February

February

மதவாச்சி வரையே எதிர்வரும் 6 ஆம் திகதி வரை யாழ் தேவி சேவைகள்

train.jpgகொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை நடத்தப்படும்; யாழ். தேவி ரயில் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மதவாச்சி வரை மாத்திரமே நடைபெறும் என இலங்கை புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா- மதவாச்சி இடையிலான புகையிரதப் பாதை  புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தேர்தல் வன்முறை 32 ஆக அதிகரிப்பு

paffre.jpgவேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான “பவ்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் செயற்படுவதாக தெரியவில்லையெனவும் கூறியுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் (வெள்ளிக்கிழமை) வரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகூடிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் முறையே 11,2 இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளோம் . அதுபோல் மத்திய மாகாணத்தில் கண்டியில் 13 உம், மாத்தளையில் 5 உம் நுவரெலியாவில் ஒரு தேர்தல் வன்முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவு செய்துள்ளோம்.

இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படவில்லை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரளவு மக்கள் பங்குபற்றுகின்றபோதும் மத்திய மாகாணத்தில் இதனைக் காணமுடியவில்லை. எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் கிராமசேவகருடன் தொடர்பு கொண்டோ தபால் அலுவலகங்களில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாகாண தோட்டப்புற மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை பாவிப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வடக்கு மோதல் குறித்த செய்திகளை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்குக!

reporters.jpgஇலங் கையின் வடபகுதியில் இடம்பெறும் படை மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காஸா விடயத்தில் செயற்படுவதுபோல,  ஊடகங்களும், மனிதாபிமான அமைப்புகளும் சுதந்திரமாக செயற்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமானத் துயரம் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச்  செய்திகள் வெளியாகும் தருணத்தில் இலங்கை அதிகாரிகள் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி மறுக்கின்றனர் என்றும் ஊடக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், வதந்திகளைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

“தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சிமாற்றமொன்று அவசியமாகும்’

ballot-box.jpgதமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றமொன்று அவசியமாகும் என்று தெரிவித்துள்ள ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான, முரளி ரகுநாதன் எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மலையகத்தில் இரட்டை வேடம்பூண்டு வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களித்து ஏமாற்றமடையக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியையும் மலையக மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்று கட்சிமாறும் பச்சோந்திகளும் ஐ.தே.க.சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பிக்கையாக இருந்து சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? அல்லது கட்சி தாவும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? என்று மலையக மக்கள் சிந்திக்க வேண்டும். இன்று மலையக பெருந்தோட்டங்களில் க.பொ.த. உயர்தர கல்வி கற்றுவிட்டு வெளிமாவட்டங்களில் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அதேவேளை, இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் தலைநகரில் தொழில்புரிந்த இளைஞர்களும் தொழிலைவிட்டுவிட்டு மலையக பெருந்தோட்டங்களுக்கே திரும்பிவருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தேவைப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற வேண்டும். தலைநகரில் தமிழ் மக்களுக்காக தனி மனிதனாக இருந்து தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினரும், எமது தலைவருமான மனோ கணேசனின் தன்னலமற்ற சேவையை மலையக மக்களுக்கும் செய்வதற்காகவே நுவரெலியா மாவட்டத்தில் நானும் அவரது சகோதரருமான பிரகாஷ் கணேசனும் போட்டியிடுகின்றோம். தேர்தலில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்போம். நாங்கள் கட்சி மாறமாட்டோம். எனவே, மலையக மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஹிலாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

hilari.jpgஅமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.

பொத்துவில் காட்டில் கைதான 30 முஸ்லிம்களையும் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம்

pottuvil.gifபொத்து வில் காட்டுப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்களையும் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.

தினமும் விறகு வெட்டிப் பிழைத்து வரும் கூலித் தொழிலாளர்களான இவர்கள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதும் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்படுவதுமாக உள்ளனர். இது தொடர்பாக இவர்களின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் அவர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

இதனால், இவர்களின் குடும்பங்கள் எதுவித வருமானமும் இன்றி பட்டினி வாழ்க்கை வாழுகின்றனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவி எம்.பி. மல்லிகா உம்மா தெரிவித்தார். காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற போது அதிரடிப்படையினர் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ விமான நிலையம் முற்றுகை. -கொளத்தூர் மணி உட்பட 250 பேர் கைது

kolathur_mani.jpgதஞ்சை விமானப் படைத்தளத்தில் இருந்து இலங்கை ராணுவத்திற்கு போர்க்கருவிகள் அனுப்பப்படுவதாகக் கூறி தமிழர் ஒருங்கிணைப்பு குழு “விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்” நடத்த அழைப்பு விடுத்திருந்தது.  நேற்று (31) தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள்.

விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர்.தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி சென்ற குழவினரை போலிஸார் மீண்டும் தடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள். அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது, தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே, ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார். மணியரசன் பேசும்போதே போலிஸார் அதை தடுக்க போராட்ட குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே போராட்ட குழவினர் மணியரசன், கொளத்தூர் மணி உட்பட 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  நேற்று மாலை அவர்களில் 244 பேரை ரிமாண்ட் செய்து திருச்சி சிறைக்கு காவல்துறை அனுப்பியுள்ளது.

தற்காலிக யுத்தநிறுத்தமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

louis-michel-in.jpgஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேயப் பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்;

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த யுத்தம் மாபெரும் மனித அவலத்திற்கு வழிகோலும். வடக்கு, கிழக்கில் போரிற்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

பொதுமக்கள் இழப்புகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்தம் நடைபெறாத பகுதிக்குள் பொதுமக்களைப் பாதுகாத்து அவர்களுக்குரிய மனித நேய பணிகளை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக யுத்த நிறுத்தமொன்று உடனடியாகத் தேவை.

வன்னிப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் அநேகமானோர் காயமடைந்தும் போதிய மருத்துவ வசதி இன்மையால் அல்லலுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்

Protest_UKலண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 – 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட  நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக – கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை  புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை  ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின்  கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது  தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட – கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.