செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன..?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி ஆராயவுள்ளது.

இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லைஎன தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்ர ரஞ்சித் மத்துமபண்டார மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதற்கான கட்சியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் அவசியம் என்றால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் எனினும் உத்தேச பயங்கரவாத சட்ட மூலத்திற்கு திருத்தங்களுடன் கூட எந்த ஆதரவையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு !

மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை தமது பொறுப்பைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அந்த குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மின் கட்டணத்தை, செலவுக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

நோர்வேயில் பல்வைத்தியராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்துப்பெண் சுட்டுக்கொலை – காதலன் கைது !

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் !

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது.

அதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகம் ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, தேசிய நீரியல் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

“மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது.” – தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கூட்டத்தில் சிவஞானம் சிறிதரன் !

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்தரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான வழி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரே இந்த பாதையை கொண்டு செல்வார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறவுள்ளது. அப்பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றர்.

இந்நிலையில் சனிக்கிழமை (06) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆங்கிலம், மொழி, சட்டம், என்பன ஒருவருடைய ஆற்றலும் திறமையுமாகும். இதனை யாரும் இகழ்ந்து பார்க்கத் தேவையில்லை. ஆனால் ஆங்கிலம், மொழி, சட்டம் போன்றவை என்றால் எமக்கு சேர்.பொன்.இராமநாதன், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், போன்றோரின் காலத்தில் நாங்கள் விடுதலை பெற்றிருக்க வேண்டும். மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா. மன ஒற்றுமையும், ஆற்றலும், தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும், தேசிய விடுதலைக்கான வளி வரைபடத்தையும் சரியாக எவர் கொண்டு செல்கின்றாரோ, அவரை இந்த பாதையை கொண்டு செல்வார்.

மொழியியல் ஒருவருக்கான கொடை. சட்டம் என்பது கல்வி ரீதியாக கிடைக்கின்ற ஆற்றல். ஆனால் மக்களை வழிநடத்துவதற்கு தைரியமும், இனம் ரீதியான சிந்தனையும் இருந்தால் அது ஒரு தலைமைத்துவமாக அமையும்.

எனவே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தித்த எமது கட்சியின் பொதுசபை உறுப்பினர்களிடையே  நான் இக்கட்சியின் தலைவராக வரவேண்டும் என்ற என்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய பெரும்பாலான ஆதரவையும், சம்மதத்தையும் எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அவர்களின் பலத்தோடும், ஒற்றுமையோடும், நடைபெற இருக்கின்ற எமது உட்கட்சித் தேர்தலிலே நான் வெற்றி பெற்று கட்சியின் பொறுப்பை ஏற்று வழிநடாத்திச் செல்வதற்கு நான் தாயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிந்தனர்.

 

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை !

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்தை இலக்காகக்கொண்டு கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்து கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.

குறித்த மகஜர், நேற்றைய தினம் சனிக்கிழமை (06.01.24) யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது.

குறித்த மகஜரில்,

ஜனாதிபதி அவர்களே, மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை.

தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போரினாலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும்.
சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.

வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது.
நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.HC/3861/2007) வழக்கை எதிர்கொண்டு ’15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்’ என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாககக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவது மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் எனவும் அதன் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை, கல்வித்துறை சார்ந்த இளைஞர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 300 பேர் இதில் கலந்துகொண்டதுடன், அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில்களை வழங்கினார்.

மேலும், இதன்போது வட மாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் மற்றும் இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும்  குறைபாடுகள், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் இதன்போது யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ். மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் உள்ளிட்டவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா, முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் மற்றும் கல்விசார் ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஐஸ்கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.

‘meet and greet’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம், திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர்  கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஒரே ஆண்டில் 9 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – 4,100 கோடி ரூபா வருமானம் ஈட்டிய குடிவரவுத் திணைக்களம்!

கடந்த ஆண்டு (2023) 9,10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக குடிவரவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கியதன் மூலம் திணைக்களம் 4,100 கோடி ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் பிரதான அலுவலகம் உள்ளிட்ட பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,500-2,700 வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்தரமுல்லை, வவுனியா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடிவரவு பிராந்திய அலுவலகங்கள் அந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவேளை, கடந்த வருடம் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,387 என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்ற ஆண்டுகளை விட கடந்த ஆண்டு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் – அகிலத் திருநாயகியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது,  அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பதுடன் இவருக்கு கிளிநொச்சியில் இயங்கிவரும் லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையமும் விருதுகள் வழங்கி பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது.” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு  கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  நபர்களை சுயமாக அடையாளப்படுத்தும் நவீன இயந்திரம் ஒன்று முதன் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒரு குற்றச்செயல் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் குற்றச்செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கண்டுப்பிடித்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டை விட்டு   விமான நிலையம் ஊடாகவும், கடல்மார்க்கமாகவும்  செல்கிறார்கள்.

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்ட தரப்பினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவே நபர்களை அடையாளப்படுத்தும் இயந்திரம் சர்வதேச விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எக்காரணிகளுக்காகவும் தற்போதைய செயற்பாட்டை இடைநிறுத்த போவதில்லை.

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதற்கு  கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றார்