February

Friday, November 27, 2020

February

சிறுவர் துஷ்பிரயோகம்; இவ்வருடம் மாத்திரம் 97 முறைப்பாடுகள்; கடந்த வருடம் 1265

children-srilanka-01.jpgசிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடும் ‘1929’ எனும் தொலைபேசி தொடர்பிலக்கத்தினூடாக இவ் வருடத்தில் மாத்திரம் 97 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 1,265 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைச் சிறார்களின் நலனைக் கருத்திற் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி அமைச்சினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான சேவைகள் வெளிநாடுகளில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுவர்களை கடத்தல் மற்றும் கடத்த முயற்சித்தலுடன் தொடர்புடைய 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிறுவர் திருமணங்கள் தொடர்பாக ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகளுக் கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தமைக்காக 36 முறைப்பாடுகளும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேறு சிலர் அடித்து துன்புறுத்தியமைக்காக 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் குறித்து 114 முறைப்பாடுகளும் குடும்ப பிணக்குகள் காரணமாக தனித்து விடப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக 119 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
பாரபட்சம் காட்டுதல் மற்றும் பிள்ளைகளை கவனியாமை தொடர்பான சம்பவங்கள் குறித்து 120 முறைப்பாடுகளும் வந்துள்ளன.

சிறுவர்களே நேரடியாக முறைப்பாடு செய்ய வேண்டுமென்பதற்காகவே இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பெறறோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் மற்றும் ஏனைய பெரியோர்களாலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைந்தன’

red-cross-srilanka.jpgஇலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.

கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருப்போருக்கு உணவு விநியோக நடைமுறையில் மாற்றம்

children-srilanka-02.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வடமாகாணத்தையும் முழுமையாக மீட்ட பின்னர் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யத் திட்டம்- அமைச்சர் பந்துல குணவர்தன

பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் முழு நாட்டையும் உரிய முறையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அண்மையில் கலேவள நகரில் நடைபெற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது தாய் நாடான இலங்கையில் சில பிரதேசங்களை புலிப்பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஆக்கிரமித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலில் முப்படையினர் பயங்கரவாதிகளுக்கெதிராக கடுமையாக போராடி அப்பிரதேசங்களை மீட்டுள்ளன. மீட்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புண்டு.

விவசாய உற்பத்திக்கு தம்புள்ள பிரதேசம் சிறந்ததாக விளங்கி வருகின்றது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஊடாக நாடு முழுவதும் விவசாய உற்பத்திப் பொருட்கள் சென்றடைகின்றன. விவசாயிகளுக்கான பல சலுகைகளை இன்றைய அரசு வழங்கியுள்ளது.

விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே குருநாகலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணவரைக்குமான ரயில் பாதையொன்றும் அமைக்கப்படவுள்ளது. பெரும்போக நெற்செய்கை இம்முறை கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றார்.

மன்னாரில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில்!

sri-lanka-navy.jpgமன்னார் –  முருங்கன் வீதியில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைக்கான ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன்  மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவில் 7 கடல் மைல்களுக்கான பிரதேசம் யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில்  படகுகள் மூலம் புலிகள் தாக்குதல்களை நடத்த முடியாதளவில் கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிறீன் ஓஷன் கப்பல் மூலம் காயமடைந்த பொது மக்கள் மூன்று முறை திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 40 தொன் உணவுப் பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வள்ளங்கள் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. புலிகளிடமிருந்து தப்பி கடல் மார்க்கமாக வரும் பொது மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க சிறு படகுகள் கொண்ட கற்படை உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் 77 பொது மக்கள் கடல்வழியாகத் தப்பி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிதம்பரத்தின் கருத்து புலிகள் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் முயற்சி -திருமாவளவன்

thirumavalavan-1601.jpgவிடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த மனோநிலையை மக்களிடம் வலுப்படுத்தி தற்காலிக வெற்றியையே அரசு பெற்றுள்ளது -காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.

election_ballot_.jpgயுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.

வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.

அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்

வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

போர்நிறுத்தம், சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் இந்திய அமைச்சரின் நிபந்தனையை ஏற்க முடியாது -ஜெயானந்தமூர்த்தி

jeyananthamoorthy-mp.jpgவிடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால், இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களையவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜெயானந்தமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும், ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களையவேண்டுமென அமைச்சர் சிதம்பரம் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப் புலிகளின் ஆயுதத்தைக் களைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக் களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென கூறுவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தாக்குதல் தொடர்கிறது பொதுமக்களுக்கான இழப்பு அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தள செய்திச் சேவைகள் மேலும் கூறுகையில்;

அம்பலன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகள் மீது நேற்று நடத்தப்பட்ட செறிவான ஷெல் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலகுமார் விதுசா (வயது 14) தயானந்தன் அம்பிகா (வயது 44), சசிகுமர் ஸ்பேயன் (வயது 60) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். ச் விக்னேஸ்வரன் கஜனி (வயது07), சசிகுமார் தேனிலவன் (வயது05), பாலகுமார் விதுசா (வயது16), தயானந்தா அம்பிகாவதி (வயது 45), தவம் பெனடிற் (வயது 61), சின்னத்தம்பி (வயது 61) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் றோஜின, த.சுபாசிண, தர்மலிங்கம் ஜென, தர்மலிங்கம் அஜந்தன, சு.ஞானாம்பிக, சோமசுந்தரம் விக்னேஸ்வரராஜா, விக்கினேஸ்வரராஜ கரன், அரவிந்தன், கந்தையா முத்துக்குமார, க.நந்தின, சிவச்செல்வன், த.வனஜ, த.அரவிந்தன், த.கிநிச பாலராச, சந்திரகுமார, சித்திரவேல் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். வள்ளிபுனத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.