::பெண்ணியம்

Wednesday, September 23, 2020

::பெண்ணியம்

பெண்ணியம் பற்றிய செய்திகள் கட்டுரைகள்

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?

நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.

– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –

கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.

நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?

இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.

எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.

எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.

அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.

மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.

தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.

புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.

ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.

29 ஆவது பெண்கள் சந்திப்பு பேர்லினில் நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.

பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர்

இலங்கையில் பால்வினைத் தொழில் : சந்தியா (யாழ்ப்பாணம்)

இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.

பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.

தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று  ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும்  இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில்  தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான  கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது.  அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான்  விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம்  என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே  நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி  ஒருவர் என அறிய வருகிறன்றது.

அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.  இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு  அரசாங்கத்தின் அணுசரணையுடன்  தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.

இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில்  கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து  வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும்  பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக்  கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்)  சட்டரீதியாக்கினால்  பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி: ஊடறு

பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையும் பலவீனமும் ஆணாதிக்கத்தின் பிரிவுகளால் பயன்படுத்தப்படுகின்றது! : விஸ்வா

Feminism_Faces _._._._._
அண்மைய சில வாரங்களாக தேசம்நெற் இல் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதி வரும் விஸ்வா இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கேயே வாழ்பவர். ஊடகவியலாளர். தேசம்நெற்றில் அவருடைய செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளிவரும். ‘விஸ்வா’ அவருடைய புனைப்பெயர். அவர் தேசம்நெற் ஆசிரியர் குழுவுடன் தொடர்பில் உள்ளவர்.
._._._._._

வவுனியா இடப்பெயர்வு முகாம்களில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இம்  முகாம்களில் உள்ளவர்களை சென்று பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு இன்னமும் அனுமதி மறுக்கப்பட்டே வருகின்றது. வுன்னி யுத்தம் முடிவடைந்து ஓராண்டு ஆகின்ற நிலையிலும் இவர்களுடைய எதிர்காலம் நம்பிக்கையானதாக இல்லை. 

இந்நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களில் சிலர் குழந்தைகளைப் பிரசவித்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்திருப்பது  பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது இவ்வாறிருக்க, பூனகரி இரணைமாதா நகரில் மீள்குடியேற்றபட்ட குடும்பங்களில உள்ள சுமார் எட்டு திருமணமாகாத  இளம்பெண்கள் காப்பிணிகளாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இருந்து படையினரிடம் சரணடைந்த பெண்களில் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்கி இருந்தனர். இப்பெண்களில் திருமணமாகாத இளம்பெண்களும் உள்ளடங்கி இருந்ததாக புனர்வாழ்வ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இத் தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது, பூனகரி இரணை மாதா நகரில்  மிள்குடியேற்றப்பட்டவர்களில் 9 வரையான யுவதிகள் திருமணமாகாமல் காப்பிணியாகி உள்ளனர். இவர்களை படையதிகாரிகள் விசாரித்த போது, 7பேர் இதற்கு காரணமாக இராணுவச் சிப்பாய்களை அடையாளம் காட்டியுள்ளதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மற்றைய இருவருக்கு யாரை அடையாளம் காட்டுவதென்பது முடியாமல் போய்விட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. இராணுவத்தினருடனான இப்பெண்களின் உறவு அப்பெண்களின்  விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆயினும் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய இயலாமை பலவீனங்களை இராணுவம் தங்களுடைய திருப்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டு தமிழ் சமூகத்திடம் உள்ளது.

பெண்களுடைய இயலாமையையும் பலவீனத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற போக்கு இராணுவத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் சமூகத்திலும் காணப்படுகின்றது. தமிழ்ப் பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இராணுவத்தாலும் தங்கள் சொந்த சமூகத்தாலும் உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாட்டு முகவர்களின் பிடியில் பெயர் தெரியாத நாடுகளில் தமிழ் பெண்கள் இயலாமை பலவீனம் காரணமாக முகவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் தமிழ் பெண்களின் சமூக வாழ்நிலையை மிகவும் பாதித்து உள்ளது. தொடர்ச்சியான இடப்பெயர்வும் முகாம் வாழ்வும் அவர்களது கல்வியை வாழ்வாதாரங்களை இழக்கச் செய்துள்ளது. இவற்றுடன் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்திற்காக விரும்பியும் விரும்பாமலும் சென்ற அல்லது கொண்டு செல்லப்பட்ட ஆணுறவுகள் இழக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். இவர்களுடைய இந்த இயலாமையும் பலவீனமும் அங்குள்ள வேறுபட்ட ஆணாதிக்க பிரிவுகளாலும் பயன்படுத்துகின்ற நிலை அங்குள்ளது.

ஆனால் சமூகம் இந்நிலையின் ஆழ அகலத்தை உணர்ந்துகொள்ளாமல் ‘கலாச்சாரச் சீரழிவு’க்கு இப்பெண்களையே குற்றம்சாட்டுகின்ற தன்மை இன்னமும் மாறவில்லை.

தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான குடிசைளை  அமைப்பதற்கு ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவத்தினர் உதவியாக அனுப்பப்படுகின்றனர். இது இராணுவத்தினருக்கும் அக்குடும்பங்களுக்கும் இடையே  நட்புறவையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. ஆண்களுடன் ‘மச்சான்  ஐஞ்சு மணிக்கு தண்ணி அடிப்பம்’ என்று கூடி உறவாடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டு வருகின்றது. இதே போன்று இளம் வயதினரான இராணுவ இளைஞர்களுக்கும் அக்குடும்பங்களிலுள்ள பெண்களுக்கும் நட்பு ஏற்படுகின்றது. இந்நட்பு வேறுபட்ட வகைகளில் வெளிப்படுத்தப் படுவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தொடர்புகள் சமூகத்தின் ஒரு பிரிவினரால் ஒரு கலாசார சீரழிவிற்கு இட்டுச்செல்வதாகப் பார்க்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற பகுதிகளில் விரைவில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாத வரை இராணுவ முகாம்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படாத வரை  இந்நிலைமைகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

புலம்பெயர்ந்த சமூகத்திலும் தொடரும் குடும்ப வன்முறைகள்! லண்டனில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் பதிவு

Domestic_Violence._._._._._. 

 மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராவும் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பெண் விடுதலையை பறைசாற்றும் இந்நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டமோ அல்லது மேற்கு நோக்கிய புலம்பெயர்வோ தமிழ் ஆணாதிக்கச் சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இப்பெண்ணுடைய பதிவு வெளிப்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னமும் தொடர்கின்றது. இப்பெண் இலங்கையில் இருந்த சமயம் ஐரோப்பிய பெண்ணிலைவாதி ஒருவர் இலங்கை சென்ற சமயம் அவரைச் சந்தித்து உதவி நாடியுள்ளார். அப்பெண்ணிலைவாதியுடன் தொடர்புகொண்டு லண்டன் குரல் இதனை உறுதிசெய்துள்ளது. தான் ஏதும் நடவடிக்கைகள் எடுத்தால் அது ஊரில் உள்ள பெண்ணுக்கும் அவரது உறவினர்களுக்கும் கூட ஆபத்தாக அமையும் என்பதால் எதனையும் மேற்கொண்டு செய்யவில்லையென அப்பெண்ணிலைவாதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

._._._._._. 

”அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். சித்திரவதைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.”

._._._._._. 

நான் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கும் லண்டனில் வசிக்கும் என் மாமாவின் மகனுக்கும் 1994ல் அவரின் வீட்டாரின் அவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தாரின் பல தொல்லைகள் இன்னல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் கழித்து 11/6/1997ல் இந்தியாவில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்க முன்னரே வீடு கட்டச் சொன்னார்கள். தாலி கூறை பாஸ்போட் எடுக்கச் சொன்னார்கள். சீதனமாக ஜந்து லட்சம் வாங்கினார்கள். கலியாணச் செலவு போக்குவரத்துச் செலவையும் (அவரது அண்ணாவுக்கும் சேர்த்து) எடுக்கச் சொன்னார்கள். எனது அப்பா இறந்துவிட்டார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்பட்டு என்னுடைய அம்மா சகோதரங்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று ஒருநாள் மட்டுமே என்னைத் தன்னுடன் தங்கவைத்தார். அவர் அவரது சகோதரருடன் தனி வீட்டிலும் என்னை என் சகோதரியுடன் வேறு ஒரு வீட்டிலும் தங்கச் செய்தார். திருமணம் முடித்த ஏழாவது நாள் 19/06/1997 அன்று என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டு அவரும் அவரது அண்ணாவும் 25ம் திகதிவரை தங்கியிருந்துவிட்டு லண்டன் திரும்பினார்.

லண்டன் திரும்பியதும் மன்னிப்புக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவசரப்பட்டு யோசிக்காமல் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிட்டேன் நாங்கள் ஒரு மாதம் வரையாவது தங்கியிருக்கலாம் என்று போனிலும் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் ஒரு வருடம்வரை ஒருசில கடிதங்கள் போட்டார். ஒரு சில தடவைகள் போனிலும் பேசினார். அத்தோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். அதனால் நான் பல வழிகளிலும் அவரது சகோதரங்களாலும் அவர்களது நண்பர்களாலும் அவமானங்களையும் பல துன்பங்களையும் அடைந்தேன்.

அதனால் 2000 ஆண்டு அவரிடம் விவாகரத்துக் கேட்டு கடிதம் போட்டேன். அதற்கு அவர் நாங்கள் இந்தியாவிற்குப் போய்ப் பேசித் தீர்ப்போம் என்றார். அதன் பின்னர் எதுவித தொடர்பும் இல்லை. 2002ல் தன்னை மன்னிக்கும்படியும் நான் திருந்திவிட்டேன் இனிமேல் இப்படியான பிழைகளைச் செய்ய மாட்டேன் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்றார்.

அவரால் பல தடவைகள் ஏமாந்ததாலும் அவரின் சகோதரங்களால் துன்பங்களை அடைந்ததாலும் நான் மறுத்தேன். அதனால் லண்டனில் இருக்கும் அவரது சகோதரர் அண்ணி நண்பர்கள் மூலம் என் குடும்பத்தாருடன் பேசவைத்து எனக்கு பல வாக்குறுதிகளைத் தந்தார். உங்களை நான் கடைசிவரைக்கும் கைவிட மாட்டேன். சந்தோஷமாக வைத்திருப்பேன். ஊரில் என் குடும்பத்தாரால் நீங்கள் நேரடியாகவே நிறையவே பாதிக்கப் பட்டதனால் அவர்களுடன் நட்புக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்கவைத்து 21/06/2003ல் அவர் இலங்கை வந்து 05/07/2003 என்னை லண்டன் அழைத்து வந்தார்.

ஆனால் ஒரேயொரு வாரம்தான் நாங்கள் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அவர் என்னைப் பலவழிகளிலும் புறக்கணித்து காயப்படுத்தி மட்டம் தட்டினார். என்னை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அவரது சகோதரர் வீட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வார். வேறு எங்கு செல்வதானாலும் அவர் தனியாக என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்.

நான் எனது நண்பர்கள் உறவினர்களுடன் போனிலும் பேச அனுமதியில்லை. அவரது அண்ணா வீட்டாருடன் மட்டுமே கதைக்க வேண்டும். போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், கனடா, கொலண்ட், சிங்கப்பூர், துபாய் என்று பல நாடுகளிலும் உள்ள நண்பர்களைப் பார்க்க அடிக்கடி செல்வார். நானும் வருவதாகக் கேட்டால் எனக்கு விசா எடுப்பது கஷ்ரம் என்று ஒவ்வொரு தடவையும் மறுத்துவிடுவார். அதனால் நான் மிகவும் நொந்து போனேன். வீட்டிற்குள்ளேயே அநாதையான தனிமையான பயந்த சிறை வாழ்க்கையே வாழ்ந்தேன்.

நான் எங்கள் நாட்டு கலை கலாச்சாரப் பண்பாடுகள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்ததால் அவரை பூரணமாக நம்பி கடவுளாக மதித்து அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. அவரது அன்பு, ஆறுதல், ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே இல்லாது அநாதையாகவே வாழ்ந்தேன்.

அவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்பவர். வெளியில் எல்லோரிடமும் நல்லவர் மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் வீட்டில் ஒரு ஊத்தைப் பெண்ணை பல வருடங்களாக வைத்திருந்தார். அவளை நான் சொல்லித்தான் அனுப்பினார். அதுமட்டுமல்ல மட்டமான கிளப்புகள் மட்டமான தொடர்புகளும் உள்ளவர். அப்படியெல்லாம் அவர் மோசமான ஆளாக இருந்தாலும் நான் அவரை அதிகமாக ஆழமாக நேசித்தேன்.

அதுமட்டுமல்ல அவர் என்னுடன் அதிகமாகப் பேசவும் மாட்டார். இரண்டொரு வார்த்தைகளே பேசுவார். சில சமயங்களில் அதுகூட பேசமாட்டார். ஆனால் நண்பர்கள் உறவினர்களுடன் மணிக்கணக்காகப் பேசுவார். எனக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணியவும் அவர் விரும்பும் சிலருடனேயே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பார். ஆனால் நண்பர்களிடம் நான் அழகாக இல்லை. நாகரீகமாக இல்லை ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் விமர்சிப்பார். என்னுடன் பெயரளவிற்கே வாழ்க்கை நடாத்தி எனக்கு எதுவுமே தெரியாமல் ஆக்கி புறக்கணித்து ஒதுக்கியே வைத்தார். நான் அவருக்காக என் குடும்பம், வேலை, என்னுடைய மேல்படிப்பு இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். எனக்கு லண்டனில் எதுவும் தெரியாது. அவரையே உலகமாக நினைத்து வாழ்ந்தேன். ஆனால் அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் 16 வருடங்களாக என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார்கள்.

25/12/2004ல் என்னை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அவரின் நடவடிக்கைகளால் லண்டன் வர மறுத்தேன். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது நாங்கள் ஒரு புதுவாழ்க்கை வாழலாம் என்று அவரின் தாயின் படத்தின்மீது சத்தியம் செய்து என்னை அழைத்து வந்தார். ஆனால் அவர் எள்ளளவும் திருந்தவில்லை. 2006 ஜனவரி அவரின் நண்பரின் கல்யாணம் என்று என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் அவர் என்னை திருமணத்திற்கு அழைத்துப் போக செல்ல விரும்பவில்லை. அவரது கொழும்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் சென்றனர்.

லண்டன் திரும்பியதும் காரணமே இல்லாமல் என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். செத்துத் தொலை என்று சொல்லுவார். எங்களுக்குப் பிள்ளைக்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். இப்படியான சித்திரவதைகளால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த நான் அவரது கொலை மிரட்டல்களுக்கும் பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அவர் நீ செத்தால் சா ஆனால் எனக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லி பொலிசாரை வரவழைத்தார். அவர்கள் வந்து எங்களைச் சமாதானம் செய்து தைரியம் சொல்லிவிட்டுச் சென்றனர்.

அவருக்கு உயிரணுக்கள் குறைபாடு இருந்தது. அதனை என்னிடமும் மற்றவர்களிடமும் மறைப்பதற்காகவும் என்னை இந்தியாவில் கைவிடுவதென்று அவரும் அவரது சகோதரர்களும் நண்பர்களும் முடிவெடுத்திருந்தனர். நானும் இது தெரியாமல் அவருடன் இந்தியா சென்றேன். இதெல்லாம் பின்னர்தான் தெரிய வந்தது.

அவருக்கு மருத்துவ விசா எனக்கு சுற்றுப்பயண விசாவும் எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு அது தவறுதலாக நடந்தது என்றார். 21/06/2006ல் இந்தியா சென்று சிகிச்சை ஆரம்பித்தோம். சிகிச்சை கடினமானதாகவும் நீண்டகாலம் எடுக்கும் என்றும் கூறி என்னை இந்தியாவில் அவரது நோர்வேயில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கவைத்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதென்றால் பொலிஸ் பதிவு தேவை. 10 நாட்கள் தங்கிச் செல்லும் அவருக்கு எடுத்தார் ஆனால் தங்கியிருக்கும் எனக்கு எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்களுக்குத் தேவையில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் என்றார்.

பொலிஸ்பதிவு இல்லாததால் நான் பல சிரமங்களை அனுபவித்தேன். அவர் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் என்னுடன் தங்குவதற்கோ மருத்துவமனைக்கு வருவதற்கோ விரும்புவதில்லை. வரச் சொன்னால் சண்டைபோட்டு அடிப்பார். கழுத்தை நெரிப்பார். அவரின் இவ்வாறான நடவடிக்கைகளாலும் கடுமையான தொடர்ச்சியான சிகிச்சை முறைகளாலும் உதவிக்கு ஆள் இல்லாததாலும் உடல் உள ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்பட்டேன். அதனால் சிகிச்சை 4 தடவைகள் தோல்வியாகவே முடிவடைந்தது. ஜந்தாவது தடவை சரிவந்தது. நான் உதவிக்காக எனது தாயை அழைக்கச் சொன்னேன். அவர் மறுத்தார். எனது சகோதரியே செலவுசெய்து எனது தாயை இந்தியா அனுப்பினார்.

அவர் சிகிச்சைக்கு வந்து லண்டன் திரும்பியவர் 5 மாதங்கள் கழித்து 03/12/2007ல் இந்தியா வந்தார். 05/12/2007 அன்று பிள்ளையை வெளியில் எடுத்தால்தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்று (பிள்ளை ஆரோக்கியமாக இருந்தது) வைத்தியர்கள் சொன்னார்கள். நான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளை வேண்டும் என்றேன்.என் கணவர் மறுத்து விட்டார். என் கணவரால்தான் பின்னர் ஜந்தாவது மாதத்தில் பிள்ளையை சாகடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. எல்லாம் முடிந்து 4 மாதத்திற்குப் பின்னரே அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்தேன்.

அவர் 16/12/2007 லண்டன் திரும்பிவிட்டார். என்னை 2 மாதங்கள் கழித்து கூட்டிப் போவதாகச் சொன்னார். ஆனால் போனவர் வரவேயில்லை. ஒவ்வொரு மாதமாக நேரம் இல்லை என்று நாட்களைக் கடத்திக் கொண்டே போனார். அவர் 8, 9 தடவைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, கொலன்ட் என்று அவரது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் சென்றார். 21/06/2008 இருந்து எனக்குப் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.

எனது அம்மாதான் என்னுடன் இருந்தா. அவர் லண்டன் கூட்டிப்போக மாட்டார் என்று 16/06/2008ல் அம்மா இலங்கை சென்றுவிட்டார். அவரது நோர்வே நண்பன் (வீடு அவருடையது) சகோதரியை (இந்தியாவில் வசிப்பவர்) என்னுடன் தங்கவைத்து அவர்மூலம் என்னை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். காஸ்சினை திறந்துவிடுவா. வெளியில்விட்டு கேற்றைப் பூட்டுவா. பின்னர் ஒரு மாதம் சாப்பாடு இல்லாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தா. வெறும் பிஸ்கட் தண்ணியுடனேயே ஒரு மாதம் வாழ்ந்தேன். அதுவும் வேலைக்காரி வீட்டுக்காரிக்குத் தெரியாமல் வாங்கிவந்து தருவா.

20/09/2008 இரவு 7 மணியளவில் வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். எங்கு செல்வது என் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கையில் பணமும் இல்லாது தவித்தேன். அந்த நேரம் இந்தியாவில் வசிக்கும் என்னுடன் படித்த நண்பி என்னை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவர் போன் செய்வதையும் நிறுத்திவிட்டார். நான்தான் அவருக்குப் போன் செய்வேன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கட்பண்ணி விடுவார். 27/10/2008 லண்டன் வரும்வரை நகைகளை விற்றே சாப்பிட்டேன்.

நான் இந்தியாவில் இருக்கும்போது சிங்கப்பூரில் அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து 06/06/2008 அவருக்கு மறுமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்தவிடயம் எனக்குத் தெரிந்ததும் நான் லண்டன் திரும்ப பணம் கேட்டேன் தர மறுத்துவிட்டார்.

அவரது லண்டனில் வசிக்கும் நணபர் ஒருவரும் எனது நண்பி என் சகோதரங்கள் அம்மா எல்லோரும் சேர்ந்தே எனக்கு பணஉதவி செய்துள்ளார்கள். பொலிஸ் பதிவு இல்லாததால் எனக்கு உடனே வர இரண்டரை லட்சம் இந்தியன் பணம் தேவைப்பட்டது. எனது PRஜ கான்சல் பண்ணுவதற்காகத்தான் அவர் 2 வருடங்கள் 4 மாதங்கள் வேண்டுமென்றே என்னை இந்தியாவில் தங்க வைத்தார்.

அத்தனை சிரமங்களையும் அனுபவித்து லண்டன் வந்த என்னை ஈவு இரக்கம் மனச்சாட்சி எதுவுமே இல்லாமல் கதவை திறக்காமல் அறைக்குள் இருந்துகொண்டு 2.30 தொடக்கம் இரவு 8.30 வரைக்கும் கதவடியிலேயே தங்க வைத்தார். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான் கௌரிவிரதத்தோடும் காச்சலோடும் மிகவும் சிரமப்பட்டேன். அவரது நண்பர் ஒருவரை (எனக்கு 3 வருடங்களாகத் தெரியும் 3 வருடங்கள் அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கன்றேன்.) தற்செயலாக சந்திக்க வைப்பதுபோல் சந்திக்க வைத்து என்னை அவனது வீட்டிற்கு போகச் செய்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் எனது கணவரின் லண்டனில் வசிக்கும் அண்ணாவிடம் உதவி கேட்டேன். காலையில் பார்க்கலாம் இப்போ அந்த நண்பருடன் செல்லுங்கள் என்றார். நானும் அவனுடன் சென்றேன். அவனிடம் என்னைக் கொலை செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். அவன் என்னை அடைத்து வைத்திருந்தான். நான் அங்கிருந்து தப்பி குயின்ஸ்வேய்க்கு வந்து பொலிசாரின் உதவியை நாடினேன். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டார்கள். வுமன் சென்ரருக்கு போகச் சொன்னார்கள். காவல்காரனும் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. என் கணவர் அப்படி எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

நான் எனது கணவரின் அண்ணாவிடம் மறுபடியும் உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். அவரது வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். ஊருக்குப் போங்கள் இல்லையென்றால் எங்காவது ஒரு மூலையில் போய் தங்குங்கோ என்றார். அழுதுகொண்டே வீதியில் 5 மணித்தியாலங்களாக குளிரில் உறைந்து போயிருந்தேன். அதன் பின்னர் எனது நண்பியின் அக்கா வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்.

திட்டம் போட்டே என்னிடம் டிவோஸ் எடுத்து ஊருக்குப் போய் திருமணம் 09/2009ல் செய்துகொண்டு வந்து மனச்சாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துகின்றார். மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். (இயக்கக் காசுகளும் எக்கச்சக்கமாக அவரிடம் மாட்டியுள்ளது.) எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கின்றார். சொந்தமாக குயின்ஸ்வேயில் 2பெட்ரூம் 1 லிவிங் ரூம் பிளாட் இருக்கிறது. கொலின்டேலில் 4 பெட்ரூம் வீடு உள்ளது. (அதனை அண்ணாவின் மகளின் பெயருக்கு மாற்றியிருக்கின்றார்.). 6 மணி ரான்ஸ்பர் கடை 3 கார் வைத்திருக்கின்றார். ஒரு கார் அண்ணாவுக்கும் இன்னொரு நணபருக்கும் கொடுத்திருக்கின்றார்.

எனக்கு எதுவுமே தர மாட்டாராம் என்னைக் கொலை செய்தே தீருவாராம். அவர் பணத்தினால் எனது வக்கீல் உட்பட அனைவரையும் விலைகொடுத்து வாங்கி விட்டாராம். என்னால் எதுவுமே பண்ண முடியாதாம். எலும்புத் துண்டை நாய்க்கு வீசுவது போல வீசிக் கொண்டிருக்கிறாராம். அதனால் எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றார்களாம்.

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) – புன்னியாமீன்

international-womens-day.jpgஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும்,  அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும்  கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள்  இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று  தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!

1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெர்மனில் The Vote for Women  மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ
கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை  (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS)  பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE)  மானுடவியல் (ANTHOROPOLOGY)  உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள்  மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்…. வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில்  ‘அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.

வத்சாவுக்கு நிகழ்ந்த கொடூரம் : முதலும் அல்ல! முடிவும் அல்ல! கிழக்கின் அவலம் : தரணிகா

Regie_Varsa திருகோணமலையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள பாலையுற்று என்ற புறநகர்க் கிராமத்தில் வசிக்கும் ரெஜி (கட்டாரில் வேலை பார்க்கிறார்.) கிருபராணி தம்பதியரின் புதல்வி வத்சா (வயது 6), புனித மரியாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்துக்கொண்டு இருந்த வேளையில் 11.03.09 அன்று கடத்தப்பட்டு, மிக கோரமாக கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாடப்பட்ட நிலையில் ஒரு சாக்கில் மூட்டையாக கட்டப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இக்கொடூர நிகழ்வு திருமலையில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்துள்ள தமிழ் மக்களையும் உலுக்கி உள்ளது.

சம்பவத்தின் விபரமானது:

பாலையுற்றில் வசிக்கும் வத்சா வீட்டினருடன் ரி.எம்.வி.பி உறுப்பினரான மேவின் என்ற இளைஞர் நன்றாகவே சிறிது காலம் பழகியுள்ளார். இவருக்கு இன்ரநெற், கொம்பியுட்டர் கையாளத் தெரியுமென்ற நிலையில் அவ்வீட்டினருடன் இதைக் காரணம்காட்டியே நண்பராக பழகியுள்ளார்.

வத்சா நாளாந்தம் 3 மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு “ஆட்டோ”விலேயே பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மேவின் பாடசாலையிலிருந்து வத்சாவை அழைத்துச் செல்ல முனைகையில் அப்பாடசாலையின் ஆசிரியர் தடுத்த நிலையிலும் வத்சா ‘எனக்கு இந்த மாமாவைத் தெரியும், இவர் எங்கள் வீட்டு மாமா தான்’ என்று சொல்லியதில் மேவினுடன் குழந்தை செல்லவதற்கு ஆசிரியர் அனுமதித்தார். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் சிறுமியைக் காணவில்லையென தேடத்தொடங்கியதில் பாடசாலை மூலம் பொலிஸாரிடம் புகார் கொடுத்து தீவிரமாக தேடத்தொடங்கினர்.

இந்நிலையில் வத்சாவைக் கடத்திய நபர்கள் தொலைபேசியில் சிறுமியின் தாயாரினைத் தொடர்பு கொண்டு கப்பமாக 3 கோடி ரூபா பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் குழந்தையை கொல்லுவதாக மிரட்டியும் உள்ளனர். தொலைபேசி மூலம் தயார் மிரட்டப்பட்டு மிக அலைக்கழிக்கப்பட்டு உள்ளார். அதன்பின் தாயார் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கடத்தல்காரர்களுடன் பேசி இறுதியில் 50 லட்சம் பணம் தருவதாக தாயார் ஒப்புக்கொண்டார்.

இதே நேரம் பாடசாலையிலும் அலுவல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வத்சாவை பலவிதத்திலும் தேடத் தொடங்கினர். பாடசாலையில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறத் தொடங்கின.

வத்சாவை பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற மேவின் என்ற ரி.எம்.வி.பி உறுப்பினர் தனது நண்பர்கள் அறுவரிடம் குழந்தையை கையளித்த நிலையில் எல்லோருமாக சேர்ந்து குழந்தையை ஒளித்து திரிந்தனர். இதில் ஒரு கட்டத்தில் சிறுமி அடம் பிடிக்கவே சிறுமியின் காலுறையைக் கழட்டி வாயினுள் அடைத்து கை கால்கள் கட்டப்பட்டு, பின்னர் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் வத்சா மரணம் அடையவே சிறுமியைக் கோரமாக வெட்டி சாக்குப் பையில் கட்டி “புதிய சோனத்தெரு” (பள்ளிவாசலுக்கு முன் வீதியில்)வாய்க்கால் ஒன்றினுள் குப்பையுடன் குப்பையாக போட்டுள்ளனர்.

வத்சா கொல்லப்பட்ட பின்னரும் கொலையாளிகள் வத்சாவின் தாயாரைத் தொடர்ந்தும் மிரட்டி பணத்தைப் பெற்றுக்கொள்ள ஓடித்திரிந்துள்ளனர்.

குப்பைகளுடன் போடப்பட்ட இந்தப்பை தேடுவாரற்ற நிலையில் 3 நாட்களாக வீதியோர வாய்க்காலில் மழையிலும் தண்ணியிலும் கிடந்தது. 3வது நாள் “நகரசுத்தி தொழிலாளி” வீதியைத் துப்பரவு செய்கையில் சாக்குப் பையை கண்டு அதனை அகற்ற எடுத்த போது கையொன்று தெரியவே அத்தொழிலாளி பதற்றமடைந்து பொலிஸிற்கு தகவல் வழங்கினார்.

பொலிஸ் விசாரணைகளில் அது காணாமல் போய் தேடப்பட்ட வத்சாவின் உடல் என்பது நீதிவான் இளந்திரையன் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாருக்கு புகார் கொடுத்த வத்சாவின் பாடசாலை “கன்னியாஸ்திரிகள்” இருவர் அதனை உறுதிப்படுத்தினர்.

வத்சா என்ற இச்சிறுமி இருவருக்கு மேற்பட்டோரால் மிக மிருகத்தனமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன் அகோரத்தினாலேயே சிறுமி மரணித்து உள்ளதாகவும்  பிரேத பரிசோதணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பெண்ணுறுப்பு மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு உள்ளதும் அச்சிறுமி அணிந்திருந்த ஆடை முழு இரத்தத்தில் தோய்ந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனையின் பின் வத்சாவின் உடல் தாங்கிய பேழை சீல்வைக்கப்பட்டது. வத்சாவின் உடல் படுகொலை செய்யப்பட்ட பின் துண்டுகளாக வெட்டப்பட்டு வாய்க்காலில் போடப்பட்டு மூன்று நாட்களாக அனாதரவாக நனைந்து கிடந்ததால் மிகச் சிதைவடைந்து சீரழிந்து அகோர நிலையில் கிடந்துள்ளது. இதனை பெற்ற தாயால் எப்படிப் பார்க்க முடியும். இந்நிலையிலேயே பேழை “சீல்” வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.03.09) ஊரே சோகமும் திகிலும் விடுபடாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

நீதவான் இளந்திரையன் அவர்களின் விடா முயற்சியால் மேவின் உட்பட்ட குற்றவாளிகள் 6 பேர் கைதானார்கள். இன்னும் இரு முக்கிய குற்றவாளிகள் இதுவரை தேடப்பட்டு வருகின்றனர். (வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு) கடந்த ஞாயிறு குற்றவாளிகளை வைத்திய பரிசோதணைக்கு கொண்டு சென்ற நேரத்தில் ரி.எம்.வி.பி உறுப்பினர் மேவின் என்ற குற்றவாளி தப்பி ஒட முயன்றதாக சொல்லப்பட்டு பொலிஸாரால் அதே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகுதி கொலையாளிகள் விசாரணையில் உள்ளனர். மேவின் தப்ப முயன்றதாக சொல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதானது மேவினுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளை காப்பாற்றுவதற்காகவே நடைபெற்றதாக தெரிகின்றது.

ஏனெனில் இப்படியாக கடந்த காலங்களில் நடந்து வரும் இது போன்ற கடத்தல், கொலை மிரட்டல், கப்பம் கேட்டல், கொலைகள் என்பன ஏதோ ஒரு விதத்தில் இலங்கை புலனாய்வுக்குப் பின்னால் இயங்கும் தகவல் கொடுப்போரை (இன்போமர்) மையப்படுத்தியே ஒரு கூட்டு வேலைத் திட்டமாக பலதரப்பட்ட தகவல் மூலம் தெரிகின்றது.

இந்த சிறுமியின் கடத்தல், கப்பம் கோரல் கூட கொலைவரை வந்து கொலையாளிகள் கையும் மெய்யுமாக பிடிபட்டதாலேயே தெரியவந்துள்ளது. (திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை) மற்றும் படி கடத்தல் மிரட்டல் நடைபெறுவதும், லட்சம் லட்சமாக கப்பப் பணம் பொது மக்களிடமிருந்து பறிக்கப்பட்டும் இவ் விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் வெளியே வராமல் அவர்களே ஒடுங்கிப்போய் அடுத்த வீட்டிற்கு கூட தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியாமல் பீதியிலும் சொல்லோணாத் துன்பங்களுடன் நெருப்பிற்குள் வாழ்கின்றனர். யாரும் வெளியே வந்து சாட்சி சொல்லிவிட்டு உயிருடன், உறவுகளுடன், உடமைகளுடன் வாழமுடியுமா?

மொத்தத்தில் கிழக்கில் குறிப்பாகத் திருமலையில் நடையெறும் கொடூரங்களும் சட்ட விரோதச் செயல்களும் பல்வேறு கேள்விகளை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. அதாவது: 

சிறிது காலமாவே பாலையுற்று, அன்புவழிபுரம் போன்ற நகர்புற கிராமங்களிலும், திருமலை நகரப் பகுதியிலுள்ள சோனகவாடி என்ற பகுதியிலும் ரி.எம்.வி.பி யைச் சேர்ந்தோரும், இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் ஒட்டி உறவாடிக்கொண்டு தகவல் கொடுக்கும் (இன்போமர் குழுவினரும் தீவிரமாக கப்பம் கடத்தல் கொள்ளை கொலை என்பவற்றில், ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது. (சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.)

மேலும் ரி.எம்.வி.பியிலிருந்து கருணா பிரிவதற்கு முன்பே இருந்து இதுவரை இவர்கள் மிக மோசமாகவே கப்பம் கேட்டு துன்புறுத்துவதாகவும் அதுவும் கருணா – பிள்ளையான் குழு என பிரிந்த நிலையிலும், இன்று வரை இந்த இரு குழுவிலிருந்து பிரிந்து உதிரியாகி வீதியில் திரியும் இவர்கள் உறுப்பினர்கள் வரை தங்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் தமது தேவைகளுக்காக, வெளிநாட்டிற்குச் செல்வதற்காக என மிக மோசமாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகின்றார்கள்.

எனவே மொத்தத்தில்:

1) கருணா குழு

2) பிள்ளையான் குழு

3) அல்லது கருணா – பிள்ளையான் மோதலால் உள்ளிலிருந்து வெளியேறிய உதிரியான உறுப்பினர்கள்

4) கருணா குழு, பிள்ளையான் குழுக்களுடனும் இலங்கை இராணுவத்துடனும் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் கொடுக்கும் குழுவினர் (ஊரிற்குள் இருந்து கொண்டு காட்டிக் கொடுப்போர் உட்பட)

5) எதேச்சதிகாரம் கொண்ட இலங்கை ராணுவக் குழுக்கள்

என இந்த 5 வகைக்குடுபட்டோரின் மூலமே கிழக்கில் – முக்கியமாக திருமலையில் அனைத்து அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. நடைபெறும் சம்பவங்களில் 95 வீதமானவை பலவிதத்திலும் மக்களை மிரட்டி மறைக்கப்படுகின்றன. வெளிவரும் சில சம்பவங்கள் – கொலைகள் கூட சட்டத்தின் முன், நீதியின் முன்நிறுத்தப்பட்டாலும் இறுதியில் அவை சட்டத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்டவையாகி விடுகின்றது. இவை  அனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் இலங்கை இராணுவத்தாலோ, அல்லது அதிகார வர்க்கத்தினாலோ சாட்சிகளை மிரட்டி, விடயத்தை திசை திருப்பியோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை ஓடவைத்தோ, காணாமல் பண்ணியோ, சட்டங்களை தமதாக்கியோ அல்லது இழுத்தடித்தோ, உண்மைகள் – நியாயங்கள் – அத்தனையும் நிர்மூலமாக்குகின்றன.

உதாரணமாக:

1) மூதூரில் நடந்த ‘அக்சன் பாம்’ 17 பேர் படுகொலை

2) திருமலை கடற்கரைமுன் நடந்த 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை

3) திருமலை கோணேஸ்வரர் ஐயர் படுகொலை

4) கல்முனைப் பகுதியில் வீட்டினுள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு சகோதரிகள்

5) வெல்லாவெளியில் 28.02.09ல் நடந்த 14வயது சிறுமி புனிதவதியின் பாலியல் பலாத்காரம்

6) இதனைத் தொடர்ந்து 02.03.09ல் மகாதேவி சிவகுமார் என்ற பெண்ணின் பாலியல் பலாத்காரமும் படுகொலையும்

7) ஒரு வாரத்தில் வெல்லாவெளியில் இன்னொரு பெண் சுட்டுக்கொலை என முடிவில்லாமல் தொடரும் படுகொலைகள் பாலியல் வன்முறைகள்

பிந்திய செய்தி:

1) உவர்மலை (ஓசில்) என்னுமிடத்திலிருந்த ரி.எம்.வி.பி அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

2) திருமலை நகரிலுள்ள ‘பெரியகடை’ என்னும் பகுதியிலுள்ள பிள்ளையான் அல்லது கருணா குழுவினரின் அலுவலகம் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் முக்கிய தடயங்களும், ஒரு முக்கிய சந்தேக நபரான இவர்களின் இயக்க உறுப்பினரான ஒருவரும் கைதாகியுள்ளதை அறிய முடிகின்றது. கடந்த கால இப்படியான பல குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் இக் கைது நடந்துள்ளது தெரிகின்றது.

2006 நடுப்பகுதிக்குப் பின்னர் திருமலை மாவட்டத்தில் இலங்கையரச இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ராணுவக் குழுக்களான கருணா – பிள்ளையான் குழுக்கள் உட்பட்ட ரி.எம்.வி.பி கட்சியனரும், இலங்கை ராணுவத்திற்கு தகவல் கொடுப்பதை தொழிலாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சில முஸ்லீம் நபர்களும் தங்கள் சொகுசு வாழ்கைக்காகவும், ஆடம்பர தேவைக்காகவும் திருமலை மக்களை பல வழிகளிலும் துன்புறுத்தியுள்ளனர். கொலை செய்துள்ளனர். நாட்டை விட்டே ஓட வைத்துள்ளனர். என்ன? எப்போது நடக்கும் என தெரியாமல் மக்கள் பீதியின் மைத்தியிலேயே வாய் திறவா மௌனிகளாக வாழ்ந்துள்ளனர்.

தற்போது வவுனியாவிலிருந்து திருமலைக்கு மாற்றலாகி வந்திருக்கும் நீதிவான் இளந்திரையன் அவர்களின் உற்சாகத்தாலும் – விடாமுயற்சியாலும் அவரின் நேர்மைத்திறனாலும் இப்படியான குற்றச்செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றது. அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முகமென் பார்க்காமல் மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலத்திவைக்கப்படல் வேண்டும். இபபடி பாரபச்சமற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு காப்பற்றப்படுமானால் நாடு ஏதோ சிறிது தப்பிக்கொள்ள வழியுண்டு. 

மேலும் கருணா பிள்ளையான் மோதல்களால் சிந்துஜன் உட்பட 5 உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் கண்டெடுக்ப்பட்டது. அதை நியாயம் கேட்கப் போன சிந்துஜனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் உட்பட பார்த்து நிற்கையில் கழுத்து வெட்டிக்கொலை. பிரான்ஸில் இருந்து வந்த மகிலூரைச் சேர்ந்த வேலுச்சாமி நடேசன் என்ற கிலீபன் அல்லது ஜீவன் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். இவற்றுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் 17 பேர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அதின் பின்னர் கொல்லப்பட்டனர். இப்படியே குழுவாதங்களாலும் பதவி ஆசைகளாலும் இயக்க மோதல்கள் வன்முறைகள் முடிவின்றித் தொடர்கின்றது.

Related News:

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி -இதுவரை மூவர் கைது

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.

இன்று (08.03.09) அகில உலக பெண்கள் தினம்! : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

International_Women_Dayஇன்னும் இரு வருடங்களில் ‘அகில உலக பெண்கள் தினம் நூற்றாண்டு விழா’ எடுக்கவிருக்கிறது. 98 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினமான இன்று கிட்டத்தட்ட 61 நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள், ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் நிறையப் பயன் பெற்றவர்கள் பெண்கள் எனபது மறுக்க முடியாத உண்மை. கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களும் (முதலாம் உலக யுத்தம்1914-1919, இரண்டாம் உலக யுத்தம் 1939-1945) பெண்களின் வாழ்க்கை மாற்றமடைய முக்கிய காரணிகளாகவிருந்தன. ஆண்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற போருக்குச் சென்றார்கள். அதே நேரம் பெண்கள், இதுவரையும் ஆண்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் செய்த அரசியல், தொழிற்சாலை வேலைகளையும், போருக்கான ஆயுத உற்பத்தி வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டார்கள்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இதுவரை பெண்களின் நிலையில் பல முன்னேற்றங்கள் பெரும்பாலான ரீதியில் மேற்கு நாடுகளில்  ஏற்பட்டாலும் வளர்ச்சியடையாத, வளர்ச்சியடையும் பல நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையில் பெரிய விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று உலகில் அதி தீவிரமாக வளர்ந்து வரும் ‘அடிப்படைவாதக் கொள்ளைகள்’ (பெரும்பாலும் சமய ரீதியானது சில கொள்கைகள் இன ரீதியானவை) பெண்களை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிது.

ஓரு சமுதாயத்தின் கலாச்சார, சமயப் பாதுகாவலாளார்களாகப் பெண்கள் கணிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடைகள், வாழ்க்கை முறை என்பன கலாச்சாரப் பிணைப்பு, கலாச்சாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற பெயரில் ஆண்களால் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் பெண்ணினம், இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆணினம் பொறாமைப்படுமளவுக்குக் கல்விப் படிப்பில் மட்டுமல்லாது, பல தொழிற்துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றததைக் கண்டிருக்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட சிறு தொகையினர் அரசியற் தலைவிகளாக வந்திருக்கிறார்கள்.படை வீரர்களாகப் பணி புரிகிறார்கள். விஞ்ஞானிகளாக விண்ணில் பறக்கிறார்கள்.

ஆனாலும் இன்று, ”பெண்ணியம்” என்ற கோட்பாடு ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாது ஒடுக்கபட்ட அத்தனை மக்களுக்கும் போராடும் ஒரு தத்துவ நியதியைக் கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் மட்டும் தாங்கள் சரியென நினைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தப் பெண்ணிய வாதத்தையும் பெண்ணிய தத்துவங்களையும் கையாடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பல திசைகளிலுமிருந்தும் வருகின்றன.

என்னதான் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பெண்ணிய சிந்தனைகள் பல மாற்றங்களை முன்னெடுக்க முனைகிறது. பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் உண்டாக்கவும் தொழில் நிலையங்களில் சம உரிமை, சம ஊதியம் பெறவும் இப்போராட்டஙகள் உதவுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் ஆண்களின் ‘உடமைகள்’ என்ற சட்டம் இருந்தது. இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டு, மனைவியின் சம்மதம் இன்றி அவளை அவளின் கணவர் தொடுவதும் இன்று சட்ட விரோதமாகியிருக்கிது.

இப்படி எத்தயையோ மாற்றங்களைக் கண்டாலும், பெண்கள் உண்மையாகவே தாங்கள் போராடும் ‘சமத்துவத்தை’ அடைந்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் அந்தப் பெண்களின் கணவர் அல்லது காதலனாற் கொலை செய்யப்படுகிறாள். ஓவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியற் கொடுமைக்காளாகிறார்கள். சமய. குடும்ப கவுரவம் என்ற பெயரில் பல பெண்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்களாற் கொலை செய்யப்படுகிறார்கள்.

வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களாகப் பெண்கள் விலை பேசப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள்.

வளர்ச்சியடையாத நாடுகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களால் அவதிப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். வசதி படைத்த நாடான அமெரிக்காவிலேயே மிகவும் கொடிய வறுமையை அனுபவிப்பவர்கள் கறுப்பு இனப் பெண்களாகும். ஆனாலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பெண்கள் எப்போதும் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள்.கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் பெண்களின் பங்கு எப்படி முன்னிலை வகித்தது என்பது சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும்

1861-65  வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னால் நடந்த சமுதாய, பொருளாதார மாற்றங்கள் அமெரிக்காவில் பல மாற்றங்களை உண்டாக்கின. பெண்களும் சொத்துடமை வைத்திருக்கலாம் (கோன் வித் த விண்ட் என்ற படம் இதற்கு ஒரு உதாரணம்) என்பது போன்ற அடிப்படைச் சட்டங்கள் பெண்களின் வாழ்க்கை மாற்ற மடையவும் பொருளாதாரத்தில் உயர்நிலை காணவும் உதவின.

அத்துடன் 19ம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் இரஷ்யாவில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய மார்க்சியப் புரட்சிக் கருத்துக்கள் மேற்கத்திய பெண்களின் போராட்டத்திற்கும் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கம் வித்திட்டதா என்பது பற்றியும் பல ஆய்வுகள் செய்யலாம்.

பெண்கள் தங்கள் சம உரிமைக்கான போராட்டத்தை தொடங்க முதல் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் (1869) ஜோன் ஸ்ருவார்ட் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆண் பாராளுமன்றவாதியாகும்.

1893ல் பிரித்தானியக் காலனியாகவிருந்த நியுசீலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமையளிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பல போராட்டங்களுக்குப் பின்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரவேசம் மிகவும் குறைந்த நிலையியே இருக்கிறது. இவவருடம், சவுதி அரேபியாவில் முதற்தடவையாக ஒரு பெண் பிரதி நிதித்துவம் பெற்றிருக்கிறார்.

இன்று நடைமுறையிலிருக்கம் பெண்ணிய சிந்தனைகளுக்க வித்திட்டவர்கள் அமெரிக்கப் பெண்கள் என்றால் அது மிகையாகாது.

1909ம் ஆண்டு, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்த உடுப்புத் தொழிற் சாலையிலிருந்த பெண்களின் ஞாபகார்த்தக்கூட்ட அணிவகுப்பாக சோசலிசப் பார்டடியைச் சேர்ந்த பெண்களாற் தொடங்கிய (28.2.1909) இந்த நிகழ்ச்சி அகில உலகப்பெண்கள் தினம் என்று உருவாகியது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த முதலாவது பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்காக ஒரு தினத்தை விசேடமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஜேர்மனிய நாடடைச் சேர்ந்த சோசலிஸ்ட் பார்ட்டி அங்கத்தவரான கிலாரா ஷெட்கின் என்ற பெண்மணியாற் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த அகில உலகப் பெண்கள தின விழாக்களும் அதன் வளர்ச்சியும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் பெண்கள் தின விழாவை ‘அகில உலக மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.  உலகம் பரந்த விதத்தில் பார்த்தால் பெண்களின் அரசியற் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. ஆண்கள் தந்கள் அதிகாரத்தை நிலை நிறுததப் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

இன்று, பெண்கள் தினத்தன்று, தென்னிந்திய வியாபாரிகள் இவ்வினத்தை ‘மலிவு சேலை வியாபார’ தினமாக நடத்துகிறார்கள். மலிவான சேலைக்குள் பெண்ணிய சிந்தனைகளைச் சுருட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தியப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்னும் 33 விகிததிற்கு வரவில்லை. மத வெறி பிடித்த – (பெண்ணைத் தெய்வமென மதிக்கும்)  இந்து தீவிரவாதிகளன் கொடிய பாலியல் வெறிக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றக்கணக்கான தலித் பெண்கள் பலியாகிறார்கள்.

பாலஸ்தினியாவின் காஷாப் பகுதியிலும் சூடானின் டாவோர் அகதி முகாமிலும் ஆயரக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் படும் துயர் சொல்ல முடியாதவை.

இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழப் பெண்களும் குழந்தைகளும் போர் சூழ்நிலைக்குள் அகப்பட்டு சொல்லவொண்ணாத் துயரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கிழக்கிலங்கைப் பெண்கள் பலர் பாதுகாப்புப் படையின் பாலியற் கொடுமைக்காளாகித் துன்பப்படுகிறார்கள். இவை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியவை. இவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்பட அரசியல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படப் பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.