செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமான மணல் அகழ்வு – பாதிப்பின் விளிம்பில் குளமும் விவசாயமும் !

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில்   மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத  மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை இழக்க நேரிடுவதோடு, இரணைமடு குளத்திற்கும் பெரும் பாதிப்பு  ஏற்படும் என்றும் எனவே குளத்தையும் வயலையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுங்கள் என உரிய தரப்பினர்களிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைமடு குளத்திற்கு கீழ் கோரமோட்டை ஆற்றுப்பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுக்கடங்காது மிக மோசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில்  உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்து எச்சரிக்கை விடும் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகிறது.

இதனால் கண் முன்னே இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பலர் மௌனமாக கடந்து சென்று விடுகின்றனர் எனத் தெரிவித்துள்ள பிரதேசவாசி ஒருவர்

இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களுக்கு பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர்கள், அரசில்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் இதனால் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களால் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதோடு நடவடிக்கை நின்றுவிடுகிறது.

மாவட்ட எம்பியிடம் முறையிட்டால் அவரும் திரும்பி பார்ப்பதாக இல்லை, பொலீஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களிடம் முறையிட்டால் அவர்கள் மணல் அகழ்வோரிடம் எங்களை காட்டிக்கொடுக்கின்றனர். இந்த நிலையில் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !‘

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 10 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யூலியன் அசான்ஜ் – மக்ஸின் குஸ்ஸிநோவ்: ஒருவருக்கு கதாநாயகன் மற்றவருக்கு துரோகி – தொடரும் சர்வதேச படுகொலைகள்!

இவ்வாரம் சர்வதேச அரசியல் சூழலில் மிக முக்கியமான வாரம். சர்வதேச அரசியலில் யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அதன் சாதக பாதகங்களும் அமையும். பல் துருவ அரசியல் வலுப்பெற்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இராணுவ அரசியல் ஆளுமையின் பலம் முன்னைய நிலையிலிருந்து சற்று பலவீனப்பட்டுப் போயுள்ளதன் பின்னணியில் இவற்றைக் காணலாம்.

மேற்குலகின் முழு ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு 53 நாடுகளும் மூன்று நிறுவனங்களும் இணைந்து தொடுத்துள்ளன. பெப்ரவரி 19இல் ஆரம்பமான இவ்வழக்கில் 76 ஆண்டுகள் பாலஸ்தீனிய மண் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் சட்டத்தன்மை பற்றியும் சர்வதேச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு, இஸ்ரேவேலின் ஊழல் குற்றவாளியும் இனப்படுகொலை பிரதமருமான பென்ஜமின் நெதன்யாகு கட்டுப்படப்போவதில்லை.

ஆனாலும் இந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் அமெரிக்க, பிரித்தானிய, மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் துணை போனால் அவர்கள் போட்டிருக்கும் ஜனநாயகப் போர்வை முற்றாகப் பொசுங்கிவிடும். சர்வதேசத்தில் அவர்களும்; கொலையாளிகளாகவும் காட்டான்களாகவுமே பார்க்கப்படும் நிலையுள்ளது. அதனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் தற்போது இஸ்ரேலை சற்று கண்டிக்க ஆரம்பித்துள்ளன. யுத்த நிறுத்தம் என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்த நிலைமை மாறி யுத்த நிறுத்தம் வேண்டும் என்று கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஐநாவில் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்ட உடனடி யுத்த நிறுத்தத் தீர்மானத்தை மீண்டுமொரு தடவை இன்று பெப்ரவரி 20 அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது. பிரித்தானியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு இனமே அழிக்கப்பட்டு வருகின்ற போதும் மனித உரிமைகள் பற்றி மூச்சுக்காட்டாமல் இருந்த அமெரிக்க நேட்டோ அணி ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பெப்ரவரி 17இல் சிறையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனது. மேற்கு நாட்டு ஊடகங்கள் அனைத்தும் ரஸ்யாவை ‘பறையா ஸ்ரேட் – paraiah state’ என்று கூப்பாடு போட்டன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்குப் பற்றி மௌனமாக இருக்கின்றன. ஆனால் பிரேஸில் ஜனாதிபதி லூல டி சில்வா காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதியோப்பியாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே பிரேஸில் ஜனாதிபதி லூல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அநீதியை இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கின்றது என்றும் அன்று ஹிட்லர் செய்தது ஹொலக்கோஸ்ட். இன்று இஸ்ரேல் செய்வதும் ஹொலக்கோஸட் என்றும் ஒப்பிட்டு பெப்ரவரி 19இல் கருத்து வெளியிட்டார். ஒரு கண்ணியமிக்க அரசுத் தலைவர் இஸ்ரேலை இவ்வளவு பச்சையாகச் சாடியது இதுவே முதற்தடவை. இதே கருத்துப்பட துருக்கியின் ஆட்சித் தலைவர் ஏடவானும் கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரேஸில் – இஸ்ரேல் ராஜதந்திர உறவுகள் அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.

இந்த அமளிதுமளிகள் அரங்கேறுவதற்கு சில தினங்களுக்கு முன் சரியான திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, ரஷ்யரான மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பவர் ஸ்பெயினில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் மீது வாகனத்தையும் ஏற்றியுள்ளனர். ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டரை ஓட்டிச்சென்ற ரஷ்யர் மக்ஸின் குஸ்ஸிநோவ் உக்ரைனில் ஓகஸ்ட் 9, 2023இல் தரையிறங்கி உக்ரைனிடம் இருந்து 500,000 டொலரை சன்மானமாகப் பெற்றார். இதனை மிகப்பெரிய தேசத்துரோகம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்ததுடன் அதற்கான தண்டணை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். கொல்லப்பட்டவர் விளாடிமிர் புட்டினால் சுட்டிக்காட்டப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டரைக் கடத்திச் சென்று கூட இருந்த இரு ரஷ்ய வீரர்களைப் படுகொலை செய்த மக்ஸின் குஸ்ஸிநோவ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு துரோகி உக்ரைனுக்கும் நேட்டோ அணிக்கும் கதாநாயகனாக இருந்து இப்போது தியாகி ஆகிவிட்டார் மக்ஸி;ன் குஸ்ஸிநோவ்.

அலெக்ஸி நவால்னி, மக்ஸின் குஸ்ஸிநோவ் ஆகியோரின் மரணங்கள் பற்றி அவர்களது மனித உரிமைகள் பற்றி நேட்டோ அணி புலம்பிக்கொண்டிருக்கையில் உலகின் மிகப் பிரபல்யமான ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் யை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது பற்றிய வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஊடகவியலாளர் யூலியன் அசான்ஜ்யை விடுவிக்குமாறு கோரிய போதும் அதை எதனையும் பொருட்படுத்தாமல் யூலியன் அசான்ஜை சிறையில் வைத்துள்ளது, தன்னை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காவலாளியாகக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா.

அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைனிடம் பேரழிவு ஆயதங்கள் உள்ளது என அமெரிக்காவும் – பிரித்தானியாவும் கூட்டாகச் சதி செய்து ஈராக்கைத் தாக்கி அந்நாட்டை அதன் எண்ணை வளத்தை அபகரிக்க சின்னனாபின்னமாக்கினர். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களைச் சித்திரவதை செய்தது. இவற்றை அம்பலப்படுத்தியதற்காக தலைசிறந்த ஊடகவியலாளரான யூலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அலெக்ஸி நவால்னி போல் மரணத்தைத் தழுவுவார் என யூலியன் அசான்ஜ் உடைய மனைவி அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு யூலியன் அசான்ஜ்யை படுகொலை செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டை யூலியன் அசான்ஜ்க்கு நீண்டகாலம் தனது தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்த ஈக்குவடோரும் உறுதிப்படுத்தியுள்ளது. யூலியன் அசான்ஜ் ஒரு நாள் அலெக்ஸி நிவால்னி போன்றோ அல்லது மக்ஸின் குஸ்ஸிநோவ் போன்றே ஆகலாம் என்ற நிலையேற்பட்டுள்ளது.

மேற்குலகு விதந்துரைக்கும் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பதெல்லாம் அவரவர் நலன்சார்ந்ததே. “ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி” என்றும் கொள்ளலாம் இல்லையேல் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்றும் கொள்ளலாம்”.

அன்று இனவாத பிரிட்டோரியா அரசோடு இணைந்து நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானியா இறுதியில் அதே நெல்சன் மண்டேலாவுக்கு தன்னுடைய நாட்டிலேயே சிலை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலைக்கு செய்யப்படுவதற்கு ஒத்துழைக்கும் பிரித்தானியா எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரித்தானியா உலகில் மிக மோசமான குரூரமான காலனித்துவத்தை ஈவிரக்கமின்றி விஸ்தரித்த நாடு. ஆனால் அரசியல் சூழல்கள் மாற்றமடையும்போது அதற்கேற்ப மாறி தன்னுடைய குறைந்தபட்ச நன்மதிப்பை முற்றிலும் இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

தற்போது நான்கு மாதம் கழிந்தபின் முன்வைக்கின்ற யுத்தநிறுத்தக் கோரிக்கையும் தன்னுடைய ஜனநாயகப் போர்வை பொசுங்கி தான் அம்பலப்பட்டுப் போவேன் என்ற அச்சமே. அது போல் யுலியன் அசான்ஜ் நாடுகடத்தல் வழக்கில், அவர் நாடுகடத்தப்பட்டால் உலகில் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரும் அடியாக அது அமையும். அது வரலாற்றில் பிரித்தானியாவின் நீதித்துறைக்கு ஏற்படும் மிகப்பெரும் கறையாக அமையும். ஏனைய நாடுகளும் பிரித்தானிய சட்டத்துக்கு இணங்க ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தும்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19)இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் – இருபாலை வீதியில் உள்ள இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் தான் போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,

* 3, 42, 53 மற்றும் 70 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவுடன் ஒத்துப்போகின்றன, மேலும் அவை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

*இருப்பினும், அந்த சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழிந்தபடி திருத்தினால், அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* 4வது ஆவது சரத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருத்தம் செய்யப்பட வேண்டும்.

* 61 (1) சரத்து அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் விசேட பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த சரத்து மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால், அந்த முரண்பாடு நீங்கிவிடும். அதற்கேற்ப, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 72 (2) வது சரத்தும் திருத்தப்பட வேண்டும்.

* 83 (7) சரத்து விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் பிரிவின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் செய்தால் அந்த முரண்பாடுகள் நீங்கிவிடும்.

* மேலும், சட்டமூலத்தின் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, எளிய பெரும்பான்மையால் மட்டுமே சட்டமூலத்தை சட்டமாக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் திர்மானித்துள்ளது.

“பரல் கணக்கில் புலிகளின் தங்கம்” – இரண்டு நாட்கள் தேடிய பொலிஸாருக்கு கிடைத்தது என்ன..?

குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.

 

அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.

இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A 9 வீதி ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டம் !

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இருப்பிடத்தை அறிய வேண்டி ஏழு வருடங்களாக உண்மையைக் கண்டறியும் வேட்கையை நிறைவு செய்யும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி A 9 வீதி ஊடாக டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை பயணித்துள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில், எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள்  நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் சிங்கள மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற காணாமல்போன உறவுகளின் போராட்டத்தில் கலந்துகொண்டவேளை அவர்  இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

மக்கள் பேரவைக்கான இயக்கமாக இன்று கிளிநொச்சியில் ஒன்று கூடி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.  இதுவரை ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தின் மூலம் வடக்கின் தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ரணில் ராஜபக்சவின் மக்கள் விரோத அரசாங்கம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மிதிக்கும் பேரங்களை செய்யும் அநியாய வேலைத்திட்டத்தை செய்து வருகின்றது.  நாங்கள் மக்கள் பேரவைக்கான இயக்கமாகவும் மக்களாகவும் நீதிக்காக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றுபடுவது இன்றியமையாதது.

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ரஸ்ய பிரஜைகள் – மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவீடு !

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருகை தரும் ரஸ்ய பிரஜைகள் பாலியல்தொழிலில் ஈடுபடுவதாக கரிசனைகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில்  இவர்களில் சில பெண் சுற்றுலாப்பயணிகள்  விபச்சாரத்தில் ஈடுபடுவதாக  கரிசனைகள் வெளியாகியுள்ளன.

உள்வருகை விசா இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா சீனா ரஸ்யா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் கொரோனா போன்றவற்றினால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ரஸ்யா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களிற்கு உள்வருகை விசா தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் தனிநபர்கள் இந்த நடைமுறையை துஸ்பிரயோகம்செய்கின்றனர் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு 208 253 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் இவர்களில் சுமார் 32000 பேர் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள்.

இதேவேளை இவர்களில் சிலர் பாலியல்தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.குறிப்பாக கொழும்பில் நட்சத்திர விடுதிகளில் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இரவுவிடுதிகளின் மூலமும் சிலர் முகவர்கள் மற்றும் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தேடிக்கொள்கின்றனர்    மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை அறவிடுகின்றனர் என தெரியவந்துள்ளது.

சில இணையதளங்கள் இது குறித்து விளம்பரங்களை வெளியிட்டுவருகின்றன ரஸ்ய பெண்கள் அதிகளவிற்கு முக்கிய பிரமுகர்களை இலக்குவைத்தே செயற்படுகி;ன்றனர்.

இதேவேளை இந்த விடயத்தை கையாள்வதில்குழப்பங்கள் உள்ளதை குடிவரவுகுடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.