செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம்  இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.

மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள். 2015 ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.

“குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி விநியோகம் நாடு தழுவிய ரீதியில்  நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இலக்கு காலவரையின்றி மானியங்களை நம்பியிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, குடும்பங்களை மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளார்” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மன்னாரின் அபிவிருத்தி தொடர்பில், மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெறுவதற்கும் ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் அதிகமாக மன்னார் மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

வட மாகாணத்தின் போருக்குப் பின்னரான போராட்டங்களை அங்கீகரித்த அமைச்சர், முன்னேற்றத்திற்கான அடித்தளக் கூறுகளாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, நாடு முழுவதும் சமத்துவமான அபிவிருத்திக்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார் என தெரிவித்தார்.

ஜே.வி.பி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன் தலைமையிலான குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இதன் போது தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்திணைக்களத்தின் பிரதி அமைச்சர் ஷன் ஹய்ன் தலைமையிலான குழுவினர் அநுர குமாரவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டன.

தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில்  மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும்  இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷன் ஹய்ன், சீன கம்யூனிஸ கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லின்தோ, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் கவுன்ஸிலர் சென் சியன்ஜியான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களித்தின் பணிப்பாளர் லி ஜின்யன், பிரதி பணிப்பாளர் வென் ஜின், பிரதி அமைச்சின் செயலாளர் ஜின் வன், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் இரண்டாம் செயலர் ஜின் என்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாங் குயு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் தீவிரமடையும் இஸ்ரேலுக்கு எதிரான பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் !

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

அனுரகுமார – சஜித்பிரேமதாஸ இடையே விவாதத்தை நடத்துவதற்கு நாம் தயார் என சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விவாதத்தை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்து அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதத்தை சட்டக்கல்லூரியில் நடத்துமாறு தமது சங்கம் இரு கட்சிகளின் தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாக இலங்கை சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கும் ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்வைக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண !

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் கடமையேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது பொறுப்புக்களை புதிய பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்தார்.

இதன்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிபபிடத்தக்கது.

காணாமல்போன சம்பவங்கள் குறித்த எந்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை – அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் ஒக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல்போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கராணகொட தொடர்புபட்ட 2008 – 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  !

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது.

 

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும்.

உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது.

அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது.

இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.

5,000 ரூபா இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது !

இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நீதிபதி 5,000 ரூபாயினை  இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை  எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் பொலிஸ் காவலில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது இழிவான நடத்தைகள் – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை !

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டறிந்து தண்டிக்க இலங்கை குறைந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம், இலங்கையின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, தமது 2023 அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது இழிவான நடத்தை அல்லது அரசாங்கத்தால் தண்டனை, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள் மற்றும் தன்னிச்சையான கைது அல்லது காவலில் வைத்தல் போன்ற குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

அரசாங்கம் அல்லது அதன் முகவர்கள் தன்னிச்சையான அல்லது சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இந்த ஆண்டில் செய்ததாகப் பல செய்திகள் வந்தன.

 

பொலிஸ் காவலில் பல மரணங்கள் நிகழ்ந்தன, பொலிஸார் சந்தேக நபர்களை அழைத்துச் சென்றபோது பல மரணங்கள் நிகழ்ந்தன. விசாரணையின் ஒரு பகுதியாக குற்றம் நடந்ததாகக் கூறப்பட்டது அல்லது விசாரணையின் போது சந்தேக நபர்கள் பொலிஸாரை தாக்கியதாகவோ அல்லது தப்பிக்க முயன்றதாகவோ கூறப்பட்டது” என்று அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல சந்தேக நபர்களை அரசாங்கம் பிணையில் விடுவித்துள்ளது.

அதே சமயம் ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை, வினோதமான அல்லது இடை பாலின நபர்களின் உரிமைகளை மதிக்கவும், திருநங்கைகளை கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவும் பொலிஸ்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் கைது செய்து தண்டிக்கவும், அரசாங்கக் கொள்கைகள் அல்லது அதிகாரிகள் மீதான விமர்சனத்தைத் தடுக்கவும், PTA, ICCPR சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் ஊழலுக்கு எதிராக தண்டனைகளை சட்டம் வழங்குகிறது, ஆனால் அரசாங்கம் சட்டத்தை திறம்பட செயல்படுத்தவில்லை என்று அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

“அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்த பல அறிக்கைகள் இந்த ஆண்டில் வெளிவந்தன” என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஊழல் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ச்சியான பிரச்சனையாகவே உள்ளது.

 

சர்வதேச நிறுவனங்கள் சுங்க அனுமதியிலிருந்து அரசாங்க கொள்முதல் வரையிலான விடயங்களில் லஞ்சம் கோரியதாக அடிக்கடி முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி குறிப்பிட்டுள்ள, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 25 நபர்களின் வழக்குகளில் இந்த ஆண்டில் சிறிய முன்னேற்றம் இருப்பதாக கூறியுள்ளது.

போதைப்பொருள் கொடுத்து பெண் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் துஷ்பிரயோகம் – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் , பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

 

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் சகோதரன் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலாத்காரமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

 

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து. தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார்.

 

பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.