செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கில் 12 மாதங்களில் 50ற்கும் மேற்பட்ட படுகொலைகள் – 129 பேர் கைது !

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 04 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 06 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 04 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 07 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தும் இஸ்ரேல் !

காசாவில் இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல் இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுகெலும்புள்ள தலைவர்களே முதலாளித்துவ சக்திகளின் எதிரி – ஜே.வி.பி பலமான சக்தியாக எழுச்சியடைகிறதா ?

இலங்கையின் அண்மைய கால பொருளாதார நிலை தொடர்பிலும் – அதன் வீழ்ச்சியில் காலனித்துவ காலம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பிலும் – முதலாளித்துவ சிந்தனையுடைய மேலைத்தேய நாடுகள் விடுதலை புலிகளுடன் எவ்வாறான போக்கினை பின்பற்றினர் என்பது தொடர்பிலும் – பொருளாதார நெருக்கடிக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் ஜே.வி.பி எவ்வாறு உருமாறியுள்ளது என்பது தொடர்பிலும் சமகால உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதன் பின்னுள்ள அரசியல் போக்கு மற்றும் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

 

இது தொடர்பான மேலதிக தகவலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவமு்.. !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். – உதய கம்மன்பில

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவரை நாங்கள் நன்கு அறிவோம். உண்மைகளை ஒருபோதும் பகிரங்கப்படுத்தமாட்டார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என நாங்கள் குறிப்பிட்டது அடிப்படையற்றது,நடைமுறைக்கு சாத்தியமற்றது என பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகிறார்.சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு முடியாது.மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணைகளை முன்னெடுத்தததன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று குறிப்பிடுவது தவறு,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைனகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதலை யார் நடத்தியது என்பதை தான் நன்கு அறிவதாக மைத்திரிபால சிறிசேன மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் அந்த தகவலை இரகசியமான அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு குற்றம் தொடர்பிலோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய தகவல் தெரிந்தால் அதனை பொலிஸுக்கு  அறிவிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்திடம் குறிப்பிட முடியாது.நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தும் சந்தேகநபர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதனை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

1979 பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5 ஆவது உறுப்புரையில் ‘ பயங்கரவாத செயற்பாடு தொடர்பான தகவல் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்த நபர் அதனை பொலிஸிற்கு அறிவிக்காமல் இருப்பது  7 வருடகால கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதனை மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்கவில்லை.ஆகவே இவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் ஏழு ஆண்டுகால கடூழிய சிறைதண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். ஆகவே சட்டம் தெளிவாக உள்ளது. மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர் ஒருபோதும் உண்மையை குறிப்பிட மாட்டார்.அமைச்சரவை  அந்தஸ்த்துள்ள அமைச்சரை கைது செய்து பொலிஸ் தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.அதே போல் முன்னாள் ஜனாதிபதியையும் கைது செய்து தனது சுயாதீனத்தை பொலிஸ் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை கொண்டு பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், தகவல்கள் தெரிந்தால் அதனை பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகிறார். குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் ஆகவே மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

திருகோணமலை பெருகலம்பதி ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய புத்த சாசன அமைச்சர் மற்றும் பௌத்த பிக்குமார்களுடன் கலந்துரையாடல் !

ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தை புனர்த்தனம் செய்வது தொடர்பாக 23. 3. 2024 அன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு புத்த சாசன அமைச்சு விதுர விக்கிரம நாயக்க மற்றும் மெரவெவ விகாரையின் விகாரபதி உப ரத்தின தேரர். லங்கா பட்டுனா விகாரையின் விகாரபதி அவர்களும் திருவண்ணாமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த கெட்டியாராச்சி இந்து கலாச்சார அமைச்சின் செயலாளர், திருவண்ணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றுவன் அத்துக் குரலை திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பனிப்பாளர், வெருகல்ல் பிரதேச செயலாளர் பெருகலம்பதி ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் நிர்வாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

உடைந்த நிலையில் காணப்படும் ஆலயத்தை புணர் நிர்மாணம் செய்வது தொடர்பாக இந்தியா அரசுடன் பேசி திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்தது போன்று பெருகலபதி ஸ்ரீ சித்திரவேலாக சுவாமி ஆலயத்தையும் அமைத்து தருவதாக உறுதிமொழி அளித்துள்ளார் அமைச்சர்.

இது சம்பந்தமான நடவடிக்கையை முதன்மை கங்காணம் இராசையா ஞான கணேசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரமேஷ்வரன் தவரூபன் ஆசிரியர் அவர்களும் இணைந்து செயல்பட்டு இந்த விடயத்தை எமது நாட்டின் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமான பணிகள்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

களனி பல்கலைக்கழகத்தில் மாணவன் உயிரிழந்த விவகாரம் – மாணவர்கள் போராட்டத்தில்!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

எவ்வாறாயினும், குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினாலேயே, இந்த மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தே மாணவர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிகரித்த இரசாயன உரப்பாவனையின் விளைவு – இலங்கையில் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை !

கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது .

 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

 

சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பறவையாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத்தியான் என்ற இரசாயனத்தை தெளிக்க ஆரம்பித்ததில் இருந்து சிட்டுக்குருவியின் அழிவு தொடங்கியது, மேலும் 1990 களில் கொசுவர்த்தி சுருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிட்டுக்குருவிகள் அழிந்தன. இந்த கொசுவர்த்திச் சுருள்களில் உள்ள இரசாயனம் பறவைகளின் பெருக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

 

இப்போது சிட்டுக்குருவி மிகவும் அருகிவரும் பறவையாக உள்ளதாகவும் சிட்டுக்குருவியின் அழிவு குறித்து முதலில் இலங்கையில் இருந்தும், பின்னர் இந்தியாவில் இருந்தும் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

 

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிட்டுக்குருவிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட இலங்கை இளம் விலங்கியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிசாலி தயானந்தா தெரிவித்துள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே எமது இலக்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலும் 100ற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளிலும் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

அந்த தொகை போதுமானதல்லவென அந்த சங்கங்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த சமயத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை !

புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் என்பவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், மதம்சார் விடயங்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

 

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோர் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்கவுள்ளனர்.

 

இவ்வாறான போலி தேரர்களின் செயற்பாடுகள் குறித்து பௌத்த மதம் தொடர்பான பல்வேறு அமைப்புகளினாலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு !

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல் 12 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.