April

April

பிரான்ஸினால் நடமாடும் மருத்துவமனை அன்பளிப்பு!

france.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனையொன்றை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

100 கட்டில்களைக் கொண்ட இந்த நடமாடும் மருத்துவமனை விமானம்மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன்  75 பேரைக் கொண்ட பிரான்ஸ் நாட்டின்  மருத்துவர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வர அனுமதி மறுப்பு; அனுமதி மறுக்கவில்லை என்கிறது இலங்கை அரசு – அருட்சல்வன்

carl-bildt-swe-foreigh-mini.jpgஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கார்ள் பில்ட் அவர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து இலங்கைக்கான தமது நாட்டு தூதரை அவசர ஆலோசனைக்காக ஸ்வீடன் அரசு அழைத்துள்ளது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் என வலியுறுத்துவதற்காக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று இலங்கை வருகின்றனர். அவர்களுடன் ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சரும் வரவிருந்த நிலையில் அவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் கார்ள் பில்ட் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் உயரதிகாரி ஒருவர், ஒரே சமயத்தில் பல உயர்மட்ட விஜயங்களை தாங்கள் கையாள்வது கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

பிறிதொரு சமயத்திலும் இலங்கை செல்லும் நோக்கம் இல்லை என சுவீடன் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
 
“பிறிதொரு சமயத்தில் தான் இலங்கைக்கு வரமுடியும் என இலங்கை அரசு கூறியிருந்தாலும் அப்படிச் செல்லும் நோக்கம் தனக்கு இல்லை” என சுவீடன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் கார்ள் பில்ட் கூறியிருக்கின்றார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கார்ள் பில்ட் “பிறிதொரு சமயத்தில் இலங்கைக்கு வர முடியும் என்று இலங்கை அரசு குறிப்பிட்டிருந்தாலும் , அப்படி செல்லும் நோக்கம் தமக்கு கிடையாது” என்று கூறுகின்றார்.

இந்த முடிவை ஒரு விசித்திரமான நடவடிக்கை, என்று விமர்சித்துள்ள அவர் பி.பி.சி. க்கு அளித்த செவ்வியில், ” பிறிதொரு தடவை இலங்கைக்கு வரமுடியும் என்று அவர்கள் சொல்வதற்கு நான் என்ன, அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஒருவனா? எவ்வாறாயினும் அவர்களின் அழைப்பை நான் ஏற்கப் போவதில்லை. கொழும்பிலுள்ள எமது தூதரையும் அவசர ஆலோசனைக்கான நான் திரும்பி அழைத்திருக்கிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சுவீடிஷ் அமைச்சருக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அரசாங்கம் மறுப்பு

சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் கார்ல்பில்ட் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசாவழங்க மறுத்துள்ளதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு எவ்வித அடிப்படையும் அற்றதென வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட்குச்னர், பிரிட்டிஷ் வெளிவிவகாரஅமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று இலங்கை வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. அடுத்த மாத முற்பகுதியிலேயே அவர் வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இலங்கைத் தூதரகத்திற்கு அவர் முறையாக விண்ணப்பிக்கவில்லை. இலங்கைக்கு இவர் வருவதனை தடுக்கும் எந்த நோக்கமும் இலங்கை அரசுக்கு கிடையாது. உண்மையில் சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை வருமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவே அழைப்பு விடுத்திருந்தார்.

பிரிட்டிஷ், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரினதும் வருகைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. ஆயினும், சுவீடிஷ் அமைச்சரின் வருகை தொடர்பாக ஆராயப்படவில்லை.மேற்படி இரு நாடுகளின் அமைச்சர்களின் வருகையானது இருதரப்பு உறவுகளுடன் தொடர்பானது. எந்த வகையிலும், இவர்களின் வருகையானது, ஐ. நா என்ற வகையிலோ பிராந்திய அங்கத்தவர் என்ற வகையிலோ அமையவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை -ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும்,  அவர்களின் மனிதாபிமான நிலைமைள் குறித்து இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்னர் ஆகியோரின் விஜயத்துக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தாம் இலங்கையர் என்கிற எண்ணம் ஏற்படும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணித்துள்ள கார்ள் பில்ட் அவர்கள், அவர்களை நசுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றும் முன்வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவே ஐரோப்பிய ஒன்றியம் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கேரல் ஸ்வாரண்பர்க் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை அரசின் இந்த முடிவானது மிகப்பெரிய தவறு ஐரோப்பிய வட்டாரத்தில் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் . இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்தடைந்தனர்
 
பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர். யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்தே இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் கோர்டன் பிறவுணுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்தே இந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தகக்து.

இன்று ஏப்ரல் 29 ; உலக நடன தினம் (World Dance Day) – புன்னியாமீன்

world-dance-day.jpgஇன்று ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day)

இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும்,  சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம்  (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.

நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய,  குறிப்பாக  தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும்,  இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்  ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ  போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட,  நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல்,  வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க,  நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார்.  நடனம் ஆடுபவர்,  நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக கீழே மாநில வாரியாக புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 

தமிழ்நாட்டில் – பரதநாட்டியம்,  கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் -சாக்கியார் கூத்து,  கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்: ஆந்திராவில் – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்: கர்நாடகாவில்; – யக்ஷகானம்: ஒரிசாவில் – ஒடிசி: மணிப்பூரில் – மணிப்புரி, லாய்-ஹரோபா: பஞ்சாப்பில் – பாங்ரா, கிட்டா: பீகாரில் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய்,  நாச்சாரி: அஸ்ஸாமில்- பிகு : ஜம்மு-காஷ்மீரில் – சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.

அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம். பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி. 

இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் – தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்)  இலவா, நிக்கோபாரிய நடனம்
வடஇந்தியக் கிராமிய நடனங்கள் – டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்  நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள்  கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ

இனி உலக நடன தினம் பற்றி சற்று நோக்குவோம்.

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID),  தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ‘உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை”  என்றார்.

2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள்,  நடன நிறுவனங்கள் தமது பிரேரனைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல்,  நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல்,  வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 

2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின்  International Dance Council (CID),  தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவணத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும்> இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.

2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற்குறித்த விடயங்களை சுட்டிக்கட்டி அரசாங்கங்களும், அனுசரனையாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டுள்ளது.

நடனதினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய நடன வாரத்தை National Dance Week (NDW)  பிரகடனப்படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத்திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்றினை Coalition for National Dance Week  உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள்,  பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

முப்பது கோடி ரூபா, மருந்து மற்றும் வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

australia.jpgஅவுஸ் திரேலிய அரசாங்கம்  முப்பது கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது. 

தங்காலையில் டெங்கு தீவிரம்: எட்டு பாடசாலைகள் மூடப்பட்டன

தங்காலை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்ததையடுத்து தங்காலைப் பிரதேசத்திலுள்ள எட்டு பாடசாலைகள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதாக தங்காலை வலயக் கல்விக் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் தொடர்பாக இப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாகவே இப் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தங்காலைப் பிரதேசத்திற்கு இரு மருத்துவ நிபுணர்கள் அடங்கலான விசேட குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்த்தன கூறினார்.

இவ் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 28 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 3591 பேர் உள்ளாகினர். இவர்களில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக நோயியல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணரொருவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, கண்டி, கேகாலை, மட்டக்களப்பு, கம்பஹா, குருணாகல், மாத்தறை, அனுராதபுரம் உட்பட பல பிரதேசங்களில் இக் காய்ச்சலுக்குப் பலர் உள்ளாகியுள்ளதகவும் அவர் கூறினார்.

தங்காலை நிலைமை தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் சுனில் மேலும் குறிப் பிடுகையில்; டெங்கு காய்ச்சல் காரணமாக தங்காலை மகளிர் கல்லூரி 6 ஆம் வகுப்பு மாணவியொருவரும், தங்காலை முன் மாதிரி பாடசாலை முதலாம் தர மாணவரொருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக இப் பிரதேசத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்தே எமது வலயத்திற் குட்பட்ட 8 பாடசாலைகளை மறு அறிவித்தல் வரையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை மகளிர் கல்லூரி, தங்காலை ராகுல கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்மாதிரி பாடசாலை, தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலை, தங்காலை ஆரம்ப பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றார்.

பிரச்சாரம் ஓய்ந்தது

advani.jpgமக்களவை தேர்தலில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. 

இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு ஐ.நா.விடம் ஐ.தே.க. கோரிக்கை – ஹோம்ஸை சந்தித்தார் ரணில்

john_holmes.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு அதிகபட்சம் உதவுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வந்திருந்த மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. பிரதிநிதிகள் குழுவை சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கொழும்பு, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஐ.தே.க. சார்பில் ரணில் விக்கிரமசிங்கவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல இருவரும் கலந்துகொண்டனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு ஐ.நா. போதிய உதவிகளை வழங்க வேண்டுமென இச் சந்திப்பில் ஹோம்ஸிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரவி கருணாநாயக்க கூறினார். இதேநேரம், பெருந்தொகையான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம்பெயர்ந்து வரும் நிலையில் அவர்கள் அனைவருக்குமான நிவாரண உதவிகளை வழங்க போதிய பலம் அரசிடம் இல்லாமையால், அதற்கான உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அதுமட்டுமல்லாது, இடம்பெயர்ந்து வந்த மக்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு உறுதியளித்திருப்பதாக இதன்போது ஜோன் ஹோம்ஸ் கூறியதாகவும் தங்களது கட்சி அதை வரவேற்றதாகவும் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இடம்பெயார்ந்த மக்களுக்கு மேலும் 25 கோடி நிவாரண உதவி : தமிழக அரசு அறிவிப்பு

flee0009.jpgஇலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஏற்கனவே 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பேஸ்ட் மற்றும் துணி வகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் 13-11-08 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங் கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும், நிவாரணப் பொருட்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் கடந்த 22-4-09 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவை மிக விரைவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக விநியோகிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வழக்கமாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன.

இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிர்வரும் மே மாதம் 5ஆந்திகதிக்குள் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய பணத்தில் மீதப்பட்ட 25 கோடி ரூபாவை தமிழக அரசின் சார்பில் நிதி உதவியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும்.” என அதில் கூறப்பட்டுள்ளது. 

வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரை

buddhist.jpgவன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரையொன்றை நாளை கல்கிஸ்சையிலிருந்து ஹங்குலான வரை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பாத யாத்திரையில் 200 பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள வன்னி மக்களுக்காக நிவாரண உதவி சேகரிப்பதே பௌத்த பிக்குகளின் பாத யாத்திரையின் நோக்கமாகும்.

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்

swedish_flag.jpgசுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.