February

February

‘கூட்டமைப்பு எம்.பிகள் தலைமறைவாகும் நிலை’- சங்கரி: ‘தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இனியும் தொடரும்’ – சம்பந்தன்: ஐ. நா. உரிய முறையில் கடமைகளை மேற்கொள்ளவில்லை’ – ஜெயனந்தமூர்த்தி

sangari.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. களுக்கு தமிழ் மக்களிடையே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வெளிநாடுகளில் தலைமறைவாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:- புலிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுக ளுக்குச் சுற்றிவந்த இவர்கள் தமது தொகுதிக்குக் கூட சென்றது கிடையாது. புலிகள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில் எமக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூட கூறத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடு விக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சொல்லவில்லை இது தமிழ் மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்.
அங்கு சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு சகல தரப்பினரும் புலிகளைக் கோரி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த மக்கள் குறித்து எது வித கவலையும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் – இரா.சம்பந்தன்

sampthan.jpg“விடுதலைப்புலிகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால்,விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும், இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்’. “லங்காதீப’ பத்திரிகைக்கு என்னைப் பேட்டிகண்ட செய்தியாளர் “விடுதலைப் புலிகள் தோல்வி கண்டுள்ளார்கள். இனி உங்கள் நிலை என்ன’ என்று கேட்டார். அதற்கு இவ்வாறே பதிலளித்தேன் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; “நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் காணி உரிமைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிரபாகரன் பிறப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இலங்கைத் தமிழரின் அரசியல் மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுவந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் இந்த உரிமைப் போராட்டம் இனியும் தொடரும். இதில் மாற்றம் இல்லை’ என்றார்.

பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐ. நா. அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜெயனந்தமூர்த்தி

jeyanathamoorthy.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய கடமைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழர் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காணப்படும் சர்வதேச அதிகாரம் மற்றும் பொறுப்புணர்ச்சி உரிய முறையில் வெளியிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட போதிலும் அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத ஓர் போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனச்சுத்திரிகப்பு அரசாங்கமொன்றின் கைப்பொம்மையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனினும், முக்கிய சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது தார்மீகப் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த இனச்சுத்திரிகரிப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச்சில்

ballot-box.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதியிலிருந்து 5 முதல் 7 வாரத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச் நடுப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் மாகாண சபை கடந்த வாரம் கலைக்கப்பட்டது.

வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிக்கின்றனர்

redcross-2801.jpgவன்னியில் காயமடைந்து வவுனியா அரசினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு, வார்ட்டுகளில் உதவி செய்து பராமரிப்பதற்கு உதவியாளர்கள், உறவினர்கள் இல்லாமல் காயமடைந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருவதாக ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காயமடைந்துள்ள சிறுவர்களே இந்த உதவியாளர்கள் இன்றி பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளை அதன் 29 தொண்டர்களை வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களுக்கு உதவும் பணிக்கு நியமித்துள்ளது. இத்தொண்டர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை பராமரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்துள்ள சிறுவர்களின் உறவினர்களையாவது அவர்களுடன் ஆஸ்பத்திரியில் தங்கி பராமரிக்க அனுமதிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களைப் பராமரிப்பதற்காக வியாழக்கிழமை வந்த உறவினர்கள் நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் வாழ்வில் அமைதியை உருவாக்க அரசு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்’

வன்னியில் அவதியுறும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியான வாழ்க்கையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சீ.பி.வை.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழ் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழும் சூழலை பாகுபாடின்றி மகிந்த ராஜபக்ஷ, ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் இன்று இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும். விஷேடமாக கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தொழிலுக்காக தங்கியுள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருவோர் தமது தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

சுதந்திரமாக அச்சமின்றி நடமாடும் உரிமைகளையும் வழங்கி அங்கலாய்ப்பின்றி அமைதியாக வாழும் உரிமைகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும். விஷேடமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அரசின் தேவையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கையோடு வாழும் நிலைமையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா வழங்கிய பொருட்களை வன்னிக்கு அனுப்பமுடியாத நிலை

vanne.jpgவன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்குவதை காலவரையரையின்றி இடை நிறுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய ஊடகப்பேச்சாளர் கோர்டன்வைஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாகும் .2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் கூடதலானோர்போர்முனைப்பகுதியில் சிறையுண்டிருப்பதால் அந்த மக்களுக்கு எந்தவித உணவு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கோர்டன் வைஸ் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி அமெரிக்கா வழங்கிய நிவாரணப்பொருட்களும் தம்மிடமுள்ள மனிதாபிமான உதவிகளும் களஞ்சியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததால் மாத்திரமே நிவாரண உதவிகளை அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை படம் எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பொதுமக்களை புகைப்படங்கள், வீடியோ படங்கள் எடுப்பதற்கு பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்துள்ளனர். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால் ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் தொடர்பான படங்கள், விபரங்கள் வெளியுலகுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள காயமடைந்த வன்னி மக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்களும் சந்தித்துப் பேசுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவர் கைது!

சென்னை சென்ரல் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று காலையில் சென்ரல் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் வரை யாரும் வரவில்லை.

இதற்கிடையில் திடீரென்று மாலையில் வாலிபர் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கையில் பெட்ரோல் கேனுடன், மெமோரியல் ஹால் அருகே வந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரது பெயர் ராஜி என்ற ராஜசேகரன். சென்னை ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் சப்ளையராக பணிபுரிகிறார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு போட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே ரவி தீக்குளித்தார் – டிஜிபி ராஜேந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு. ரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

ரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன். அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.