வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

”கொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உதவியது” – சீன விஞ்ஞானி பரபரப்பு பேட்டி !

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாகவும் சீனா திட்டமிட்டே வைரஸை பரப்பியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”உலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று” – உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் தயாராகவில்லை என்பதால், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் சாவு எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த 20 லட்ச பாதிப்பில் அதிகபட்சமாக 38 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, ஐரோப்பா மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் ஐரோப்பாவில் 27 சதவீத சாவு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ‘ஸ்புட்னிக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று, மனிதர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறது.

சீனாவுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது

அமெரிக்காவில் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவா் பய்மதாஜீ ஆங்வாங் (வயது 33). இவா் திபெத்தை பூா்விகமாக கொண்டவா். அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள இவா் அமெரிக்காவில் உள்ள திபெத் சுதந்திர இயக்க ஆதரவாளா்களை சீன அரசுக்காக உளவு பார்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து பய்மதாஜீயை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நியூயார்க் நகரில் திபெத் மக்களின் நடவடிக்கைகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வந்துள்ளது தெரியவந்தது. நியூயார்க் நகர காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவா், நியூயார்க்கில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் பணிபுரியும் 2 அதிகாரிகளுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அவா் தொடா்பில் இருந்து வந்துள்ளார்.

இதுதொடா்பாக அமெரிக்க அரசு தரப்பு வழக்கறினர் கூறிய போது, “சீனாவில் இருந்து கலாச்சார நுழைவு விசாவில் அமெரிக்கா வந்தவா் ஆங்வாங். தனது 2-ஆவது நுழைவு விசா காலம் முடிந்த பின்னும் இந்நாட்டில் தங்கிய அவா், தான் திபெத்தியா் என்பதால் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் தனக்கு அமெரிக்காவில் புகலிடம் வேண்டும் எனவும் கூறி விண்ணப்பித்தார். அதன் பின்னா் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

அதிகரிக்கும் உலகின் வெப்பநிலை – உருகும் பனிப்பாறைகளால் ஏற்படவுள்ள அபாயம் !

பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலக கடல் மட்ட உயர்வுகளில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. கிரிலாந்தில் 2000-ம் ஆண்டு முதல் 2100-ம் ஆண்டுக்குள் இடையில் உலக கடல் மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும் அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை  || Global Sea Levels to Rise Drastically by 2100 due to Greenland,  Antarctica's melting ice Sheetsவெப்ப மயமாதலால் காற்று வெப்ப நிலையுடன் பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகும் மற்றும் கடும் வெப்ப நிலை வெப்ப மயமாக்குவதால் கடலில் பனிப்பாறைகள் உருகுகின்றன. கிரிலாந்தின் பனிக்கட்டிகள் கடல் மட்ட உயர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

மேலும் மேற்கில் சூடான கடல் நீரோட்டங்கள் பெரிதாக மிதக்கும் பனிக்கட்டிகளின் அடிப்பகுதியை அழிக்கின்றன. இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது. கிழக்கு அண்டார்டிகா கடல் அடர்ந்த பனிக்கட்டிகளை பெறக்கூடும். ஏனெனில் வெப்ப நிலை அதிகரித்து பனிப்பொழிவை ஏற்படுத்துகிறது. எனவே அண்டார்டிகா பனிக்கட்டிகளில் இருந்து பனி இழப்பை கணிப்பது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல்லோ பல்கலைக்கழகத்தின் திட்ட தலைவர் நோவிக்கி கூறும் போது, பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொறுத்துதான் எதிர் காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பது தெரியவரும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது !

அண்மையில் வெள்ளை மாளிக்கைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியமை தொடர்பாக வெள்ளைமாளிகைப்பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்றபட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கடிதத்தை அனுப்பிய  பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “ வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடித்தத்தை அனுப்பிய பெண் அமெரிக்கா-கனடா எல்லை அருகே கைது செய்யப்பட்டார். அந்த பெண் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு ரைசின் எனும் விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே வழக்கமான சோதனையில் கடிதத்தில் விஷம் தடவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரணமாக பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்சுறுத்தும் கொரோனா. – 10லட்சத்தை நெருங்கும் உலகின் கொரோனா உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரத்து 62 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 7 ஆயிரத்து 885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 688 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,04,475
பிரேசில் – 1,37,350
இந்தியா – 87,882
மெக்சிகோ – 73,493
இங்கிலாந்து – 41,788
இத்தாலி – 35,724
பெரு – 31,369
பிரான்ஸ் – 31,338
ஸ்பெயின் – 30,663
ஈரான் – 24,478
கொலம்பியா – 24,397

”இங்கிலாந்தில் கொரோனா பலியும், பாதிப்பும் அதிக வேகத்தில் பல மடங்கு உயரக்கூடும்” – எச்சரிக்கிறார் நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர்!

பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,899 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,94,257 ஆக உயர்ந்தது. சாவு எண்ணிக்கையும் 41,777 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் இங்கிலாந்து தவறான திசையில் செல்வதாகவும், அங்கு அடுத்த மாதத்துக்குள் 50 ஆயிரம் புதிய பாதிப்பை பார்க்க முடியும் என நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வல்லன்சுடன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒப்பீட்டளவில் என்றாலும் சமீபத்தில் நாம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இது தொடர்ந்தால் கொரோனா பலியும், பாதிப்பும் அதிக வேகத்தில் பல மடங்கு உயரக்கூடும். மற்ற நாடுகளில் பார்க்கும் பாதிப்பு தற்போது இங்கிலாந்திலும் இருக்கிறது’ என்று கூறினார்.

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தலைமை மருத்துவ அதிகாரியின் இந்த எச்சரிக்கை அரசுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போதே இந்த விசயத்தை வெளியே சொல்ல நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்தில் சொல்லவில்லை. இப்பொழுது எனது மகள்கள் வளர்ந்து விட்டார்கள்.

உங்கள் விருப்பம் இல்லாமல் யாரும் உங்களிடம் செயல்படக்கூடாது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதால் தைரியமாக இப்போது இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எமி டோரிஸ் கூறும் சம்பவம் நடந்தபோது அவருக்கு 24 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் 23 ஆண்டுகள் கழித்து அவர் மீது முன்னாள் மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு எமி டோரிசை ஏவி விட்டிருக்கிறார்கள்’ என்றார்.

ஏற்கனவே டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொரோனா ! – உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.06 கோடியாக அதிகரிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறக்குறைய 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23 கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55 லட்சமாக உள்ளது. சிகிச்சை பெற்று வரும் 74 லட்சம் பேரில், 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,497,434 ஆக உயர்ந்துள்ளது.

90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை- இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு !

தற்போது பி.சி.ஆர். சோதனை வழியிலான கொரோனா பரிசோதனை முடிவை அறிய பல மணி நேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இம்பீரியில் கல்லூரியை அடிப்படையாக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி.என்.ஏ.நட்ஜ்’ என்ற நிறுவனம் ‘லேப்-இன்-கார்ட்ரிஜ்’ என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய பெட்டி வடிவிலான துரித பரிசோதனை கருவியை கண்டுபிடித்து உள்ளது.
இதை இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் சோதித்து அறிந்துள்ளனர். இந்த கருவி, மிக விரைவாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனை முடிவை தருகிறது. 90 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லி விடும்.
இந்த துரித கருவியை கொண்டு என்.எச்.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பணியாளர்கள், நோயாளிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில் துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன.
இதுபற்றி பேராசிரியர் கிரஹாம் குக் கூறுகையில், “எந்தவொரு மாதிரி பொருட்களையும் கையாள வேண்டிய அவசியமின்றி, நோயாளியின் படுக்கையில் செய்யக்கூடிய சோதனையை, தரமான ஆய்வுக்கூட சோதனைக்கு ஒப்பிடக்கூடிய துல்லியத்தன்மையை கொண்டுள்ளது இந்த முடிவுகள்” என குறிப்பிட்டார்.
மேலும், “நீங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, இது மிகவும் உறுதி அளிக்கிறது” எனவும் கூறுகிறார்.
தற்போது இந்த துரித சோதனைக்கருவி லண்டனில் 8 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
58 லட்சம் துரித பரிசோதனை கருவிகளுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் செய்தள்ளது என இம்பீரியல் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
மூக்கு அல்லது தொண்டை சளி மாதிரியை (ஆர்.டி.பி.சி.ஆர். மாதிரியே) எடுத்து, ரசாயனங்கள் அடங்கிய நீல நிறம் கொண்ட சிறிய கார்ட்ரிஜூக்குள் (பெட்டிக்குள்) வைக்கப்படுகிறது.
பின்னர் இது தொற்று நோயை ஏற்படுத்துகிற கொரோனா வைரசுக்கு சொந்தமான மரபணு பொருட்களின் தடயங்களை தேடுகிறது. 90 நிமிடங்களில் இதன் முடிவு தெரிந்து விடுகிறது.
இந்த துரித கருவியின் பாதகமான அம்சம் என்பது ஒரே நேரத்தில் ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நாளில் 16 சோதனைகளை மட்டுமே நடத்த முடியும் என்பதுதான்.
இந்த சோதனை புதுமையானது என்று வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லாரன்ஸ் யெங் பாராட்டியுள்ளார்.