கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

உலக கிண்ண கால்பந்து போட்டி 2022 – குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா !

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதியதால் களத்தில் சூடுபறந்தது.

இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்ஜன்ரீனா அணிதலைவர் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் கோல் அடிக்க குரேஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

விஜயகாந்த் வியாஷ்காந்த் அசத்தல் – Jaffna Kings இலகுவான வெற்றி !

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் Jaffna Kings அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Dambulla Aura அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணாட்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா; உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு

ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியீடு மிகச்சிறப்பாக கிளிநொச்சி லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நூல் வெளியீடு முற்றிலும் இளம் தலைமுறைப் பெண்களினாலேயே நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ‘மனிதம்’ குழவைச் சேர்ந்த இளம் பெண்கள் (படம்) இந்நிகழ்வை திறப்பட நடத்தினர்.

புத்தக வெளியீட்டுக்கு தலைமையேற்ற செல்வி வர்ஷனா வரதராசா இந்நூல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தையும் இந்தப் பெண் ஆளுமைகள் பற்றிய அனுபவம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பெண் ஆளுமைகள் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள். பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்க வாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்) இலக்கியம் (தாமரைச்செல்வி), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து. இவர்கள் யாரும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழவில்லை. தங்களையும் சமூகத்தில் ஒருவராகப் பிணைத்துக்கொண்டு தங்களது நாளாந்த வாழ்வியலோடு சமூகத்திற்கான சேவையை வழங்கி வந்தனர் அல்லது வழங்கி வருகின்றனர்.

கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை உரைநடையூடாகவே எடுத்துச் சென்றது போல் இந்நூலாசிரியர் ஹம்சகௌரியும் தன்னுடைய கருத்துக்களை உரைநடையூடாகவே எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு கொண்டு சென்றுள்ளார் என நூலின் வெளியீட்டுரையை வழங்கிய செல்வி விராஜினி காயத்திரி இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நூல் ஒருவரில் அல்ல எம்போன்ற பலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த காயத்திரியின் கருத்துக்கள் ஏனைய ஆய்வாளர்களின் உரைகளிலும் எதிரொலித்தது. இந்நூலின் முதற் பிரதி, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான அமரத்துவமடைந்த கலாலக்ஷ்மி தேவராஜா அவர்களுடைய மகள் அபிலாஷா தேவராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா

‘உறுதிகொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் செல்வி ஹர்த்தாயினி இராஜேஸ்கண்ணா தனது நூலாய்வை மேற்கொண்டார். ‘பெண்ணியம் சார்ந்து பேசுவதை பெண்ணியம் பற்றிப் பேசுவதை விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இன்னமும் காணப்படுகின்றது. பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு சில பெண்களுக்கே போதாமையாகவுள்ளது. போதைவஸ்துவுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அதனைச் செய்வதை பெண்ணியம் என்று வியாக்கியானப்படுத்துபவர்களும் எம்மத்தியில் உள்ளனர்’ என உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய ஹர்த்தாயினி ‘சமத்துவமின்மையின் மூலங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘இந்த ஆடை அணிந்தால் தான் நீ என் காதலியாகலாம், மனைவியாகலாம் என்ற வரைக்கும் அன்பின் பேரில் கட்டளையிடும் ஆண்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்கள் பெண்கள் தான். நாங்கள் ஏன் அதற்குப் பணிய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய ஹர்த்தாயினி ‘பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். ‘இந்த நூலில் உள்ள பெண்கள், ஒரு தலைமுறைக்கு முன்னதாக பெண்கள் வெளியே செல்லவே தடைகள் இருந்த காலத்தில் சாதித்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எங்களால் முடியாது?’ என அவர் சபையில் இருந்த இளம் தலைமுறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தனதுரையில் ‘சாதாரணமான எங்கள் தாய்மாரை சகோதரிகளை பிள்ளைகளை ஏன் எங்களால் மாற்ற முடியாது?’ என்ற கேட்ட ஹர்த்தாயினி சமூகம் பாதிக்கப்பட்ட நலிந்த பெண்களுக்கே பாதிப்புகளைக் கொடுக்கின்றது. கணவரை இழந்து அல்லது கைவிடப்பட்ட பெண்கள் வாழும் அயல்வீடுகளைக் கேட்டால், இந்த சமூகம் இவர்களை எப்படிப்பார்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருந்தும் அப்பெண்கள் சவாலாக வாழ்கின்றனர். கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என ஆக்கிரோசமாக பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது உரையின் இறுதியில் இதில் உள்ள பத்தது பெண் ஆளுமைகள் மட்டுமல்ல நூலாசிரியர் ஹம்சகௌரியோடு 11 பெண் ஆளுமைகளும் திருமணத்துக்கும் பின்னும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணமானவர்கள். பெண்களுக்கு திருமணம் ஒரு தடையல்ல. எனது அடையாளத்தை தக்க வைக்க எனது பெண்ணியத்தை முன்னெடுக்க எனக்கு திருமணம் ஒரு தடையாக அனுமதிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய விறுவிறுப்பான உரையை நிறைவு செய்தார்.

சாதியம் உணர்வு நிலையில் மாற்றம் நிகழவில்லை செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசா:

உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசா உரையாற்றினார். பெண்களது நிலையென்பது கயிற்றில் கட்டப்பட்ட பட்டத்திற்கு ஒப்பானதாக இன்னும் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டடினார். ‘பிரேமளா சிவசேகம் அவர்கள் அன்றைய சுழலில் இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளராக ஆனாது ஆச்சரியமானதாகவும் அதே சமயம் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எங்களையே நாங்கள் கேட்க வைப்பதாகவும் இருக்கின்றது என மயூரகா தெரிவித்தார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆளுமையுமே ஒவ்வொரு நூல்கள். அவர்களுடைய அனுபவங்களை நூலாசிரியர் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சி அளப்பெரியது என விதந்துரைத்தார் மயூரகா. ‘புத்தக மூலமான இந்தப் பயணம் எங்களைப் போன்ற பெண்களை எங்கள் comfort zone கொம்போர்ட் சூனில் இருந்து வெளியே வர வைக்கின்றது. செல்வி திருச்சந்திரன் குறிப்பிட்ட சாதியம் பற்றிய குறிப்புகள் மிக அருமையான பதிவு. சாதியம் எவ்வாறு சமநிலையைக் குழப்புகின்றது என்பதை அது துல்லியமாகக் காட்டுகின்றது. நாங்கள் இதனையெல்லாம் கடந்துவந்துவிட்டோமா?’ என்று கேள்வி எழுப்பிய மயூரகா ‘உணர்வுநிலையில் மாற்றம் நிகழவில்லை’ என்ற உண்மையை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘தங்கைகளா எங்களாலும் முடியும். எழுந்து வாருங்கள்’ செல்வி நிவேதா சிவராஜா:

‘உறுதிகொண்ட நெஞ்சினரின் சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் செல்வி நிவேதா சிவராஜா நூல்பற்றிய தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். தன்னை சமூகத்தின் மீது காதல் கொண்டவளாக ஒரு சமூகக் காதலியாக அறிமுகப்படுத்திய அவர் இந்த பத்து ஆளுமைகளும் அந்த அளுமைகளை ஆவணப்படுத்திய ஆளுமையும் தன் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக நிவேதா தெரிவித்தார். ‘இவர்கள் எல்லோரும் எங்களைவிட ஒரு தலைமுறை கடந்தவர்கள். அவர்களுடைய சமூகம் பற்றிய பார்வை எங்களுக்கு ஒரு வழிகாட்டல். முன்ணுதாரணம். அதனையே இந்நூலைப் பதிப்பித்த தேசம் ஆசிரியர் த ஜெயபாலன் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார் நிவேதிதா.

‘தேசம் த ஜெயபாலன் குறிப்பிட்டது போல பெண்கள் இன்னமும் இரண்டாம் நிலையில் நோக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவோடு தான் தேசம் ஜெயபாலன் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்தக் கனவை நாங்களும் இன்று சுமக்கின்றோம்’ என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த நிவேதிதா ‘தம்பிகாளா! தங்கைகளா!’ உங்களுடைய பொறுப்புக்களை நீங்கள் சுமக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘இந்நூலை வாசித்த பின்னரே கிளிநொச்சியில் இப்படியொரு பாடசாலை – விவேகானந்தா வித்தியாலயம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் வாசிக்கும் போது ஜெயா மிஸ் என்று தோண்றியது. வாசித்து முடிக்கையில் ஜெயா அம்மா என்று அழைக்கத் தோண்றியது. அவருடைய சமூகப் பங்களிப்பு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. நாங்கள் மனிதம் அமைப்பினூடாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு விவாகானத்தா வித்தியாலயத்தை பாரக்க வேண்டும் அதிலிருந்து நாங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியுள்ளது’ என நிவேதிதா உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘எங்களை நாங்களே 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் (ருகெ கிட்ஸ்) என்று சொல்கின்றோம் ஆனால் நடக்கவே சலித்துக் கொள்கிறோம். ஆனால் எழுபதுக்களையும் கடந்து ஒடிவிட்டு வந்திருக்கிறார் அகிலத்திருநாயகி அமையார். இந்த ஆளுமைகள் எல்லாமே இன்னும் இம்மண்ணில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் இன்னும் வெளிநாட்டு மோகத்தோடு தான் இருக்கின்றோம். இங்கு எங்கள் முன்னுள்ள வாய்ப்புகளைப் பார்க்காமல் தடைகளை மட்டுமே பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்ட நிவேதா மீண்டும் ‘தம்பிகளா! தங்கைகளா!’ என்று விழித்தார்.

‘இவர்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டார்கள். அவர்களுடைய பொறுப்பை சரிவரச் செய்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு முன்ணுதாரணமாக வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தங்கைகளா எங்களாலும் முடியும் என்பதைக் காட்டத் தயாராகுங்கள்’ என்று அழைப்பு அறைகூவல் விடுத்தார். ‘நாங்கள் இந்த பூமியில் இருந்துவிட்டு வாடகை செலுத்தாமல் சென்றுவிடக்கூடாது. எங்கள் வாடகையை நாங்கள் செலுத்த வேண்டும்’ என்ற பொறுப்பை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நிவேதா தன்னுரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில் ஹம்சகௌரி சிவஜோதி நூலில் உள்ள ஆளுமைகளோடு தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இருந்த உறவுபற்றி கனத்த இதயத்தோடு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிவஜோதியின் தந்தையார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நவம்பர் 20இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இருநூறு பேருக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்தவர்களும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் – விசாரணைக்காக விசேட குழு நியமனம் !

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(3) வது பிரிவின்படி குறித்த குழுவை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண ஊழியர்களின் திடீர் போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்கள் – சொந்த விருப்பு வெறுப்புக்களால் தரமிழந்து போகும் போக்குவரத்து சேவை !

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ் . சாலை ஊழியர்கள் நேற்றுத் திங்கட்கிழமை காலை முதல் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று வடக்கு மாகாணம் முழுமையும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து இ.போ.ச பேருந்துகளும் பணியில் இருந்து விலகியுள்ளன.

சரி ஏன் இந்த பணிப்புறக்கணிப்பு..?

வசாவிளான் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மோதியதில் மாணவன் ஒருவன் அண்மையில் காயமடைந்தான்.இதையடுத்து சாரதியொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்தத் தாக்குதலைக் கண்டித்தே நேற்று முதல்  பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று வடமாகாணம் முழுமையும் இந்த பகிஸ்கரிப்பு விரிவாக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளில் சனநெரிசலான வகையில் மாணவர்களும் – தொழிலுக்கு செல்வோரும் – வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்வோரும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தால் கூட வேறு ஆயத்தங்களை பலராலும் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்தால் சீசன் டிக்கெட்டுகள்களை நம்பி பயணப்படுவோரின் நிலை என்ன..? தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் இருந்தால் பெட்ரோல் நெருக்கடியால் உள்ளதே பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.  அரச பேருந்துகளும் இயங்காவிட்டால் தனியார் பேருந்துகளில்  சன நெருக்கடி எவ்வாறானதாக இருக்கும்..? அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சென்று வேலைகளை ஊழியர்களால் செய்ய முடியுமா..?

இது தவிர வட மாகாண கடைக்கோடி கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் இல்லை. இது தவிர தனியார் பேருந்துகள் தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளையே அதிகம் ஏற்றுவார்கள். இந்த நிலையில் பிரதான பாதைகளூடாக செல்லும் அரச பேருந்துகளே பல கிராமப்புற பயணிகளுக்கு தஞ்சம். இப்படியிருக்க அப்பகுதியில் இருந்து நகரம் வருவோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பால் என்ன ஆவார்கள்..?

“நான் பேருந்துக்காக காத்திருந்து அதே இடத்தில் நகரத்துக்கு கத்தரிக்காய்களை கொண்டு செல்ல காத்திருந்த முதியவர் ஒருவரும் நின்றிருந்தார். எதிர்பார்த்த பேருந்து வரவில்லை. தனியார் பேருந்து ஒரு கூட்ட நெரிசலான வகையில் வந்தது. அந்த முதியவர் பேருந்தில் ஏறவில்லை. அவரை ஏற்ற கண்டெக்டரும் விரும்பவில்லை.” என நண்பர் ஒருவர் பேருந்து வளாகத்தில் நின்று விசனப்பட்டுக்கொண்டார்.

இந்த சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் அந்த முதியவரின் பலநாள் உழைப்பு வீண். இனிமேல் அவர் ஆட்டோ எதிலாவது தான் நகரம் வர வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும்..? இவை எதுவுமே யாருக்கும் தேவைையில்லை. இ.போ.ச சேர்ந்த சாரதிகளின் சொந்த விருப்பு – வெறுப்புக்களுக்காக இப்படி நூற்றுக்கணக்கானோர் இன்றைய நாள் முழுதும் பாதிக்கப்படவேண்டும்.

இது தவிர QR முறையில் வழங்கப்படும் 4 லீட்டர் பெட்ரோல் ஒரு கிழமைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிலை நடைமுறையிலுள்ள இந்த சூழலில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஊழியர்களின் இந்த பணிப்புறக்கணிப்பு அபத்தமானது.

இவை எதனையும் இந்த அரச ஊழியர்கள் கவனத்தில் கொள்வதேயில்லை என்பதே வேதனையான விடயம்.

இ.போ.ச பேருந்து சாரதியின் கவனக்குறைவால் 65 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி அண்மையில் மரணமடைந்தார். அது போல மதுபோதையில் பேருந்து ஓட்டிய இ.போ.ச சாரதி அண்மையில் புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்து சாரதியின் அவசரத்தால் ஒரு பாடசாலை மாணவி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருந்தார். இப்படியாக இ.போ.ச பேருந்து சாரதிகள் பற்றி ஒரு தொகை முறைப்பாட்டை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட இந்த இ.போ.ச வடமாகாண அதிகாரிகளால் முடியாது. எதற்கெடுத்தாலும் பணிப்பகிஷ்கரிப்பு என அறிவித்து விடுகிறார்கள்.

யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை ஏற்க முடியாது. இ.போ.ச சாரதி தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியதே. அதற்கான தீர்வை நீதிமன்ற நகர்வுகள் ஊடாக மேற்கொள்ளாது அரச அதிகாரிகள் என்பதற்காக பேருந்துகளை இயக்காது விடுவது என்பது மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத  வடமாகாண இ.போ.சபையின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

இன்றைய பகிஸ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இ.போ.ச சபை ஊழியர்களின் ஒரு போராட்ட  பதாகையில் தனியார்  பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக என குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அரச ஊழியர்கள் என்ற பெயரில் அராஜகம் செய்வது இ.போ.ச ஊழியர்கள் தான்.  தங்களுடைய இஷ்டத்துக்கு திடீர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்ற சிந்தனையே இல்லாமல் செயற்படுகிறார்கள்.

 

உண்மையிலையே இ.போ.ச சபையினர் மக்களை பற்றி சிந்திப்பவர்கள் என்றால் விரைவாக பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும். உள்ளதே பொருளாதார நெருக்கடி – எரிபொருள் விலையேற்றம் – என பலவற்றாலும் அல்லலுறும் மக்களை இந்த பகிஸ்கரிப்பு போராட்டங்கள் இன்னுமும் பாதிக்கின்றன என்பதை இ.போ.ச ஊழியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

FIFA 2022 – நான்கு முறை சாம்பியனான ஜேர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த ஜப்பான் !

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் E பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின.

நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.

 

முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது. 75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

https://www.maalaimalar.com/football/japan-stun-4-time-champions-germany-2-1-in-group-e-540427

அவுஸ்ரேலியாவில் முறைகேடாக நடந்துகொண்ட சமிக கருணாரட்ன – ஓராண்டு விளையாட தடை !

சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சாமிக்க கருணாரத்னவின் பெயர் இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெறாமை குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோருமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னதாக இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் என பலரும் இலங்கை கிரிக்கெட் சபை மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

FIFA 2022 – அர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் ஒருநாள் விடுமுறை !

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.

முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது. சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.

 

இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.