செல்வராஜா என்

செல்வராஜா என்

ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை ஓரிடத்தில் பதிவு செய்து ஆய்வுக்கு வழங்குவதே எனது நோக்கம். தினக்குரலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் “என். செல்வராஜா”. – நேர்காணல் புன்னியாமீன்

scan0004.jpgஇலங்கையிலிருந்து 1991இல் புலம்பெயர்ந்து சென்று லண்டனில் வசித்துவரும் நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள் தற்போது குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதுவரை 25 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ள இவரின் எழுத்துலக பணியில் ‘நூல்தேட்டம்’ எனும் ஆவணவாக்கல் நூற்றொகுதி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நூல்தேட்டம் தொகுதியில் இதுவரை 06 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 06 தொகுதிகளினூடாகவும் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 6000 தமிழ் நூல்களை பதிவாக்கியிருப்பது பெரும் சாதனையாகும். இலங்கை எழுத்தாளர்களின் இத்தனை நூல்களை ஒரே பார்வையின் கீழ் வேறு எந்த தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ இதுவரை பதிவாக்கவில்லை என்று துணிவாகக் குறிப்பிடலாம். தற்போது நூல்தேட்டம் தொகுதி 07க்கான தேடல் முயற்சிகளை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் மேற்கொண்டுவரும் நூலகவியலாளரும்,  எழுத்தாளரும்,  வெளியீட்டாளரும், பன்னூலாசிரியருமான திரு. என். செல்வராஜா அவர்களுடன் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக மேற்கொண்ட நேர்காணல் கீழே தொகுத்து தரப்படுகின்றது.

கேள்வி: நூல்தேட்டம் என்றால் என்ன? இந்த நூல்தேட்ட நூல் வெளியீட்டின் மூலமாக நீங்கள் இதுவரை எதனை சாதித்துள்ளீர்கள்?

என்.செல்வராஜா:  நூல்தேட்டம் இலங்கையில் இதுவரை அச்சில் வெளிவந்த தமிழ் நூல்களையும்,  இலங்கையரால் தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி நூல்களையும் உள்ளடக்குகின்றது. இலங்கை எழுத்தாளர்கள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், ஐரோப்பாவிலும் வேறும் புலம்பெயர்ந்த நாடுகளிலிலிருந்தும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றின் இருப்பை ஓரிடப்படுத்தி பதிவு செய்து கொள்வதற்காகவும், ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுத் தேவைகளுக்காகவும் நூல்தேட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை காலமும் துறைசார்ந்த சிறு பட்டியல்களாக மட்டுமே அறியப்பட்டு வந்த இத்தகைய நூல்விபரங்கள் நூல்தேட்டத்தின் வாயிலாகவே விரிவான பதிவுக்குள்ளாகியுள்ளமை ஒரு சாதனை என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி: அப்படியென்றால் இதுகால வரை இலங்கையில் இதுபோன்றதோர் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதுகின்றீர்களா?

 என்.செல்வராஜா: ஆரம்பத்தில் எப்.எக்ஸ்.ஸி நடராஜா, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன் போன்றோர் சிறு நூல்களாகவும் நூல்களின் பின்னிணைப்புகளாகவும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்கள். இவை சிறு பட்டியல் வடிவிலேயே அமைந்திருந்தன. நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர்,  சிலவேளை வெளியிட்ட ஆண்டு போன்ற விபரங்களே அவற்றில் இடம்பெற்றிருந்தன. இவை எவற்றிலும் முறையான நூலியல் பதிவுகளோ, அந்த நூல்கள் பற்றிய குறிப்புகளோ இடம்பெற்றிருக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் இலக்கியத்துறை தொடர்பான நூல்களையே பதிவுக்குள்ளாக்கியிருந்தார்கள்.

கேள்வி: இலக்கியத்துறைக்குப் புறம்பாக வேறு துறைசார்ந்த நூல்களையும் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா? அவ்வாறு பதிவு செய்திருப்பின் அது பற்றி சற்று விரிவாக குறிப்பிட முடியுமா?

என். செல்வராஜா: இலங்கையின் நூலியல் பதிப்புத்துறை வரலாற்றில் இலக்கியத் துறைசார்ந்த நூல்களே பெருமளவில் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் இவை மட்டும்தான் இலங்கையின் நூலியல் வரலாறாகாது. உளவியல், சமயம்,  சமூகவியல்,  மொழியியல். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள், வரலாறு…. என்று பல்வேறு துறைகளிலும் இலங்கையில் நூல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. நூல்தேட்டம் இவையனைத்தையும் பதிவு செய்யும் ஒரு பெரும் பணியிலேயே ஈடுபட்டிருக்கின்றது. இதன் மூலமே இலங்கையின் நூலியல் வரலாற்றை முழுமையாக தரிசிக்க முடியும்.

கேள்வி: இத்தகைய பதிவிற்கு ஏதேனும் சிறப்பான வகுப்புத் திட்டமொன்றை நீங்கள் கைகொள்கின்றீர்களா?

என். செல்வராஜா: நூல்தேட்டத்தின் நூல்கள் யாவும் 10 பிரதான வகுப்புகளுக்குள் அடங்குகின்றன. இது நூலகங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் டூவி தசாம்ச பகுப்பு முறையை (Dewey Decimal Classification)  அடிப்படையாகக் கொண்டது. இப்பகுப்பு முறையின் கீழ் எமது எழுத்து வளங்கள் அனைத்தையும் பொது விடயங்கள்,  உளவியல், சமயம், சமூகவியல், மொழியியல், தூய விஞ்ஞானம், தொழில்நுட்பம், கவின்கலைகள்,  இலக்கியம், வரலாறு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு பிரிவும் மேலும் 10 உப பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. உதாரணமாக சமூகவியல் என்ற பிரிவுக்குள் புள்ளிவிபரவியல், அரசியல், பொருளியல், சட்டம், பொதுநிர்வாகம் போன்ற அறிவுத்துறைகள் உப பிரிவுகளாக உள்ளடங்கும். நூல்தேட்டத்தின் பகுப்பு இவ்வாறே அமைகின்றது.

கேள்வி: இலங்கை தமிழ் நூல்களின் ஆவணவாக்கல்களை தனிப்பட்ட நபர்கள் தவிர்ந்து நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ பதிவுகளுக்கு உட்படுத்தவில்லை எனக் கருதுகின்றீர்களா?

 என். செல்வராஜா: இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை உருவாக்கப்பட்ட காலகட்டங்களில் தேசிய நூற்பட்டியல் என்று ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இலங்கையில் அச்சிடப்பட்ட மும்மொழி நூல்களில் பதிப்பகச் சட்டத்தின் கீழ் அச்சகங்களால் வழங்கப்படும் நூல்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் பதிவுசெய்யப்பட்டது. இது காலாண்டுக்கொரு முறையும் பின்னர் மாதாந்தமாகவும் இலங்கையில் இன்றளவில் வெளியிடப்பட்டு வருகின்றது. இன்று இப்பணியை இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கொழும்பிலிருந்து மேற்கொள்கின்றது. இப்பட்டியலில் தமிழ் நூல்களும் இடம்பெறுகின்றன. ஆனால்,  அவை பெரும்பாலும் அரச வெளியீடுகளையும்,  ஐளுடீN இலக்கம் பெறப்பட்ட நூல்களையுமே உள்ளடக்கி வருகின்றன. இதில் இலங்கைத் தமிழரின் அனைத்து நூல்களும் என்றுமே முழுமையாக உள்ளடக்கப்படாது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

கேள்வி: எந்த அடிப்படையினை வைத்து நீங்கள் இவ்வளவு உறுதியாக குறிப்பிடுவீர்கள்?

என்.செல்வராஜா: இலங்கைத் தமிழர்களின் வெளியீடுகளை நீங்கள் அவதானிப்பீர்களாயின் அவற்றில் கணிசமான அளவு தமிழகத்தில் அச்சிடப்படுகின்றன. இவை இலங்கை ISBN இலக்கம் பெறப்பட முடியாதவை. மணிமேகலை போன்ற தமிழகப் பதிப்பாளர்களால் வெளியிடப்படும் இலங்கையர்களின் நூல்களில் பெரும்பாலும் ISBN
 இலக்கங்களை காணமுடிவதில்லை. இவை இலங்கை தேசிய நூற்பட்டியலில் இடம்பெறும் தகுதியற்றவையாகி விடுகின்றது. மேலும், இலங்கை தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து பரந்து வாழும் சூழலில் அங்கெல்லாம் வெளியிடப்படும் மிகத் தரமான பல நூல்கள் இலங்கை மண்ணை அடைவதே இல்லை. இந்நிலையில் அவை பற்றிய அறிதலை தேசிய நூலகம் கொண்டிருக்குமா என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

கேள்வி: தேசிய நூலக ஆவணவாக்கல் சபையில் வெளியிடப்படும் நூற்பட்டியலில் ISBN இலக்கம் பெறப்பட்ட நூல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில் நூல்களுக்கு ISBN இலக்கம் வழங்கும் முறை 1980 களிலே அறிமுகஞ் செய்யப்பட்டது. இதற்கு முன்புள்ள நூல்களின் பதிவு நிலை குறித்து நிறுவன ரீதியான அமைப்புகளின் செயற்பாடு பற்றி எத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள்?

என்.செல்வராஜா: ஆரம்பத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அச்சகம் தான் அச்சிடும் எந்தவொரு நூலிலும் குறிப்பிட்ட சில பிரதிகளை தேசிய நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சட்டபூர்வமானதாகும். ஆனால்,  தமிழ் பதிப்பாளர்களைப் பொறுத்தவரையில் இது அன்று முதல் இன்று வரை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதனை அரசாங்கமும் உறுதியாக நடைமுறைப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக தேசிய நூலகப் பதிவுகளில் ஆரம்ப காலம் முதல் தமிழ் நூல்கள் இடம்பெறுவது குறைவாகவே இருந்தது. இன்று கூட ISBN இலக்கமிடப்படுவதும் அச்சகங்கள் தமது நூல்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு அனுப்பி வைப்பதும் ஒழுங்காக நடப்பதில்லை. இதை நாங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றோம். இதனை கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் இறுக்கமான கொள்கைகள் எதுவுமில்லை. 

கேள்வி: இலங்கை எழுத்தாளர்களால் இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ வெளியிடப்படக் கூடிய நூல்கள் யாதோ ஒரு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்கள்?

என்.செல்வராஜா: நூல் வெளியீடு என்பது மிக பணச் செலவானதும், காலச் செலவானதுமான ஒரு முயற்சியாகும். ஒரு சமூகத்தின் அறிவின் அளவுகோலாக அச்சமூகத்தினால் வெளியிடப்படும் நூல்கள் அமைகின்றன. இவை வெளியிடப்படும்போது எங்காவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். புள்ளிவிபரத்துக்காக மட்டுமன்றி எதிர்காலத்தின் வரலாற்றுத் தேவைக்காகவும் இத்தகைய பதிவுகள் முக்கியமாகும். இத்தகைய பதிவுகளின் காரணமாக ஒரு நூலின் வரவை உலகளாவிய ரீதியில் மற்றவர்கள் அறிந்து கொள்கின்றார்கள். குறிப்பாக ஒரு ஆய்வாளர் தனது ஆய்வுத் தேடலுக்காக முனையும்போது நூலின் இருப்பை, தனது ஆய்வுத் தேவைக்குப் பொருத்தமான நூல்களின் வரவை இத்தகைய பதிவு ஆவணங்களின் ஊடாக இலகுவில் அடையாளம் கண்டு கொள்கின்றான். இன்று இலக்கியத்துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் தமிழில் இலங்கையரால் எத்தனை நூல்கள்ää எத்தனை நாவல்கள், எத்தனை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன என்று உறுதிபட கூற முடியாதுள்ளது. இன்றைய ஆய்வாளர்கள் இலங்கை தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இத்தகைய முழுமையடையாத பட்டியல்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இருட்டு அறைக்குள் கருப்புப் பூனையைத் தேடும் இந்நிலை மாற வேண்டுமானால் அந்த அறைக்கு படிப்படியாக ஒளியூட்ட முனையும் நூல்தேட்டம் போன்ற பாரிய தொகுப்புக்கள் மேற்கொள்வதன் அவசியத்தை படைப்பாளிகள் உணர வேண்டும்.

கேள்வி: இத்தகைய அவசியத்தினை தற்போதைய தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள்  எவ்வளவுதூரம் உணர்ந்திருக்கிறார்கள்

scan.jpgஎன்.செல்வராஜா: என்னைப் பொறுத்த வரையில் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் எனது பணியை எனது சுய தேவையின் நிமித்தமும் வர்த்தக நோக்கம் கருதியதாகவும்  மேற்கொள்வதாகவே பலரும் இன்றளவில் கருதுவதாக நான் உணர்கின்றேன். இப்பணிக்கு உலகெங்கும் திரிந்து நான் தேடலில் ஈடுபடுவதில் உள்ள பொருளாதாரää கால செலவை கணிப்பிட்டால் அது என் வாழ்வின் பெரும்பகுதியை விழுங்கி விட்டதை நான் உணர்கின்றேன். இவ்வளவு தனிப்பட்ட இழப்பின் பின்னர் ஆறு தொகுதிகளை உருவாக்கி அதில்  இலங்கை எழுத்தாளர்களின் 6000 நூல்களை பதிவு செய்து எனது இனத்திற்கு வழங்கியுள்ள இந்நிலையிலும் நூல்தேட்டம் பற்றிய உணர்வினை படைப்பாளிகள் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுகின்றது. அண்மையில் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய பிரபல எழுத்தாளர் ஒருவர் ஈழத்து இலக்கியத்தை ஆவணப்படுத்தியவர்களாக சில்லையூர் செல்வராசன், கனக செந்திநாதன் ஆகியோரையே சிலாகித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அன்று ஆவணப்படுத்தல் பற்றிப் பேசிய எவருமே தங்கள் கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் நூல்தேட்டத்தின் 6000 நூல்களின் தொகுப்பைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது எனது சந்தேகத்தை வலுப்படுத்தியிருந்தது.

கேள்வி: ஆய்வாளர்கள் மத்தியில் நூல்தேட்டம் எவ்வளவுதூரம் உள்வாங்கப்பட்டுள்ளது.

 என்.செல்வராஜா: நூல்தேட்டம் பிரதிகள் ஐரோப்பிய நூலகங்களின் தமிழியல் பிரிவு,  அல்லது தென்னாசியப் பிரிவு இயங்கும் நூலகங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு ஓரளவு அறியப்பட்டதாக உள்ளது. லண்டனில் என்னுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொலைபேசி உரையாடல்களிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது. நூல்தேட்டம் பிரதிகளை பிரதான நூலகங்கள் இருப்பில் கொண்டிருக்கின்றன என்று அறிகின்றேன். ஆயினும் ஆய்வாளர்கள் இதனை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் அண்மையில் வெளிவந்த எந்தவொரு ஆய்வு நூலிலும் தமது உசாத்துணை பதிவுகளாக ஆய்வாளர்களினால் நூல்தேட்டம் குறிப்பிடப்பட்டதை நான் அறியவில்லை.

கேள்வி: நூல்தேட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

என்.செல்வராஜா: உடத்தலவின்னையிலிருந்து கலாபூஷணம் பி.எம்.புன்னியாமீன் நூல்தேட்டம் முதல் நான்கு தொகுதிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘நூல்தேட்டம்- இலங்கைத் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய ஒரு பெருநதி” என்ற தலைப்பில் இது 2007இல் ஒரு நூலாகவும் வெளிவந்திருந்தது. அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவின் நூலகர் திரு. மகேஸ்வரன் இலங்கை தமிழ் நூல்களை தேசிய நூற்பட்டியலில் ஆவணப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இதில்; தேசிய நூற்பட்டியலுடன் நூல்தேட்டம் பதிவாக்கத்தையும் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றார். விரைவில் அவரது ஆய்வு நிறைவுபெரும் என்று அறிகின்றேன். ஈழத்தமிழர் நூல்களை பீ.டீ.எப். வடிவில் இணையநூலகமாகப் பதிவேற்றிவரும் நூலகம் இணையத்தளத்தின் நூல் தேடுகையின் ஆரம்பப்பதிவுக்குறிப்பாக நூல்தேட்டம் பதிவுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறேன். அதிலும் நூல்தேட்டம் விரிவான பாவனையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள் நூல்தேட்டத்தை பெருமளவில் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய ஆய்வுத் தேவைக்கான நூல்களின் இருப்பினை அறிந்து அந்நூல்களை தேடுவதில் ஆர்வம் கொள்வதையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்த மூன்று வார காலத்தில் நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்தேன்.

கேள்வி: ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ள நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் முதலாவது தொகுதியின் வெளியீட்டின் பின்னர் வழங்கிய ஒரு நேர்காணலில் ஆறுதொகுதிகளில் நூல்தேட்டத்தை பதிவுசெய்ய தீர்மானித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய நிலையில் இன்னும் எத்தனை தொகுதிகளில் பதிவுசெய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

 என்.செல்வராஜா: ஆரம்பத்தில்  எனது தேடலின் வேகத்தை அனுமானித்து ஆறு தொகுதிகளுக்குள் ஈழத்து நூல்களை அடக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். இன்று அந்த எண்ணம் மேலும் பல தொகுதிகளை நூல்தேட்டத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. இன்றளவில் நூல்தேட்டம் ஏழாவது தொகுதிக்கான பதிவில் 80சதவீதமான பதிவுகளை சேகரித்துக்கொண்ட திருப்தியுடன் லண்டன் திரும்புகின்றேன். விரைவில் ஏழாவது தொகுதியும் முடிவடைந்து விடும். இன்றளவில் இலங்கையில் எததனை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற உறுதியான கணிப்பினை வழங்கும் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அதனால் எத்தனை தொகுதிகளை நான் வெளியிடலாம் என்ற எதிர்வுகூரலை மேற்கொள்ளமுடியாது.

கேள்வி: இலங்கையில் 1800களின் முன்னரைப் பகுதியிலிருந்து தமிழ் நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஆரம்பகால நூல்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றீர்களா?

என்.செல்வராஜா: நூல்தேட்டம் ஈழத்துத் தமிழ் நூல்களின் முழுமையான ஆவணமாக அமையவேண்டும் என்பதே எனது அவா. அவ்வகையில் புராதன அச்சு நூல்களையும் பதிவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனது தேடலின் போது 1895ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட சில நூல்கள் அண்மையில் பேராதனையில் கிட்டியது. இதற்கு முன்னரும் மலாயாப் பல்கலைக்கழகத்திலும் சிலநூல்கள் கிடைத்து பதிவாக்கியிருக்கிறேன்.  தற்போதுள்ள நூல்தேட்டம் பதிவுகள் யாவும் கண்ணால் கண்ட நூல்களையே பதிவு செய்வதாக உள்ளது. இன்று அழிவடைந்துவிட்ட நூல்களையிட்டு இலங்கை சுவடிகள் ஆவணக்காப்பகத்தில் தேடலை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. முதலில் கைக்கெட்டும் நூல்களில் கவனம் செலுத்தி பதிவுகளை மேற்கொண்டபின் ஒரு கட்டத்தில் இந்த எட்டாக் கனிகள் பற்றிய தேடலுக்குள் நுழைவேன். இன்று எளிதில் பெறக்கூடிய நூல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே அதிக உழைப்பையும்,  நேரத்தினையும் ஒதுக்கவேண்டியுள்ளது.

கேள்வி: தங்கள் முயற்சிகள் வெற்றியடையப் பிரார்த்திக்கின்றோம். அதே நேரம் சமகால எழுத்தாளர்கள் இம்முயற்சிக்கு எந்தளவு ஆதரவு நல்குகின்றனர். உங்கள் பணிக்கு அவர்களது உதவிகளை எந்தவழியில் எதிர்பார்க்கின்றீர்கள்?

என்.செல்வராஜா: இன்று சமகால வெளியீடுகளை அச்சிடும் இலங்கைப் பதிப்பகங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றேன். குமரன் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, ஞானம் பதிப்பகம்,  மலையக வெளியீட்டகம் ஆகியவை தாம் அச்சிடும் அல்லது வெளியிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்காக ஒதுக்கிவைத்து காலத்துக்குக் காலம் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள். இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள எனது சகோதரியின் வாயிலாக நான் மேற்கொண்டு வருகின்றேன். சில எழுத்தாளர்கள் தபால்மூலம் நேரடியாகவே எனக்கு லண்டனுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவர்களது அக்கறையின் பயனாகவே நூல்தேட்டத்தின் தொகுப்பினை நான் நம்பிக்கையுடன் துரிதப்படுத்த முடிகின்றது. இந்தப் பணியை எனது காலத்திலேயே முடித்துவிடவேண்டும். அதற்கான பாதையை நான் உருவாக்கி, அனுபவங்களின் வாயிலாக அதனைச் செப்பனிட்டு அதில் பயணித்து வருகின்றேன். எனக்குப் பின்னர் இப்பணியைத் தொடர்பவருக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதே என் சிந்தையில் நிரந்தரப் பதிவாக உள்ளது. நூல்தேட்டம் தொகுப்பு என்பது என்னுடன் தொடங்கி என்னுடனே முடிவடையும் ஒன்றல்ல.

கேள்வி: இலங்கை நூல்தேட்டம் தவிர மலேசிய நூல்தேட்டம்,  இலங்கைத் தமிழருக்கான ஆங்கில நூல்தேட்டம், சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி ஆகியவற்றையும் வெளியிட்டதாக அறிகின்றோம். இவை பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

என்.செல்வராஜா: மலேசிய,  சிங்கப்பூர் தமிழர்களின் நூலியல் வரலாறு இலங்கைத் தமிழருடன் பின்னிப் பிணைந்தவை. அந்நாடுகளில் ஆரம்பகால தமிழ் நூல்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இந்நூல்களைத் தேடி அந்நாட்டுக்குச் சென்றபோதுதான் முழு உலகத்தாலும் மறக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு இருந்த மலேசிய தமிழர்களின் ஆழமான பல நூல்கள் பற்றி அறியமுடிந்தது. இவர்களது படைப்புக்கள் பற்றி இலங்கைத் தமிழர்கள் அறிந்திராதது துரதிர்ஷ்டம் என்றே கருதினேன். இதன் பயனாக 2200 பதிவுகளுடன் எழுந்ததே மலேசிய,  சிங்கப்பூர் நூல்தேட்டமாகும்.

இலங்கைத் தமிழரின் பல நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இலங்கை இராணுவத்தின் வரலாறு ஒரு தமிழரால் எழுதப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் வரைபடம் (Street Atlas)ஒரு தமிழரால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தமிழராலேயே மேற்கொள்ளப்பட்டது.  இத்தகைய பல வரலாற்று முக்கியத்துமான நூல்களை தந்த அந்த தமிழர்களையோ,  அவர்களது நூல்களையோ அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் வெளிவந்த இலங்கை தொடர்பான நூல் விபரப்பட்டியல்கள் உள்ளடக்கியிருக்காதது எனது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக எழுந்ததே ஆங்கில நூல்தேட்டமாகும். இது முற்றிலும் தமிழர் அல்லாதவர்களுக்காக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு நூல்தேட்டம்.

இலங்கைத் தமிழரின் நூலியல் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பது சிறப்பு மலர்களாகும். பல தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு மலர்களில் வந்து குறுகிய வட்டத்திற்குள் தங்கி விடுவதாலும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டதாலும் ஆய்வு மாணவர்களால் கண்டு கொள்ளாமல் போய்விடும். இதைத் தவிர்க்கும் நோக்குடன் தேர்ந்த 150 தமிழ் மொழியிலான சிறப்பு மலர்களை எடுத்து அவற்றிலிருந்த 2000க்கும் அதிகமான கட்டுரைகளை கண்டறிந்து அவற்றிற்கான ஒரு வழிகாட்டியை (சுட்டி) தயாரித்திருந்தேன். இதனை நூலுருவிலும் கொண்டுவந்து பிரதான நூலகங்களுக்கு வழங்கியிருந்தேன். இது இன்றளவில் நல்லதொரு உசாத்துணை வழிகாட்டி நூலாக பயன்படுத்தப்படுவதை அறிகின்றேன்.

கேள்வி: இலங்கைக்கு வந்து கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் நூல் தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நீங்கள் எதிர்வரும் வாரம் மீளவும் லண்டன் செல்லவுள்ளீர்கள். நூல்தேட்ட தேடல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இக்காலகட்டத்தில் வேறு ஏதாவது இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டீர்களா?

என். செல்வராஜா: கடந்த மூன்று வாரங்களாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் எனது பெரும் பொழுதை கழித்த வேளையில் தமிழ் துறையின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுடனும், விரிவுரையாளர்களுடனும் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். புலம்பெயர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துப் பரிமாற்றங்களை அந்நிகழ்வில் மேற்கொள்ள முடிந்தது. எதிர்வரும் 12ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மகாவித்தியாலயத்தில் ஆசிரியை சுதாகரி மணிவண்ணன் எழுதிய ‘அரங்க அலைகள்’ என்ற நாடக நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றேன். அதன் போது 11ஆம் திகதி கிழக்கிலங்கை எழுத்தாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் 16ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றவும் இருக்கின்றேன். இவற்றை தவிர முடிந்தவரையில் எழுத்தாளர்களையும்,  நூல் வெளியீட்டாளர்களையும், பதிப்பகங்களையும் தொடர்பு கொண்டு நூல்தேட்டத்திற்கான நூல் சேகரிக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடவுள்ளேன். எனது உரையாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் நூல்தேட்டத்தையும்,  அதன் தேவையையும், எமது சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதாகவே அமையும் என்று நம்புகின்றேன்.

கேள்வி;  மிக்க நன்றி திரு செல்வராஜா அவர்களே. தங்கள் பணிகள் தற்போதைய நிலையில் இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படாவிடினும் கூட நிச்சயமாக எதிர்காலத்தில் இதுவொரு விலைமதிக்க முடியாத ஒரு ஆவணமாக திகழும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இறுதியாக ஞாயிறு தினக்குரல் வாசகர்களிடம் நூல்தேட்டம் தொடர்பாக நீங்கள் ஏதாவது விசேட செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

என். செல்வராஜா: ஞாயிறு தினக்குரல் வாசகர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. எனது கட்டுரைகளையும்,  எனது பணிகள் தொடர்பான செய்திகளையும்,  நேர்காணல்களையும் தினக்குரல் நிறுவனம் எப்பொழுதும் வெளியிட்டு வருகின்றது. அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிலையில் எம்மக்கள் மத்தியில் நூல்தேட்டம் தொகுப்பு பற்றிய செய்தி தீவிரமாக வலியுறுத்தப்பட வேண்டும். நூல்தேட்டத்தின் இருப்பை அறிந்து கொள்ளும் எந்தவொரு ஆய்வாளரும் தனது தேடலில் செலவிடும் பெரும் பங்கு நேரத்தை சேமித்துக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள படைப்பிலக்கிய வாதிகளும் உலகெங்கும் பரந்து வாழும் தமது சகோதர படைப்பாளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை நூல்தேட்டத்தின் பதிவுகள் வாயிலாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். நூல்தேட்டத்தின் உருவாக்கத்தின் வெற்றி அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. இந்த தொடர்பாடலை தினக்குரல் வாயிலாக எமது படைப்புலக சகோதரர்களுக்கு விடுப்பதினூடாக அவர்களது பங்களிப்பினையும் நான் எதிர்பார்க்கின்றேன். நூல்தேட்டம் செல்வராஜா என்ற ஒரு தனி மனிதனுடைய ஆய்வு நூலல்ல. அவனது புகழையோ,  பொருளாதார வளத்தையோ மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் ஒரு சாதனமுமல்ல. இது அர்ப்பணிப்புடன் தனி மனிதனால் முழுச் சமூகத்துக்குமாக மேற்கொள்ளப்படும் ஒரு வாழ்நாள் முயற்சி. இதனால் உலகில் அடையாளப்படுத்தப்படப் போவது படைப்பாளிகளும், அவர்களது படைப்புக்களுமேயாகும். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு படைப்பாளி தனது உளமார்ந்த பங்களிப்பாக எதைச் செய்திருக்கின்றான் என்ற கேள்வியை ஒவ்வொருவரது மனதிலும் தினக்குரல் வாயிலாக எழுப்ப வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

tn.jpgஅமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.

ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.

அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத்  திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.

முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.

அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும்,  புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும்,  கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;

தம்பிமுத்து,  சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம்,  யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர்,  ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி,  தினகரன்,  சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி,  புதினம், அஞ்சல்,  தொடுவானம்,  ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும்,  பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” 

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும்,  நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற  வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால்,  இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும்,  ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான்  நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும்,  எனது கவிதைக் கோவைகளையும்,  என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும்,  காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்:  இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம்,  87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்:  Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ  லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை,  மதுரகவி,  சொல்லின் செல்வர்,  புலவர் மணி,  செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும்,  அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை,  புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை,  கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!

அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள் – நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் : என். செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah Nஇலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் ஆங்கில மூலமான நூல்களை எழுதி வெளியிட்டதில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டு. அண்மைக்காலத்தில் கூட பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பல்துறைகளிலும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இவை எவ்வளவுதூரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன வென்பதையோ திட்டமிட்டு ஆவணப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனவென்பதையோ நாம் இன்றுவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதை ஓரளவு உணர்ந்தவர்கள்கூட இது வேறு எவனோ ஒருவனுக்கு வித்pக்கப்பட்ட பணி என்று மூன்றாவது மனிதராகக் கைகட்டிப் பார்வையாளராக இருந்துவிடுகின்றார்கள்.

1970களில் பேராதனை பல்கலைக்கழக நூலகராகவிருந்த எச்.ஏ.ஐ.குணத்திலக்கவின் A Bibliography of Ceylon: a systematic  guide to the literature on the land, people, history and culture published in the Western  languages from the sixteenth century to the present day  என்ற தலைப்பில் ஆங்கில நூல்களுக்கான நூற்பட்டியல் 1970-1983 காலப்பகுதியில் 5 தொகுதிகள் வெளிவந்தது. இதை சுருக்கமாக H.A.I.Goonetileke’s Bibliography of Ceylon என்று அழைக்கிறோம். இதில் இலங்கைவாழ் தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெரும்பாலானவை பதிவுசெய்யப்படாததை அக்காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தமிழர்களின் ஆங்கில நூல்கள் பெருஞ்சந்தை வாய்ப்புக்களை நாடாததும் தமக்குள்ளேயே வெளியிட்டு சிறுவட்டங்களுக்குள் அதை விநியோகித்து திருப்திகாண்பதும் அன்றும் இன்றும் எமது மக்களைப் பொறுத்தவரையில் பொதுவானதாகவே உள்ளது. ஏ.ஜே.வில்சன், எச்.டபிள்யு தம்பையா, சிவானந்தன் போன்றோரின் நூல்கள் ஓரளவு சர்வதேசச் சந்தையை எட்டியுள்ளனவாயினும் ஒப்பீட்டு அடிப்படையில் எம்மவர்களின் விநியோகத் திட்டம் வலுவிழந்ததே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அண்மையில் 1987இல் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள Clio Press என்ற நூல் வெளியீட்டாளர்கள் World Bibliographical Series  என்ற ஒரு தொடரை வெளியிட்டார்கள். 77 நாடுகளில் அந்நாட்டவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்ற சகலதுறையிலான நூல்விபரங்களையும் குறிப்புரையுடன் (நூல்தேட்டம் தொகுப்புகள் போன்று) தொகுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொகுதி என்ற வகையில் வெளியிட்டார்கள் 20ஆவது தொகுதி இலங்கைக்குரியது. அதனை விஜய சமரவீர என்பவர் தொகுத்திருந்தார். ((W.H.Smithஇல் இந்நூல் விற்பனைக்குண்டு). 631 ஆங்கில நூல்களை, இலங்கையரால் வெளியிடப்பட்டதாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இவற்றில் சின்னப்பா அரசரத்தினம், க.குலரத்தினம், சோ.செல்வநாயகம், கைலாசபதி உள்ளிட்ட சில தமிழர்கள் எழுதிய 46 ஆங்கில நூல்களையே இலங்கைக்குரியதாக அவரால் கண்டுகொள்ள முடிந்தது. புத்திஜீவிகளாகவும், முன்தோன்றிய மூத்தகுடிகளாகவும் தம்மை விதந்துரைக்கும் எம்மவரின் பங்களிப்பு வெறும் 46 தானா என்பதைக்கூட நாம் அப்போது சிந்திக்கவில்லை.

இலங்கைத்தீவின் இராணுவ வரலாற்றை முதலில் எழுதியவர் ஒரு தமிழர் என்பதோ (The Military History of Ceylon/ Anton Muttukumaru), கொழும்பு நகரின் தெருக்களின் வரைபடத்தை (A-Z Street  Guide of Greater Colombo, Kandy, Nuwara eliya, Anuradhapura & Polonnaruwa) நூலுருவில் வழங்கியவர் T.சோமசேகரம் என்ற தமிழரென்றோ நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையின் சிங்கள குடித்தொகைப் பரம்பலையிட்டு தனது ஆராய்ச்சியை லண்டன் School of Economics  என்ற உயர் பல்கலைக்கழகக் கல்லுரியில் மேற்கொண்டவர் ஆர்.ராஜேந்திரா என்பவர். 1952இல் இவர் மேற்கொண்ட இந்த ஆய்வு இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்டு 1955இல் பெருமையுடன் நூலுருவில் கொண்டுவரப்பட்டது. சிங்களவர்களின் குடித்தொகைப் பரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென்று குறிப்பிடப்படுகின்றது. இப்படியாக விவசாயத்துறை, பொருளியல்துறை, அரசியல்துறை, உயிரியல்துறை என்று பல்வேறு துறைகளிலும் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அறிஞர்கள் தமது மேலான பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். இதுவரை இது உலகில் எங்குமே முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் தடுப்புமுகாம்களுக்குள்ளும் புலம்பெயர் தேசங்களின் இனக்கலப்புகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிந்திருக்கும் நிலையில் அவர்களின் தனித்துவம் பற்றிப் பேசப்படுகின்றது. இலங்கையில் அவர்களது கௌரவமான இருப்பிற்கான வழிகள் பற்றிப் பேசப்படுகின்றன. எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

அப்பணியை தனிப்பட்டமுறையில் முன்னெடுத்து அண்மையில் ஒரு ஆங்கில நூற்பட்டியல் (Bibliography) ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன். நான் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் நூல்தேட்டம் என்ற தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ஆங்கில நூற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் இதுவரை எழுதி ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ள 323 நூல்களை பல்வேறு ஐரோப்பிய நூலகங்களிலும், தனியார் சேர்க்கைகளிலும் இருந்து இனம்கண்டு அவற்றை குறிப்புரையுடன் கூடியதாகத் தொகுத்து நூலுருவில் 201 பக்கங்களில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பக, ஆய்வகத்தினூடாக வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆங்கில மொழி நூற்பட்டியலை உலக நாடுகளெங்கும் இயங்கும் சர்வதேச நூலகங்களில் சேர்ப்பிக்க வேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறும் வெளியீட்டு விழா நடத்தி ஒரு சிறு நண்பர் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த நூலை அறிமுகம்செய்து விற்பனைசெய்து பணமீட்டும் முயற்சி இதுவல்ல. இக் கட்டுரையின் வாயிலாக ஒரு முக்கியமான ஆவணத்தின் இருப்பினை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இது எனது முதற்கட்ட நடவடிக்கை.

நூல்தேட்டம் ஆங்கிலப் பதிப்பு ஒரு தனித்தொகுதியாகும். இதன் இரண்டாம் பதிப்பினை தற்போது சேகரித்துவரும் புதியதும், தவறவிடப்பட்டதுமான ஆங்கில நூல்களின் விபரங்களுடன் திருத்திய பதிப்பாக 2012இல் வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். இவ்வாறு ஆங்கில நூல்தேட்டம் காலக்கிரமத்தில் முழுமையை நாடியதொரு தொகுப்பு முயற்சியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

இந்நூல் தனிப்பட்ட தீவிர ஆய்வாளர்களுக்குப் பயன்பட வேண்டும். அவர்களின் மூலம் ஈழத்தமிழர்களின் பரந்துபட்ட அறிவியல் ஞானம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படவேண்டும். இந்த அடுத்த கட்டத்தை முன்நகர்த்திச் செல்லும் பணியை தமிழர் வாழ்வியலுடன் அவர்களின் மேம்பாட்டுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ள உங்களையொத்த அனைவரிடமும் ஒப்படைத்திருக்கிறேன்.

நூல்விபரம், விலை, மற்றும் கிடைக்குமிடம் போன்ற தகவல்களை இக்கட்டுரையின் இறுதியில் வழங்கியிருக்கிறேன். இந்நூலின் ஒரு பிரதியையாவது விலைகொடுத்து வாங்கி, அதனை உங்கள் பிரதேச நூலகத்திற்கு உங்கள் அன்பளிப்பாக வழங்க முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஈழத்தமிழரின் ஒரு ஆவணம் உலகின் முக்கியமான நூலகங்கள் அனைத்திலும் வைப்பிலிடப்படுவதை உறுதிசெய்துகொள்வோம். தயவுசெய்து இதையும் நானே செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகின் பிரபல நூலகங்கள் விலைகொடுத்து இந்நூலை எம்மிடத் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் என்று நம்பியிருப்பது மடைமை. நாம் தான் நூலகங்களை நாடி இந்நூலை எடுத்துச்சென்று வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா மாட்டீர்களா என்ற கேள்விகளுடன் இந்த அறிமுகத்தை நிறைவுசெய்கின்றேன். நன்றி.

நூல் விபரம்:

Title: Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils.
Compiler: N.Selvarajah,  Co-ordinator,
European Tamil Documentation and Research Centre, London.
Publishers: European Tamil Documentation and Research Centre, London.
Pages: 201
Price: £ 15.00

Payment methods: Pay pal transaction: Noolthettam
Cheque: (UK only) payable to ETDRC
Bank: Abbey (Santender), 
Account Name: ETDRC, Sort Code 09-01-27, A/c No. 24459051,
IBAN: GB93ABBY09012724459051

Available at: United Kingdom:  N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom.

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் – ஓர் அறிமுகம் : என் செல்வராஜா

ETDRC_Logoஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும்
(European Tamil Documentation and Research Centre – ETDRC)

தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்த போதும் கணிசமான தொகையில் தமிழர்கள் பரந்துள்ள நாடுகள்:
01 – இந்தியா 02 – இலங்கை 03 – மலேசியா 04 – சிங்கப்பூர் 05 – அவுஸ்திரேலியா 06 – தென் ஆபிரிக்கா 07 – பிரித்தானியா 08 – பிரான்ஸ் 09 – ஜேர்மனி 10 – சுவிஸ்லாந்து 11 – இத்தாலி 12 – நோர்வே 13 – சுவிடன் 15 – அமெரிக்கா 14 – கனடா

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவியல் வளங்கள்:
1. பல்கலைக் கழகம்
 1.1 SOAS : School of Oriental and African Studies
 1.2 ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் நூலகங்களின் தெற்காசியப் பிரிவு

2. பொது நூலகங்கள்
 2.1 பிரித்தானிய நூலகம் (British Library)
 2.2 லண்டன் உள்ளுராட்சி சபை நூலகங்கள்

3. சிறப்பு நூலகங்கள்
 3.1 தமிழர் தகவல் நடுவம் – லண்டன் (அரசியல் மற்றும் சமூகவியல் துறை)
 3.2 உலகத் தமிழர் நூலகம் (ஒன்ராரியோ, கனடா)

4. தனியார் நூல் சேகரிப்புகள்
 4.1 முல்லை அமுதனின் சேகரிப்புகள்
 4.2 என் செல்வராஜாவின் சேகரிப்புகள்
 4.3 இன்னும் பலர் …..

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தகவல் வளங்களையும் இந்த நூலகங்கள் கொண்டிருக்கின்றனவா ? 
தமிழ்ச் சமூகத்திற்கான இந்த அறிவியல் வளங்களை ஒரு ஆய்வாளர் எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழரல்லாத ஒரு ஆய்வாளரால் தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்ள இந்நூலகங்கள் போதிய பின்புலத்தை கொண்டுள்ளனவா?

இல்லை!!!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழரின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எந்தவொரு தமிழ் அல்லது தமிழரல்லாத ஆய்வாளருக்கும் தேவையான தகவல் வளங்களையும் அத்தகவல்களைப் பெறுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவதற்கு தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்தில் அமைக்கப்பட்ட அறிவுசார் தகவல் களஞ்சியங்களே பொருத்தமானவையாகும்.

இந்த எண்ணக்கருவில் பிறந்ததே ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC) ஆகும்.

நோக்கங்கள்:

* தமிழ், தமிழர் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் ஒளி, ஒலிப் பதிவுகளையும் சேகரித்து பாதுகாத்தல்.

* தமிழ், தமிழர் தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான மூலாதாரங்களை அடையாளம் கண்டு ஆய்வாளருக்கு வழிகாட்டுதல்.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களுக்கான காப்பகமாக செயற்படுதல்.
 
* சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல்.

* சர்வதேச பல்கலைக்கழக நூலகங்களின் தமிழியல் பிரிவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலக வளங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

செயற்பாடுகள்:

இதன் அடிப்படையில்
* ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC)  என்ற அறிவியல் நிறுவனம் Charity Commissionஇன் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவிலக்கம் : 1127365

* தற்போது ETDRC தற்காலிகமாக 48 Hallwicks Road, Luton, LU2 9BHஇல் இயங்குகிறது.

* நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தனிப்பட்ட சேகரிப்பான 3000 நூல்களுடன் ETDRC தற்போது இயங்குகிறது. நிர்வாகக் கட்டட வசதி ஏற்பட்டதும் மேலும் பலர் தங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை வழங்குவதற்கு முன் வந்து உள்ளனர்.

* மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தற்போது ETDRCஇன் சேவைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எம்முள் எழும் சில வினாக்கள்:

இன்றைய போர்க்காலச் சூழலில் இது அவசியமா?
முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழர்களின் அடையாளம் இப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழர் பற்றிய வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சேகரித்து பாதுகாப்பதும், அதை தமிழர்களும் தமிழர்கள் அல்லாதவர்களும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழர்களுக்கான ஆவணக் காப்பகம் தாயக மண்ணில் அல்லவா உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் எதற்கு?
1981ல் யாழ்ப்பாண நூலகமும் பின்னர் ஹாட்லி கல்லூரி நூலகமும் எரியூட்டப்பட்டதன் பின்னர் அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கான ஒரு ஆவணக் காப்பகத்தை இலங்கைக்கு வெளியே உருவாக்குவது அவசியமானது.

தாயகத்தில் ஏற்கனவே தேசிய நூலகமும் பிராந்திய பொது நூலகங்களும் இயங்கி வந்த போதிலும் வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு அவற்றை இலகுவாகப் பயன்படுத்த எவ்வித வசதியும் இல்லை.

3.2 மில்லியன் இலங்கைத் தமிழர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிதும் இவர்களின் அறிவியல் தேவைகளுக்குமான ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமும் மேற்கு நாடொன்றில் அவசியம். அது உலகின் தலைநகரான லண்டனில் அமைவது மிகவும் பொருத்தமானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் தெரியாத நிலையில் இந்த தமிழ் நூலகம் அவசியமா?
முதலில் ETDRC ஒரு பொதுநூலகம் அல்ல. அது தமிழ் நூலகமும் அல்ல. தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்குமான ஒரு ஆய்வு நிறுவனம்.

இரண்டாம் தலைமுறையினருக்கு கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. எதிர்காலத்தில் தமது வேர்களை தேட முற்படும் இத்தலைமுறையினருக்கும் இவ்வாறான காப்பகங்கள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இந்த அறிவியல் நோக்கம் கொண்ட அமைப்பு தழைத்து வளர்வதற்கு உங்கள் உதவி முக்கியமானது.

சிறுதுளி. பெரு வெள்ளம்!

நிறுவனத்தின் சேகரிப்பினை வளர்த்தெடுக்க உங்களால் முடிந்த வரையில் நூல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்!
மாதம் ஒர் சிறு தொகையை ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கினூடாக சென்றடைவதற்கான ஒர் ஒழுங்கை ஏற்படுத்துங்கள்!

Bank  :  Abbey
Account Name :  ETDRC
Sort Code :  09-01-27
Account No :  24459051

நிறுவனத்தின் நிதிவளம் செழிப்பின் தனியானதொரு கட்டிடத்தில் விரைவிலேயே செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் எமது தமிழ் வேர்கள் பற்றி அறிய வேண்டாமா ?
புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழர் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் பற்றிய அறிவியல் தகவல்களை பன்னாட்டவரும் அறிய வழிவகை செய்ய வேண்டாமா ?
முடிவு உங்கள் கைகளில்.
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

நன்றி!!!

._._._._._._.

ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனமும் ஆவணக்காப்பகமும் நடாத்தும் விருந்துபசார நிகழ்வு டிசம்பர் 12ல் நடைபெறவுள்ளது. ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்தினதும் ஆவணக் காப்பகத்தினதும் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம் ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் ஆவணக் காப்பகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 6:30 pm till late

32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA

Contact: N Selvarajah : 07817 402 704 or 01582 703 786

 

தமிழ்மணி அரங்க முருகையன் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

லண்டனில் எம்மிடையே நீண்டகாலமாக வாழ்ந்து அண்மையில் 13.09.2009 அன்று மறைந்துவிட்ட தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களை அறியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்களோ, கல்விசார் சமூக அமைப்புகளோ இருக்க முடியாது.

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பிறந்தவர். தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டவர். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். தன் கணவனுக்கு ஈடுகொடுக்கும் தமிழறிவு மிக்கவர். தமிழ்மணி அரங்க முருகையன் அவர்கள் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த மலாயா நண்பன் நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து, 1972இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் நித்திலம் என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த இலண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வந்தவர் மட்டுமல்ல அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவருடன் தொடர்புகொண்ட எவரும் இதனை எளிதிலேயே புரிந்துகொள்வார்கள். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். அவரது தமிழ் அபிமானம் தீவிரமானது.

ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அமரர் அரங்க முருகையன் பின்னாளில் 1978இல் லண்டன், கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும், மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற இவரது நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன. கோயில்கள் பழங்காலத்திலே இயங்கியதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலையாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங்கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.

அரங்க முருகையனின் நாவலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இவர் ஈழத்தமிழர்பாற்கொண்ட பற்றின் ஆழத்தை தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற தலைப்பில் இவர் 1980இல் கும்பகோணத்தில் எழுதி வெளியிட்ட முதலாவது நூலே சான்றாகும். சோழர் வெற்றி என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அமரர் அரங்க முருகையன் லண்டனில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டுழைத்துவந்தார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூலாக பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு என்ற நூல் அமைகின்றது. மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. தன் வாழ்விலும் கனவிலும் தமிழ் இனத்தையும், மொழியையும், அதன் சிறப்பையும் மட்டுமே உயிராகக்கொண்டு வாழ்ந்த அந்தப் பெருமனிதன் 13 செப்டெம்பர் 2009 அன்று தனக்கு ஏற்பட்ட முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் உலகத்தமிழ் அறிஞர்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.