றாக சேதமடைந்து தற்காலிக வீடுகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையிலும் திருடர்கள் இரவு நேரங்களில் அவர்களின் உடமைகளை திருடிச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளில் அண்மைய நாட்களாக சைக்கில்கள். மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகள் பல திருடர்களால் களவாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிப்பதாகவுள்ளது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் நேற்று யாழ்.பொது நூலகத்தின் முன்பாக நடைபெற்ற உழவு இயந்திரங்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தையானது திருப்தியானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்துக்கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்திப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கிருஸ்ணாவிற்கு நேரமின்மை காரணமாக இச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் கிருஸ்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு- இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

sr.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.

Wikramabahu Karunaratnaலண்டன் வந்துள்ள இலங்கையின் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உடனான சந்திப்பு நவம்பர் 28 2010ல் வோல்தம்ஸ்ரோவில் இடம்பெற உள்ளது. இச்சந்திப்பை தேசம், ASATiC என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மே 18 2009ற்குப் பின்னான அரசியல் நிலைமைகள் இடதுசாரி முன்னணி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த போதும் தொடர்ச்சியாக தமிழ் தேசியத் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வந்தமை இடதுசாரி முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணியை ஆதரிக்குமாறு மே 18 இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகள் கேட்டுக்கொண்டிருந்தன. (இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!) இது தொடர்பாக இடதுசாரி முன்னணியுடன் இணைந்துகொண்ட எம் கெ சிவாஜிலிங்கம் உடனான சந்திப்பினையும் தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. (ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்)

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து இருந்தனர். தங்கள் அரசியல் முடிவுகள் மண்கவ்விய நிலையில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிஎப் இடதுசாரி முன்னணித் தலைவருடனான வெளிப்படையான சந்திப்பை Nov 25 2010 ஏற்பாடு செய்திருந்தது. (கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு)

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை வன்னிக்கு அழைத்து மாவீரர் நாளில் உரையாற்ற வைப்பதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே அரசியல் ரிதியான புரிந்தணர்வுக்கு அது வழியேற்படுத்தும் என்பதையும் தேசம் சஞ்சிகைகயில் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை பொறுத்திருந்து ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட அரசியல் ஞானம் பெறாமல் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு புறப்பட்டு உள்ளது தமிழ் தேசியம்.

வோல்தம்ஸ்ரோவில் இடம்பெறும் சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடு எதிர்காலத்தில் தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறான ஒரு உறவை இடதுசாரி முன்னணி வளர்த்துக்கொள்ளும் என்பன போன்ற விடயங்களுக்கு இச்சந்திப்பில் விளக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை இங்கு பதிவிடும் பட்சத்தில் அவற்றை விக்கிரமபாகு கருணாரட்னவின் முன் வைக்கமுடியும்.

நிகழ்வு விபரம்:

இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உடனான கலந்துரையாடல்

November 28, 2010 @ 19:30

 Lord Broke Hall, Shernhall St, Walthamstow, London, E17 3EY

 Joint Invitation: ThesamNet & ASATiC

 T Jeyabalan (07800 596 786), T Sothilingam (07846 322 369)