உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

16 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேலை !

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேலையை 16 இலட்சம் ரூபாய்க்கு ஒருவர் வாங்கியுள்ளார்.

புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்றைய தினம் (22) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய  அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த இரதோற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.

அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாயை கொடுத்து பக்தர் ஒருவர் அச் சேலையினை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசியை வழங்குவதற்கு பணம் கேட்கும் அதிகாரிகள் !

அரசாங்கத்தின் தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு முன்னர் ஒருவரிடமிருந்து தலா 100 ரூபாய் அறவிடப்படுவதாக பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புத்தாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களை வரவேற்று மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இந்தத் தொகை அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பணம் செலுத்தத் தவறியவர்களுக்கு 10 கிலோ அரிசி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டதாகவும் பொலன்னறுவை – மன்னம்பிட்டி, திம்புலாகல பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், அரிசி வழங்கும் போது பணம் அறவிடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக திம்புலாகல பிரதேச செயலாளர் S.M. அல் அமீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணம் அறவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் நாடு இன்னும் அதிக அளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25.9 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிவனொளி பாத மலைக்கு செல்லும் வீதிகளில் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் – மாசடையும் சுற்றாடல் !

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்ககளால் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார்.

இவ்வருட ஆரம்பமான சிவனொளிபாத பாதமலை யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து – சிவனொளி பாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ளூர் யாத்திரிகர்களால் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அவற்றில் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் (2023/2024) சிவனொளிபாத மலை பருவகாலம்   ஆரம்பித்து 5 மாதங்களில் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை செல்லும் வழித்தடத்தில் இருந்து யாத்திரைக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகளை சுற்றாடலில் வீசி சென்றுள்ளனர்.

இதில் சுமார் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டுமே  உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரசிகா சமரநாயக்க தெரிவித்தார்.

05 மாதங்களாக தொடரும்  பருவகால நிகழ்வின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சுற்றாடல் பிரிவினாரால் நல்லதண்ணி – சிவனொலி பாத மலை வீதி மற்றும் நல்லதண்ணி நகர வீதிகளில் தேங்கும் மக்காத திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

2023 டிசம்பரில், சிவனொலி பாத மலை யாத்திரை காலம் தொடங்கியதில் இருந்து, வார இறுதி நாட்களிலும், வார நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வருகை தருவதால், மக்காத தின்மக்கழிவுகள் மற்றும் அகற்றப்படும் குப்பைகளின் அளவு அதிகமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் அதிகாரி மேலும் கூறினார்.

இக்கழிவுகள் யாவும் பிரதேச சபையின் பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பின்னர் மஸ்கெலியா, ரிக்கட்டான் பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு சிவனொலி பாத மலை பருவகாலம் முடிய இன்னும் ஒரு மாதம் உள்ளது.எதிர் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவு பெறும்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால் இலங்கைக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் !

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் நேரடித் தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருள் வழங்குநராக இருப்பதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன், ஈரானில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கிறது.

 

இதன்படி, இலங்கைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் 61 ஆவது இடத்தை வகிக்கின்றது.

அதேநேரம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப்போராக உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பியும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்க பார்க்கிறார்கள் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை கண்டுபிடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால், இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும் என இராஜாங்க கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள் எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ். தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹரானும் அவரது குழுவினரும் இருந்தனர். இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிசார் இதனை சரியாக கனித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள் ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததை கண்டுபிடித்து விட்டார்கள்.

 

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வகாபாதத்தை முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

 

நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பு திட்டம் – “ஸ்ரீ ராமாயண பாதை” திட்டம் இலங்கையில் !

இந்திய – இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண பாதை” (Ramayana trail) யாத்திரை திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது.

 

அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

“ஸ்ரீ ராமாயண பாதை” யாத்திரைத் திட்டம் மூலம் இராமாயண காவியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள பிரதான ஒன்பது முக்கிய இடங்களை இந்து பக்தர்களின் புனித யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்திற்காக பிரபல்யப்படுத்தப்படும்.

 

இது ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த வரலாற்று ஆலயங்களுடன் தொடர்புடைய பண்டைய ஆன்மீக நிகழ்வுகள் செயற்கை நுண்ணறிவு (AI), Augmented reality, மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality)  போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் செய்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடபபட்டுள்ளது.

 

மன்னாரிலுள்ள ஆதாம் பாலம் முதல் நுவரெலியா சீதா எலிய வரை  இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடமும் இந்த யாத்திரைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது – உதய கம்மன்பில

வெளிநாட்டு அரசுமுறை கடன்களுக்காகச் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் கூறியதாவது,

 

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாகச் சீனாவைத் தவிர்த்து ஏனைய கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ குழு, இரண்டாவது சீனா,மூன்றாவதாகச் சர்வதேச பிணைமுறியாளர்கள் என்ற அடிப்படையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

 

சீனா உட்பட ஏனைய கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்களில் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டு தீர்மானம் எடுக்கப்பட்டாலும்,சர்வதேச பிணைமுறியாளுக்கும்,இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

 

அண்மையில் லண்டனில் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பிணைமுறியாளர்கள் முன்வைத்த திட்ட யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் திட்ட யோசனைகளைச் சர்வதேச பிணைமுறியாளர்கள் ஏற்க தயாரில்லை.

 

கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் சர்வதேச பிணைமுறியாளர்கள் தாமத கட்டணத்துக்கான வட்டியை எதிர்வார்த்துள்ளார்கள். 2023.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,678 மில்லியன் டொலர் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

 

வங்குரோத்து அடைந்து விட்டோம் என்று அறிவித்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளன.இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் இலங்கையைப் போன்று பல நாடுகள் நிதி வங்குரோத்து நிலையடைந்தன.எகிப்து,எத்தியோப்பியா,கானா,கென்யா,லெபனான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாண்டுக் காலமாக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

 

கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்தால் கடன் வழங்குநர்களுக்கு குறிப்பிட்ட கடன் தொகைளை செலுத்த வேண்டும்.அவ்வாறான நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படும்.ஆகவே ஜனாதிபதி தேர்தல் இடம் பெறும் வரை கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை அரசாங்கம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கும் என்றார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் – ரணில் விக்கிரமசிங்க மீது சாணக்கியன் சாடல் !

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித செபஸ்தியன் பேராலயத்தில் இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது என்பது போல் தென்படுகின்றது. இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும். வத்திக்கான் போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும் இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு நீதியும் வழங்கவில்லை என்பதே சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த வருடம் சனல்-4 ல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இன்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் ஏன் இதற்கு ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் உண்மை கண்டறியப்படலாம் என்று கூறியபோது உள்நாட்டு விசாரணை போதும் எனக் கூறியிருந்தார்.

இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது 2017ல் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் தயாரெனக் கூறியிருந்தார்.

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பானது கொழும்பு, நீர்கொழும்புடன் சேர்ந்து ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்கள் இருக்கின்றபோது ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது என்பது பற்றி எமது மக்கள் மிக அவதானமாக சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற, தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா அவர்களின் வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு உண்மை புரியும்.

அதாவது ராஜபக்ச குடும்பத்தினர் இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்ததினூடாக நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது, நாட்டில் பலமானதொரு தலைவர் இருந்தால்தான் இங்குள்ள சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கினார்கள்.

ஆயுத முனையிலே எமது மக்களை கடந்த காலத்தில் அழித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பிள்ளையான் அவர்களை ஏதோ தமிழ் மக்களின் ஒரு காவலர் போன்றதொரு விம்பத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே உருவாக்கியது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிக்கும். அன்று தமிழரசுக் கட்சியினரான நாங்கள் மட்டக்களப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய காரணத்தினால்தான் துரதிஷ்டவசமான சம்பவங்கள், கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் பொறுப்புள்ள தலைவர்களாக மக்களை வழிநடத்தியிருந்தோம்.

இவர்களைப்போல கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நபர்கள் அதாவது கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தேவாலயத்தினுள்ளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டிலே சிறையிலிருந்த ஒருவர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் எவ்வாறான வன்முறைகள் நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை எழுதுவதனூடாக தங்களுடைய இரத்தக் கறைகளை கழுவியூற்ற முடியாது. ஆலயங்களிலே இந்த நிகழ்வுகளை நாங்கள் ஒழுங்கமைத்து மக்களை நாங்கள் திரட்டியெடுத்து ஆராதனையையும் நீதிக்கான அஞ்சலி நிகழ்வையும் நடத்துகின்றோமென்றால் இலங்கை சட்டத்திலே இவர்களுக்கு தண்டனை இல்லாதுபோனாலும் இறைவனுடைய நீதியின் கிழ் இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மட்டக்களப்பிலே கொல்லப்பட்டது பிஞ்சுக் குழந்தைகள். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு தாயோ தந்தையோ அங்கு இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் இருந்தனர், சிலர் உயிரிழந்திருந்தனர்.

அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை தனது தாயையும் தந்தையையும் இழந்ததுடன் தனது இரு கண்களையும் இழந்து இன்றும் உயிருடன் இருக்கின்றது.

நீங்கள் உங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்காக, சிறையிலிருந்து தப்புவதற்காக, ஆட்சிக்கு வரவேண்டும் என்பற்காக செய்த பாவச் செயலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்கினாலும் இறைவன் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும். உங்களுக்கான தண்டனைணை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.

முந்நூறு பேரின் இரத்தக்கறைகளின் மீதுதான் நீங்கள் கொங்கிறீட் பாதைகளில் பயணிக்கின்றீர்கள். பாதைகளுக்கு கொங்குறீட் இடுவதும் மக்களின் வரிப்பணத்தில்தான். வீதி அபிவிருத்தி செய்வதனூடாக மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. வீதி அபிவிருத்தி செய்வதனூடாக நீங்கள் செய்த கொலைகளுக்கு பரிகாரம் செய்துவிட முடியாது.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுவணுவாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய கணவரும் இரண்டு குழந்தைகளும் மரணித்தது ஒரு தடவைதான். ஆனால் நான் அவர்களைப் பற்றி சிந்தித்து தினமும் செத்துக் கொண்டிருக்கின்னே; என அண்மையில் ஒரு தாய் தெரிவித்திருக்கின்றார்.

அன்று சியோன் தேவாலயத்தில் வெடித்த குண்டானது எந்தத் தேவாலயத்திலும் வெடித்திருக்கலாம். அவர்கள் சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததற்கான காரணம் என்னவென்பது தெரியாது. எங்கு வேண்டுமானாலும் அது நடந்திருக்கலாம். மரணித்தவர்கள் உங்களுடைய உறவினர்களாகக் கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய இரத்த வெறியிலே அகப்பட்டது உங்களுடைய பிள்ளைகளாக இருந்திருக்கலாம். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக் கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெற்று ஐந்தாவது வருடம் முடிவடைந்த இந்நாளில் இந்த மக்களுக்கான நீதியை கோருவதற்காக எங்களுடன் கைகோர்த்து வாருங்கள், நாங்கள் தனியாக இதனை செய்ய முடியாது, ஒரு கட்சியாக இந்தப்பொறுப்பை தனியாக முன்னெடுக்க முடியாது, மக்கள் எங்களுடன் ஒன்றாக நின்றால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கலாம். மிகவிரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.எதிர்காலத்தில் நாங்கள் தலைவராக தெரிவுசெய்பவர் ஊடாக இந்த கொலைகார கும்பல்களுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் இணைந்துவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,700 ரூபா – மலையக நகரங்களில் போராட்டங்கள் !

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள் மற்றும் நகர வர்த்தகர்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு வழங்கப்பட்டது.

நகர் பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன். நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, டயகம, அக்கரப்பத்தனை, நானுஓயா, இராகலை உள்ளிட்ட நகரங்களில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் சம்பள உயர்வுக்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, ஹப்புத்தளை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது.

கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, புசல்லாவ, மடுல்கலை, உளுகங்கை, ரங்கல உள்ளிட்ட பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பின்னவல, கஹாவத்தை, இறக்குவானை உள்ளிட்ட நகரங்களிலும், மாத்தளை நகரில் மற்றும் களுத்துறை மத்துகம பகுதியிலும், அவிசாவளை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலர் போராட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.