June

June

அமைச்சர் தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று அரச மரியாதையுடன்

dodangoda.jpgகாலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் காலி, சமனல மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அமைச்சரின் பூதவுடல் காலி,  கராப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வாகன பவனியுடன் ரிச்மன் சந்திவரை எடுத்து வரப்பட்டு அங்கிருந்து கால்நடையாக சமனல மைதானத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அண்மைக் காலமாக சுகயீனமுற்றிருந்த அமைச்சர் தொடங்கொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு காலமானார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,  அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொழில் ரீதியாக சட்டத்தரனியாக இருந்த அமைச்சர் தொடங்கொட, 1983ஆம் ஆண்டு வத்தேகம ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு முதற்தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1993ஆம் ஆண்டு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்த அமைச்சர் தொடங்கொட தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இவர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் உள்ளுராட்சி, உள்நாட்டு, கூட்டுறவு,  தொழிற்பயிற்சி மற்றும் சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார். பின்னர் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அரும்பணியாற்றிய அமைச்சர் கட்சியின் உபதலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

40 மில்லியன் ரூபாவில் 22 வீதிகள் யாழ். மாவட்டத்தில் புனரமைப்பு

sri-lankan-road.jpgயாழ்.  மாவட்டத்தில் சேதமடைந்த இருபத்திரெண்டு வீதிகள் நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
கடல்கோளால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட எரிந்த அம்மன் கோயில் வீதி, மேலைப்புலோலி பாடசாலை வீதி, வலிக்கண்டி உள்ளக வீதி மற்றும் கல்லூரி வீதி, சுப்பர் மடம் வீதி, மணல் ஒழுங்கை வீதி ஆகியவை புனரமைக்கப்படவுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபைப் பகுதியில் காத்தவராயன் வீதி, சமத்தணை வீதி, நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதி, மயிலியதனை வீதி, தொண்டமனாறு எல்லை வீதி, முருகையன் கோயில் வீதி, தொண்டமனாறு கெருடாவில் வீதி, புற்றளை பிள்ளையார் கோயில் உபய கதிர்காமம் வீதி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, நெடுந்தீவு துங்காலை கிராம வீதியும் பருத்தித்துறை புனித சேவியர் கடற்கரை வீதியும் புனரமைக்கப்படவுள்ளன. வீதிப்புனரமைப்பு வேலைகளை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க கேள்விகள் கோரப்பட்டுள்ளன. வேலைகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும்.

வடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

fishing_peoples.jpgவடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த 180 மற்றும் 200 நாட்கள் கொண்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். 

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ்  மீன்பிடி,  நீரியல்வளத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்தின் கீழேயே இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பவுள்ளது. வட மாகாணத்தில் 219 மீனவக் கிராமங்களில் இருந்து 15000 மெற்றிக் தொண்னையும் விடக் கூடுதலான மீன்கள் பெறப்பட்டுள்ளது.

‘வடக்கின் வசந்தம்’  திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பொசன் நிகழ்வுகள் 6ஆம் திகதி மிஹிந்தலையில் ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம்,  மிஹிந்தலையில் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொசன் நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மூலம் மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றன.நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அநுராதபுரம் மிஹிந்தலை நகரங்களின் 25 பாடசாலைகளுக்கு இன்று முதல் 9ஆம் திகதி வரை விடுமுறை

students1.jpgபொசன் நிகழ்வுகளை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய இரு நகரங்களிலுமுள்ள 25 பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் பொலிஸாரும் பொசன் ஏற்பாட்டுக் குழுவினரும் விடுத்த வேண்டுகோளையடுத்தே மாகாண கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

பொசன் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள சுமார் 7000 பொலிஸாரையும் சிவில் பாதுகாப்புப் படையினரையும் தங்க வைப்பதற்கு இப்பாடசாலைகளைப் பயன்படுத்தும் நோக்கிலேயே விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமரசிங்க – நவநீதம்பிள்ளை ஜெனீவாவில் சந்திப்பு

mahinda_samarasinghe_.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் முதல் மூன்று அமர்வுகளும் முடிவுற்ற நிலையில் வழமையான அமர்வு நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பமானது.

இந்த வழமையான அமர்வு ஆரம்பமாவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேசியதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா விலிருந்து தெரிவித்தார்.

வழமையான அமர்வின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் விசேட அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து 6ஆம் திகதி முடிவு – பிரபா கணேசன்

sri-lanka-provincial-council.jpgஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் இறுதி முடிவு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்படுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும். மேல்மாகாணசபை உறுப்பினருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தலைவர் மனோகணேசன் தலைமையில் எமது மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புகள் தற்சமயம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கூட்டத்தில் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை, எமது கட்சி முன்னேடுக்கவேண்டிய நடைமுறைகள், மேல்மாகாண சபைத்தேர்தலில் பெறப்பட்டுள்ள மாபெரும் வெற்றி ஆகிய விவகாரங்கள் ஆராயப்பட்ட உள்ளதுடன், ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படும்.

மத்திய, மேல், சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களை தொடர்ந்தும் நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென பதுளை மாவட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பில் கடந்த வார இறுதியில் ஊவா மாவட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு தலைவர் மனோ கணேசனை சந்திந்து உரையாடியுள்ளது.

எமது கட்சியின் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய கூட்டணியில் போட்டியிடுவதா என்ற இரண்டு கருத்துகள் கட்சிக்குள்ளே நிலவும் அதேவேளையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் எமது ஆதரவை ஏனைய சில மலையக கட்சிகள் மற்றும் குழுவினர் கோரியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பத்தில் நடைபெற்ற தலைமைக்குழு கூட்ட தீர்மானத்தின் படி இது தொடர்பில் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன், உப தலைவர் பி.ஜெயபாலன். தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன். நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், கண்டி மாவட்ட அமைப்பாளரும், ஜ.தொ.கா. நிர்வாக செயலாளருமான அய்யாசாமி இராமலிங்கம், நுவரெலியா மாவட்ட துணை அமைப்பாளர் முரளி ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை தலைவர் நியமித்துள்ளார். இக்குழுவின் சிபாரிசுகளின்படி மத்தியகுழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

“இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிக்க பிரதிக் கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

teacher.jpgபத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் குறிப்பிட்ட மூன்று பாடநெறிகள் இரத்துச் செய்யப்பட்டதனால் இவ்வாண்டில் இக்கல்லூரியில் 150 ஆக இருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த ஆசிரிய பயிலுநர்கள் எண்ணிக்கை 47 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை பெருந்தோட்ட ஆசிரிய பயிலுநர்களைப் பாதிக்கும் செயலென முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தனுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கல்லூரியில் தமிழ், ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளை இவ்வாண்டு முதல் இரத்துச் செய்யத் தாங்களே காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இக்கல்லூரி பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே உருவாக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஏனைய சமூகத்தவர்களையும் இக்கல்லூரியில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அனுமதி பெற்றவர்களின் உள்ளக பயிற்சிகளைப் பெறும் வகையில் பத்தனைப் பகுதியின் ஐந்து பாடசாலைகள் அபிவிருத்தியும் செய்யப்பட்டன.

எமது சகோதர சமூகமான முஸ்லிம் சமூகம் இன்றைய நிலையில் கல்வியில் உயர்வதற்கு அமைச்சராக இருந்த அமரர் பதியூதீன் முகம்மத்தே காரணமாக இருந்திருக்கின்றார். அவரது தொலைநோக்குப் பார்வையின் பிரகாரம் தரம் 8 இல் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். எமது நாட்டின் தேசிய கல்லூரிகளில் இக்கல்லூரி மாத்திரமே அதிகளவிலான எமது சமூகம் சார்ந்த ஆசிரியர் பயிலுனர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் பிரகாரம் ஆண்டுதோறும் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் 200 பயிலுநர் ஆசிரியர்களில் 150 பேர் பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளியினர். இக்கல்லூரியின் ஆரம்பந்முதலே தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், நாடகம், சங்கீதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகள் கடந்த வருடம் வரை பயிற்றப்பட்டு வந்தன.

க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளில் அதிகமான பெருந்தோட்டத்துறை சார்ந்த மாணவர்கள் சித்தியடைவதால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாமல் கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் மூன்று ஆண்டு பயிற்சியின் பின்னர் டிப்ளோமாப் பட்டம் பெற்று ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர். மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர்தரம் கற்கப் போதிய பாடசாலைகள் இல்லாமையினால், எமது மாணவ சமூகத்தினர் கலை மற்றும் வர்த்தகத்துறை பாடநெறிகளில் விரும்பியோ விரும்பாமலோ தொடர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இதன் பிரதான காரணம் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மலையகப் பாடசாலைகளில் இருந்து 150 பயிலுநர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதேயாகும். இந்நிலையில் 103 பயிலுநர்களுக்கான வெற்றிடங்களை ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது. ஆரம்பக்கல்வி, தமிழ்மொழி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளுக்கு இனிமேல் புதிதாக ஆசிரியர்கள் தேவையில்லையென்ற நிலைப்பாடே இம்முடிவிற்கு காரணமென்று கருதப்படுகின்றது.

போதியளவு பயிலுநர்களை கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடநெறிகளில் உள்வாங்க தொலைநோக்குப் பார்வையோடு அதனை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் வருடத்திற்கு 150 கணித, விஞ்ஞானப் பயிலுநர்களை முழுமையாக எப்போது தயார்ப்படுத்தப் போகின்றோமென்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எமக்குக் கிடைத்திருக்கும் இவ் அரியவாய்ப்பினை ஏனையவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலையினை நாமே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

நிறுத்தப்பட்டிருக்கும் பாட நெறிகளில் போதியளவு ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளில் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், குறிப்பிட்ட பாடநெறிகளை இரத்துச் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, தாங்கள் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீளவும் ஆரம்பிப்பதுடன், எமது சமூகத்திற்கென்று ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வியியல் கல்லூரியையாவது பாதுகாத்துத் தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை பலாலி விமான சேவை வன்னியூடாக நடைபெறும்

airplane.jpgஇரத் மலானை விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்துக்குமிடையான பயணிகள் விமான சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பு புத்தளம்மன்னார் கடல் வழியாக சென்று குடா நாட்டில் தீவுகளையும் தாண்டி பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்றுவருகிறது.  அதேபோல, பலாலியில் இருந்தும் இதே பாதையூடாகவே இரத்மலானை விமான நிலையத்தை விமானங்கள் வந்தடைந்தன.

வன்னியில் யுத்தம் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நாட்டின் தரைப்பகுதியூடாக வன்னிப்பகுதியால் வடக்கே விமானங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாதையின்படி இச்சேவை நடைபெற்றால் பயணநேரமும் சுமார் 20 நிமிடநேரம் குறையும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான உண்மை நிலையை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்த ஏற்பாடு

susil_prem_minister.jpgயுத்தத்தின் பின்னரான உண்மை நிலையை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவு படுத்தும் தொடர் கருத்தரங்குகளை சர்வதேச ரீதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதுடன் ஜூன் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை “மெல் பேர்னில் இலங்கை வாரம்” என்ற தொனியில் தொடர் நிகழ்வுகள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு அம்சமாக மெல்பேர்ன் பாராளுமன் றத்தில் நடைபெறும் விசேட செயலமர்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த சிறப்புரையாற்றவுள்ளார்.

“இலங்கையின் தற்போதைய நிலைவரமும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டமும் என்ற பொருளில் அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் சமூக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுகளில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மனோ விஜேரத்ன, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ரரந்தெனிய, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்பிக்க பெரேரா அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வெல் கம்பாய ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று கொழும்பு ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இம் மாநாட்டில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அவுஸ்திரேலிய நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சுசந்த கடுகம்பொல, ஜனாதிபதியின் ஆலோசகர் ரவீந்ர ரந்தெனிய ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இது தொடர்பில் விளக்குகையில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அவுஸ் திரேலியாவில் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவுபடுத்துவதே ”மெல்பேர்னில் இலங்கை வாரம்” நிகழ்ச்சியின் நோக் கமாகும்.

இந்நிகழ்வுகளில் இலங் கையின் வர்த்தக, உல்லாசப் பிரயாண துறையை ஊக்குவிக்கும் வகையிலான சந்திப்புகளும், இலங்கை தொடர்பான புகைப்படக் கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெல்பேர்னில் ஒரு இலட்சம் இலங்கையர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறந்த சூழல் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. மெல்பேர்ன் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் இலங்கை தொடர்பாக  சிறப்புரையாற்றவுள்ளதுடன் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை ஏனைய நாடுகளிலும் நடாத்துவதற்கு வெளிநாட்டமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.