September

September

வோல்ட்டர் கேலின் நேற்று வவுனியா முகாம்களுக்கும் நேரில் விஜயம்

210909walter-kalin.jpgஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதி வோல்ட்டர் கேலின் நேற்று மாலை வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்த அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.

இன்று சனிக்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இலங்கை வந்த வோல்டர் கேலின் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

சம்பியன் கிண்ணம் 5ஆவது போட்டி : Australia won by 50 runs

260909-aus.jpgசம்பியன் கிண்ணத்துக்கான 5வது போட்டி இன்று அவுஸ்திரேலியா மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான பகல் நேர ஆட்டமாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களை தொகுத்துத் தர தேசம்நெட் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

260909untitled.bmpICC Champions Trophy – 5th Match, Group A
ODI no. 2897 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
26 September 2009 (50-over match)

West Indies won the toss and elected to field

Umpires Asad Rauf (Pakistan) and AL Hill (New Zealand)
TV umpire BF Bowden (New Zealand)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire Aleem Dar (Pakistan)

Australia innings (50 overs maximum)
 SR Watson  b Roach  0 1
 TD Paine†  c †Walton b Bernard  33 
 RT Ponting*  st †Walton b Miller  79 
 MEK Hussey  c Fletcher b Bernard  6
 CJ Ferguson  b Roach  20 
 CL White  b Miller  4 
 JR Hopes  c †Walton b Sammy  5 
 MG Johnson  not out  73  
 B Lee  run out (†Walton)  25 
 NM Hauritz  not out  7
 Extras (lb 8, w 10, nb 5) 23     
      
Total (8 wickets; 50 overs) 275 (5.50 runs per over)
To bat PM Siddle 
Fall of wickets1-0 (Watson, 0.1 ov), 2-85 (Paine, 19.1 ov), 3-120 (Hussey, 25.2 ov), 4-148 (Ponting, 30.3 ov), 5-162 (White, 34.5 ov), 6-164 (Ferguson, 35.3 ov), 7-171 (Hopes, 39.2 ov), 8-241 (Lee, 47.6 ov) 
        
 Bowling O M R W Econ  
 KAJ Roach 10 0 73 2
GC Tonge 10 1 54 0 
 DE Bernard 10 0 63 2
NO Miller 10 1 24 2 

West Indies innings (target: 276 runs from 50 overs)
 DS Smith  c †Paine b Siddle  17
 ADS Fletcher  run out (Johnson)  54 
 TM Dowlin  c †Paine b Lee  55
 CAK Walton†  b Hopes  0
 FL Reifer*  c Hauritz b Watson  28
 DE Bernard  b Siddle  8 
 DJG Sammy  c Hussey b Watson  20 
 NO Miller  c Ponting b Hauritz  4 
 KAJ Roach  c Johnson b Hauritz  3 
 GC Tonge  not out  0
DM Richards  absent hurt  –     
 
 Extras (lb 19, w 16, nb 1) 36     
      
 Total (all out; 46.5 overs) 225 (4.80 runs per over)
Fall of wickets1-38 (Smith, 5.4 ov), 2-124 (Fletcher, 24.3 ov), 3-128 (Walton, 25.2 ov), 4-170 (Dowlin, 36.4 ov), 5-187 (Bernard, 39.1 ov), 6-215 (Sammy, 44.1 ov), 7-219 (Reifer, 44.5 ov), 8-225 (Miller, 46.4 ov), 9-225 (Roach, 46.5 ov) 
        
 Bowling
 B Lee 8 0 41 1 
 PM Siddle 8 1 37 2
 MG Johnson 10 0 44 0 
 SR Watson 7 0 34 2
 NM Hauritz 7.5 0 23 2
 JR Hopes 6 1 27 1 

 Player of the match MG Johnson (Australia

Australia won by 50 runs

 

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் – புன்னியாமீன்

piercing-the-ears.jpgசெப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. செவிப்புலனற்றோர் மீது கருணை காட்டுவதன் ஊடாக அவர்களுக்கு வேண்டிய சில நிவாரண ஏற்பாடுகளை செய்வதற்காக வேண்டியும் அவர்கள் மீது நம்பிக்கைகளை உருவாக்குவதற்காக வேண்டியும் இத்தினத்தை நலன் புரி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

செவி அல்லது காது என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மனித இனத்தின்  உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகவே பேச்சு உள்ளது. இந்தப் பேச்சினை செவிமடுப்பதன் ஊடாகவே  கருத்துப் பரிமாற்றம் முழுமையடைகின்றது. எனவே ஒலியை உணரக்கூடிய திறனே கேட்டல் எனப்படுகிறது. செவிப்புலனில் செயல்பாடு குறைதல் அல்லது செவிப்புலனில் செயல்பாடு அற்றுப் போதல் காரணமாகவே கேட்பதில் குறைபாடு ஏற்பட்டு செவிட்டு நிலைமை உருவாகின்றது.

மீன் தொடக்கம் மனிதர் வரை முள்ளந்தண்டுளிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் வேறு சிற்றினங்களைப் பொறுத்த மட்டில் அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. செவி ஒலிகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செவி கேள்வித் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

எம்மால் பிறரது உரையாடலினை கேட்க இயலாது போகும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கான பதிலினை உரிய முறையில் கொடுக்க இயலாது போகின்றது. எமது உணர்வுகளை வெளியிட முடியாத நிலை தோன்றுகின்றது.

எமது அங்கங்களில் ஒன்றான காதின் அமைப்பினை எடுத்து நோக்குவோமாயின் வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று மூன்று வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.

இவைகளில் வெளிக்காதில் காதுச் சோணையும், புறச்செவிக் கால்வாயும், காணப்படும். அதில் புறக் காதுச் சோணை வாயிலாக வெளியிலிருந்து ஒலி அலைகளானது எமது புறக்காதின் கால்வாயினை நோக்கிச் செலுத்தப்படும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி கசியிழையங்களினாலான மடல் ஆகும். இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. முதுகெலும்புளிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.

நடுக்காதானது செவிப்பறை மென்சவ்வு எனும் மிக மெல்லிய சவ்வு ஒன்றைக் கொண்டுள்ளது. புறச்செவிக் கால்வாயினூடாக வருகின்ற ஒலியினால் இம்மென்சவ்வு அதிர்ந்து உட்காதுக்குள் ஒலியை ஊடுகடத்துகின்றது. உட்காதில் ஊத்தேக்கியோவின் குழாய் எனும் அமைப்பு தொண்டையுடன் தொடர்புள்ளது. இதனால் காதினுள் நிலவும் அமுக்கமும் வெளி வளிமண்டல அமுக்கமும் ஒரேயளவில் பேணப்படுகிறது. எனவே உட்காதானது சமநிலையைப்பேணுவதில் பங்களிப்புச் செய்கின்றது.  உட்காதுக்குள் வரும் ஒலியானது மூளையினை நோக்கி கணத்தாக்கங்கள் ஊடாக கடத்தப்படும். இது ஒலிவாங்கிகளால் தூண்டப்பட்டு தகவல்கள் மூளையத்தினது ஒலி உணர் பிரதேசத்தினை அடைகின்றது. கணத்தாக்கத்தின் காரணமாகவே  நாம் தகவல்களை உணர்கின்றோம். ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது “அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்” (Olson 1957) எனும் பல கருத்துகளைத் தருகின்றது.

செவிப்புலனற்றவர்களை நாம் இருவகையானவர்களாக நோக்கலாம் இயற்கையில் தமது பிறப்பின் போது தமது செவிப்புலனை பறிகொடுத்தவர்கள். இவர்களின் நிலைக்கு பலவாறான காரணங்கள் கூறப்படுகின்றன. வைத்தியத் துறையினரின் கண்டு பிடிப்பின் படி ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தின் போது, அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களினைக் கேட்டல் அல்லது பார்த்தல், இயற்கை அல்லது செயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடல், போஷாக்கான உணவுப்பழக்கமின்மை, பரம்பரை அலகு போன்றவற்றில் ஏற்படுகின்ற தாக்கத்தின் விளைவாக அவர்களது உடலில் சுரக்கும் ஒமோன்கள் வளர்ந்து வருகின்ற நுகத்தை பாதிப்படையச் செய்வதன் காரணத்தினால் இவ்வாறு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

இயற்கையாக தமது பிறப்பின் போதே செவிப்புலனை அற்றவர்களை விடுத்து மற்றுமொரு பகுதியினர் எம்மில் இன்று காணப்படுகின்றனர். அதாவது தமது சிறுவயதில் ஏற்படுகின்ற அனர்த்தம் ஒன்றின் விளைவாக தமது கேட்கும் சக்தியினை இழந்தவர்கள் அல்லது ஒரு விபத்தின் காரணத்தினால் தமது செவிப்பறைகளில் பாதிக்கப் பட்டவர்களே அவர்கள்.

உண்மையில் முதலாவது பகுதியினரை விட இந்த இரண்டாவது பகுதியினர் அதிகளவாக பாதிப்படைவதாக குறிப்பிடப்படுகின்றது அதாவது இயற்கையாக தமது பிறப்பின் போது செவிப்புலனற்றவர்களாக காணப்படுபவர்கள் தமது இயலாமையினை தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவும் மனதளவில் தைரியமிக்கவர்களாகவும் இயற்கையோடு எதிர்த்துப் போராடக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஆனால் ஏற்பட்ட விபத்தொன்றின் காரணமாக இவ்வாறான நிலைக்குள்ளானவர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் தமது பிழையான நடவடிக்கையின்  விளைவாகத்தான் இவ்வாறான சம்பவம் தனக்கு ஏற்பட்டது என்ற மனோநிலையினையும் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பர்.

மேலும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்பட காரணங்களாக பின்வருவனவற்றையும் குறிப்பிடலாம். இயற்கை நிலையில் முதிர்வயதாகும் போது செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது. இவை தவிர சில சந்தர்ப்பங்களில் சத்தம் நிறைந்த வேலை இடங்களில் வேலை செய்பவர்களுக்கும்,   காதுகளில் சுரக்கும் மெழுகுபோன்ற பொருள் அடைப்பதினாலும்,   காதுகளில் ஏற்படும் நீண்ட நாள் நோய்தொற்றுக்களினாலும்,   காது உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களினாலும்,  டிம்பானிக் மெம்பரேன் எனப்படும் காது சவ்வில் ஏற்படும் துவாரம்,  காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாகவும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான பாதிப்புகள்  ஏற்படும்போது தோன்றும் சில அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். சிறு பிள்ளைகளாயின்  சத்தத்திற்கு அசைவோ அல்லது மறு உத்தரவோ அளிக்காதிருத்தல்,  மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளாமலிருத்தல், மற்றவர்கள் பேசும்போது உரக்க பேசுங்கள் என்று கேட்பது போன்றன சிலவாகும்.

இத்தகையோர் பின்வரும் விடயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக சத்தமுள்ள இடங்களிலிருந்து விலகியிருத்தல்,  காது கேளாமையின் காரணங்களை பரிசோதித்தறிய மருத்துவரை அணுகுதல். மருத்துவரின் ஆலோசனையுடன் காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல்.

நவீன இக்காலத்தில் கையடக்கத் தொலை பேசிப்பாவனை பொதுவாக உலகளாவிய ரீதியில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. ”கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால்,  நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து,  கையடக்கத் தொலை பேசியினால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம். ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால்,  கையடக்கத் தொலைபேசி உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே கையடக்கத் தொலை பேசி வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. கையடக்கத் தொலை பேசியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால்,  தொடர்ச்சியாக அரை மணி நேரம்,  ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, கையடக்கத் தொலை பேசியில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் கையடக்கத் தொலைபேசியை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல கையடக்கத் தொலை பேசியில்  விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். எனவே கையடக்கத் தொலை பேசிப்பாவனையாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

செவிப்புலனற்றவர்களினால் சில போது பேச இயலாதும் போய் விடுகின்றது. எனவே எமது நடவடிக்கையின் காரணமாக அவர்களை நோகடித்து விடாது அவர்களது உணர்வுகளுக்கும் மதி ப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, எம்மில் ஓர் அங்கமாக நாம் அவர்களை கருத வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது குடும்ப உறுப்பினர்களில் இவ்வாறானவர்கள் காணப்படுவார்களேயானால் அவர்களை தனிமைப்படுத்தி விடாது.  இவர்களை ஒதுக்கி விடாது எமது விடயத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தோடு இவர்களை கவனிப்பதனையும் ஒரு முக்கியமான விடயமாகக் கருதி செயற்பட வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது பிறவியிலேயே காது கேளாத பலருக்கு சத்திர சிகிச்சையின் ஊடாக கேட்கும் சக்தியினை வழங்கியிருப்பதனை அறிகின்றோம். இவ்வாறான சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அதேபோன்று எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்று இதன் வளர்ச்சி காணப்படுகின்றது. ஆனால் இச்சத்திர சிகிச்சை நிபுணர்கள் பலவாறான கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டுத்தான் இதனை செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இவர்கள் போதியளவான செவிமாற்று உறுப்புகளினை பெறுவதில் சிரமங்கள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் இன்று காணப்படுவது போன்ற சிரமங்கள் காணப்படாதிருப்பதற்காக மனிதனது கலத்தினை (Human cells) வைத்து மனித உறுப்புக்களை உருவாக்குவதற் கான முயற்சியில் இன்றைய விஞ்ஞானமானது இறங்கி யிருப்பதாகவும் நாளைய உலகில் அதன் வெற்றியின் விளைவாக இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோரம் இன்மையால் சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

26parliament.jpgசபையில் கோரமின்மையால் (சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இன்மையால்) ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிக்க முடியாமல் போனது.

நேற்று பகல் 12.30க்கு சபை நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்குமாறு பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

பிரேரணையை சமர்ப்பிக்க தயாரான போது போதிய உறுப்பினர்கள் இல்லாமையை சுட்டிக்காட்டி கோரம் மணியை ஒலிக்கச்செய்யுமாறு அமைச்சர் லசந்த அழகியவண்ண கோரினார்.

கோரம் மணி ஒலித்த சில நிமிடங்களில் உறுப்பினர்கள் சபைக்குள் வந்தனர். மீண்டும் பிரேரணையை சமர்ப்பிக்க முற்பட்ட போது பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா கோரமின்மையை சுட்டிக்காட்டினார்.

ஐந்து நிமிடங்களாக சபைக்குள் உறுப்பினர்கள் வராததால் பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ன சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

தாய்நாட்டுக்கு துரோகமிழைத்தால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் – ஜனாதிபதி

slpr080909.jpg“எனக் கெதிரான அவதூறுகளை நான் பொறுத்துக் கொள்ள முடியும். எனினும் நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எவருக்கெதிராகவும் உரிய நடவடிக்கை எடுப்பதில் நான் பின்நிற்கப்போவதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிறந்த நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட மகளிர் அமைப்புகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று மெதமுலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றரை இலட்சம் வாக்குகளை வழங்கி என்னை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்களிப்பு தென் மாகாண மக்களுடையது. ஏனைய பகுதிகளில் எமக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிடும் போது நீங்கள் வழங்கிய ஆதரவு பெருமைப்படக்கூடியது. முப்பது வருடகால இந்த நாட்டின் சாபமாயமைந்த பயங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.

அம்பாந்தோட்டை, மாத்தறை என நான் என்றும் பிரித்துப் பார்த்ததில்லை.  இரண்டும் எனக்கு ஒரு மாவட்டத்தைப்போன்றது. என்னைப் பெற்ற எனது தாய் மாத்தறையிலிருந்து வந்தவரே.  இந்த நாட்டை மீட்க தமது உயிரைப் பணயம் வைத்த படைவீரர்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோரும், உறவுகளும் எமது கெளரவத்திற் குரியவர்களே. நாம் இந்த நாட்டை எளிதாக மீட்டெடுக்கவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இருந்து பல்வேறு தடைகளும் அழுத்தங்களும் வந்தன. பலர் எமது காலை வாரமுயன்றனர். இத்தகைய தடைகளுக்கு மத்தியிலேயே நாம் இந்த நாட்டை மீட்க முடிந்தது.

இதற்கான நடவடிக்கையில் எமது படையினர் 26,000 பேர் பலியாகினர். மேலும் 5,000 ற்கு மேற்பட்டோர் உடல் ஊனமுற்றனர். அத்தகைய படையினருக்கு எதிராக குற்றஞ் சுமத்தி அவர்களை சர்வதேச இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நம்மவர்களே முயற்சிக்கின்றனர்.

சர்வதேச இராணுவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க சாட்சியங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழித்த எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்றவைகளைப் பற்றி கவனத்திற்கொள்ளவோ விசாரணைக்குழு அமைக்கவோ முன்வரவில்லை. கொடூர பயங்கரவாதத்தை ஒழித்த எம்மீது குற்றஞ்சுமத்த வருகின்றனர்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்றவர்களே இன்று நாட்டை மீட்ட படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்ல தலைப்பட்டுள்ளனர். சுனாமி முதல் எனக்கெதிராக அவதூறுகளை எதிர்க்கட்சி மேற்கொண்டது.  அதனை நான் பொருட்படுத்தவில்லை. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக துரோகமிழைத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க நான் தயங்கமாட்டேன்.

நாட்டில் தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  கொழும்புக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி இன்று கிராமிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச சேவையில் தற்போது 12 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம், மக்களுக்கான நிவாரணம், விவசாயிகளுக்கான மானியம், அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிச் சலுகைகள் என மக்கள் நலனைக் கருத்திற்கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களைப் பொறுத்தவரை முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் தேர்தலின் மூலம் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் திருப்திகரமானது என்பதை உலகிற்கு காட்ட முடியும் எனவும் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு கண்டனம்

ramadan-mosque.jpgகிழக்கு மாகாண பள்ளி வாயல்கள் சம்மேளனம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களுக்கோ, பள்ளி வாயல்களின் தலைமைகளுக்கோ தெரியாதவாறு அறிக்கைகளும், செய்திகளும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானித்து வருகின்றோம்.

குறிப்பாக, கடந்த வருடம் பாராளுமன்ற பஜட் விவாதத்தின் போது கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்ற கடிதத் தலைப்பில் அரசாங்கத்தின் பஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற பெக்ஸ் செய்தியின் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 22.09.2009ம் திகதி தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா கடத்தப்பட்டு விடுவிப்பு என்று செய்தி வந்திருந்தது. இச் செய்தியில் பள்ளிவாயல் ஒன்றின் தலைவராகவே இல்லாத ஹனிபாவை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றது. இவ் அடையாளப்படுத்துகையானது பள்ளிவாயல்களின் பேரில் சுயலாபம் தேடுவதற்கோ அல்லது அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காகவோ எடுக்கப்படும் முயற்சியென நாம் திடமாக நம்புகின்றோம்.

மெளலவி ஹனிபா என்பவர் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலின் தலைவராக இருந்த போது அதன் பதவி வழியாக அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்திலும், கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனத்திலும் சில பதவிகளில் இருந்திருக்கிறார்., அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைமைப் பதவியில் இருந்து அவர் நீங்கிக் கொண்டது 2007.09.12ம் திகதியாகும்.

இதன்படி பள்ளவாயலின் புதிய தலைவரே மேற்படி சபைகள் கூடுகின்றபோதோ அல்லது உருவாக்கப்படுகின்றபோதோ அங்கம் வகிப்பதுவும் பதவி வகிப்பதுவும் நடைமுறை வழக்கமாகும். ஆகவே, கடந்த 02 வருட காலங்களுக்கு மேலாக பள்ளிவாயலின் தலைவராகவே இல்லாத மெளலவி ஹனீபா கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்றும், இயங்காத அச்சபையின் பெயரை பாவிப்பதிலிருந்தும், தவிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இத்தால் வேண்டுகோள் விடுத்துக் கொள்கின்றோம்.

இவ் வேண்டுகோளினை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சார்பில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயல் ஆகிய வற்றின் தலைவர்கள் கூட்டாக இணைந்து வெளியிடுகின்றோம்.  தவறும் பட்சத்தில் இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியை நாடவேண்டியதையும் தவிர்க்க முடியாமலாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த 16.09.2009ம் திகதி மெளலவி ஹனிபாவிற்கு நடந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது என நமது உலமாக்கள் கருதுகின்றனர்.

நமது பிராந்தியம் தொடர்பிலும் சமுதாய நலன்கள் தொடர்பிலும் மெளலவி ஹனிபாவைப் பற்றிய கருத்துக்கள் வித்தியாசமாகப் பேசப்படுகின்றது. அவருக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்ற காரணத்தினால் உலமா சபையினையும் அவ்வரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதனை தடுக் குமாறு நமது உலமாக்கள் கேட்டுக் கொள்கின் றார்கள்.

எனவே 23.09.2009ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாக சபைக் கூட்டத்தில் மெளலவி ஹனிபா பேசிக் கொண்ட ஒருதலைப்பட்ச விடயம் தொடர்பாக நாம் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாது என உலமாக்கள் எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர்.

எனவே, அவர் ஒரு தலைப்பட்சமாக பேசிய விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ நமது உயர் சபைகளுக்கோ, தீர்மானங்கள் என்றோ அறிக்கைகள் என்றோ வெளியிடக்கூடாது எனவும் உலமாக்கள் மேலும் கேட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் இவற்றையெல்லாம் மீறி இது தொடர்பில் ஏதாவது அறிக்கைகள் வெளியிடப்படுமானால் அவற்றிற்கு அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினர் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றாமல் டமிஃபுளு உட்கொள்ளக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் தொற்றுவதை தவிர்க்கும் வகையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான டமிஃபுளு மாத்திரையை பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே, இந்த மாத்திரரையை பயன்படுத்தினால், அது வீரியத்துடன் பயந்தரமாட்டாது என்பதே இந்த விடயத்தில் இருக்கின்ற பெரிய அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் காய்ச்சலுக்காக இந்த மருந்து பயன்படுத்தப்படும் 28 தடவைகளில், 12 தடவைகள் காய்ச்சல் தொற்றுவதை தடுப்பதற்காக முன்கூட்டியே அது பயன்படுத்தப்படுகின்றது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதற்குப் பதிலாக பலவீனமான நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அதன் பின்னர் தாமதிக்காமல் இந்த மருந்தை உட்கொள்வதே சிறந்தது என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

260909srilanka.jpgவட மாகாணத்திலிருந்து (1990ம் ஆண்டு) இடம்பெயர்ந்து முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசாலையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928

தில்லியில் இலங்கைத் தமிழர் ஆதரவு கருத்தரங்கம்

16-vaiko.jpgஇலங் கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வகையில், இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில்  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க உலக நாடுகள் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார் பழ. நெடுமாறன்.

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இந்திய அரசு இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளைச் செய்ததாகவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா.வின் முயற்சியை முறியடித்ததும் இந்தியாதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

கிழக்கின் முழக்கம் – 2009

மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கின் முழக்கம் – 2009 மாபெரும் விழா இன்று காலை முதலில் நள்ளிரவு வரை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொள்ளவுள்ள இவ்விழாவில் நீச்சல் போட்டி, ஓட்டப் போட்டிகள், உதைபந்தாட்டம், பீச்போல் மற்றும் தோணி ஓட்டம், அலங்காரப் போட்டி, மெஜிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இறுதி நிகழ்வாக இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இன, மத, பேறுபாடுகள் இன்றி ஒரே இடத்தில் சங்கமிக்கும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நிலவிய போர்ச் சூழல்கள் காரணமாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் விரிசல், மக்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கை, பயம், உயிர்வாழ்வது பற்றிய எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் அச்சமின்றி வாழ்வதற்கானதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சு கிழக்கு முழக்கம் – 2009 விழாவை நடத்துகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து இவ்விழாவை நடத்த கிழக்கு மாகாண சபை திட்டமிட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாழ்க்கை முறையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழி அம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாகுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவிற்கான ஊடக அனுசரணையை ஸ்ரீ டி.வி. வழங்குகிறது. இத்தாலி ரோம் நகரை மையமாகக் கொண்டு 152 நாடுகளில் ஒலிபரப்புச் சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.