செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

காணி உரிமை வழங்கும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தை’ ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணம் –  ஒட்டகப்புலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற “உறுமய” காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

 

இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவினால் காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவற்றை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

 

அதற்கமைய வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு சொந்தமான 235 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதோடு, இந்த காணிகள் அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விதை பொருட்களும் வழங்கப்பட்டன.

 

அதனையடுத்து, காணி உரிமை பெற்றவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில், இந்த சந்திப்பின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

 

காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிடுகையில்,

அரச காலத்தில் காணி உரிமை மக்களிடமே காணப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் தரிசு நிலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் காணிகள் அபகரிக்கப்பட்டன. அதன்படி நாட்டின் 80% காணிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அந்த காணிகளுக்கான அனுமதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தாலும் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளின் உறுதிகளை மக்களிடம் மீளக் கையளிக்க எதிர்பார்க்கிறோம். அதனால் அனைவருக்கும் காணி உரிமம் வழங்க தீர்மானித்தோம்.

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்க வேண்டும். அதற்காக உறுமய வேலைத்திட்டம் அண்மையில் தம்புளையில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு சிலருக்கு மாத்திரம் அதன் பலன் கிடைத்திருந்தாலும், ஜூன் மாதமளவில் அந்த வேலைத்திட்டத்தினை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

 

மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகத்தை தெரிவு செய்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த மாகாணம் நவீன விவசாயத்தைப் பெறுகிறது. அதே சமயம் வருமானமும் அதிகரிக்கிறது.

யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இதுவரை 31,000 ஏக்கர் அரச காணிகளையும், 24,000 ஏக்கர் தனியார் காணிகளையும் அரசாங்கம் விடுவித்துள்ளது. மொத்தம் 63,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 1800 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 856 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

2600 ஏக்கர் அரச காணிகளையும் 68 ஏக்கர் தனியார் காணிகளையும் விமானப்படை விடுவித்துள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சில நாட்களுக்கு முன்னர், 101 ஏக்கர் காணி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இன்று 234 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பல கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கு வனப் பாதுகாப்புத் துறையினர் வனப் பாதுகாப்புப் பகுதிகள் என பெயரிட்டிருந்தனர். 1985 வரைபடத்தின்படி, செயற்பாடுகளைத் தொடர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

 

முன்னதாக இந்த இடத்தின் காணி உரிமையாளர்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பலாலி ஸ்மார்ட் விவசாய வேலைத்திட்டத்தை (Palali Smart Agriculture) ஆரம்பித்து வைத்தனர்.

 

இந்த காணிகள் அனைத்தும் நவீன விவசாயத் திட்டத்தில் மீண்டும் உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க முப்படைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக உயர்தர நிறுவனங்களின் பங்களிப்பும் வழங்கப்படுகிறது. மேலும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவும் பெறப்படுகிறது.

 

இந்த காணிகளை ஒதுக்குவதற்கும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பண்ணை இந்த இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், முழு இலங்கைக்கும் முன்மாதிரி பண்ணையாக அது இருக்க வேண்டும்.

 

அத்துடன், வடக்கில் புதிய வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றோம். யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை நாம் தற்போது தீர்த்து வருகின்றோம்.

நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆரம்பித்தோம். அதனுடன் நாம் மட்டுப்படுத்தவில்லை. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். மேலும் அவர்களின் வருமான மூலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, இந்த மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்.

 

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள பாரிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் ஐந்து பத்து வருடங்களில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்கிற்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற நான் அனைவரையும் அழைக்கிறேன் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க எதிர்பார்க்கும் மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

பகிரங்கமாக நீதிமன்றத்தில் சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.

 

இந்த தகவலை அரசியலுக்காக அல்லாமல், மிகவும் நேர்மையுடன் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் !

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

 

மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் – யாழில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 

உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக் கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 

நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை மேற்பார்வை செய்த பின்னர் வைத்தியசாலை பணிக்குழுவினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

 

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) மற்றும் VAMED முகாமைத்துவப் பணிப்பாளர் Paul de Bruin ஆகியோருக்கு ஜனாதிபதியால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

 

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் வட. மாகாண சுகாதார சேவை முன்னேற்றத்தின் மைல்கல்லாகும் என்றும், DRIVE திட்டத்தின் கீழ் அதற்கு அவசியமான கடன் உதவி வழங்கிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 

பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த புதிய வைத்திய வசதிகளை நாட்டின் சுகாதார சேவை முன்னேற்றதுக்காக செயற்திறனுடன் பயன்டபுத்த வேண்டுமென வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

 

இந்த வைத்தியசாலையை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் போது முடிந்த வகையில் ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இங்கு உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) இலங்கை மக்கள் சகலருக்கும் சம அந்தஸ்த்து கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அதனால் நல்லிணக்கமும் மேம்படும் என்பதால் அதற்கான முயற்சிகளை சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னதாக வட. மாகாணத்தின் 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக VAMED நிறுவனம் சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டிருந்ததாகவும், இந்த நான்கு வைத்தியசாலைகளையும் கட்டமைப்பதற்கான செலவு 16 மில்லியன் யூரோவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அந்த தொகையில் 25% ஆன 4 மில்லியன் யூரோ செலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!

வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர்.

இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானிய ஆலயங்களுடன் நெருங்கிப் பணியாற்றிய பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தண்டனையைக் குறைக்க பிரித்தானிய சைவக் கோயில்கள், பக்தர்கள், அறிவுஜீவிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி தண்டனையைக் குறைக்கக் கோரிய போதும் அவருக்கு பின் தண்டனை அதிகரிக்கப்பட்டமையை தேசம்நெற் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாரைத் தொடர்ந்து அவரோடு ஓரே வகுப்பில் கல்வி கற்ற சுப்பிரமணியம் சதானந்தனும் பெண்குழந்தையின் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மூன்று பாலியல் துஸ்பிரயோகக் குற்றவாளிகளும் லண்டனின் ஹரோ – வெம்பிளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. சபாரட்ணம் அருள்சிகாமணி வட்பேர்ட்டில் தற்போது வாழ்ந்தாலும் இவரும் ஹரோவில் நீண்டகாலம் வாழ்ததாக அவருடைய நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். நேரடியான உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் நிகழும் அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில ஆண்கள் சமூக வலைத்தளங்களை பெண்களுக்கு ஆபத்தானதாக மாற்றியிருப்பது தமிழ் சமூகத்தின் பிரச்சினை என்கிறார் தாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்னராஜா. மகளீர் தினத்தையொட்டி அவர் தேசம்நெற்குக்கு வழங்கிய நேர்காணலில் நல்ல குடும்பச் சுழலில் இருந்து வராத ஆண்கள், பாலியல் வறட்சி கொண்டவர்கள் அதனால் வக்கிரமொழிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

லண்டன் ஹரோ வெம்பிளி பகுதியில் வாழ்கின்ற பார் உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன், புலிகளின் கோயிலாக இருந்ததை வெற்றிகொண்ட வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் போன்றோர் தங்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பெண்களைப் பற்றிய அவதூறுகளை பரப்புவதுடன் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் பாலியல் உறுப்புகள் பற்றியும் இவர்கள் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அங்கம்பெறும் சமூகவலைத்தளங்களிலேயே இதனைச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்ததாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புலத்திலும் தாயகத்திலும் நெருக்கடிகளை உண்டுபண்ணும் வகையில் பதிவுகளை கடந்த சிலமாதங்களாகவே பகிர்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணியின் பாலியல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்த புலனாய்வுக்குப் பொறுப்பான சார்ஜன்ட் மார்க் வில்மோர் இவ்வழக்குப் பற்றிக் குறிப்பிடுகையில்: “எனது குழு அண்மைக்காலத்தில் நடக்காத பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்றோம். சம்பவம் நடந்த போது பல்வேறு காரணங்களுக்காக அன்று அவர்கள் தங்களுக்கு நடந்ததை பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், குற்றம் எப்போது நடந்திருந்தாலும் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடந்திருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைத் தீர விசாரிப்போம். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவது என்பது ஒரு போதும் உங்களுடைய தவறு அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த விசாரணைக் காலகட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலோ அவ்வாறாக பாதிக்கப்பட்டது பற்றி அறிந்திருந்தாலோ பொலிஸ்க்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும். “ எனக் கேட்டுக்கொண்டார்.

இதே லண்டன் ஹரோ – வற்போர்ட் பகுதியில் மற்றுமொரு போலிச்சாமியாரின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. லைக்கா சாமியார் என்று லண்டனில் பிரபல்யமான லைக்கா துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமியின் ஆதரவு பெற்ற ஓம் சரவணபவ என்ற கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற ஆசாமி லண்டனில் தமிழர்களின் பணத்தை உண்டியல் இல்லாமலே அள்ளி எடுத்தார். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாத பூஜை செய்தால் அந்த வீட்டு நட்புகள், உறவுகள் எல்லாம் வந்து பணத்தை விசுக்க ஒரு விசிற்றுக்கு ஓரிரு மணித்தியாலத்தில் இலங்கை ரூபாயில் ஒரு கோடி வசூலாகும். பாத பூஜை என்ற பெயரில் இந்த ஆசாமியின் காலைக் கழுவிக்குடிக்கும் பழக்கத்தை தற்போது தாயகத்திலும் பழக்கியுள்ளனர். இந்தப் போலி ஆசாமியை நைநாதீவுக்கு அழைத்து வந்து காலைக் கழுவிக்கு குடிக்க வைத்த கஜன் தற்போது மீண்டும் தாயகம் வந்தள்ளார்.

இளம்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு லைக்கா பிரேமின் பெயிலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலிக்கள் முரளிகிருஸ்ணன் கோஸ்டி தாயகத்தில் வீடுகட்டிக் கொடுக்கிறோம் என்ற பாணியில் புது லைன் ஓடுகின்றனர். லண்டன் வற்போர்டில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடக்க இருக்கின்ற சமயம் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி லண்டன் வறட்போர்டில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள இந்த பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட ஆசாமி புலிக்கள் முரளிகிருஷ்ணனை வீட்டின் முகப்புச் சுவரில் பதித்து அந்த ஆசாமியைக் கடவுளாக்கும் கைங்கரியத்தை கஜன் என்பவரும் அவரது நண்பரும் மேற்கொள்கின்றார்கள். இந்தப் போலிக்கடவுளர்கள் பணம் கொடுத்தாலென்ன, வீடுகள் கட்டிக்கொடுத்தாலென்ன அதனை மறுக்காமல் தாயக மக்கள் வாங்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய சொந்தப் பணம் கிடையாது. பிரித்தானியத் தமிழர்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளையிட்ட பணம். அது தாயக மக்களுக்குச் சேரவேண்டிய பணம். ஆனால் அந்த வீடுகளில் உள்ள பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமியின் உருவப் படத்தை மாட்டாதீர்கள். அதனை உடைத்துவிட்டு உங்கள் மதிப்புக்குரியவர்களின் உருவப்படத்தை பதித்துவிடுங்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டதுடன் ஆயுள் காலத்துக்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற பட்டியலிலும் இவரது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு விரைவில் பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் புலம்பெயர்நாடுகளில் கோயில்கள் என்ற பெயரில் பெரும் உண்டியல் வியாபாரம் நடைபெறுகின்றது. கோயில்களை வைத்து வீடுகட்டுகிறோம் என்று சொல்லி படத்துக்கும் யூரியூப்புக்கும் எவ்விதிகுறைவுமில்லை. உண்டியல் பணத்தில் சாத்திரத்துக்கு வீடும் மிகுதியில் காம விடுதிகளும் அந்தப்புரங்களும் கட்டப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலேயே பெண்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. இனி தாயகத்தில் கேட்கவா வேண்டும். கோயில் ஆசாமிகள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!

மனிதாபிமான உதவிகள் காசாவை சென்றடைவதை இஸ்ரேல் உறுதி செய்யவேண்டும் என அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

அவுஸ்திரேலிய இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

 

நிரந்தர பேண்தகு யுத்தநிறுத்தத்தை உருவாக்குவதற்கு உடனடி யுத்தநிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

இரண்டு நாடுகளும் இன்று கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளன.

 

காசாவில் காணப்படும் பேரழிவு மனிதாபிமான நிலவரம் குறித்து அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கவலை வெளியிட்டுள்ளன.

 

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலை கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரிட்டன் இந்த தாக்குதல் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளதுடன் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளன.

 

அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் வரையறைக்குள் செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவுஸ்திரேலியாவும் பிரிட்டனும் உடனடி யுத்தநிறுத்தம் நிபந்தனையற்ற பயணக்கைதிகள் விடுதலை பொதுமக்களை அனைத்து சந்தர்ப்பத்திலும் பாதுகாத்தல் என்பவற்றிற்கான வேண்டுகோளையும் விடுத்துள்ளன.

ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது என்ன..?

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். குறித்த கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள சட்டமா அதிபர்!

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் நடத்தப்பட்ட மாவீரர்களின் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

 

மாவீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஆனந்த ஜயமானவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இதனைத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச வழக்கறிஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாகவரும் முதலிடத்தில் பின்லாந்து – இலங்கைக்கு எத்தனையாவது இடம்..?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் ‘பின்லாந்து’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

 

இதில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தரவரிசையில் ஒருபடி கீழே உள்ளது.

 

இந்தியா இந்த வருடமும் 126வது இடத்திலும், சீனா 60வது இடத்திலும், நேபாளம் 93வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், மியான்மர் 118வது இடத்திலும், பங்களாதேஷ் 129வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 137வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ‘Sustainable Development Solutions Network’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20) உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆய்வு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க தொடர்ந்தும் பல நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 

குறித்த புத்தகங்கள் இங்கே…

https://www.ethaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=57266