February

Friday, November 27, 2020

February

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றைய பிரச்னைக்குக் காரணம்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங் கைக்கும் இந்திய அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கு அடிப்படைக் காரணம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் போராடும் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியவர் இந்திரா. ஆனால், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிரணாபோ, வெளிநாட்டுப் பிரச்னையில் தலையிடமுடியாது என்கிறார்.  ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம்தான் இன்றுள்ள ஒட்டுமொத்த சிக்கலுக்கும் அடிப்படைக் காரணம். இந்த ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை சிங்களவன் ஏற்றுக்கொள்ளாததன் வெளிப்பாடுதான், ராஜீவ் மீதான துப்பாக்கிக் கட்டை தாக்குதல்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை, நீதிமன்றத்தின் மூலம் சிங்கள அரசு பிரித்துவிட்டது. இதைக்கூட இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. தமிழினத்துக்கு எதிராக இந்தியா பச்சைத்துரோகம் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு ராஜபக்ச அரசு, தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள அரசுதான் போரில் ஈடுபட்டுவருகிறது. மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்திவருகிறார்கள். போரை நிறுத்தத் தயார் என விடுதலைப்புலிகள் பல முறை கூறிவிட்டனர். ஆனால் சிங்களத் தரப்பு போரை நிறுத்தத் தயாராக இல்லை.

இந்த நிலையில், இரு தரப்பும் போரை நிறுத்தவேண்டும் எனக் கூறுவது, அங்கு நடப்பதைப் பற்றி தெரியாமல் பேசுவதாகும் அல்லது மழுப்பலாகப் பேசுவதாகும். இலங்கையில் தமிழர்களை அழிக்கும் போரை நிறுத்தவேண்டும் என்று இதுவரையில் கேட்காத ஒரே கட்சி அதிமுகதான். தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழருக்காக தியாகச் சாவடைந்த கடலூர் தமிழ்வேந்தனின் இறுதி ஊவலத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சமூகவிரோதிகள் புகுந்து திமுக பதாகைகளை சேதப்படுத்தினர். ஆனால் போலீசார், நான் சொல்லியும் கேட்காமல், தடியடி கொண்டு தாக்கினர். இதில் 20 பேருக்கு தலைக்காயமும் 40 பேருக்கு காயமும் அடைந்தனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற வளாகத்திலும் அத்துமீறிய போலீசார், வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்சிக்கு எதிராக போலீசில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இத்தகையை கருப்பு ஆடுகளை முதலமைச்சர் அடையாளம் காணவேண்டும். ரவுடிகளை அழைத்துவந்த சுப்ரமணியசுவாமி வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார். போராடும் வழ்க்கறிஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தியுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

 

ஸ்ரீதுங்க ஜெயசூரியா இந்தியாவின்மீது குற்றச்சாட்டு

srithungajaysurya.jpgஇலங் கையில் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறிகொண்டு அப்பாவி தமிழீழமக்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கிறது. இலங்கை ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்திய அரசின் இந்த செயலை இலங்கையின் மூத்த அரசியல் வாதியான ஸ்ரீதுங்க ஜெயசூரியா நிறுத்த கோரியுள்ளார்.

புதுதில்லியில் நடந்து வரும் மனித உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ஸ்ரீதுங்க ஜயசூர்யா வந்திருந்தார். அவரிடன் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது :

இலங்கையில் வடக்கில் தஞ்சமடைந்துள்ள சுமார் 2,50,000 மக்கள் மீது இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் கொல்லபட்டு வருகின்றனர். இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரஸ் அரசு இந்த இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க்காமல் மேலும் மேலும் ஆயுத உதவி செய்து வருகிறது,

தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் தளத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று ஸ்ரீதுங்க ஜயசூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

பிறர் உயிரைப்பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை; பிரதமர் விக்கிரமநாயக்க

srilanka-parliament.jpgஎவருக்கும் பிறிதொருவரது உயிரைப் பறிக்கும் உரிமை கிடையாதென  வெள்ளிக்கிழமை சபையில் வலியுறுத்தி தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இதன் காரணமாகவே நாட்டில் ஏனைய பிரச்சினைகள் இருப்பினும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அனுதாப பிரேரணையில் பேசும் போதே பிரதமர் விக்கிரம நாயக்க இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பூரணத்துவமிக்க மனிதர், ஒரு அரசியல்வாதி என்பதற்கு அப்பால் சிறந்த மனிதத்துவம் மிக்கவர் என்ற வகையில் தான் நான் அவரைமதித்தேன். ஜெயராஜ் என்பவர் சிறந்த மனிதர், பண்பானவர், நட்பானவர்.

அவர் மரணிக்கவில்லை, அவரது உயிரை பிரித்தெடுத்துவிட்டார்கள். மக்களுக்கென சேவைகளை தொடர அவருக்கு இன்னும் நீண்ட காலம் இருந்த போதிலும் அவரது உயிர் பறித்தெடுக்கப்பட்டமையே எமக்கு அதிக கவலையளிக்கிறது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை பலரும் நம்பினார்கள். அதனால் தான் அவர் பாதுகாப்பற்ற இடங்களுக்கும் சென்றார். இந்த நிலையிலேயே அவர் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளானார். இம் மாதிரியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்காகத் தான் பயங்கரவாதத்தை ஒழித்துவருகிறது.

எவர்க்கும் பிறிதொருவரது உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. இதனால் தான் ஏனைய பிரச்சினைகள் இன்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதை அரசாங்கம் முக்கிய பிரச்சினையாக எடுத்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. ஜெயராஜ் கல்வி தொடர்பாக மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். இதனால் தான் அவர் கல்வி மன்றமொன்றையும் ஏற்படுத்தி செயற்பட்டு வந்தார். பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த அரசியல்வாதியொருவரை இழந்துவிட்டோம். ஜெயராஜ் பிறப்பில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது, மதத்துக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ஏனைய மதங்கள் தொடர்பாகவும் அக்கறையுடனும் நட்புடனும் செயற்பட்டுவந்தார். நாம் மதத்துக்கு மதம் வேறுபட்டு முரண்பட்டுக்கொண்டு ஏனையவர்களின் உரிமைகளை கூறு போடுவது தவறு.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சகல துறைகளிலும் தனித்துவம் பெற்று தெரிகிறார். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பரீட்சைத் திணைக்கள செயற்பாட்டை மேம்படுத்த சிபார்சுகளை வழங்க புத்திஜீவிகள் குழு – கல்வியமைச்சர் நியமிப்பு

srilanka-students.jpgஇலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு அவசியமான சிபார்சுகளை செய்வதற்காக நால்வர் கொண்ட புத்திஜீவிகள் குழுவை கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமித்துள்ளார். கலாநிதி எம். உபாலி சேதர தலைமையிலான இக்குழுவில் பேராசிரியர் டபிள்யூ. ஜீ. குலரத்ன, எம். என். ஜுனைத், பீ.என். அயிலப்பெரும ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

குழுவின் செயலாளராக அயிலப்பெரும செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்துசர்வதேச தரத்துக்கமைய பரீட்சைகள் திணைக்களத்தை மேம்படுத்துதல் தேசிய மதிப்பீட்டுக்கான நவீன தொழில்நுட்பவளங்களை பயன்படுத்துதல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்பணியை தரம் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து இக்குழு சிபார்சுகளை வழங்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வருடமொன்றுக்கு 217 விதமான பரீட்சைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத காலத்திற்குள் மேற்படி குழு அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல்: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை

justice.jpgசென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

நீர்க்கட்டண அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல்

water-tap.jpgமக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலான நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறும் அது தொடர்பாக அரசினால் வெளியிடப் பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை சபாநாயகரின் அனுமதியுடன் விஷேட கூற்றொன்றை வெளியிட்டு உரை நிகழ்த்துகையிலேயே இதனை வலியுறுத்திய ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது;

பெப்ரவரி 15 ஆம் திகதியிலிருந்து நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீர் வழங்கல் வடிகால் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் அவர்களது தொழிற்துறையையும் அநாவசியமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இதற்கு முன்னர் வீட்டுப் பாவனைக்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் போது மாதாந்தம் 50 ரூபா நிலையான கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் மேற்படி நிலையான கட்டணத்துக்குப் பதிலாக 50 ரூபாவிலிருந்து 1,600 ரூபா வரையிலான மாதாந்தச் சேவைக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் தலையில் மேலும் சுமையேற்றுவதாகவே இது இருக்கும்.

எமது நாட்டிலுள்ள பெரும்பாலான வீடுகளில் மாதாந்தம் 15 க்கும் 25க்கும் இடைப்பட்ட அலகு நீரையே பயன்படுத்துகின்றனர். அவர்களது நீர்க் கட்டணம் 23 மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 20 அலகுகள் நீரைப் பயன்படுத்தும் வீட்டுக்கான கட்டணம் 131 ரூபாவிலிருந்து 397.60 ரூபா வரை 203.51% அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகக் குறைந்தளவு நீரைப் பயன்படுத்துவதற்காக கணிக்கப்படும் வீடுகளுக்கான நீர்க் கட்டணம் 84 ரூபாவிலிருந்து 218.40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் 40 அலகுகள் வரை நீரைப் பயன்படுத்துகின்றனர். அவர்களது மாதாந்த நீர்க் கட்டணம் 2,464 ரூபாவாக அதிகரிக்கப்படப் போகின்றது. இவ்வாறு நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படுவது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவே இருக்கும்.

சமுர்த்தி குடும்பங்களுக்காக விஷேட நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும் 15 அலகுகளுக்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படும். 16 அலகுகளுக்கு மேல் அதிகரிக்கும் போது ஏனைய பாவனையாளர்களைப் போன்று அவர்களும் நீர்ப் பாவனை கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான வீடுகளில் நீர்ப் பாவனை 15 அலகுகளுக்கு மேல் இருப்பதால் இந்த நிவாரணம் வெறும் கண் துடைப்பு மாத்திரமே.

மத ஸ்தாபனங்களுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 ரூபா கட்டணம் 50 ரூபாவுக்கும் 1,600 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தேநீர் கடைகளைப் போன்ற சிறு கடைகளுக்கான நீர்ப் பாவனை கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது தேநீர் கடைகளும் சிறு ஹோட்டல்களும் ஆகக் குறைந்தது 50 அலகுகள் நீரைப் பயன்படுத்துகின்றன. இதுவரை அவர்களிடமிருந்து 70 ரூபா நிலையான கட்டணமாக அறவிடப்பட்டது. புதிய கட்டணத்துக்கேற்ப நிலையான கட்டணம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தேநீர் கோப்பையிலிருந்து அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்படும். இது சாதாரண பொதுமக்களைப் பாதிக்கக் கூடியதாகும்.

அதேபோன்று, கைத்தொழில் துறையின் நீர்ப் பாவனை கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மாதமொன்றுக்கு 20,000 அலகுகளுக்கும் மேலாக நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. பதிய கட்டணத்தின் படி மாதாந்த நீர்வழங்கலுக்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பொதுவாக 1,000 அலகுகள் நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. அவ்வாறான தொழிற்சாலைகள் மாதாந்தக் கட்டணமாக 4,000 ரூபா செலுத்த வேண்டி ஏற்படும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக துன்பத்துக்குள்ளாகியிருக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு மேலும் சுமையாக இருக்கும். நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அந்தந்த நாடுகள் நிவாரணம் வழங்கும் நிலையில் எமது நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மேலும் சுமையேற்றுவது தொடர்பாக எமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் நாட்டின் தொழிற்சாலைகளை வீழ்ச்சியடையச் செய்யக்கூடிய நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

“ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை தடைசெய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை’

justice.jpg“பொது மக்களுக்குத் தகவல்களை வழங்கவேண்டியது ஊடகவியலாளரின் பொறுப்பாகும். அத்தகைய தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் பொறுப்பினை நிறைவேற்றி வருகின்றவர்களுக்கு சட்டவிரோதமான முறைகளில் தடைகளை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ருவிர வெலிவத்த தெரிவித்துள்ளார்.

“லங்கா தீப’ பத்திரிகையின் செய்தியாளரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியமை மற்றும் அவரது பணிகளுக்குத் தடை ஏற்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்த வேளையிலேயே நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.

லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் அத்துல பண்டார சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சந்தன வீரக்கோன் “விஸ்வமடு பிரதேசத்தில் பயங்கரவாதிகள் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களையடுத்து மிகவும் மோசமாகக் காயமுற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவரின் அழைப்பின் பேரில் அத்துல வைத்தியசாலைக்குச் சென்றவேளையில், சந்தேகநபரின் பலத்த தாக்குதலுக்காளானதாகவும் அக்காட்சிகள் ஏனைய ஊடகவியலாளரின் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் விளக்கினார்.

ஊடக நிறுவனங்களின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய முக்கிய தகவல்களுக்குத் தடை ஏற்பட்டது எனவும், ஊடகவியலாளரின் கடமைக்கு எவரும் குந்தகம் செய்வதை அனுமதிக்க முடியாதெனவும் மற்றுமொரு சிரேஷ்ட சட்டத்தரணியான ராஜ்கருணா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் அத்துல பண்டாரமீது இவ்வாறு தாக்குதல் நடாத்திய சந்தேக நபரான ஜீ.ஏ.சாந்த ஹரிஸ்சந்குர என்பவரை 7500 ரூபா ரொக்கப் பிணையிலும், 30 ஆயிரம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு உத்தரவு வழங்கிய நீதிவான் ருவிர வெலிவத்த, மாதாந்தம், இறுதி ஞாயிறு தினங்களில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் பணித்தார்.

இறைச்சிக்காக விலங்கு உற்பத்தியென்ற திட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் -ஐ.தே.க.எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா

sri-lanka-parliment.jpgஇறைச் சிக்காக விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தை இல்லா தொழிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா, விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் அரசின் திட்டத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தசட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்டம் தொடர்பில் ஐ.தே.க.வுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இந்தச் சட்டமானது பால் உற்பத்தியை பாதிப்புக்குள்ளாக்கும் விதமாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ அல்லது இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் கொல்லப்படுவதை தடுப்பதாகவோ மட்டும் இருக்கக் கூடாது.

ஆடு,மாடு,பன்றி, எலிகள் கூட இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. விலங்குகள் மீது கருணைகாட்டுகின்ற சட்டமாக இருந்தால் இறைச்சிக்கான விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தையே இல்லாதொழிக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் இணங்குகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் . மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்போது கூட அரசியல் நிறம்பார்த்தே வழங்கப்படுகின்றன. கால்நடை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர். அவர்கள் யாரின் பட்டியல்களை முன்வைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

கறவை மாடுகள் அறுக்கப்படுவதை நாம் உண்மையாக எதிர்க்கின்றோம். எனவே அமைச்சரின் இந்த திட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.

காயமடைந்த படையினருக்கு சிகிச்சையளிக்க மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

medicine.jpgகாயம டைந்த படைவீரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன வியாழக்கிழமை சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மறுத்துவிட்டார்.

அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ரணவீர பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

“அநுராதபுரம் வைத்தியசாலையில், காயமடைந்த படையினருக்கும் நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சை செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே’ என்று ரணவீர பத்திரன இதன்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,”” அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அங்கு ஒரேயொரு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில், அது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்கு அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதை அடுத்து, தற்போது தருவிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று கூறினார்.

அத்துடன், அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பேசியதன் மூலம் அங்கு மருந்துப் பொருட்களில் எந்த தட்டுப்பாடுகளும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், தான் இப்போது தொடர்பு கொண்டு பேசிய போது அநுராதபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான இரு அத்தியாவசிய மருந்துகள் இல்லையென கூறப்பட்டதாக ரணவீர பத்திரன எம்.பி. மீண்டும் தெரிவிக்கவே;

“ஜே.வி.பி. யிடம் 23 வைத்தியர்களைக் கொண்ட சங்கமொன்று உள்ளது. இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதே இவர்களது வேலை. 8,594 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 8,593 ஐப் பற்றி பேசாமல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் என்பது கடையில் சென்று சீனி வாங்குவதைப் போல தருவிக்க முடியாது’ என்று சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.