உள்நாட்டுச் செய்திகள்

Wednesday, October 28, 2020

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள் தொகை – கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை 9ஆயிரத்தை தாண்டியது !

இன்றைய தினம் நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 211 பேருள் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நான்காயிரத்து 75 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் நான்காயிரத்து 987 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் 19 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை வழங்கவே துமிந்தசில்வா விடுதலை மனுவில் கையெழுத்திட்டேன்” – பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்

துமிந்தசில்வாவை விடுதலை செய்வதற்காக கோரிய மனுவில் கையெழுத்திட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மீது பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இது பற்றி மனோகணேசன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஏன் குறித்த மனுவில் கையெழுத்திட்டேன் என்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை மனதில் வைத்தே துமிந்தசில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டேன். துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமகக கருதியே அதில் கையெழுத்திட்டேன்.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன். குறித்த மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அது சுயாதீன ஆவணம் – எதிர்க்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” – அனுரகுமார திசாநாயக்க

“இலங்கையை அமெரிக்காவின் இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் வருகையாகும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(28.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அமெரிக்கா தனது இராணுவ பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இலங்கையை இந்து சமுத்திர இராணுவ ஆதிக்கத்தின் பங்குதாரராக இணைக்கும் திட்டமே அமெரிக்க இராஜங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது. அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவுடனான எக்‌ஸா உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். எனினும் இலங்கை இதுவரை சர்வதேச போர் அமைப்புக்களுடன் எந்தவொரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் இராணுவ அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதில்லை.

இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. எனவே சதித்திட்டங்களுடான இராணுவ ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முற்றாக முடக்கப்படுகின்றது மேல்மாகாணம் – கொழும்பு அபாயநிலையில் என்பதை ஏற்றுக்கொண்டார் ஜெனரல் சவேந்திர சில்வா !

மேல் மாகாணம் முழுவதும் நாளை(29.10.2020) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் தற்போதைய நிலை தொடர்பில் செய்திளார்கள் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிடம் வினவிய போது தெற்கு பதிலளித்த அவர்,

“கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது. ஆனால் அதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக்காபன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் !

பாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக் காபன் பேனா குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட முதலாவது கொள்கலன் நேற்று முன்தினம் (26.10.2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டம் “நாம் வளம் பெற்று நாட்டை வளப்படுத்துவோம்” என பெயரிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு பாடசலைகளில் இருந்து ஒதுக்கப்படும் காபன் பேனா குழாய்கள் சுமார் 80 கிலோ கிராமாகும்.  இவை வருடமொன்றுக்கு 29,000 கிலோ கிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஒதுக்கப்படும் அளவு இதுவரையில் கணக்கிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக செயலாற்ற வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” – மனோகணேசனிடம் எம்.திலகராஜ் கேள்வி !

“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளி துமிந்தசில்வாவை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” என  தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.

கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஊடகங்களுக்கு இன்று விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது. ஆனால், துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கையொப்பமிட்டுள்ள தருணம் ஆச்சரியத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

காரணம், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக் கோரிக்கை மனுவைத் தயார் செய்து கையொப்பமிட்டுள்ளனர். ஆளுந்தரப்பில் ஏற்கனவே 157 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்த்தரப்பு எம்பிக்களான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எஞ்சிய 5 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டதன் காரணமாகவே அந்த எண்ணிக்கை 160 எண்ணிக்கையைக் கடந்துள்ளது. 160 பேர் ஒப்பமிட்டதால்தான் நாங்களும் கையொப்பம் இட்டோம் என்பது சிறுபிள்ளைத்தனமானது. எந்த எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்பதும் இப்போது கசிந்துள்ளது.

20 இன் உள்ளடக்கம் வேறு இந்த கோரிக்கை வேறு என இப்போது சப்பைக் கட்டு கட்டலாம். இந்தக் கோரிக்கையை எந்த ஜனாதிபதியிடம் முன்வைக்கிறீர்கள்?  20ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரியாகமாற்றப்படுவார் என நீங்கள் கூக்குரலிட்ட ஜனாதிபதியிடம்தானே. அவருக்கு எதிராக வாக்களித்துவிட்டு இப்போது அவரிடமே போய் ஒரு கொலைக் குற்றவாளி, அதுவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட விடயத்தில் அத்தகைய நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 இற்கு ஆதரவாக வாக்களித்தமையை அவர் என்ன நியாயத்தைச் சொன்னாலும் ஏற்க முடியாது. அதேநேரம் வாக்களித்த அவருக்கு எதிராக உடனடியாக நீக்கல் உத்தரவைப் பிறப்பித்தவர்கள் அவர்களது கட்டளைத் தீர்மானத்தின் ஈரம் காய முன்னர் அந்த 20 இன் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோரும் மனுவில் கையொப்பம் இட்டதை எப்படி நியாயம்படுத்த முடியும்? அந்தக் குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திருந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமாம். அப்படியாயின், கொலைக்குற்றம் அளவுக்கு இல்லாது தமது கூட்டணி தீர்மானத்துக்கு மாறாக ஒரு வாக்கை அரசுக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாமே!

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும், சர்வாதிகாரத்தை விரும்பாத யாரும் இலங்கை அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தத்தை ஏற்கமாட்டார்கள். அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் செய்தது வரலாற்றுத் தவறு என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவரது வாக்களிப்பு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமது அணியில் இருந்து உடனடியாக அவரை நீக்க உத்தரவிட்டவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வென்ற அதே அரசின் ஜனாதிபதியிடம் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் கையொப்பமிட்டதன் மூலம் 20ஆவது திருத்தத்துக்குள் தாமும் ஒளிந்திருந்தவர்கள் தான் என்பது அம்பலமாகியுள்ளது

ஆக, அரவிந்குமாரின் திரையை அவசரமாக விலக்கப்போய் தமது முகத்திரைகளை முழுமையாக கிழித்துக்கொண்ட சந்தர்ப்பமாக இந்த மனு மீதான கூட்டணியின் கையொப்பம் அமைந்துவிட்டது.

இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்க வேண்டிய இந்தத் தரப்பு ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகா ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கோருவது வெட்கக்கேடானது. ஒரு குற்றவாளி துமிந்த நினைவு வந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நினைவில் வரவில்லையா?” – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“சீனா இலங்கையின் இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது” – அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ

“சீனா இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது”  என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர்,

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது.

ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுகின்றது.

ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், எங்களுக்கும் அதே பார்வை இருக்கிறது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கை மக்கள் வெற்றி பெறுவதையும், இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அனுபவித்து, நிலையான வளர்ச்சியை அடைவதே அமெரிக்காவின் இலட்சியம் என்றும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

மைக் பொம்பியோவினை தொடர்ந்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஸ – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இடையே சந்திப்பு – இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்ப்பு !

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இன்று (28.10.2020) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் லங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா தொற்றுக்கு பின்னர் நாட்டில் உள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டு சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.

சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ள இராஜாங்க செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ? அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும்” – அமெரிக்க வெளியுறவு செயலாளர் பொம்பியோ டுவீட் !

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர். அமெரிக்காவுக்கு சொந்தமான Boeing 757 ரக விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 7.35 க்கு குறித்த தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவுடன் 36 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்த சந்திப்புகளின் பின்னர், இன்று நண்பகல் 12.30க்கு குறித்த தூதுக்குழுவினர் மாலைதீவு நோக்கி பயணிக்கவுள்ளனர்.

இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்று கொழும்புக்கு வரமுன்னர், அவருடைய வருகை குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில், இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வரவேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்து சீண்டும் விதத்தில் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ டுவீட் செய்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், “சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல். சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ? அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம்” என  குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க பொம்பியோவின் வருகையானது இலங்கை – சீன உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் என பலரும் எச்சரித்துள்ளதுடன் அமெரிக்க – சீனப்பனிப்போரின் மையமாகவும் இலங்கை மாற வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.