அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இங்கிலாந்து பிரஜை பலி

இங்கிலாந்து நாட்டவர்கள் பயணம் செய்த கார் ஒன்று கெப் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தும் அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 5.00 மணியள வில் இடம்பெற்ற ரந்தெனிய விபத்தில் பிரிஸ்டியன் ஏம் வயது (59) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மனைவி ஜோன் பவுன்ரி என்பவர் படுகாயமடைந்தவராவார்.

புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ வதை முகாம் கண்டுபிடிப்பு

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் இந்த முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்து கொல்வதற்கே இந்த முகாம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது அங்கு நடத்தப்பட்ட தேடுதல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம், கடற்படை வீரர்களின் எலும்புக் கூடுகளே நேற்றும் நேற்று முன்தினமும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேலும் கூறினார்.

புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை

Amirthalingam_A_TULFதமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை அமைப்பதற்கு தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளைத் தலைவர் டேவிட் நாதன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிக்கான கூட்டம் வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியதுடன், ஆக்கபூர்வமான செயற்பாட்டு வடிவங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அதற்கென மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விரைவில் தமிழரசுக்கட்சியின் அலுவலகங்களை திறப்பதுடன் வவுனியாவிலும்  செட்டிகுளம், ஓமந்தை, நெடுங்கேணி, சாஸ்திரிகூளாங்குளம் ஆகிய பகுதிகளில் வட்ட செயலகங்களும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை – மக்கள் சேவையில் அக்கறை காட்டுங்கள்

new.jpgஇலங் கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுள்ளது. இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 60 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதில் பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுமாக 60 அமைச்சர்களும், 31 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பத்துப்பதினைந்து வாகனங்களை வைத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமாகிச் செயற்படவேண்டாமெனவும், அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தலை விடுத்தார்.

.திங்கட்கிழமை (22.11.2010) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தையடுத்து அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்று முடிந்தவுடன் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையை நிகழ்த்திய உரையில் கூறியதாவது;

இன்றைய அமைச்சரவைக்கு பல புதிய முகங்களை நான் அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். மூத்தவர்கள் சிலரை சிரேஷ்ட அமைச்சர்களாக நியமித்து கௌரவமளித்துள்ளேன். அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டிய கடப்பாடு எம்மிடம் காணப்படுவதாலேயே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.நாட்டுமக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் உரிய முறையில் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதத்தில் சிக்கியிருந்த நாட்டை நீண்டகால போராட்டத்தின் பின்னர் மீட்டெடுத்து பிளவுபட்டிருந்த தேசத்தை ஒரே நாடாக கட்டியெழுப்பியுள்ளோம். இப்போது ஒரேநாடாக ஒன்றுபடுத்தியுள்ளோம். இனிமேல் எம்மீதுள்ள பாரிய பொறுப்பு நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு செல்வதே ஆகும்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களிடம் நான் ஒப்படைத்துள்ளேன்.

இந்த அமைச்சுப் பதவிகளை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த முனையாதீர்கள். 10,15 வாகனங்களை வைத்துக் கொண்டு அலங்கார ஊர்வலம் செல்ல முற்படாதீர்கள். அப்படிச் செய்ய நீங்கள் முயற்சித்தால் மக்கள் உங்களை நிராகரிக்க தயங்கமாட்டார்கள். மக்களிடமிருந்து தூரமாகும் நிலைக்கு உங்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

வீண்விரயம், ஊழல்,மோசடிகளுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். அதன் மூலம் உங்களுக்கும், அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படவாய்ப்பாகிவிடும். அந்த நெருக்கடிநிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது. உங்கள் கைகளில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

ஏனைய அமைச்சுக்களினதும், அமைச்சர்கள், அதிகாரிகளதும் குறைகளை கண்டுபிடித்து குறைசொல்லித்திரிய நீங்கள் எவரும் முற்படக்கூடாது. அப்படிச்செய்வதன் மூலம் அரசுக்கும், கட்சிக்குமே அபகீர்த்தி ஏற்படலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நீங்கள் சரிவர நிறைவேற்றினால் எவரிடமும் குறை ஏற்படப்போவதில்லை. நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது. அரசிலுள்ளவர்களைப் பற்றித் தவறாகப் பேசி எதிரணியினருக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள்.

நாமனைவரும் ஒன்றுபட்டு ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வோம். அதுதான் எம்முன்னுள்ள பிரதான பணியாகும். நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றவேண்டும். அதனையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

நான் இரண்டுபேருக்கு அமைச்சர் பதவி வழங்க அழைத்தபோது அவர்கள் பெருந்தன்மையுடன் என்னிடம் கூறியது அமைச்சுப் பதவி வேண்டாம். பிரதியமைச்சர்களாக எனது அமைச்சுக்களுக்கு நியமிக்குமாறு கோரினர். அவர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த நிமிடம் முதல் தேசத்தை வளமாகக்கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டுடன் தாய்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோம். உங்களனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 

சிரேஸ்ட அமைச்சர்கள் விபரங்கள்

டி எம் ஜயரத்ன – பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்
ரட்னசிறி விக்கிரமநாயக்க  – நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
டியு குணசேகர – மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன –  கிராமிய விவகார சிரேஷ்ட  அமைச்சு
பி.தயாரட்ன, –  உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி  –   நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன, –   நுகர்வோர் சேமநலன்
பியசேன கமகே  –  தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்
திஸ்ஸ விதாரண  –   விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம  –   சர்வதேச நிதி ஒத்துழைப்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 49 போ்

நிமல் சிறிபால டி சில்வா –  நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன, –  சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த  –  கனியவளதுறை
ஆறுமுகன் தொண்டமான்  –  கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன  –  நீர்வழங்கல் துறை
டக்ளஸ் தேவானந்தா  –  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, –  உள்ளுராட்சி – மாகாணசபை
ரிசாத் பதியுதீன், –  கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க – மின்சக்தி சக்திவலுத்துறை
விமல் வீரசங்ச –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு, பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம், –  நீதித்துறை
பசில் ராஜபக்ச –  பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார –  தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க  –  உயர் கல்வி
ஜி எல் பீரிஸ் – வெளிவிவகாரம்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – அரசநிர்வாக – உள்நாட்டலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன –  நாடாளுமன்ற விவகாரம்
ஜீவன் குமாரதுங்க –  அஞ்சல்துறை
பவித்ரா வன்னியாராச்சி  –  தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா –  சுற்றாடல் துறை
திஸ்ஸ கரலியத்த  –  சிறுவர் அபிவிருத்தி> மகளிர் விவகாரம்
காமினி லொகுகே –  தொழில் மற்றும் தொழிலுறவு
பந்துல குணவர்த்தன – கல்வி
மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்டத்துறை
ராஜித சேனாரத்ன –  மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன் –  காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
சி.பி.ரட்னாயக்க – தனியார் போக்குவரத்து சேவை
மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயத்துறை
கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடக மற்றும் செய்தித்துறை
குமார வெல்கம  – போக்குவரத்து
டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகார, திறன் மேம்பாட்டு
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர – புனருத்தாபன, சிறைச்சாலை சீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க  –  தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே – சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி
டிலான் பெரேரா –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
ஜகத் புஸ்பகுமார –  தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க – கலாசார மற்றும் கலைவிவகாரம்
மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன  – விவசாய சேவை மற்றும் வனவிலங்கு
குணரத்ன வீரக்கோன் –  மீள்குடியேற்றதுறை
மேர்வின் சில்வா –  மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை
தயாஸ்ரீ த திசேரா – அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய –  தேசிய மரபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரட்ன –  உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க – அரச முகாமைத்து மீளமைப்பு
பிரியங்கர ஜயரட்ன – சிவில் விமான சேவைகள்

பிரதியமைச்சர்கள்

சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி, நீர்வளத்துறை
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பண்டு பண்டாரநாயக்க –  தேசிய வைத்திய துறை
ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க –  இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க – போக்குவரத்து
எச்,ஆர்.மித்ரபால – கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை
கீதாஞ்சன குணவர்தன –  நிதி மற்றும் திட்டமிடல்
விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
பைசர் முஸ்தபா –  தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க – உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத் – காணி மற்றும் காணி அபிவிருத்தி
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்
சந்திரசிறி சூரிய ஆராயச்சி – சமூகசேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க –  உயர்கல்வி
நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க – சுகாதாரம்
சரண குணவர்தன – கனியவள தொழில்துறை
காமினி விஜித் விஜயமுனி சொய்சா – கல்வித்துறை
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
ஏ.டி.எஸ்.குணவர்தன –    புத்த சாசன மதவிவகார
ஏர்ல் குணசேகர –    பெருந்தோட்டதுறை
பசிர் ஷேகுதாவுத் –    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர் –  சுற்றாடல்
டுலிப் விஜேசேகர –   அனர்த்த முகாமைத்துவம்

பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலாளர்களில் மாற்றமில்லை 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க தொடர்ந்து செயற்படுவார். 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 14 மாணவர்கள் இடைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தப் பட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்றுச் சபை இந்நட வடிக்கை எடுத்திருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார்.

மாணவியொருவரை பகிடிவதை செய்தமை, குழு மோதல்களில் ஈடுபட்டமை போன்றவைக்காகவே 14 மாணவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான விசாரணைகளை பல்கலைக்கழகத் தின் வதிவிட மற்றும் ஒழுக்காற்று சபை நடத்தி யிருந்ததுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையால் 14 பேரும் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று கர்தினால் ஆகிறார் – வத்திக்கானில் விசேட வைபவம்

1111.jpgபேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் இரண்டாவது கர்தினாலாக இன்று திருநிலைப்படுத்தப்படவுள்ளார். வத்திக்கான புனித பேதுருவான வர் பேராலயத்தில் நடைபெறும் விசேட வைபவத்தின் போது பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கர்தினாலாக திருநிலைப்படுத்துவார். அந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் கத்தோலிக்கத் திருச் சபையின் புதிய கர்தினாகளின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கிணங்க இன்றைய திருநிலைப்படுத்தல் நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் 24 பேர் கர்தினாலாகளாக பதவியேற்கின்றனர்.

புதிய கருதினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முதலாவது திருப்பலி வத்திக்கான பேராலயத்தில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறுவதுடன், 27ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு தேவத்தை பெஸிலிக்காவரை அவர் ஊர்வலமாக அழைத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து நன்றித் திருப்பலியொன்றையும் அவர் நிறைவேற்றவுள்ளார்

‘வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் – ஜனாதிபதி

MR_Sworn_in_2nd_termவடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற்கான வழிகளை மூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகக் கட்டிட முன்றலில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள், மதத் தலைவர்கள், ராஜதந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த நாட்டை விட சிறந்த நாடொன்றிலேயே தற்போது நீங்கள் வாழ்கின்aர்கள் என்பது உண்மை.

வழங்கப்பட்ட பொறுப்பினை நிறை வேற்றி முன்பிருந்ததை விட சிறப்பான நாட்டைக் கட்டியெழுப்பிய பின் மக்கள் முன் உரையாற்றும் தலைவன் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 2005 நவம்பர் 19ம் திகதி நான் பதவியேற்று நாட்டைப் பொறுப்பேற்றபோது இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரவு பகல் எனப் பாராமல் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நான் செயற்பட்டமை சகலரும் அறிந்ததே.அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் மே 19ம் திகதி பயங்கரவாதத்தை வென்று உலகின் பாராட்டைப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.

இன்று நவம்பர் 19ம் திகதி எமது தாய் நாட்டை உலகின் முன்னிலையில் இலங் கையை உன்னத நாடாக உயர்த்துவதற்கான எதிர்பார்ப்புடனேயே பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை கொள் கைத் திட்டத்தை முன்வைத்து அதன் மூலம் நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம். இன்று முதல் மஹிந்த சிந்தனையின் எதிர் காலத் திட்டம் ஆரம்பமாவதுடன் அதன் மூலம் உலகின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. 2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு பலம் தன்னம்பிக்கையுடனேயே இம்முறை நாம் நாட்டைப் பொறுப்பேற்றுள்ளோம்.

நம்மில் பெரும்பாலானோர் தெற்கில் இரண்டு கிளர்ச்சியையும் வடக்கில் 30 வருட பிரிவினைவாதத்தையும் கண்டுணர்ந் தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே கிளர்ச்சியின் மூலமும் நமது தாய்நாடு உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு வீழ்ச்சி யுற்றமையை நாம் கண்டுள்ளோம். இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் நாடு மீண்டும் இரத்த ஆற்றில் மிதப்பதைத் தடுக்கவும் உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக எழுந்து நிற்கவும் வழிவகை செய்வதே எமது முதன்மையான நடவடிக்கையாகவேண்டும்.

அதற்காக எமது தாய் நாட்டில் இனங் களுக்கிடையிலான சமத்துவம் சமாதானம் நிலைப்பதற்கு வழி செய்வது அவசியம். அதனால்தான் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.இதனால் கொழும்பிற்கு வெளியே நகரங்கள் கிராமங்களில் கவிழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டதும் இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுவது உறுதி.

பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது இன்னும் பல நகரங்கள் கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம் வேலை வாய்ப்புத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். பயங்கரவாதத் திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதிக்குள் இருளிலிருந்து மீட்கப்பட்ட நாடாக ஒளிபெறும். அது மட்டுமன்றி எமது மின்சாரத் திட்டங்களின் மூலம் நாட்டின் சகல குடும்பங்களும் ஒளிபெறுவதும் உறுதி எம்முன் உள்ள எதிர்காலமானது நாட்டிற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான மீட்டுவதாகவும் நாட்டை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பு.

எமக்கு எமது இளைய தலைமுறை யினரின் மீது அதீத நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள் முப்படைகளிலும் இணைந்து உலகம் பாராட்டும் வெற்றியை ஈட்டித் தந்தமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.எமது எதிர்கால சந்ததியினர் முன்மொழி யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப ரீதியில் 75 வீதமாக முன்னேற்றமடைவதையே நாம் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக் கும்போதுஅவர்கள் அத்தகைய நிலையை எட்ட முடியும் என்பதே எமது நம்பிக்கை.

எமது நாட்டின் பிரச்சினைகளை இனங்காணவும் அதனைத் தீர்க்கவும் போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் ஒரு மாதிரி அல்ல. எந்தவொரு கருத்தை தெரிவிப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் உரித்துடையவர்கள். எமது நாட்டுக்குச் சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும் மக்களுடைய எதிர்பார்ப்பும் ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத செயற் திட்டங்களை நாம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகல அபிவிருத்திகளும் பயங்கரவாதத்திற்கான வழிகளை இல்லாதொழிப்பது உறுதி. வறுமையை ஒழிப்பதும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதும் அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும் என்பதே எனது நம்பிக்கை.வடக்கு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்காலத்தின் உள்ளூராட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கைகளிலேயே அதிகாரங்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது வெளிநாட்டுக் கொள்கையானது பிளவுபடாத கொள்கையாகும். கடந்த யுகத்தில் தேசிய பாதுகாப்புக்காக நாம் பல நாடுகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டோம். தற்போது உருவாகியுள்ள அபிவிருத்தி யுகத்தில் அதற்காக 1திlழி ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டுவோம். சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை. அதனால் தேசிய பாதுகாப்புக்காக நட்புறவு கொண்ட நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொண்டு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கஷ்டமான விடயங்கள் என கைவிடுவது எமது கலாசாரமல்ல. நாட்டை மீட்பது மட்டுமன்றி தற்காலத்தில் இந்த சமூகம் மீள முடியாது என சிலர் நினைக்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை. கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலிலும் தொகுதி வாரியாக வேறு எந்த நாடும் எட்ட முடியாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற சட்டவிரோத செயல்களற்ற, கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்கால வெற்றிகளின் முக்கிய பங்காளிகளாக இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் திகழவேண்டும் என்பதே எமது அவா. அதற்காக இன, மத, குல, அரசியல், கட்சி பேதமின்றி எம்முடன் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். இந்நாட்டை உயர்ந்த இடத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு வேறு இடமில்லை. எனது தாய்நாடு அன்றி உயர்ந்தது என்று எனக்கு எதுவுமில்லை.

நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

மாகம்புர சர்வதேச துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

jetliner.jpgமுதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்று முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்ததையடுத்து இன்று அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சுகவீனம் சிறைச்சாலை மருத்துவமனையில்

sarath-in-court.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகா சுகவீனமடைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக வி.ஆர்.டி.சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கு சமுகமளித்திருந்த பின்னர் சிறைச்சாலைக்குத் திரும்பிச் சென்ற பொன்சேகா பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை 19ஆம் திகதி காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு கோட்டை, முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரை வீதிகள் மூடப்படவுள்ளன. காலி வீதியூடாக கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்கள் டிக்மன் வீதியூடாக சென்று ஹெவ்லோக் வீதி வழியாக கொழும்பு நகரை அடைய முடியும். இலகு ரக வாகனங்கள் கொள்ளுபிட்டி சந்தி வரை வந்து தர்மபால வீதி வழியாக கொழும்பு நகரை அடையமுடியும். மாற்று வழிகளை சாரதிகளுக்கு சுட்டிக்காண்பிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடு படுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படவுள்ள வீதிகள் வருமாறு,

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதி, கோட்டை ரயில் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியும், ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியும்,

புறக்கோட்டை விமலதர்ம பிரதர்ஸ் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் முதல் பெஸ்டியன் வீதி, சதாம் வீதி, லோட்டஸ் வீதி, பிரிஸ்டல் வீதி, யோர்க் வீதி, லோட்டஸ் வீதியுடன் வங்கி வீதி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி,

கொம்பனித்தெரு முதல் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மாக்கான் மாக்கார் வீதி வழியாக காலிமுகத்திடல் நோக்கிச் செல்லும் வீதி,

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை நவம் மாவத்தை வீதி,

ஹோர்டன் சுற்றுவட்டம் முதல் பொதுநூலக சுற்றுவட்டம் வரையிலான வீதி,

எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை வீதி தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மாவத்தை முதல் கொழும்பு மாநகர சபை வரையிலான வீதிகள் என்பன நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.