April

April

இ.போ.ச. ஊழியர்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம். கடமைக்கு திரும்பாவிடின் கடும் நடவடிக்கை

dalas_alahapperuma.jpgவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இ.போ. ச. ஊழியர்களுக்கு மீண்டும் கடமைக்குத் திரும்புவதற்கு மூன்றுநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். குறித்த காலக்கெடுவுக்குள் கடமைக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஐந்தாம் திகதி முதல் தென்மாகாணத்தில் உள்ள 7 டிப்போக்களிலும் ஊவா மாகாணத்தில் உள்ள இரு டிப்போக்களிலும் பணிபுரியும் இ.போ.ச. ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வாழ்க்கைச் செலவுக்கொடுப்பனவு 3500 ரூபாவும் பண்டிகை நிலுவைப் பணம் 2 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கோரி சில ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

முன்னறிவித்தல் எதுவுமின்றியே இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமான தொழிற்சங்க நடவடிக்கையாகும். சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் 3500 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் 2 ஆயிரம் ரூபா நிலுவைப் பணமும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (8) சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் மாதாந்தம் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேளை, பகிஷ்கரிப்பின் பின்னணியில் சதிநோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத முதல் இரு வாரங்களிலே இ. போ. சவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதனை தடுக்கவே சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு நாம் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

ஸ்ரீ ஜெயவர்தனபுர மாணவனொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. பல்கலைக்கழக மாணவனொருவரை கத்தியால் குத்திக் கொன்றதுடன், மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஹங்கொடவிலவில் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் மாணவனொருவர் கொல்லப்பட்டார். இந்த மாணவன் கொல்லப்பட்டது தொடர்பான குற்றத்தை பிரதிவாதி நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதுடன், இந்தச் சம்பவத்தில் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியது தொடர்பாகவும் அந்த மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அங்கு இடம்பெற்ற மோதலில் மாணவனொருவனது உயிரை பறித்ததற்காக 5 வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்றம் விதித்தது.

இதைவிட குற்றவாளிக்கு 50,000 ரூபா அபராதம் விதித்த மேல் நீதிமன்றம், கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக நாலரை இலட்சம் ரூபா வழங்க வேண்டுமெனவும் மற்றொரு மாணவனைப் படுகாயப்படுத்தியதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்த மேல் நீதிமன்றம், 5,000 ரூபா அபராதம் விதித்ததுடன், படுகாயமடைந்த மாணவனுக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.

படையினர் இழப்பு குறித்து தகவல்களை வெளியிடுமாறு திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை

parliament.jpgயுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் வெளிவராதது பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுட்டிக் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி., இது தொடர்பான தகவல்களை வெளியிடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; யுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் அவர்களது பெற்றோருக்கு கிடைப்பது குறைவடைந்துள்ளது. இது பாரிய பிரச்சினையாகும். எனவே, இதுபற்றி கவனம் செலுத்தி தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாதம் என்பது ஒரு இடத்தில் இருப்பதில்லை. அடிக்கடி பயங்கரவாதம் தலைதூக்கும். இதை நாம் வரலாற்றிலும் கண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையின் பிரகாரம் முப்படையினரும் தமது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், அதை நீண்ட காலம் பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ள அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

எனவே, அதற்கானதொரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினர் பெற்ற வெற்றிகளை தக்க வைக்க முடியாமல் போய்விடும். அது படையினர் உயிர்த் தியாகம் செய்து அவயவங்களை இழந்து பெற்ற வெற்றிகளை குறைத்து மதிப்பிடுவதாக போய் விடும். பயங்கரவாதத்தை அழிப்பதுடன் நின்று விடாது, மக்களின், வாழ்க்கை பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மீண்டும் பயங்கரவாதம் வளர்ந்து விடும்.

இதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கை ரத்தாகி ஒரு வருடமாகி விட்ட போதிலும் அதைப் பற்றியே பேசப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் நோர்வே தரப்பையும் முதலில் பொதுஜன ஐக்கிய முன்னணியே கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் போர் நிறுத்த உடன்படிக்கையின் வெற்றி என்னவென்பதை கருணாவையும் பிள்ளையானையும் கேட்டால் தெரியும். இந்த உடன்படிக்கை காலத்தில் தான் புலிகள் 2, 3 ஆக பிரிவுகளாக பிளவுபட்டனர். மக்களைக் கேட்டால் இதைச் சொல்வார்கள். அது மட்டுமல்லாது, இந்த உடன்படிக்கையினால் தான் சர்வதேச ரீதியில் இலங்கை மீதிருந்த அபகீர்த்தியையும் குறைக்க முடிந்தது’ என்றார்.

இலங்கை நிலைவரம்; நோர்வே அமைச்சருடன் ஹிலாரி ஆராய்வு

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனால் கார் ஸ்ரோரேயுடன் கலந்துரையாடியுள்ளார்.  அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நெருக்கடி, மனிதாபிமான நிலைவரம், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை  செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நோர்வே அமைச்சருடனான சந்திப்பில் ஏனைய விவகாரங்களுடன் இலங்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக ஹிலாரி கூறியுள்ளார்.

“இலங்கையில் மோலை முடிவுக்கு கொண்டுவர நோர்வே மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகள் தொடர்பாக நாம் ஆராய்ந்தோம். காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, இலங்கை உட்பட கணிசமான பிராந்திய விவகாரங்கள் தொடர்பான தாக்கங்கள் மற்றும் சவால்கள் குறித்து நாம் ஆராய்ந்தோம்’ என்றும் ஹிலாரி கூறியுள்ளார்.

அரசியல்வாதி வாக்களிக்கும்போது புகைப்படம் எடுக்க தடைவிதிப்பு

election_ballot_cast.jpgமேல் மாகாணசபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் வாக்களிக்கும்போது புகைப்படமெடுப்பதை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தடைசெய்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஊடகவியலாளர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் எவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாமென அவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவராக இருப்பினும் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக் கூட அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள்ளும் ஊடகவியலாளர்களையோ, படப்பிடிப்பாளர்களையோ தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களையோ அனுமதிக்க வேண்டாமென தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்களிடம் பேட்டி காணவும் புகைப்படமெடுக்கவும் விரும்பும் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நூறு யார் தொலைவுக்கப்பால் அதனைச் செய்ய முடியுமெனவும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா? – வீரகேசரி ஆய்வு

Wanni_Warவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.

ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக்களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை “புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக்கள்’ என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையானதொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகிறோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். இங்கே “அடைக்கப்படுகின்றனர்’ என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்பதற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாருடன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல்வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.

ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸாரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.

இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தினரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.  இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

srilanka_idp.jpgஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அரசாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்களின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்படுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுகளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங்கத்துக்கு, இலங்கை தேசத்துக்குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக்களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்ததாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட்டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக்கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னியில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.

இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என்பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக்களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அரசாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட்டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.

யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டையைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவனையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக்கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்களின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.

 நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009

யாழ் தேவி இன்று முதல் வவுனியா வரையில் சேவை!

bati-trnco.jpgதமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ் தேவி ரயில் இன்று மீண்டும் வவுனியா வரைக்கும் சேவையில் ஈடுபட்டது. பாதுகாப்பு கரணங்களை முன்னிட்டு இச்சேவை முன்னர் மதவச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை 5 :45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயில் முற்பகல் 10.10 மணக்கு வவுனியாவை அடைந்தது. இன்று மாலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. இன்று முதல் தினமும் காலை 5.45 மணிக்கு யாழ் கடுகதி வவுனியா வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராமநாதபுரம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய இந்தத் தாக்குதலில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த யுவதியொருவர் மீது சந்தேகம் கொண்ட படையினர், அவரை தடுத்து நிறுத்திய போது, அவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார். எனினும், ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த யுவதி அங்கு வந்ததாகவும் எனினும் அங்கிருந்த படையினர் அந்த யுவதியின் திட்டத்தை குழப்பிவிட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.