மலையகம்

மலையகம்

கிளிநொச்சிக்குப் போட்டி போட்டுப் பயணித்த இரு மலையகத் தலைவர்களும் இன்று அம்மக்கள் குறித்து பேசத் தயாரில்லை – திகாம்பரம் குற்றச்சாட்டு

up-cun.jpgயுத்த நிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சிக்குப் பயணித்த மலையகத்தின் இரு பிரதான கட்சித் தலைவர்களும் இன்று அம்மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாரில்லையென குற்றஞ்சாட்டிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், அப்பாவிமக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்கு சாதமாக்கிப் பேசுவது தவறெனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மற்றும் உதவி நிதிச் செயலர் உதயா ஆகியோருக்கு தலவாக்கலை நகர் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் 25 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல, 50 வருடகால , 25 வருடகால அரசியல் தலைமைகளும் மலையகத்தில் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் வெற்றிபெற்ற காலத்தில் எல்லாம் யுத்தம் பற்றிப் பேசாத தலைமைகள் இன்று தமது தோல்விக்கு யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்ட முயல்கின்றன. அப்பாவி மக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்குச் சாதகமாக்கிப் பேசுவது தவறு . யுத்தநிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் கிளிநொச்சி பயணித்ததை மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால்,இன்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்க இவர்கள் தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்திற்கு தனது ஆதரவையே தெரிவித்து வருகின்றது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

எனவே, மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு காரணங்களைக் கூறி சமாளிப்பதை விடுத்து மக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்று செயல்படவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். அடையாள அட்டை இன்மையால் தமக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு அடையாள அட்டை இல்லை என்பது இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்ததா? அடையாள அட்டை உள்ளவர்களே இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. அடையாள அட்டை இல்லாதவர்களின் வாக்குகளைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்’ என்றார்.

வெற்றி பெற்ற மற்றைய வேட்பாளரான உதயகுமார் பேசும்போது; “இன்று பள்ளிவாசலில் எமக்கு வரவேற்பளிப்பது ஒரு முன்னுதாரண நிகழ்வாகும். நாம் கட்சி இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம். மலையகத்துக்கான அரசியல் மாற்றத்தைக் கோரினோம். அதற்குக் கிடைத்த வெற்றியே எமது வெற்றி. இது மக்களின் வெற்றி. இதனை திரிபுபடுத்தி அலட்சியம் செய்பவர்கள் மக்களால் எதிர்வரும் தேர்தல்களில் மேலும் புறக்கணிக்கப்படுவார்கள்.

வருமானக் குறைவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மலையக மக்களுக்கு எப்போதுமே பாரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இம்முறை கூட்டொப்பந்தத்தையும் தாமே முன்னெடுப்பதாக பிரதான தொழிற்சங்கம் ஒன்று அறிக்கை விடுத்துள்ளது. எமக்கு யார் முன்னெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை. என்ன விடயம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே முக்கியம். மக்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தால் மக்களும் ஆதரிப்பர். நாமும் ஆதரிப்போம். மாறாக நியாயமற்ற சம்பளம் முன்வைக்கப்படுமானால் மக்கள் போராட்டத்தை நாமே முன்னெடுப்போம்’ என்றார்.

தோட்டத்துறைக்கான நிவாரணத் திட்டம்!

milroy_fernando.bmpஅரசாங்கம் பிரதேச தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய நிவாரணத் திட்டத்தை இலங்கை அரச பெருந்தோட்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அல்கடுவ தோட்டக் கைத்தொழில் நிறுவனம் ஆகிய அரச தோட்ட நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

நான்காவது பரம்பரையாகவும் தோட்டத் தொழிலாளர்கள் பத்தடி காம்பராக்களிலேயே வாழ்கின்றனர் – நகர அபிவிருத்தி அமைச்சர்

up-cun.jpgமலையக தோட்டப் புறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி மூலமே இந்நாடு முழுவதுக்குமான மின்சாரம் பெறப்படுகின்றது. ஆனால், அத் தோட்டத்தொழிலாளர்களின் லயன் காம்பராக்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. நான்காவது பரம்பரையாக இந்நாட்டில் வசித்துவரும் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் தமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பத்தடி லயன் காம்பராக்களிலேயே இன்னும் மூன்று நான்கு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாத்தளை மாவட்டத்தில் இந்த அவல நிலையை பல தோட்டங்களில் காணலாம். எனவே இவர்களை இந்த அவல நிலையிலிருந்து மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நகர அபிவிருத்தி அமைச்சர் ரோஹண திசாநாயக்க கூறினார்.

தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க, ஸ்ரீ.ல.சு.க.மாத்தளை மாவட்ட அமைப்பாளர் எம்.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் கூறியதாவது;

மாத்தளை மாவட்டத்தில் ஒருசில தொழிலாளர்களின் லயன் காம்பராக்களின் கூரைத்தகடுகள் பழுதடைந்துள்ளதையும் இவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படாமலுள்ளதையும் என்னால் நேரில் காணமுடிந்தது. இவர்களின் குறைகளை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பாளர் எம்.சசிகரனுக்கு அறிவித்துள்ளேன். ஏற்கனவே அவரால் கையளிக்கப்பட்ட அறிக்கையையடுத்து உடனடியாக லயன் காம்பராக்களுக்கு மூவாயிரம் கூரைத்தகடுகள் வழங்கியுள்ளேன். நாம் இதேபோன்று மக்களது அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். இதே போன்று முஸ்லிம் மக்களும் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலுமே எமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவருவதை நோக்கும்போது அடுத்து நடைபெறவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.

எமக்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான வெற்றிகள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்து, நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் சரியானவை என்பதை மக்கள் அங்கீகரிப்பதையே உணர்த்துகின்றன. எந்தவொரு நாடும் எமது உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டியதில்லை என நாட்டுமக்கள் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதாகவும் அது அமைந்துள்ளது.

நாம் கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்தளை மாவட்டத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரைகாலமும் அபிவிருத்தி வேலைகளுக்காக திறைசேரியில் வழங்கப்பட்டுவந்த நிதி முறையாகப் பயன்படுத்தாததால் மீண்டும் திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவந்தது. ஆனால் இவ்வருடம் வழங்கப்பட்ட நிதி வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். மாத்தளை மாவட்ட வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் இதுவரை பெற்றுக் கொள்ளாத மாபெரும் வெற்றியை கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி பெற்றுள்ளதால் எம்மால் எதிர்காலத்தில் மேலும் சிறந்தமுறையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

வேட்பாளர்களின் தராதரங்களை அறிந்தே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர் – இரா.தங்கவேல்

election_ballot_.jpgமலையக வாக்காளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதைவிடுத்து ஒவ்வொரு வேட்பாளர்களையும் நன்றாக அறிந்தே வாக்களித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. எவரது முகவரிக்காகவோ அல்லது எவரது முன்னணி கட்சிக்காகவோ அன்றி களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுய உருவத்தை அவரவர் ஆற்றியிருக்கின்ற சேவைகளை கணக்கிட்டுப் பார்த்தே தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னை நாள் பிரதித் தலைவருமான இரா.தங்கவேல் இம்புல்பிட்டி தோட்ட கீழ்ப்பிரிவில் நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட பொதுச்செயலாளர் தமதுரையில்;

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவையும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் வழங்கியிருக்கின்ற தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலையக மக்கள் எத்தகையோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள் என்பதையும் எந்தவித கவர்ச்சிக்கும் வெளிப்பிரசாரங்களுக்கும் எளிதில் ஏமாறுபவர்கள் மலையக மக்கள் அல்ல என்பதையும் உணர்த்தி உள்ளார்கள், வெறுமனே வெற்று வேட்டுகளுக்கும் தலைமைத்துவத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு அல்லது அவர்கள் மூட்டிய நெருப்பில் குளிர்காய நினைக்கும் கையாலாகாத பேர்வழிகளுக்கு துணைபோக மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாது கட்சிவிட்டு கட்சி தாவி சீட்டு வாங்கியவர்களை மலையக மக்கள் நன்கு இனங்கண்டு தங்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். தகுதி வாய்ந்த வேட்பாளர் இல்லையென்ற முடிவுக்கு வந்த பெருவாரியான வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்துவிட்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைத் தவிர்த்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருவாரியான மலையக மக்கள் வாக்களிப்பதையே தவிர்த்திருப்பதை பார்க்கின்றபோது அவர்களது ஆர்வமின்மையையும் வாக்குகளைப் பெற தகுதியற்றவர்களை மேடையேற்றிய கட்சிகளுக்கு ஒரு படிப்பினை புகட்டும் விதத்திலும் மக்கள் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது. குறிப்பாக கண்டிமாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் இருந்த போதிலும் அதில் 40 வீதத்தினரே வாக்களித்துள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயம் மாத்திரமின்றி, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்த்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர்களது தலைமைத்துவத்திற்கும் விடுத்த எச்சரிக்கையாகவுமே கருத வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

தலவாக்கலை தோட்டத்தில் தீ: 6 லயன் வீடுகள் எரிந்து நாசம் – பாதிக்கப்பட்டோர் கோயில்களில் தஞ்சம்

sri-lanka-upcountry-01.jpgதலவாக் கலை கிரேட்வெஸ்ட் தோட்டத்தில் ஆறுலயன் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் உயிர்ச்சேதமெதுவும் ஏற்படவில்லையெனவும் தோட்ட மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் தீ மேலும் லயன் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீடுகளின் கூரைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதுடன் இவ்வீடுகளில் குடியிருந்தோரை தோட்டக் கோயிலில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட 65 பேருக்கு சமைத்த உணவுகளை வழங்கவும் கிரேட் வெஸ்ட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

“பெருந்தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்’

Estate Workersபெருந் தோட்டப் பெண்கள் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை கீழ் மட்ட அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும் என்று பிரிடோ வெளிக்கள இணைப்பதிகாரி எஸ். கே. சந்திரசேகரன் தெரிவித்தார். பிரிடோ பணியாளர்களுக்காக அட்டன் பிரிடோ பணிமனையில் பிரிடோ தலைவர் மைக்கல் ஜோக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; அனைத்துலக தேயிலை தினத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான கருப் பொருள் பெருந்தோட்ட பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது என்பதாகவும் அந்த நோக்கத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வருட தேயிலைதினத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுவாக இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நோக்கங்களை அடைய தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தீர்மானங்கள் வெற்றுத் தீர்மானங்களாக இருக்குமேயன்றி மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை.

அதேவேளை, தங்களால் அந்த பொறுப்புகளை திறமையாக நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியிலும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவசியமாகும். இதற்காக முக்கியமான முதற்கட்ட நடவடிக்கை பெண்களை பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கீழ் மட்ட அதிகார அமைப்புகள் நிர்வாக பொறுப்புகளில் நியமிப்பதாகும். பெருந்தோட்டங்களில் கோயில் நிர்வாக சபைகள், முன்பள்ளி அபிவிருத்தி சபைகள்,தொழிற்சங்க அமைப்புகள், மரண உதவி சங்கங்கள் என்பன போன்ற அதிகாரத்தை பிரயோகிக்கும் எல்லா அமைப்புகளுக்கும் பெண்கள் நியமிக்கப்படவேண்டும்.

அரச பாடசாலை அபிவிருத்தி சபைகளிலும் நிர்வாக குழுக்களில் பெண்கள் நியமிக்கப்படவேண்டும். முதலில் இவ்வாறான அதிகார அமைப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் சமூக அங்கீகாரம் பெற உதவுதல் வேண்டும். இந்த முதற் படியை அடைய பெண்களுக்கு உதவி செய்யாமல் பெண்கள் தலைமைத்துவ மேம்பாடு பற்றி பேசுவதில் அர்த்தமில்ல

பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத்தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தவேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa.jpgமலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில்  நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார்.  இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு  செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் ஆறுமுகன்

aarumugam.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தில் நிறைவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தோட்டப் புறங்கள் மாத்திரமன்றி, நகரங்களும் பாரிய அபிவிருத்தியடைந்து வருவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலையகத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, கொழும்பிலிருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ‘மக நெகும’ திட்டத்தின் கீழ் மலையகத் தோட்டப்புறப் பாதைகள் பல செப்பனிடப்பட்டுள்ளன. குறிப்பாக கரடுமுரடாகக் காட்சியளித்த பாதைகள் கொங்கிட் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட காலத்திற்கு இந்தப்பாதைகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும். அதே போன்று மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் மூலம் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வருடம் இளைஞர், வலுவூட்டல் அமைச்சுக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு மேலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றும் அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு முன்னுரிமை வேண்டாம் சமூக மேம்பாட்டை கவனத்தில் எடுங்கள்

Estate Workersமலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.

இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.