April

April

பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்குகின்றது இராணுவத்தின் 58 ஆவது படையணி?

images-army.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இராணுவத்தின் 58 ஆவது படையணி நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 58 ஆவது படையணி இப்போது நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சுசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப் படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடற்படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிருவாகப் பிரிவின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு!

வடக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் பொலிஸாரும் இணைந்துள்ளனர். இம்மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு, பொலிஸ் நிருவாகப் பிரிவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இன்று பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன பிரதிப் பொலிஸ்மா அதிபர் நோருன்னவிடம் கையளித்தார்.

இப்பொருட்கள் விரைவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாணசபை முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க

prassana-ranatunga.jpgநடைபெற்று முடிந்த மேல் மாகாணசபை தேர்தல்களின் படி முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்படவுள்ளதாக சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்றிரவு முதல் 9 மணிநேர நீர்வெட்டு – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பு பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்றிரவு 9.00 மணி முதல் நாளைக் காலை 6.00 மணி வரையான 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரமாட்டார்

carl-bildt-swe-foreigh-mini.jpgசுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தரமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுவீடன் அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு எதனையும் விடுக்கவில்லை எனவும், இதன் காரணமாக சுவீடன் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும் தெரியவருகிறது.எனினும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் வேறொரு நாளில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பகுதிகளுக்கு எம். பி.க்களாகிய எங்களால் கூட செல்ல முடியாது – இந்தியாவில் சம்பந்தன்

tna_.jpgதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு பிரதிநிதித்துவம் வகிக்கும் பகுதிகளுக்குகூட எம்.பி. க்களாகிய நாங்கள் செல்லமுடியாத நிலைமை இருப்பதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளியாகும் “ஸ்ரேற்ஸ்மன்’ பத்திரிகைக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இதனை தெரிவித்திருக்கும் சம்பந்தன் உண்மையில் நாங்கள் நீதியற்றமுறையில் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ நாம் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய பகுதிகளில் தமிழர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்படுவது தொடர்பான தகவல்களை எமக்குள்ள தொடர்புகள் மூலம் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளை புதுடில்லியில் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது மோதல் சூன்யப் பகுதியிலுள்ள மக்களின் “வாழ்வதற்கான உரிமையை’ நாங்கள் கேட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார். தற்போதைய தருணத்தில் எமது கரிசனை மோதல் சூன்யப்பகுதியிலுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் பற்றியதே என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

தினமும் அதிகளவு இழப்புகள் ஏற்படுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொதுமக்களை புலிகள் மனிதக்கேடயமாக வைத்திருப்பதாக கொழும்பு தெரிவித்திருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது அநேகமான மக்கள் வன்னிப்பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் அப்பிராந்தியம் வழமையாக புலிகளின் ஆதரவு தளம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சனச்செறிவான இடத்திற்கு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தன் இலங்கையின் கள நிலைவரத்தை சர்வதேச சமூகம் இப்போது விளங்கிக் கொண்டுள்ளதாக தென்படுகின்றது.

என்றும் பல்வேறு விதமான போர்வைகளில் தமிழர்கள் வேருடன் அப்புறப்படுத்தப்படுதல் அல்லது படுகொலைகள் என்பன பற்றி மெதுவாக விழித்தெழுவதை காண முடிகின்றது எனவும் வாக்குரிமை பறித்தல் மற்றும் அரச ஏற்பாட்டுடனான நிகழ்ச்சித்திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

ஈழம் தமிழர்களின் அன்னை பூமி – அங்கு தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமானதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதே தேச விரோதமாகிவிடுமா என்று காங்கிரஸ் கட்சியைக் கேட்கிறார் அதிமுக தலைவர் ஜெயலலிதா.

 “வாழ வழியின்றித் தவிக்கும் தமிழர்கள் இலங்கையிலேயே கெüரவமாக வாழ, வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதுதான் இனி ஒரே வழி” என்று ஜெயலலிதா பேசியிருந்தார். அது சட்ட விரோதம் என்று மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தில்லியில் கண்டித்திருக்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

 “இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி நாடு தாருங்கள் என்று நான் கேட்கவில்லை; இந்த நாட்டின் மீது அளவில்லாத பற்றும் பாசமும் உள்ளவள் நான். இலங்கையில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழ் மக்கள் வாழ தனி ஈழம் வேண்டும் என்று கோருகிறேன். இலங்கையிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எப்படி தேச விரோதச் செயலாகிவிடும்?

 விடுதலைப் போருக்கான போராட்டம் என்று கூறி பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அதைக் கண்டித்து வருகிறேன்; தீவிரவாதத்தை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அதே சமயம், அரசின் அடக்குமுறையால் மக்களில் கணிசமானவர்கள் பாதிக்கப்படுவதையும் என்னால் கண்டிக்காமல் இருக்க முடியாது.

 இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் கட்டுக்காவல் மிகுந்த சிறைச்சாலைகளைவிட மோசமான நிலையில் இருக்கின்றன. அங்குள்ளவர்கள் வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி கண்காணிப்பு நிலவுகிறது. குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும் வழி இல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாத நிலையில் தமிழர்கள் விலங்குகளைப்போல நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட முகாம்களுக்குப் போக வேண்டாம் என்ற உறுதியோடு வெட்ட வெளியில் தங்குகிறவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும், தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகள் தனியே பிரித்து அடையாளம் காணப்பட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களைப் போலவே அனைத்து உரிமைகளும் சமமாக வழங்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதை ஏற்க முடியாது என்கிறது இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி ஈழம் கேட்பது தவறா?

 தமிழர்கள் மட்டும் அல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற மேலை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் போரை நிறுத்திவிட்டு அரசியல் தீர்வுகாண பேச்சு நடத்துங்கள் என்று விடுத்த வேண்டுகோளையும் மதிக்க முடியாது என்று மறுக்கிறது இலங்கை அரசு. இந்த நிலையில் தமிழர்கள் மானத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ ஒரே வழி தமிழ் ஈழம்தான்.

 லட்சக்கணக்கான தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரும் ஒரு கோரிக்கை எப்படி இந்திய சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்? இதை எப்படி சட்ட விரோதமான பேச்சு என்று காங்கிரஸ்காரர்கள் கண்டிக்கிறார்கள்?’ என்று வினவுகிறார் ஜெயலலிதா.

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரமாண்டமாக திரண்டிருந்த கூட்டங்களில் அவர் பேசினார். திருப்பூரில் அவர் பேசியதாவது..

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய ராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.எல்லாவற்றையும் செய்தது இந்தியாதான்…

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இந்திய ராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய ராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை ராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை ராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய ராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் ராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் ராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது கோத்தபாய கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

ஈழம் தமிழர்களின் உரிமை பூமி – அன்னை பூமி…

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான கபில் சிபல், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். நான் சொன்னது எப்படி தேச விரோத கருத்து..

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது.

கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்து விட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் ஜெயலலிதா

உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan-10.jpgபாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர்.  இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

teelamanavar.jpgபுலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்

புலம் பெயர் தமிழர்களே!

இளையோர்கள!

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…

இளையோர்களே !…

சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.

தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.

இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.

ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.

புலம் பெயர் தழிழாகளே !….

இளையோர்களே !….

உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க இலங்கை உஷார்

mexico_flu_.jpgஉலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முன்னேற்பாடுகளை அமைச்சின் உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெவ்வேறு பிரதேசங்களில் இக்காய்ச்சல் பரவி வருகின்றது. இக்காய்ச்சலுக்கு மெக்ஸிகோ நாட்டில் மாத்திரம் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1500 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டே இக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்முன்னேற்பாட்டின் ஓரங்கமாக கொழும்பு துறைமுகத்திலும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இதேநேரம் இக்காய்ச்சலைத் தவிர்க்கும் திட்டத்தின் மற்றொரு அங்கமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருப்பவர்கள் எவராவது இனம் காணப்படுவார்களாயின் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும் இவ்வாறானவர்களின் இரத்தமாதிரிகளை உடனடியாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் மத்தியில் அதிக காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டை சுழற்சி, இருமல் போன்றவாறான அறிகுறிகள் தென்படலாம், இக்காய்ச்சல் சில நேரம் நியூமோனியாவாகக் கூட வளர்ச்சி பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.