வெளிநாட்டுச் செய்திகள்

Tuesday, October 27, 2020

வெளிநாட்டுச் செய்திகள்

“பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை” – பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி !

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (வயது47).  இவர் கடந்த 5-ம் திகதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் தொடர்பான வகுப்பு நடந்த விவாதத்தில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியுள்ளார்.
அப்போது அந்த வகுப்பில் படித்துவந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டக்கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாமுவேலுக்கு பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கையும் வந்துள்ளது. இதற்கிடையில், பள்ளிக்கூடம் அருகே கடந்த 16-ம் திகதி மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும், ’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் துணைநின்று பாதுகாக்கும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.
அதன் பின் பேசிய இம்மானுவேல், ‘ பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. கேலிச்சித்திரங்கள் (நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள்) வெளியிடுவதை கைவிடப்போவதில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு நமது எதிர்காலம் வேண்டும் என்பதால் சாமுவேல் கொல்லப்பட்டார். அவர்களுக்கு நமது எதிர்காலம் ஒருபோதும் கிடைக்காது’ என தெரிவித்தார்.
பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை - அதிபர்  மெக்ரான் - lifeberrys.com Tamil இந்தி
இம்மானுவேல் மெக்ரானின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘மெக்ரான் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே, கீரிஸ்-துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால், எர்டோகனின் கருத்தையடுத்து துருக்கியில் உள்ள தனது தூதரை பிரான்ஸ் திரும்பப்பெற்றுக்கொண்டது. பிரான்ஸ் அதிபர் மீதான துருக்கி அதிபர் எட்ரோகனின் கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இம்மானுவேலின் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் கருத்து ‘இஸ்லாம் மீதான தாக்குதல்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அந்த பத்திரிக்கை கட்டிட வளாகத்திற்கு வெளியே கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. அந்த கொடூர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசிரியர் சாமுவேல் தலைதுண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் சிறுவர் மதப்பாடசாலையில் பயங்கர குண்டுவெடிப்பு – 07 சிறுவர்கள் பலி. 70 சிறுவர்கள் படுகாயம் !

பாகிஸ்தானில் மத பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலுமு் தெரியவருவதாவது,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மத கருத்துக்களை கற்றுகொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மத கல்வி கற்று வந்தனர்.
At least 7 killed, 70 injured in blast at seminary in Peshawar's Dir  Colony: Pakistan Media || பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
இந்நிலையில், அந்த மதபாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மதகல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தன சிறுவர்கள் மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பியோடினர். ஆனாலும், இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர்” – நாசா உறுதி !

இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.
இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா
சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும். சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது. நிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் இரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது.
தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால் அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப் பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனை அடுத்து இஸ்ரேலுக்கு சூடானும் அங்கீகாரம்!

பாலஸ்தீன பிரச்சினை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. எகிப்து, ஜோர்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தன. இந்த நிலையில் படிப்படியாக பல நாடுகள் இஸ்ரேலின் சுதந்திரத்தை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்திருந்தன. இந்த நிலையில் இஸ்ரேலுடன் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமர் அப்துல்லா ஹாம்டாக்குடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகர் கார்ட்டூமில் கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையும் குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான சம்சங் நிறுவனத்தின் உருவாக்குனர் லீ குன் ஹீ காலமானார்!

உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அலருடைய 78ஆவது வயதில் இன்று காலமானார்.

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தநிலையில் இன்று காலமானார் என்று சம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரண தொலைக்காட்சி நிறுவனமான இருந்த சம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சம்சங் நிறுவனம்  வெளியிட்ட அறிவிப்பில் “ சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் லீ குன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கியபின் அவரின் சசோதரரும், லீ குன் மகனுமான லீ ஜே யங்கும் சேர்ந்து கவனித்து வந்தனர். தென் கொரியாவில் ஒரு குடும்பத்தால் நடத்தப்பும் மிகப்பெரிய தொழிற்சாலை எனும் பெருமையை சம்சங் நிறுவனம்  பெற்றிருந்தது.

ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான வளர்ந்த சம்சங் நிறுவனம் மின்னணு துறை தவிர்த்து கப்பல் கட்டுதல், காப்பீடு, கட்டுமானம், ஹோட்டல் நடத்துதல், தீம் பார்க்க உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1942-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஜப்பான் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட கொரிய தீபகற்பத்தில் உள்ள டியாகு எனும் நகரில் லீ குன் பிறந்தார். லீ குன் தந்தை லீ யங் சல் கடந்த 1938-ம் ஆண்டுவரை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். அதன்பின் 1950-53-ம் ஆண்டு கொரியப் போருக்குப்பின் பல இழப்புகளைச் சந்தித்த லீ யங் சல், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம் என்று சாம்சங் நிறுவனத்தை அறிமுகம் செய்து லீ யங் சல் நடத்தி வந்தார். தனது தந்தை மறைவுப்பின் லீ குன் அந்த நிறுவனத்தை கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஏற்று நடத்தத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தில் பல்வேறு புத்தாக்கங்கள், புதிய பொருட்கள் கண்டுபிடிப்புகளைச் செய்து அனைவரையும் லீ குன் திரும்பிப்பார்க்க வைத்தார்.

வெற்றிகரமாக சாம்சங் நிறுவனத்தை நடத்திய லீ குன் கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு நோயில்விழுந்தார். அதன்பின் நிறுவனத்தைக் கவனிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்ட நிலையில் தீவிர உடல்நல பாதிப்பால் இன்று காலமானார்.

“நான் எப்போதும் இந்திய- அமெரிக்கச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன்” – அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோபைடன் !

“நான் எப்போதும் இந்திய- அமெரிக்கச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன்” என ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபைடன் கூறும்போது, “நான் எப்போதும் இந்திய- அமெரிக்கர்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் குடும்பம், கடமை, சுய ஒழுக்கம், மரியாதை, பணிகள் ஆகியவற்றில் நாம் ஒற்றுமையாக உள்ளோம்.

மேலும், அமெரிக்க வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பாக துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் சிறந்தவர், அறிவாளி. அவர் தனது தாயால் ஈர்க்கப்பட்டுள்ளார். அவர் தாயை நினைத்துப் பெருமை கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூதாகரமாகும் தாய்வான் – சீனப்பிரச்சினை – 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா !

கடந்த சில மாதங்களாக தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தாய்வான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டொலர் (ரூ.7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது கூட்டாளியான தாவானுக்கு ஏஜிஎம்-84எச், எஸ்எல்ஏஎம்-ஈஆர் ஏவுகணைகள் ஆறு,எம்.எஸ்-110 விமான உளவு கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளுடன் 11 எம்142 மொபைல் லைட் ராக்கெட் வழங்குகிறது.
எஸ்.எல்.ஏ.எம்-ஈ.ஆர் ஏவுகணைகள் தாவானின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு உதவும், ஏனெனில் இது அனைத்து வானிலையிலும் பகல் மற்றும் இரவு நேரத்தில், தரையில் அல்லது கடல் மேற்பரப்பில் நகரும் மற்றும் நிலையான இலக்குகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தும்  திறன்களை கொண்டது.
“இந்த ஆயுத விற்பனை இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் தாய்வான் நீரிணையின் பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, மேலும் நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில் நம் நாட்டுக்கு தீவிரமாக உதவுகிறது” என்று தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது ” – பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு !

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார். இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது.
இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில்  Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொய்டர்ஸ் செய்தியாளரையும் ஜோபைடனையும் குற்றவாளிகள் எனக்கூறிய ட்ரம்ப் !

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ரொய்டர்ஸ் செய்தியாளர் ஜெஃப் மேசனை ஒரு குற்றவாளி என்று குறிப்பிட்ட டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் ஒரு குற்றவாளி என்றும் தெரிவித்தார்.
‘நீங்கள் ஒரு குற்றவாளி. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஜோ பிடன் ஒரு குற்றவாளி, அவர் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார், அதைப் புகாரளிக்காததற்காக நீங்கள் ஒரு குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமாகும். அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் நோய்த்தொற்று  நிபுணர் டொக்டர்.ஆண்டனி பேஹ்சி மீதும் தன்னுடைய எதிர்ப்பை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். “

என்னவாக இருந்தாலும் எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என மக்கள் கூறுகின்றனர். கொரோனா குறித்த செய்திகளால் அவர்கள் சோர்வடைந்து விட்டனர். பேஹ்சி மற்றும் கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சை கேட்டு மக்கள் சோர்வடைந்துவிட்டனர். பேஹ்சி இங்கு 500 ஆண்டுகளாக இருந்தது போல் உள்ளார். பேஹ்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 லட்சம் முதல் 8 லட்சம் இறப்புகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனெட் சபை உறுப்பினர் அலெக்சாண்டர் கூறுகையில், ‘ஆண்டனி நமது நாட்டின் மிகவும் மதிப்பிற்குறிய பொதுசேவையாளர். அவர் டோனால்ட் ரேகன் உள்பட 6 அதிபர்களின் கீழ் பணி செய்துள்ளார். அவரின் ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பரவியிருக்கும்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அலேக்சாண்டரின் கருத்துக்கு எதிராக தன்னுடைய கருத்தை முன்வைக்கும் போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
.

நான்கு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அமெரிக்காவில் 83 இலட்சமாக அதிகரித்தது !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது . தற்போது உலகின் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.99 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.98 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதே நேரத்தில் அமெரிக்காவில் மேலும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தைக் கடந்துள்ளது.