செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் உதவினேன் – ஓமல்பே சோபித தேரர்

அன்றைய தினம் (அரகலய) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை அவருக்கு தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை கோட்டாபய ராஜபக்க்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் கோட்டாபயவுக்கு எதிரானவர்கள் அல்லர். தற்போதுள்ள முறைமைக்கு எதிரானவர்கள்” என கூறிய சோபித தேரர், கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேற்றும் சதி என்ன என்பதை தற்போதைய தலைவரால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

கனேடிய உயர்ஸ்தானிகருடன் அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.

 

இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது.

 

அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

 

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார்.

 

 

யாழ்ப்பாணத்தில் கடத்தி கொலைசெய்யப்பட்ட இளைஞன் – வெளியானது உடற்கூற்று பரிசோதனை !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசிச் சென்றிருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை (12) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, உயிரிழந்த நபரின் உடல்களில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் ஏற்பட்டதாலும், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதாலுமே மரணம் நேர்ந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடமாகாண சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் சந்திப்பு !

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையின் கிராமப்புறங்களை ஆக்கிரமிக்கும் E-Cigarettes !

இலத்திரனியல் சிகரெட்கள் (E-Cigarettes) இலங்கையில், குறிப்பாக கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 500,000 ரூபா பெறுமதியான இ-சிகரெட் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ள நிலையிலேயே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பிரதேசங்களிலும், அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களிலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், அதிகளவில் இ-சிகரெட்க்க்களை பாவனை செய்வது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குணசிறி தெரிவித்தார்.

இந்த இ-சிகரெட்டுகள் படிப்படியாக தொலைதூரப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இ-சிகரெட்கள் ஒன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும், அவை பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச்கள், பென் டிரைவ்கள், பவர் பேங்க்கள் மற்றும் நறுமணப் போத்தல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் குணசிறி மேலும் தெரிவித்தார்.

சாதாரண சிகரெட்டின் கூறுகளைக் கொண்டிருக்காமல், மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி போன்ற பல்வேறு பழங்களின் வாசனையுடன் இருப்பதால், மின் சிகரெட்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு இ-சிகரெட்டிலும் 50,000 முதல் 60,000 பஃப்கள் உள்ளன, அது காய்ந்து போகும் வரை எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் அது மின்னணு முறையில் ரீசார்ஜ் செய்யப்படுவதன் மூலம் இயக்கப்படுகிறது, என்றார்.

இந்த இ-சிகரெட்கள் செயற்கையாக புகையை உருவாக்குவதால், அதிக நச்சுத்தன்மை கொண்டவை, அதிக போதைப்பொருள் மற்றும் அதிக புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவை உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் ஏனைய கடல் வழிகள் ஊடாக இலத்திரனியல் சிகரெட்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கல்வி, பொலிஸ் மற்றும் கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இ-சிகரெட்டுகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டு குழு அட்டகாசம் – 23 வயது குடும்பஸ்தர் பலி – உதவி கேட்டு வந்தவரை விரட்டிய கடற்படை வீரர்கள்!

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 

குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

 

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

 

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

 

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கடற்படை முகாமுக்கு இன்றையதினம் சென்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அந்தவகையில் கிளிநொச்சி பகுதியில் வைத்து நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி மத்தி மற்றும் அராலி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 25, 37, 32 மற்றும் 22 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 20 பேர் வரை பலி !

2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

யுக்திய நடவடிக்கையை மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தும் வகையில், போதைப்பொருள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அழைப்பாளரின் அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் இந்த இலக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு ஹோமாகமையில் அண்மையில் இடம்பெற்றது.

 

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

 

இற்றைவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு காரணமாக நாங்கள் அனைவரும் கண்டுகொண்டிருந்த கனவு கலைக்கப்பட்டுள்ளது.

 

நாங்கள் இதுவரை சிறைப்பட்டிருந்த அரசியல் கட்சிகளை மறந்து எமது பிள்ளைகளுக்காக சுதந்திரமாக மூச்செடுக்கக்கூடிய ஒரு நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்காகவும் உருவாக்கிட திடசங்கற்பத்துடன் அணிதிரண்டுள்ளோம்.

 

உலகின் ஏனைய நாடுகள் பெற்றுள்ள கலாசார மற்றும் சமூக சுதந்திரத்தை நிலவுகின்ற ஊழல்மிக்க அரசியல் முறைமையே இழக்கச்செய்துள்ளது.

இந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழல்மிக்க அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்நோக்கி நகர நாமனைவரும் யதார்த்தத்தில் அணிதிரண்டிருக்கிறோம்.

 

எனினும் இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள்.

 

சம்பிரதாயபூர்வமாக மூதாதையர்களின் மரபுரிமையால் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக பெண்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் தேசிய மக்கள் சக்தியைச்சுற்றி அணிதிரண்டு வருகிறோம்.

 

ஒட்டுமொத்த பெண்கள் தலைமுறையினருக்கும் முன்னணிக்குவர ஊக்கமளித்த, பலம்சேர்த்த, வழிகாட்டிய மற்றும் தலைமைத்துவம் வழங்கிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

 

இதற்கு அப்பால் நாங்கள் எத்தகைய நாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அமைதிநிறைந்த, சகவாழ்வுகொண்ட, சுதந்திரமான கலாசாரத்தை உருவாக்குகின்ற ஆட்சியொன்று எமக்கு அவசியமாகி உள்ளது.

 

அதற்குள்ளே பெண்களாகிய எங்களை அநீதிக்கு, அநியாயத்திற்கு, சமத்துவமின்மைக்கும் இழுத்துப்போடுகின்ற அனைத்து நிபந்தனைகளையும் அகற்றி பொருளாதார நியாயத்தைக்கொண்ட கலாசார சுதந்திரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும்.

 

அத்தகைய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக நாங்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அந்த ஆட்சியை உருவாக்க முடியும். இதுவரை நாங்கள் பயணித்த பாதையில் விரிக்கப்பட்டிருந்த சவால்களை சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே வெற்றிகொள்ளமுடியும்.

 

எமது பிள்ளைகளுக்காக தடைகளின்றி முன்னேறிச்செல்லக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குகின்ற பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுசேராத அனைவரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை ஆரம்பித்தது கல்வி அமைச்சு !

பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 16 வயதுடைய மாணவன் திடீர் நோய் நிலைமை காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

 

மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனை அம்பாறை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

 

எவ்வாறாயினும், வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அண்மையில் அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

 

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

 

இதேவேளை, மரதன் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன்னர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டுமென விசேட வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

“இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவேளை, துரதிர்ஷ்டவசமாக, நீரிழப்பு காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம். தொலைதூரப் போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்று உடல்நிலையை உறுதி செய்து, இல்ல விளையாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற நிலை இருந்தால், பெற்றோர்கள் அதைப் பற்றி கருத்திற் கொள்ள வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும்.”