May

May

இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகள் ஜுன் மாதம் பின்லாந்தில் கூடுகின்றன!

finland.jpgஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள பொதுமக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டில் ஐ.நா. மனிதமாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் 21 நிதி வழங்கும் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவித் திணைக்களமும் கலந்துகொள்ளவுள்ளன.  நிதிவழங்கும் நாடுகள் சங்கத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பின்லாந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பின் பொது உதவி நிதிக்காக இவ்வருடம் 2 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்குத் திரும்ப விரும்பும் அகதிகளின் பெயர்கள் சேகரிப்பு

refugee_.jpgஇலங்கை திரும்ப விருப்பம் தெரிவிக்கும் அகதிகள் விவரத்தை பொலிஸார் சேகரித்து வருகின்றனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரினால் அங்கிருந்த மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இங்குள்ள அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் பட்டியலை பொலிஸார் தயாரித்து வருகின்றனர். உயிர், உடைமைக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில் இலங்கை செல்ல இவர்கள் விருப்பம் தெரிவித்ததாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

போதைபொருளை ஒழிக்கும் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்நிற்காது -ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதீவிரவாதத்தை ஒழிக்க மேற் கொண்ட மனிதாபிமான நடவடிக்கை போன்றே நாட்டில் போதைப் பொருள் பாவனை ஒழிப்புக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைக் கொள்கை மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய எதிர்வரும் 2015ம் ஆண்டுக்குள் போதையற்ற இலங்கையை உருவாக்குவதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலக புகையிலை தடுப்பு தினத்தையொட்டி புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டு அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த பிரசார வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா, பேராசிரியர் கார்லோ பொன்சேகா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: முப்பது வருட காலம் நாட்டைச் சீரழித்த தீவிரவாதத்தை 2 1/2 வருடங்களுக்குள் எம்மால் துடைத்தெறிய முடிந்துள்ளது. அதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தைப் பெற்றுக்கொடுப்பதாக நாம் மஹிந்த சிந்தனைக் கொள்கையில் கூறினோம். அது நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அக்கொள்கைத் திட்டத்தில் முதலாவதாக போதையற்ற நாட்டை உருவாக்குவது பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்கிணங்க போதை ஒழிப்பு சம்பந்தமாக தற்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதுடன் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளைப் போன்ற கொடூரமான தீவிரவாதத் கும்பலை ஒழிக்க முடிந்த அரசாங்கத்தால் போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்துவது கஷ்டமான காரியமல்ல.

கடந்த காலங்களில் தீவிரவாதத்தினால் பெண்களும் சிறுவர்களுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர். போதைப் பொருள் மற்றும் மதுசாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவதும் பெண்களும் சிறுவர்களுமே. அரசாங்கத்தின் போதை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் இவர்கள் பாதிப்பிலிருந்து விடுதலையாவது உறுதி.

போதை ஒழிப்பு சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த மதத் தலைவரான மாதுறுவாவே சோபித தேரர் எமது இனம், புலிகளால் ஒருபுறமும் கசிப்பால் மறுபுறமும் வதைப்படுகின்றது என்றார். இதனால் போதை ஒழிப்பு என்பது எந்தளவு கஷ்டமான தென்றாலும் அதனை அரசு நிறைவேற்றும்.

நாம் எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபனியவில்லை. போதை ஒழிப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளும் அதேவேளை கடந்த மூன்றரை வருடத்தில் எத்தகைய புதிய மதுபானசாலை அனுமதியும் வழங்கப்படவில்லை. அரசாங்கத்திற்கான வருமான மாநாட்டு மக்களின் வாழ்க்கையா என வரும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கே நாம் முக்கியத்துவ மளிக்கின்றோம். இந்நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையே முக்கியமானது.

போதைப்பொருள் விற்பவர் பின்னால் தேடிப்போவதைவிட அதனைக் கொண்டு வருபவர் மற்றும் அதற்கு மூலகாரணமானவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நாம் அதனையே எதிர்காலத்தில் மேற்கொள்வோம். போதையற்ற இலங்கையை உருவாக்குவதில் சகல துறையினரினதும் அர்ப்பணிப்பு மிக மிக அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் சிறந்த பணி; அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி

maninda-with-us-delication.jpgஇடம்பெயர்ந்த மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கூறப்பட்டதற்கும் முகாம்களின் நிலவரத்தை நேரில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதாக நேற்று (29) நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பு – ஹில்ரன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சுலர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்தத் தருணத்தில் மிக முக்கியமானதென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் உண்மை நில வரத்தைக் கண்டறியும் பொருட்டு அரசின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர் தலைமையிலான குழுவினர் கடந்த 26 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தனர். அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரசூரிய மற்றும் தூதரகத்தின் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்த இந்தக் குழுவினர் இடம்பெயர்ந்த மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்த இந்தக் குழுவினர் யுத்த நிறைவின்போது நாடு எதிர்கொண்ட நிலைமை களைப் புரிந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களது விஜயத்தின் நிறைவாக கொழும்பு – ஹில்ரன் ஹோட்டலில் நேற்றுக்காலை செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதில் மேலும் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் பிரதிநிதி ஹீத் சுலர், நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் வெற்றி யடைந்தமைக்காக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டுவதாகக் கூறியதுடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில், தொலைத் தொடர்பு வசதி, வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு சிறந்த முறையில் பணிகள் இடம்பெறுவதாகவும் அதற்காக அரசாங்கத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் இந்த மக்களுக்கான நலன்களில் சர்வதேச சமூகம் நேரடியாக உதவ முடியுமென்று தெரிவித்த அவர், கண்ணி வெடிகளை அகற்றி மக்களைத் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தும் பணியைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். முகாம்களில் உள்ள மக்களுடன் தாம் உரையாடியதாகவும் அவர்கள் விரைவில் சொந்த இடம் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதாகத் தெரிவிக்கப்படுவது குறித்துச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தக் கடன் மிகவும் அவசியமானது எனக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபவம் – 3 ஆம் திகதி காலிமுகத்திடலில் கொண்டாட விரிவான ஏற்பாடு

last-mulli.jpgபுலிகளுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக் கொண்ட வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவமொன்று எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்த வைபவத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த வைபவத்தில் முப்படைகளின் தளபதியும், இலங்கை ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதன் போது, முப்படையினரின் அணிவகுப்பு இடம் பெறுவதுடன், யுத்தகளத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவ கடற்படை, விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படை வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நிகழ்வில் விசேட கெளரவிப்பு வழங்கப்படவுள்ளது.

தனி ஈழம் என்ற கருத்தியல் சிந்தனையினை தேசிய, சர்வதேச ரீதியாக தோற்கடிக்க வேண்டும் : ஐ.தே.க. எம்.பி.

dayasiri-jayasekara-000.jpgபயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று தற்போது எழுந்து வருகின்ற தனி ஈழம் குறித்த கருத்தியல் ரீதியிலான வாதமும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதும் தேசிய அபிவிருத்தியுமே இன்றைய உடனடித் தேவையாகும். இந்நிலையில் ஈழக் கோரிக்கை விடுக்கின்ற அரசியல் கட்சிகள் எதுவாயினும் அதனை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 29 நாடுகள் ஆதரவளித்துள்ளன என்பதற்காக அந்நாடுகளுடன் உறவையும் ஏனைய நாடுகளுடன் பகையையும் வளர்த்துக் கொள்ள முடியாது.
அதேபோல் இந்தியாவும் அமெரிக்காவும் நேச நாடுகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவுடன் உறவும் அமெரிக்காவுடன் பகையும் என்று இருக்க முடியாது. எனவே ஐரோப்பிய நாடுகளுடன் பகைமை வளருமாயின் எமது நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய அடி விழுந்து விடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே சர்வதேசத்துடன் ஒத்துப்போகின்ற வகையில் அரசு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும்.

இன்று நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஈழக் கோரிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற ஒரு விடயமாக மாறி வருகின்றது. வட பகுதி மக்களிடத்தில் ஈழம் என்ற சிந்தனையும் கனவும் இன்னும் நிலைபெற்றுள்ளது. இது பாரதூரமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டிய பொறுப்பும் அவர்களின் சகவாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

அதேவேளை அந்த மக்களின் மனங்களில் பதிந்துள்ள தனி ஈழம் என்ற சிந்தனையை துடைத்தெறிந்து யாவரும் இலங்கையரே என்ற தன்மையை உருவாக்க வேண்டும். அதேபோல் தேசிய மட்டத்தில் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஈழம் தொடர்பான கோரிக்கையும் அது தொடர்பான கருத்தியல் சிந்தனையும் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர நோக்குடனும் செயற்பட்டு முறியடிக்க வேண்டும். இதற்கு நேர்மையான அரசியல் தீர்வு அவசியமாகும். அதிகாரப் பகிர்வு என்பதும் கிரமமான முறையில் அமைவதும் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதும் அரசாங்கத்தினது பாரிய கடமையாகவுள்ளது.  என்றார். 

இஸ்ரேலின் நிலைப்பாட்டை மாற்ற அமெரிக்கா பகிரங்க அழுத்தம்

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்று இஸ்ரேல் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது ஒபாமா இந்த அழுத்தத்தைக் கொடுத்தார்.

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றங்களை அகற்றல் பலஸ்தீனை தனிநாடாக ஏற்றல் போன்ற விடயங்களை இஸ்ரேல் அவசரமாகச் செய்ய வேண்டும். இவ்விடயத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கத் தயார். சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ள விஜயத்தின்போது இது பற்றி அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசப்படும் என்று ஒபாமா கூறியதாக அப்பாஸின் நெருங்கிய அதிகாரியொருவர் சொன்னார்.

இச்சந்திப்பில் பலஸ்தீன ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் விளக்கினார். இது பேச்சு வார்த்தைக்குரிய முக்கியமான நேரம் இரண்டும் இரண்டு நாடுகள் என்ற அந்தஸ்த்தில் பேசப்பட வேண்டும். இதற்கான ஆவணங்களையும் வரை படங்களையும் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம் என அப்பாஸ் கூறினார். பின்னர் வீதிகளின் வரைபடம்.  அரபு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மாண நகல்கள் என்பன புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டன. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுயோசனைகளை இத்திட்டம் கொண்டுள் ளதாக அப்பாஸ் நம்பிக்கையும் வெளியிட்டார்.

இஸ்ரேல் தனது நிலைப்பாட்டிலிருந்து விலக மறுத்தால் நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிவருமா என்று ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு அப்பாஸ் பதிலளித்தார். அப்பதிலில் அப்பாஸ் கூறியதாவது,

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமானது உறதி மொழிகளை வழங்குமளவிலில்லை. ஆனால் உறுதி மொழிகள் சிறப்பானவை. நாம் இணைந்து செயற்பட்டு இவ்விடயத்தில் சாதனை புரிய வேண்டுமென்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

முஸ்லிம் உலகுடன் நட்பை வளர்க்க விரும்பும் அமெரிக்கா இஸ்ரேல் அரபு பிணக்கு களுக்கு சமாதானத்தைக் காண விழைகின்றது.

மத்திய கிழக்கில் சமாதானம் வந்துவிட்டால் முஸ்லிம் உலகில் அமெரிக்காவின் ஸ்தானம் உயர்ந்துவிடும் ஆனால் இஸ்ரேலின் புதிய நிலைப்பாடுகள் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைக்கு முடிவுகாணத் தடையாகவுள்ளது. அமெரிக்கா இதனால் கவலையடைந்துள்ளது.

தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்

dayamaster000.gif இலங்கையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயல்பட்ட தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி வெள்ளியன்று முதல் தடவையாக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட தயா மாஸ்டர் நீதவானின் அறைக்குள் ரகசியமான முறையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி தயா மாஸ்டர் மற்றும்விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்னம் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களவை காங். தலைவராக பிரணாப் முகர்ஜி மீண்டும் நியமனம்

india-f-m.jpgமக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். முந்தைய மக்களவையிலும் இவர் இதே பொறுப்பை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இதற்கான நியமனத்தை செய்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் கே. பன்சால் இன்று தமது துறை பொறுப்பை ஏற்றபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

73 வயதான பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இறுதிக் கட்டயுத்தத்தில் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையின் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் இறுதி மூன்று வார காலத்தில், யுத்தப் பகுதியில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் இருபதாயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னணி பிரிட்டிஷ் நாளேடு ஒன்றை இலங்கை அரசாங்கம் வன்மையாகச் சாடியுள்ளது.

உறுதிசெய்யப்படாத தகவல்கள் மற்றும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை டைம்ஸ் நாளேடு நடத்திவருவதாக இலங்கையின் வெளியுறவுத்துறைச் செயலரான பாலித கோஹொன தெரிவித்துள்ளார்.