July

July

கடும் மழை; மண் சரிவு அச்சுறுத்தல்; மலையகப் பகுதிகளுக்கு 24 மணி நேர முன்னெச்சரிக்கை

images.jpgமலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருவதால் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேர முன்னெச்சரிக்கையொன்றை நேற்று விடுத்தது. இதன் காரணத்தினால் மலையகத்தின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டிருக்கிறது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக எற்கனவே அடை யாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார மேலும் குறிப்பிடுகையில் :-மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரதேசங்களில் 100 மி. மீட்டருக்கும் மேல் தொடராக மழை பெய்திருப்பதோடு தொடர்ந்தும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

ஆகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்தை ஆகிய பிரதேசப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, பிரதேச செயலகப் பிரிவிலும் கினிக்கத்தேன, நோட்டன் பிரிஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள, மதுகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பல இடங்கள் உள்ளன.

தற்போது இம்மாவட்டங்களுக்கு தொடராக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுவது மிக அவசியம். இதனடிப்படையில் தான் இந்த 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றார்.

இணைய தளங்களை கட்டுப்படுத்த சீனாவில் புதிய விதிகள்

_dam-afp.jpgசீனாவில் அனைத்து புதிய கணினிகளிலும், இணையத் தளங்களுக்கான வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய விதியை அறிமுகம் செய்வதை சீனா தாமதப்படுத்துகிறது.  அந்த விதி அமலுக்கு வரவிருந்தது.

இந்த தாமதத்துக்கு எந்த விதமான காரணமும் கொண்டு வரப்படவில்லை. ஆபாச மற்றும் வன்செயல் படங்களை இளைஞர்கள் பார்ப்பதை தடுக்கும் நோக்கிலேயே, Green Dam Youth escort என்ற இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மென்பொருள், அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரிய இணையத் தளங்களை சீன அரசாங்கம் தடை செய்ய உதவும் என்று பேச்சு சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

க.பொ.த. உ/த பரீட்சை வெட்டுப்புள்ளி நாளை

பல்கலைக் கழகங்களுக்கு 2009ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும்.

இவ்வருடம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டுக்கான பாடவிதானங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்

Robin_Speech_at_the_Protestபுலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அம்மக்களை தங்கள் எஜமானர்களுக்குப் பணிய வைப்பதாகவே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலி ஆதரவு அமைப்புகளானாலும் சரி, கிழக்கிலங்கை – தலித் – ஜனநாயக முன்னணிகள் போன்ற பெயரளவில் அல்லது பெயரில் மட்டும் ஜனநாயகத்தைக் கொண்டுள்ள புலி எதிர்ப்பு அமைப்புகளானாலும் சரி தாயகத்தில் உள்ள மக்களுக்கு தாங்களே குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அம்மக்களின் குரல்களை இருட்டடிப்புச் செய்து தங்கள் அரசியல் நலன்களைத் தக்க வைக்கவே முயன்று வந்துள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கபடும் போராட்டங்கள் மிக அருமையாகவே நடைபெறுகிறது. இது மிகக் குறைந்தளவினருடன் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்போராட்டங்கள் அரசியல் ரீதியில் தங்கள் நியாயத்தை உறுதிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சொலிடாரிற்றி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பினால் யூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன் நூறுக்கும் உட்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட தமிழர்களுக்கு இணையாக பிற சமூகத்தவர்களும் கலந்துகொண்டதுடன் அவர்களே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Serra_Leading_the_Protestஒரு ரூபாயோ ஒரு பெனியோ மகிந்த ராஜபக்ச அரசுக்கு கொடுக்கப்படாது!
வழங்கப்பட்ட நிதிக்கு கணக்குகள் காட்டப்பட வேண்டும்!
வன்னியில் உள்ள முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

போன்ற கோசங்கள் அங்கு ஓங்கி ஒலித்தது. Stop Slaughter of Tamils என்ற சர்வதேசப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தமிழர் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் தற்போதைய போராட்டங்களை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கின்றனர். பிரித்தானியாவில் உள்ள இடதுசாரி அமைப்பான Committee for Worker’s International என்ற அமைப்பே இப்போராட்டங்களின் உந்து சக்தியாகச் செயற்படுகின்றது. முக்கியமாக ‘த சோசலிஸ்ட’ பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான Sarah இப்போராட்டத்தில் முன்னின்று கோசங்களை வைத்தார். ஏனையவர்களும் ஈடுபட்டனர்.

இடையிடையே கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி அதற்காக தாங்கள் தார்மீக அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை சொல்லிச் சென்றனர்.

Robin_Speech_at_the_Protestகுறிப்பபாக ரொபின் என்பவரது கருத்துக்கள் தமிழ் மக்களது போராட்டங்கள் தொடர்பான மதிப்பீடாக அமைந்திருந்தது. நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது மிகுந்த கண்டனத்தை தெரிவித்த ரொபின் இது சிங்கள பொது மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இங்கு லண்டனில் சிலர் பௌத்த விகாரைக்கு தீயிட்டதையும் லோட்ஸ் மைதானத்தில் யூன் 21 அன்று இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த சிங்கள இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ரொபின் இவ்வாறான சிங்கள மக்களுக்கு எதிரான வன்மங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய எதிரிகள் அல்லர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கட் போட்டியில் தமிழர்கள் சிலர் பாகிஸ்தானின் வெற்றியை எதிர்பார்த்து நின்றதையும் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்ததையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட ரொபின் கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் முழுமையான இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி இருந்ததையும் பாகிஸ்தான் விமான ஓட்டிகள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில் தமிழர்களுடைய எதிர்ப்புணர்வு பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அன்று அமைந்திருக்க வேண்டும் என்றும் ரொபின் கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டம் வெறும் தமிழர்களுடைய போராட்டமாக அல்லாமல் பிற சமூகங்களையும் இணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ரொபின் ஏனைய ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தமிழர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல பாலஸ்தீனியர்களுடைய பிரச்சினை காஸ்மீரியரின் பிரச்சினை எல்லாம் ஒரே வகையினதே என்று கூறிய ரொபின் இம்மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.