May

May

ஆகஸ்ட் மாதம் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் – ஜுன் 17 முதல் 24 வரை வேட்புமனுத் தாக்கல்

north_.jpgவவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் இறுதியாக கடந்த 1998ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கு எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. எனினும் தற்போது வட மாகாண மக்களுக்கு 11 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இவ்விரு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.வட மாகாணத்தில் ஒரு மாநகர சபை, 5 நகர சபைகள் மற்றும் 28 பிரதேச சபைகள் உட்பட 34 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போராட்டம் தொடரவேண்டும். : சேனன்

Wanni_War_Welfare_Campஇரத்தக்களறியின் பின்

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து பிரச்சார கூட்டம் ஒன்று பிரான்ஸ்ல் நடைபெறவுள்ளது

இந்தக் கூட்டம் இம்மாதம் 28ம் திகதி 2009 அன்று (The meeting place is) AGECA, 144 bd de Charonne, 75011 – Métro Alexandre Dumas (ligne 2) நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 2ல் இரானுவம் கிளிநொச்சியை பிடித்ததில் இருந்து 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த 300 000க்கும் அதிகமான மக்களை சுற்றிவளைத்த இரானுவம் தினமும் கடும் தாக்குதல்செய்து கொலைவெறியாடியது. உணவு மருத்துவம் தங்கும் வசதிகள் இன்றி பட்டினியில் வாடிய மக்கள்மேல் குண்டுமாரி பொழிந்து கொன்று தள்ளியது. மக்கள் கூட்டமாக இருந்த இடங்கள் மருத்துவமனைகள் என்று முரட்டுத்தனமாக செல்கள் அடிக்கப்பட்டு மக்கள் வேட்டையாடப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இராணுவம் இந்த மனித உரிமை அமைப்புக்களையும் பத்திரிகையாளர்களையும் யுத்தபிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்தது மட்டுமின்றி தெற்கில் தமக்கெதிராக இயங்க அல்லது பேச முற்பட்டவர்ளையும் வேட்டையாடியது.

கடந்த பல மாதங்களாக நடத்திமுடித்த கொலைவெறியாட்டத்தின் பின் மகிந்த ராஜபக்ச மக்களை ‘விடுதலை’ செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றி விட்டதாக கடந்த மே 18ல் ‘வெற்றி’ யை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாரிய உயிரிழப்புக்காக துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் 20ம் திகதியை கொண்டாடும் நாளாக அரச விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. 20 000க்கும் மேற்பட்ட உயிர்களை சில மாதங்களுக்குள் சூறையாடியதை வெற்றியாக அறிவித்து கொண்டாடும் சிங்கள இலங்கை அரசு தமிழர் உரிமை பற்றி பேச எந்த தகுதியும் அற்றது. வெற்றி கொண்டாட்டங்களுக்கு முந்திய சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கும் ஒன்றுக்கும் உதவாத யு.என் கூட இறுதி நாட்கள் நிகழ்வுகளை ‘இரத்தகளறி’ என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை பற்றி எந்த அக்கறையு மற்ற வலதுசாரி வியாபரிகளான ஜரோப்பிய ஒன்றியம் கூட யுத்த குற்றம் சார்பாக தனியாக விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த யுத்த முடிவு எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு – இரண்டரை லட்சத்துக்கு அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு –பேச்சுரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு பயக்கெடுதிக்குள் வாழும்படி தள்ளப்பட்டுள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு? தெற்குக்கு தப்பியோடியவர்கள்கூட திரும்பிவர ஒன்றுமில்லாதபடி தரைமட்டமாக்கப்பட்ட வாழ்விடங்களை பார்த்து சந்தோசப்பட என்ன இருக்கு? யுத்தத்தால் ஏற்கனவே கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை முகாம்களில் அடைத்து தலையாட்டிகள் முன்நிறுத்தி குற்றவாளிகளாக குறுக்கி அவர்களை மேலும் மன உளைச்சல் நோக்கி தள்ளும் அக்கிரமத்தை பார்த்துகொண்டு பேசாமல் இருக்கமுடியாது.

உரிமை போராட்டம் தொடர்வது அவசியதேவை

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் யுத்தம் ஆயிரக்கணக்கான தமிழர் உயிர்களை வேட்டையாடியுள்ளதால் தமிழர்கள் இனி தம்மேல் திணிக்கப்படும் அரசியலை ஏற்றுக்கnhள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கொலை வெறியாட்டம் மூலம் தமிழர் தம் உரிமைகளை சரணாகதியாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகத்தவறு. தமிழ் மக்கள் மிகக்கேவலமான வறுமைக்குள் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ் மக்களின் பாரிய ஒன்றுபட்ட எழுச்சியே அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கக்கூடியது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அத்தகைய உரிமை கோரலை தலையெடுக்காவண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது அரசு. இருப்பினும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்வதும் மக்கள் சுதந்திரமாக தமது தேவைக்கான குரலை வைக்கும் சூழலை உருவாக்குவதும் அத்தியாவசிய தேவை. அதற்கான முதற்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியை நாம் செய்துவருகிறோம். எமது அணிதிரட்டல் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1 இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து – தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு – தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து. – பேச்சுரிமை, ஊடக உரிமை, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.

4 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம். – கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

5 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

இலங்கை அகதிகளின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – எஸ். சீ. சந்திரஹாசன்

s_j_v_son.pngநீண்ட காலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை எற்பட்டுள்ளதாக  கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளை புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டுவரும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகன் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து அகதியாக இந்தியா சென்ற அவர் ஏனைய அகதிகளின் நலன்களை பேணும் முகமாக இந்த அமைப்பை நிறுவி நிர்வகித்து வருகின்றார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு சமனான உரிமைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அகதிகளாக உள்ள இலங்கையர்களின் சேவைகளை பெறமுடியும் என தெரிவித்துள்ளதுடன் இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்த காலப்பகுதியினுள் இந்தியாவில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்சமயம் முகாம்களி;ல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஜனாதிபதியினால் அண்மையில் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை தாம் வரவேற்பதாக தெரிவித்த சந்திரஹாசன் அதற்கிணங்க தமிழ் மக்களுக்க நிரந்தர தீர்வுடனான அமைதி கிட்டும் எனவும் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் – நீதியரசர் சரத். என்.சில்வா

sarath-n-silva.jpg மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாலும், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கான சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா கூறினார். குருநாகல் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,

எமது நாட்டில் சட்டம் செயற்படாத இடத்துக்கு நான் அண்மையில் விஜயம் செய்திருந்தேன். வடக்கு, கிழக்கிலுள்ள சில நீதிமன்றங்களில் புலிகளால் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. அந்த நீதிபதிகளை நீக்கிவிட்டு முக்கியமான பதவிகளுக்கு திறமைவாய்ந்த நீதிபதிகளை நான் நியமித்துள்ளேன். அந்தப் பகுதிகளில் தமிழ் நீதிபதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம். வெளிநாடுகள் எமது நாட்டைப் பற்றி மிகவும் தாழ்வான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. எமது நாட்டைப் பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் பிழையான தகவல்கள் வெளியாகியுள்ளமையே அதற்கான காரணம்.

நீதிமன்றங்களை அபிவிருத்திசெய்ய வெளிநாடுகளிடம் நாங்கள் உதவி கோரினால், அவர்கள் அதற்கு இயலாதெனக் கூறுவதுடன்,  வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பணம் தருவதாக அவர்கள் கூறுகின்றனர் அவ்வாறிருந்தும் பெற்றுக்கொண்ட நிதியுதவிகளிலிருந்தே யாழ்ப்பாணம்,  திருகோணமலை மற்றும் கண்டியிலுள்ள நீதிமன்றக் கட்டத்தொகுதிகளை நாம்  கட்டிமுடித்தோம்.

தற்பொழுது இந்த நீதிமன்றக் கட்டத்தொகுதிகளுக்கு எம்மால் செல்லமுடியும். தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என நினைப்பதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்தப் பகுதிகளில் தமிழர்களை நாம் நீதிபதிகளாக நியமித்துள்ளோம். யாழ் நீதிமன்றமும் இலங்கையிலுள்ளதொரு நீதிமன்றம் என்ற எண்ணத்தை நாம் தோற்றுவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள்: அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும்- எஸ்.எம். கிருஷ்ணா

krishna.jpgஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் எந்தக் காரணத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் பிரச்னைகளின் மூல காரணம் என்ன என்பதையும் கண்டறித்து தீர்க்க வேண்டும்.

அந்நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். இலங்கை தங்கள் நாடு என்ற உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவுக்கு அந்நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பே பெரும் தடையாகவுள்ளது.

பாகிஸ்தானுடன் நட்புறவுடன் செயல்பட இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் முதலில் அங்குள்ள பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து அண்டைநாடுகளும் நிம்மதி அடையும் என்றார்.

வடக்கு கிழக்கில் 30 பாடசாலைகள் புனரமைப்பு

susil_prem_minister.jpgஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த பாடசாலை அதிபர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (25.05.2009) கொழும்பில் நடைபெறுகின்றது. இதற்கென 1050 மில்லியன் ரூபா நிதியினை ஆசிய அபிவருத்தி வங்கி வழங்கவுள்ளது.

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் தாலிபான்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம்

pakarmy_.jpgபாகிஸ்தான் இராணுவத்தினர் தாலிபான் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சுவாத் பள்ளத்தாக்கின் பிரதான நகரமான மிங்கோராவில் தலிபான் போராளிகளைத் தேடியொழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தெருத் தெருவாக, வீடு வீடாகத் தேடி மோதி வருவதாக பாக்கிஸ்தான ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நகரத்தில் இருந்து தலிபான் போராளிகளை விரட்டியடிக்க சனிக்கிழமை தாக்குதலை ஆரம்பித்த ராணுவம் தற்போது நகரின் மத்தியை புறநகரோடு இணைக்கின்ற வீதியையும், நகரின் முக்கியமான ஐந்து குறுக்குத் தெருக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது என ராணுவத்தின் சார்பில் பேசிய அதிகாரி தெரிவித்தார்.

மிங்கோரா நகரத்தில் ஞாயிறன்று 5 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் என்றும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். சுவாத் பள்ளத்தாக்குக்குள் ராணுவம் ஒரு மாதம் முன்னதாக புகுந்ததில் இருந்து இது வரை நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

பஞ்சாப் மக்களுக்கு மன்மோகன்சிங் வேண்டுகோள்

punjab1.jpgமருத்துவ மனையில் சீக்கிய மதத்தின் இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தின் எதிரொலியாக, பஞ்சாப் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்திரியா மோதல் சம்பவத்தில் அந்நாட்டின் தேரா சச்கந்த் என்ற அமைப்பின் தலைவர் நிரஞ்சன் தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்நிலையில் அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு பஞ்சாப் மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், ’’ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். சகிப்புதன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றையே சீக்கிய மதம் போதிக்கிறது. அனைத்து சீக்கிய மத குருக்களும் சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றையே போதிக்கின்றனர்.

பஞ்சாபில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், சீக்கிய மதகுருக்களின் போதனைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் இருப்பது அவசியம்.  சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என்னுடைய இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பஞ்சாப் மக்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’’தெரிவித்துள்ளார்.

7 ஆயிரத்து 237 விடுதலைப்புலிகள் பல்வேறு முகாம்களில் மறுவாழ்வு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர்

mili.jpg“கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், இராணுவத்துக்கு தொடர் வெற்றி கிடைத்தது. இது விடுதலைப்புலி முன்கள வீரர்களிடம் கடும் சோர்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் சரணடையத் தொடங்கினர் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மோதல் தீவிரமானபோது, முன்கள வீரர்கள் 2 ஆயிரத்து 65 பேர் தாமாக முன் வந்து சரண் அடைந்தனர். ஈழத்துக்காகத் தாம் போரிடவல்ல; தலைவர்கள் உயிரை காப்பாற்றவே தம்மை முன்னால் நிறுத்தி உள்ளனர் என்பதை உணர்ந்து அவர்கள் சரணடைந்தனர். கடைசிக் கட்ட தாக்குதல் நடந்தபோது பொது மக்களுடன் சேர்ந்து 2 ஆயிரத்து 379 விடுதலைப்புலிகள் ஊடுருவி இருந்தனர்.

விசாரணை நடந்தபோது அவர்களும் சரண் அடைந்தனர். மொத்தத்தில் பத்தாயிரம் விடுதலைப்புலிகள் எமது இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 202 விடுதலைப்புலிகள் எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்த நன்கு பயிற்சி பெற்றவர்களாவர். கரும்புலிகளும் சரண் அடைந்துள்ளனர். அதிகப் பயிற்சிகளுடன் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள் தனித்தனி இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

7 ஆயிரத்து 237 விடுதலைப்புலிகள் பல்வேறு முகாம்களில் மறுவாழ்வு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1600 பேர் பெண் மற்றும் சிறு வயது புலிகளும் இனம் காணப்பட்டு முகாம்களில் பிரிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிரப்போர் ஆரம்பமானது. அன்று முதல் போர் முடிவதற்குள் 22 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்றிருக்கிறோம்.

இராணுவத் தரப்பில் 6261 பேர் பலியானார்கள். 29 ஆயிரத்து 551 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 556 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊனமடைந்து விட்டனர். பொது மக்களில் ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.  போர் காரணமாக தமிழர்களில் 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 29 இடங்களில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இலங்கை வடக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும்.

அதுவரை அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். முகாம்களில் அவர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்

யுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ரணில் தலைமையில் ஆராய்வு

ranil-wickramasinghe.jpgவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ளதாக இலங்கை அரசு கூறிவரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(மக்கள் பிரிவு) தலைவர் மங்கள சமரவீர எம்.பி.யின் வீட்டில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பல்வேறு விபரங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, இராணுவ வெற்றியின் பின் நாட்டு நிலைமை, இராணுவ வெற்றியை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்துவது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை, இந்த விடயங்களிலெல்லாம் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.