February

February

புத்தகம் எழுதுகிறார் கொண்டலீசா ரைஸ்

condalisa-rice.jpgஅமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் கொண்டலீசா ரைஸ்.

அவர் தனது பதவிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார். இதற்காக அங்குள்ள பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் 8 ஆண்டு பதவிக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரைஸ் புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

முதல் புத்தகம் 2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டில் இரண்டாவது புத்தகம் வெளிவரவுள்ளது. இதில் தான் வளர்ந்த விதம் பற்றி ரைஸ் எழுதவுள்ளார்.

கனடா தமிழர் செந்தாமரை ஆசிரியர் காலமானார்

கனடாவின் ரொறண்டோ நகரில் இருந்து வெளியாகும் “தமிழர் செந்தாமரை” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கனக அரசரத்தினம் (வயது 58) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலமானார்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அரசரத்தினம் 1980 களில் ஆரம்பத்தில் வீரகேசரியில் ஒரு செய்தியாளராக இணைந்து தனது பத்திரிகைத்துறை வாழ்வை ஆரம்பித்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை விறுவிறுப்புடன் தருவதில் பெயரெடுத்த அரசரத்தினம் இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தார்.

கனடாவில் அவர் வேறு தொழில் துறைகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் கூட ஊடகத்துறையில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக அங்கும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதிலேயே அக்கறை காட்டினார். தமிழர் செந்தாமரை என்ற வாரப்பத்திரிகையை சுமார் 15 வருடங்களாக ரொறண்டோவில் இருந்து வெளியிட்டுவரும் அரசரத்தினம் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்களையும் முக்கியஸ்தர்களையும் அழைத்து கௌரவிக்கத் தவறுவதில்லை. இவ்வருட விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.

வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழ்ந்ததினால் தலையில் ஏற்பட்ட காயமே அரசரத்தினத்தின் மரணத்திற்கு காரணமாகியது. அவரது இறுதிக்கிரியைகள் ரொறண்டோவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தம் மீதான விசாரணை குறித்து இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்

sampanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன் மீது இரகசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இவ்விசாரணையானது, ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் ஜனநாயக கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையிலும் எனது சுதந்திரமான சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் தலையீடாக அமைவதாகவே நான் கருதுகினறேன்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெயர்ந்துள்ள மக்களைப் போர் நடக்கும் பகுதிகளிலோ அல்லது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலோ சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். அரச ஊடகங்களில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மாநாடு விமர்சிக்கப்பட்டமை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என்னை விசாரித்தமை, உண்மைகளை அடக்குகின்ற ஒரு நோக்கத்துடன், எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரோதமான ஒரு முயற்சியாகவே நான் கருத வேண்டியுள்ளது.

எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நிலையில் இதனைத் தங்களுக்கு அறிவிப்பது எனது கடமை என்று நான் நினைக்கின்றேன். தங்கள் அரசாங்கத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்படும் சீரற்ற நடைமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்.”
 

வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற மேற்கொள்ளும் முயற்சியை இந்தியா கைவிட வேண்டும்: பிரணாப்புக்கு கஜேந்திரன் கடிதம்

gajenthiran.jpgஇந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவடிவம் வருமாறு:-

உயர்திரு பிரணாப்முகர்ஜி
கௌரவ வெளிவிவகார அமைச்சர்
இந்தியா

’’இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிங்கள அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 முதல்  24.02.2009 வரையிலான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர்.  காயமடைந்தவர்களில்  சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 24 ம் தேதி வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடல்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது. சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிங்கள  அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது. இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர். அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவ்வாறு அனுப்பப்படும்போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.  இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.
 
குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர். முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ காமிராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர். அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
 
இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது. சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

இவ்வாறான  நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு வழங்கும் சகல ஆதரவையும் உடன் விலக்கிக்கொண்டு, உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் வன்னியில் உள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் கோருவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் படியும் கோருகின்றேன்.

செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்

தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ

26-vaiko.jpgதீக்குளிப்பு சம்பவங்கள் எனது இதயத்தை உலுக்கி எடுக்கின்றன. இனியும் இதுபோன்ற தீக்குளிப்புகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு திமுக தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக் கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

இஸ்லாமாபாத் மரியாட் ஹோட்டலில் தீவிபத்து

பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு தாக்கப்பட்ட மரியாட் ஹோட்டலில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மரியாட் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹோட்டலின் பெரும் பகுதி கருகிப் போனது. இதையடுத்து சீரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹோட்டல் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை மரியாட் ஹோட்டலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஹோட்டலின் சமையலறையிலிருந்துதான் தீ பரவியுள்ளது. இந்தத் தீ 2வது மாடியின் பெரும் பகுதியில் பரவியது.

சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை தயார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Minister Tissa Vitharanaஇலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை தயாராகவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை மீண்டும் அமுல்படுத்தல் போன்ற பிரதான விடயங்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்

பா.உ இரா.சம்பந்தனிடம் 4 மணி நேரம் சி.ஐ.டி விசாரணை.குடியுரிமை பறிபோகும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவிப்பு.

sampanthan.jpgகுற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் (26.02.2009) காலை 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவி;ன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சேனக குமாரசிங்க தலைமையில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருவது தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பதிலறிக்கையின் பின்னர் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை சம்பந்தன் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்போது அவரின் குடியுரிமை பறிக்கப்படுவதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

632 பேர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

red-cr.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

மேல் மாகாண சபைத் தோ;தல் ஏப்ரல் 25ஆம் திகதி- தேர்தல்கள் செயலகம் இன்று அறிவிப்பு

election_ballot_.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன. இதனையடுத்தே தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையில் 102 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இம்முறை 19 அரசியல் கட்சிகளையும் 26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 2581 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாண சபை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.