செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எனது சகோதரி மரணத்துக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையே காரணம் – சகோதரர் முறைப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ் குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

அதன் போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறே காரணம். இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து எனது சகோதரியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனிநபரின் வாழ்க்கை செலவிற்கு 16,975 ரூபாய் போதுமானது !

நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

 

மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டயானா கமகே

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் களுத்துறை மற்றும் அளுத்கடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை மோசமாக நடத்துவது மற்றும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற இரண்டு சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

 

சில நபர்கள் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையில் ஈடுபடுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

 

அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ்

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதேவேளை, வட மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வட மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” இவ்வாறு வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவினால் நான் ஏமாற்றப்பட்டேன் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;வினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தான்அதிகாரத்திற்கு வந்ததும் 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார் எனினும் அது இடம்பெறவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி என்னை ஏமாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பாரதூரதன்மையை அனைத்து கட்சிகளும் தலைமைகளும் உணர்ந்து இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஷி கேஷ் மூலம் போதைப்பொருள் விநியோகம் – பெண் கைது !

சிலாபத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு ஈஷி கேஷ் மற்றும் வேறு பல முறைகளைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏ.ரி.எம் அட்டைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

முந்தல அகுணவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வயம்ப குமாரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு பயணிக்கு 1800 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சி – உணவக உரிமையாளருக்கு பிணை!

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள Eat Street உணவகத்துக்குச் சென்ற வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

 

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

வெளிநாட்டுப் பயணி ஒருவருக்குச் சந்தேக நபர் கொத்து ரொட்டி ஒன்றை 1,900 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அதனை ஏற்றுக்கொள்ள வெளிநாட்டுப் பிரஜை மறுத்ததையடுத்து சந்தேக நபர் அவரை அச்சுறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு 12 யைச் சேர்ந்த 51 வயதான நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

 

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் வருவதாகவும் அவர் கூறினார்.

 

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில், எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிசார் தாக்குதலால் இளைஞனின் விதைப்பை செயல் இழந்த விவகாரம் – பொலிஸாருக்கு விளக்கமறியல்!

இளைஞன் ஒருவருக்கு விதைப்பை ஒன்றை இழக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

 

இதன்போது, இந்த வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதி மீளப் பரிசீலிக்குமாறும், சந்தேகநபர்களை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மதவாச்சி நீதவான் இமேஷா மதுபானி தர்மதாச உத்தரவிட்டார்.

 

இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கடந்த 7ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பொலிஸின் இரு உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சத்திரசிகிச்சை மூலம் அவரது ஒரு விதைப்பை அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.

 

தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

இந்த வழக்கில் சுயாதீன கண்காணிப்புக் குழுவாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆஜராகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

தனியார் மயமாகும் இலங்கையின் இலவச கல்வி – எச்சரிக்கிறார் ஜே.வி.பியின் திருகோணமலை செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா !

இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிட்ட போது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் காணப்படும் கல்விக் கடன் முறைமையினால் ஏற்பட்ட பாரிய சிக்கல்களை தொடர்ந்து அவர்கள் இலவசக் கல்வி குறித்து கவனஞ் செலுத்தி வருகின்ற இந்நிலையில் இலங்கை அரசு இலவசக் கல்வியினை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் மட்டும் காணப்பட்ட தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வியானது தற்போது முழுமையான கல்வி முறைமையையும் அதாவது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியினைக் கூட ஆகிரமிக்கப்போகிறது அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களது கல்வி நிலை கேள்விக்குறியாக மாறிவிடும்.

இலங்கையில் கல்விக் கொள்கை மடல் எனும் முன்மொழிவு இப்போது இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ளது. அதில் இலவசக் கல்விக்கு மாற்றீடாக கல்விக் கடன் திட்டங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை நீக்கி வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலவசக் கல்வியினை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் தேசியப் பாடசாலை முறைமை முற்றாக நீக்கி மாகாணப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரத்திற்கு கொண்டுவருவதுடன் கல்விக்காக அரசினால் ஒதுக்கப்படும் நிதியானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படக்கூடும் என்பதால் பின் தங்கிய பாடசாலைகள் இதன் மூலமாக முற்று முழுவதுமாக பாதிப்பிற்கு உள்ளாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.