March

March

முன்னாள் நீதிவானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

மோசடி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நீதிவான் ஒருவருக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக்கண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ரவிந்திர பிரேமரட்ன 1,500 ரூபா அபராதம் விதித்தார்.
அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அனுப்ப 6 இலட்சம் ரூபாவை கட்டணமாக அறவிட்ட இவர் பின்னர் அவரை அனுப்ப முடியாமல் பணத்தை காசோலையாகக் கொடுத்துள்ளார்.

6 இலட்சம் ரூபாவையும் இவர் மூன்று தடவைகள் பகுதி பகுதியாக காசோலைகளைக் கொடுத்துள்ளார். அந்த இளைஞரின் தாயார் அக்காசோலைகளை வங்கியில் பணமாக மாற்றக்கொடுத்தபோது அக்காசோலை கணக்கிற்கு பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பெண் அவருக்கு எதிராக வழங்குத் தொடர்ந்திருந்தார்.

வருண்காந்திக்கு 2 நாள் நீதிமன்ற காவல்

india-varun.jpgஉத்தர பிரதேசம் மாநிலம் பீலிபட் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வருண்காந்தி மீது தேர்தல் பிரசாரத்தின் போது மததுவேசத்தை வெளிப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு உள்ளது.

பீலிபட் நீதிமன்றத்தில் ஊர்வலமாக சென்று ஆஜரானார். அவரை திங்கட்கிழமை வரை காவலில வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே அவருக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அதையும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஊர்வலத்தில் பா.ஜ.க தொண்டர்களுக்கும், போலீஸ்சாருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பீலிபட் தொகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் உயர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.  மேற்படி கடத்தல் சம்பவமானது யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்பதாகும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் கடத்தப்பட்டமையால் மாணவர்களின் கல்வி நலனும் பல்கலைக்கழகத்தின் இயல்பு நிலையும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்விச் சமூகம் மீது இவ்வாறான கொடுமையான நடைமுறைகளையும் அணுகுமுறைகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி வேண்டுகின்றோம். அவரை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.செ.கஜேந்திரனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூடாக தேநீர் அருந்தினால் ஆபத்து

cap-of-tea.jpgஅதிக சூட்டுடன் ஆவி பறக்க தேநீர் அருந்துவதால் தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுடச்சுட தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தான் இது. உங்களின் இந்தப் பழக்கத்தால் தேவையில்லாமல் ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்கள்.

சூடாக தேநீர் அருந்துவதால் தொண்டயில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெஹ்ரானைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெஸா மலெக்சாதே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், லண்டனில் மேற்கொண்ட இந்த ஆய்வில், தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேரின் தேநீர் அருந்தும் பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் புற்று நோய் பாதிப்பில்லாத 570 பேரின் தேநீர் அருந்தும் பழக்கமும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதில், கோப்பையில் தேநீர் ஊற்றிய 4 நிமிடங்கள் கழித்து அதைப் பருகுவோரைக் காட்டிலும், 2 நிமிடங்களுக்குள் தேநீரைப் பருகி முடிப்போருக்கு தொண்டைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் தேநீர் குடிப்பதற்கும் புற்று நோயுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

karunanithi.jpgமுதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவ்வறிக்கையில், “அரசுக்கு  ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள்  நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய  மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது  என்பதற்காக  காங்கிரசோடு  கூட்டணி என்று கடைசி வரை   ஏமாற்றி வந்தது  யார்  என்பதை  தமிழ்நாடு அறியும்.
 
இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள்  நாங்கள் என்பதையும் –  நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா  செய்தோம் என்பதையும்  தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கைதான இலங்கை மீனவர்கள் 24 பேர் விடுவிப்பு

fisherman-1.jpgஇந்திய கடல் பகுதியினுள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த ஒரு தொகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன

ஆணுறை குறித்த கருத்துக்களை போப்பாண்டவர் திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை

_pope_ap.jpgபோப் பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.

இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார். ”பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று லான்செட் தெரிவித்துள்ளது.

புலிகளிடம் மேலுமொரு சிறிய ரக விமானம்?

வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு சிறியரக விமானம் இருப்பதாகவும் இதனால் கொழும்பு மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செக் குடியரசு தயாரிப்பான “சிலின் சற் 143′ இலகு ரக விமானமொன்றே புலிகள் வசமிருப்பதாகவும், அண்மையில் கொழும்பில் தாக்குதல் நடத்திய இரு விமானங்களும் அழிந்து போனதால் வேறு விமானங்கள் இல்லையெனவும் கூறப்படுவதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களதும் புலனாய்வுத் தகவல்களதும் அடிப்படையில், கொழும்பில் அழிக்கப்பட்ட இரு விமானங்களைப் போன்று இயங்கக்கூடிய நிலையில் ஒரு விமானம் மட்டுமே இருப்பதாகவும் படைத்தரப்பு கருதுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குடிசை ஒன்றினுள் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் பலரும் பலதடவைகள் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து, புலிகள் விமானத் தாக்குதலை நடத்தலாமென்ற அச்சுறுத்தலால் அதி உயர் விழிப்புடனிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் குடிசைக்குள் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பவியலாளர்கள் விமானத்தின் திருத்த வேலைகளை மேற்கொண்டதையும் அந்த விமானம் இயங்கு நிலையிலிருந்ததையும் பொதுமக்கள் கண்டதாகவும் எனினும் அந்த விமானம் பறந்ததை அவர்கள் ஒரு போதும் பார்க்கவில்லையெனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் ஏழு விமான ஓடுபாதைகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விமானங்களின் பல உதிரிப்பாகங்களையும் அவற்றின் மொடல்களையும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் முன்னர் படையினர் தெரிவித்திருந்தனர்.

புலிகளின் பெரும்பாலான விமானத் தளங்களைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாக படையினர் கூறிவந்த நிலையிலேயே புலிகள் இரு விமானங்களை கொழும்புக்கு அனுப்பி தாக்குதலை நடத்தியிருந்தனர். புலிகள் நவீனரக உதிரிப்பாகங்களை தருவித்து புதிய விமானமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.

நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சி பெறுவதற்கான பேச்சுகளில் முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கடன் உதவி வழங்குவது தொடர்பாக ஆயத்தமான நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றபோதும் கொழும்பு கோரும் நிதித்தொகை தொடர்பாக இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லையென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் திகதி எதுவும் எம்மிடம் இல்லை.அல்லது எப்போது இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கான திகதி குறித்தும் எம்மிடம் முடிவு எதுவும் கிடையாது. அத்துடன் எவ்வளவு தொகையை நிதியத்திடமிருந்து இலங்கை கோருகிறது என்ற தகவலும் இதுவரை எமக்கு தெரியாது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் வெளியுறவுகள் திணைக்களத்தின் தலைவர் கரோலின் அட்கின்சன் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பரின் பின்னர் நாட்டின் 2/3 பகுதி அந்நிய செலாவணி கையிருப்பை இலங்கை இழந்துவிட்டது. இதனையடுத்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாக கோரியிருந்தது.

கையிருப்புகள் முடிவடைந்தால் அத்தொகையை ஈடுகட்ட கடன்உதவி வழங்குவது சர்வதேச நாணய நிதியத்தின் வழமையான நடைமுறை அல்ல. ஆயினும் நாட்டின் நிதித்தேவைகளையும் உள்ளூர் பண நிரம்பலின் அளவையும் கருத்தில் கொண்டு கடன் உதவி தொடர்பாக நாணய நிதியமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள விடயமாகும்.

நாட்டிற்கு சர்வதேச நாணயநிதிய தூதுக்குழு வருகை தருவதற்கு முன்னராக ஏப்ரல் முதலாவது அல்லது இரண்டாவது வாரம் உடன்படிக்கை தயாராகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது பேச்சுவார்த்தையில் துரிதமாக முன்னேற்றம் ஏற்பட்டால் இது சாத்தியமாகும் எனக்கருதப்பட்டது.

செப்டெம்பரிலிருந்து ஜனவரிவரை இலங்கையின் கையிருப்புகள் 3.4 பில்லியன் டொலரிலிருந்து 1.4 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது. அந்நிய செலாவணி சந்தைத் தலையீடுகளுக்கு வலுவூட்டுவதற்காக உள்ளூர் பணச்சந்தைக்கு சுமார் 200 பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது.அல்லது அச்சிடப்பட்டது. ஆனால், நாணய கையிருப்பு ஜனவரி இறுதியில் 1.2 பில்லியன் என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவித்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்உதவியால் பணம் அச்சிடப்படுவதை நிறுத்த முடியும். அத்துடன் அந்நிய செலாவணி கையிருப்புகளை மீள அதிகரித்துக்கொள்ளவும் இயலும். பரிமாற்ற விகிதம் சந்தை நிலைவரத்திற்கேற்ப தீர்மானிக்கக்கூடியதாக இருந்தால் அதனை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பனவாக இருக்காது என்று இலங்கை அதிகாரிகள் லங்கா பிஸ்னஸ் ஒன்லைனுக்கு கூறியுள்ளனர்.

வீண் விரயத்தை குறைத்தல், நாணயம் அச்சிடுவதை குறைத்தல் என்பனவே நிதியமானது வழமையாக விதிக்கும் நிபந்தனைகளாகும். இது இவ்வாறிருக்க வியாழன் இறுதி மதுபானம்,சிகரட் என்பனவற்றுக்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாளை- மார்ச் 29- நான்காவது குறும்படக் காட்சி – ‘லண்டன் மாப்பிள்ளை’

Vili Clipதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு மார்ச் 29 அன்று சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி, ஆய்சா ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. (திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்) திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும். காட்சி விபரங்கள் கீழே.

பெப்ரவரி 21 அன்று அதே இடத்தில் சறேயில் இடம்பெற்ற திரையிடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலிலும் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்துக்களில் வெளிப்பட்டு இருந்தது.

வழமைக்கு மாறாக அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் புதிய பார்வையாளர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் மட்டும் திரையிடப்பட்டு வந்த குறும்படக் காட்சிகள் எதிர்வரும் காலங்களில் லண்டனின் ஏனைய பகுதிகளிலும் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

காட்சியைத் தொடர்ந்து இராப்போசனம் வழங்க உள்ளதால் 12 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர் தவிர்த்து ஏனையோரிடம் £3 கட்டணம் அறவிடப்படும்.
 
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

London_Maappillaiமேலும் ஈழத்து சினிமா படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆவணக்காப்பாளரும் நூலகவியலாளருமான என் செல்வராஜா ஈடுபட்டு உள்ளார். உங்கள் படைப்புகளையும் ஆவணப்படுத்திக் கொள்ள தேசம்நெற்றுடன் தொடர்புகொள்ளவும்.

புலம்பெயர் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஆர் புதியவன் மாற்று கனவுகள் நிஜமானால் மண் ஆகியவற்றைத் தொடர்ந்து லண்டன் மாப்பிளை என்ற மற்றுமொரு படத்தை இயக்குகிறார். லண்டனில் படமாக்கப்படும் இம் முழுநீளப்படம் ஆர் புதியவனின் நகைச்சுவை இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயக்கபட்டு வருகிறது. ஜீட் ரட்ணசிங்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த நகைச்சுவைச் சினிமாவுக்கான ஒளிப்பதிவை ரியாஸ்கானும் படத்தொகுப்பை சுரேஸ் ஆர்ஸ்ம் இசையை பாலாஜியும் மேற்கொண்டு உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது திரைக்கு வழவுள்ளது.

Vili Clipகாட்சி விபரங்கள்:

5.30 pm on 29th March 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB