July

July

சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

இதுகுறித்து முரளீதரன் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அப்போது எனக்கு 38 வயதாகி விடும். எனவே இதுதான் ஓய்வு பெற சரியான சமயம் என நான் கருதுகிறேன். இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன். 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது.

இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன். தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது.

ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும். இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல், கருத்துப்பரிமாறல் மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் – அமைச்சர் ஜீ.எல்.

நமது சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பல பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமாகவும், கருத்துப் பரிமாறல்கள் மூலமாகவும் தான் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்பதற்கான அழகிய போதனைகளை அல்குர்ஆனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முறையும் நமக்கு பாடமாகப் புகட்டி இருக்கின்றன என்று கூறினார் தபால் தொலைத்தொடர்பு பதில் அமைச்சரும் ஏற்றுமதி வர்த்தக ஊக்குவிப்பு அமைச்சருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்.

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசியப் பாடசாலையின் 125வது வருட நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று விசேட நினைவு முத்திரை வெளியிடும் வைபவம் பாடசாலையின் பிரதான மண்டபமான ஏ. எச். எம். பெளஸி அரங்கில் இடம்பெற்றது. அந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசும் போது இந்தப் பாடசாலையில் சமய விழுமியங்கள் மிகவும் உறுதியாகப் பேணப்படுவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். சமய ரீதியாக மாணவர்களை நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை முன்னெடுக்கக் கூடிய ஒரு பயிற்சியை எம்மால் வழங்க முடியும். சமயப் பண்புகள் குறைவடையும் போதுதான் சமூகத்தில் பல பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

இஸ்லாம் மனித உரிமைகளையும், ஒழுக்க விழுமியங்களையும் மிகவும் மதிக்கின்ற ஒரு மார்க்கம். அல்குர்ஆனில் இது தொடர்பான பல வசனங்கள் உள்ளன. நபிகளாரின் வாழ்வில் இது பற்றிய பல பாடங்கள் சம்பவங்களாக உள்ளன.

இன்று நமது சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சமய விழுமியங்கள் சரியாகப் பேணப்படாமையே. இதனால் ஒரு பிரிவினர் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மனிதனின் மனதில் நல்ல சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்குப் பாடசாலைகளில் தேவையான அத்திவாரம் இடப்பட வேண்டும்.

இதனை கருத்திற் கொண்டுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசு கல்வித்துறை அபிவிருத்தியில் பிரதான கவனம் செலுத்தி வருகின்றது. மனிதாபிமான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலும் கூட கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை. இது இந்த அரசு கல்வித் துறை மீது செலுத்திவரும் அக்கறைக்கு நல்லதோர் உதாரணமாகும்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன், பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள், கல்வித் துறை அதிகாரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பெருந்திரளாக இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் தலைமையில் பழைய மாணவர்களின் 80 ஆம் ஆண்டு குழுவினர் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிபர் பதவியுயர்வுக்கான நேர்முகம்; புல்மோட்டை முகாமிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு

அதிபர்களுக்கான தரம் 1, தரம் 11, தரம் 111க்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டை நிவாரண முகாமிலும் நடத்த வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் புல்மோட்டையிலும் தங்கியுள்ளதாலேயே நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும், நேற்றும் வவுனியா மாவட்டத்திலுள்ள அதிபர்களுக்கும் நிவாரணக் கிராமங்களில் உள்ள அதிபர்களுக்கும் தரம் உயர்வுக்கான நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டன.நிவாரணக் கிராமங்களிலிருந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய அதிபர்களுள் 85 பேர் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அதிபர்களுக்கென நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் 180 அதிபர்கள் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வடபகுதியில் நீண்டகாலமாக வழங்கப்படாமலிருந்த பதவி உயர்வுகள் தற்போது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையிட்டு அதிபர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர் எனத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜினி ஓஸ்வர்ல்ட் வவுனியாவில் நேர்முகப் பரீட்சையை நடத்திய அதே குழுவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் புல்மோட்டை சென்று நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு

ranjith-gunasekara.jpgமீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த இரு ஆண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மீரிஹான பொலிஸார் இக்கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ள போதும், அது பற் றிய தகவல்கள் ஊர்ஜிதம் செய் யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் ஊடான காசுக் கட்டளை – தபால் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

post_logo.jpgஇலத் திரனியல் ஊடாக காசுக்கட்டளைகளை அனுப்பும் புதிய நடவடிக்கையை தபால் திணைக்களம் நேற்று  முதல் ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையதளம் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் காசுக்கட்டளைகளை துரிதமாகவும் கிரமமமாகவும் அனுப்பி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம் பணம் அனுப்பும் நபரின் தேவை 5முதல் 10 விநாடிகளில் நிறைவேறுகிறது. முதல் கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவருக்கு கூடியபட்சம்  25,000 ரூபாவை அனுப்பிவைக்க முடியும்.ஆரம்ப நடவடிக்கையாக 643 தபால் நிலையங்கள் ஊடாக இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களும் ‘மொபைல்’ உபயோகிப்பது தடை

images-teli.jpgமாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியதுடன் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கக் கூடாதென தெரிவித்தார்

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது; மாணவர்களைப் போன்றே ஆசிரியர்களும் ஒழுக்கத்தினைப் பேணுவது அவசியம் எத்தகைய சூழ்நிலையிலும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் தமது பதவியின் கெளரவத்தைப் பாதுகாப்பது அவசியம்.

அரசாங்கம் அரச துறையில் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் அரச ஊழியர்களுக்கான சலுகையோ அபிவிருத் தியோ நிறுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் மாகாண சபை பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கென 360 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

200 மீற்றர் நீச்சற் போட்டியில் பெல்ப்ஸ் புதிய சாதனை

pelps2.jpgபிரான் ஸின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இரண்டு நாட்களுக்குள் 11 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றவரும் உலக சாதனைக்கு சொந்தக்காரருமான மைக்கல் பெல்ப்ஸ் 200 மீற்றர் போட்டியின் இறுதிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.அவரது புதிய சாதனை 1:51.51 ஆக அமைந்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

பேனா பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் புத்திஜீவிகளை இழந்தது குடாநாடு

sathosa-outlet.jpgபேனை பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் யாழ்.குடாநாட்டு மண் புத்திஜீவிகள், பேராசான்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தை கடந்த காலத்தில் இழந்துவிட்டதாக வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.  யாழ். கஸ்தூரியார் வீதி வின்சர் தியேட்டர் சந்தியில் செவ்வாய்க்கிழமை 114ஆவது ச.தொ.ச.வை (கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம்.) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது; ஜனாதிபதி பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இந்த மண்ணை மீட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ யாழ்.குடாநாட்டின் அபிவிருத்திக்காக வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். அதன் ஒரு வேலைத்திட்டமாகவே இந்த ச.தொ.ச. திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பது உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவேயாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, உருளைக்கிழங்கிற்கு 25 ரூபாவும் பால்மா வகைகளுக்கு 125 ரூபாவும் உள்ளூர் சிறிய வெங்காய உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க பெரிய வெங்காயத்திற்கு 25 ரூபாவும் வரி அறவிடுகின்றோம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றன. நாம் அதனைப் பொருட்படுத்தவில்லை. எமக்கு உள்நாட்டு விவசாயிகளின் நலன்களில் அதிக அக்கறை உண்டு.

எதிர்வரும் நாட்களில் குடாநாட்டு விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை கொழும்பிற்குக் கொண்டு சென்று நாரஹேன்பிட்டியில் விற்பனை செய்யலாம். கடலுணவுகளின் விற்பனையும் அவ்வாறே செய்ய முடியும். தென்பகுதி மக்களிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு யாழ்கொழும்பு ரயில் சேவையை டலஸ் அழகப்பெரும துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையிலேயே புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையக் கட்டிடங்கள் புனரமைக்கப்படவுள்ளன. மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன இப்பகுதியில் இருக்கும் மின்பற்றாக்குறைக்குத் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வடபகுதி மக்கள் சகல ஒலிபரப்புச் சேவைகளையும் துல்லியமாக கேட்பதற்கும் வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போல் எமது இலங்கை நாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்து வர்த்தகப் பிரமுகர்கள், மக்களுடன் கலந்துரையாடிய போது மக்கள் தாம் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகமான விலை கொடுப்பதாக தெரிவித்திருந்தனர். அதற்காக போக்குவரத்துச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டு யாழ்.மக்களுக்கு பொருட்களை வழங்கவுள்ளோம்.

யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாட்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது மக்களுக்கான பொருட்கள் கொழும்பு விலைக்குக் கிடைக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட வரவுசெலவுத்திட்ட நிதியில் ஒதுக்கி குடாநாட்டில் கோப்சிற்றி, மினி கோப்சிற்றி போன்றவற்றை திறந்து வைத்திருந்தோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்களை மறந்து சகல இனங்களும் மதங்களும் இணைந்து ஒற்றுமையான எதிர்கால சந்ததியை நம்பிக்கையோடு அமைப்போம் என்றார்.

மியன்மார் வெளிவிவகார அமைச்சர் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கை வருகிறார் – வெளிவிவகார அமைச்சு தகவல்

mynmar_flagss.jpgமியன்மார் வெளிவிவகார அமைச்சர் நியான் ஸின் இரண்டு நாள் உத்தியோகபூhர்வ  விஜயமொன்றை மேற்கொண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி  இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு  அன்மையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோது அவர் விடுத்த அழைப்பினை ஏற்றே மியன்மார் வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகை தரவுள்;ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மியன்மார் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு வர்த்தகர்கள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் சாத்தியம்பற்றி ஆராய்வதற்காக இக்குழுவினர் நலன்புரிக் கிராமஙகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் மூலம்  இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். கொழும்பு விசேட விமான சேவை ஆகஸ்ட் 03 இல் ஆரம்பம்

flight_domestic.jpgயாழ்ப் பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விசேட  விமானப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. தனியார்; மற்றும் விமானப் படையினருடன் இணைந்து இந்த விமான சேவையை வழங்குவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட்  03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை தினமும் ஐந்து சேவைகளை நடத்தவிருப்பதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.  தற்போது இருவழிக் கட்டணமாக அறவிடப்படும் 19.000 ரூபா தொகையானது திருவிழாவை முன்னிட்டு 17.000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவருடம் நல்லூர் ஆலய திருவிழாவுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வருடம் 1லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வரென எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்