வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

உலகின் குள்ளமான பசுவை பார்வையிட படையெடுக்கும் மக்கள்!

பங்களாதேஷில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண படையெடுக்கின்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீற்றர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்ரி மீற்றர் நீளமும் 26 கிலோகிராம் எடையுமுள்ளது.
இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்ரி மீற்றர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குச் சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அந் நாட்டு நேரப்படி) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு மாகாணத்தின், ஜொலோ தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்துள்ளனர் என்றும் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டடனர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

சீனாவின் சினோவேக் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 358- மருத்துவர்களுக்கு கொரோனாத்தொற்று !

இந்தனோசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு அந்நாட்டில் பரவிய பிறகு ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பாதிப்பு விகிதம் 14.6 சதவீதத்தை அந்நாட்டில் எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தடுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், இந்தோனேசியாவில் மருத்துவர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால்  அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து 401 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோவேக் தடுப்பூசிதான் அந்நாட்டில் அதிகம் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358- மருத்துவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள்.  இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் சினோவேக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. மாறுபாடு கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன், பிற தடுப்பூசிகளை காட்டிலும் மிகவும் குறைவு என நம்பப்படுகிறது.

ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராகிம் ரைசி தெரிவு !

ஈரான் ஜனாபதிபதி ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஜனாபதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம்(18.06.2021) நடந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது. எனினும் அதிபர் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் குறைவான வாக்குகளே பதிவாகின என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70‌ சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
ஜனாபதிபதி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அப்தூல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும், இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஜனாபதிபதி வேட்பாளர்களாகபோட்டியிட்ட அப்தூல் நாசர் ஹெம்மாட்டி மற்றும் முகசன் ரஜாய் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இப்ராகிம் ரைசிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

“கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை .” – பிரான்ஸ் அறிவிப்பு !

பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமுல்படுத்தியிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினாலும் 10 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜூன் 20-ந்திகதியில் இருந்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘‘நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது’’ என காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் நேற்றைய தினசரி பாதிப்பு 3200 ஆக இருந்தது. பிரான்சில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குறைவான பதிவு இதுவாகும். இதனால் பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முடிவுக்கு வந்தது பெஞ்மின் நேதன்யாகுவின் 12 வருட ஆட்சி – இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் !

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி  பெஞ்மின் நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்றுவிட்டன.
இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட்  (49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.
இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

சிரிய வைத்தியசாலையில் ஏவுகணைத்தாக்குதல் – 13 பேர் பலி !

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஹதே பகுதி துருக்கி ஆதரவு படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அப்ரின் நகரில் உள்ள வைத்தியசாலையில் 2 ஏவுகணைகள் வந்து விழுந்துள்ளன.

இதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் மற்றும் நோயாளிகள் என 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. குர்தீஸ் படையினர்தான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரசுபடைகள்தான் ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு ..!

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது.

El Salvador becomes first country to adopt bitcoin as legal tender | எல்  சால்வடார் பிட்காயினுக்கு சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை வழங்கிய உலகின் முதல்  நாடாக மாறியுள்ளது |

இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடோர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சார்ந்துள்ள நிலையில், பிட் கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலத்தை ஆதரித்து பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, எல் சால்வடாரில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சட்டப்பூரவ நாணயமாக பிட்கொயின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இதனிடையே, நாட்டின் மேம்படுத்த, மெய்நிகர் நாணயங்கள் உதவும் என்று ஜனாதிபதி நயீப் புகேலே தெரிவித்துள்ளார்.

“சீனாவே கொரோனா வைரஸ் பரவக்காரணம்.” – பைடனின் முதல் வெளிநாட்டுப்பயணத்தில் இதுவே மிக முக்கியமானது !

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த  வைரஸ் பரவியது.

இதனால் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாகவும், அங்குள்ள ஆய்வகத்தில் இருந்தே இந்த வைரஸ் கசிந்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமர்சனம் செய்தன.

எனவே கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விசாரணையில் சீனா பங்கேற்று கொரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் சர்வேத விசாரணையில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி வெளிப்படையான தகவல்களை வழங்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன்‌ இதுகுறித்து கூறுகையில்,

“கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இருக்கவும், உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கும் நாங்கள் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். சர்வதேச விசாரணையில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் (சீனா) கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில், இதுபற்றி அமெரிக்கா ஏற்கனவே தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் விவாதிக்கும் முக்கிய விவகாரங்களில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச விசாரணையும் அடங்கும்.” என ஜாக் சல்லிவன் தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மக்கள் கூட்டத்தில் வைத்து அறைந்த நபரால் பரபரப்பு !

தெற்கு பிரான்சில்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.
Macron during a visit to Montpellier, southern France, in April.
இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.