November

November

மலையகப் பகுதிகளில் கடும்மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgமலை யகப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரேந்தும் பகுதிகளான காசல் ரீ, மவுசாகலை,கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான வெள்ளநீர் சேர்ந்துள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழை காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் மலையகத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாமென கட்டிட ஆராய்ச்சி நிலைய புவியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பெற்றோலிய, நீர்பாசன சபை ஊழியர்களின் போராட்டம் முடிவு

091009ecb.jpgஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர்ப்பாசன சபை ஊழியர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை இன்றுடன் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமனம்

161109roshan.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவை நியமித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். கூட்டுப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்ததையடுத்து, ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் குணதிலக கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றும் அதேவேளை விமானப்படைத் தளபதியாகவும் கடமையாற்றுவார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன்” – ஜெனரல் சரத்

031109sarathfonseka.jpgகூட்டுப் படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஓய்வுபெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் பொன்சேகா கடந்த 12ஆம் திகதி கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தார். அவரது கடிதத்தை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்துக் கருத்து தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, ” இராணுவத் தளபதியாகவும், கூட்டு படைகளின் பிரதானியாகவும் நான் ஆற்றிய சேவைகள் திருப்திகரமாகவே இருந்தன. இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நல்லாசிகள். இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.கட்சி மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.

கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் – ஜனாதிபதி

161109mainpic.jpgஉலகின் எத்தகைய பலம் பொருந்தியவர்களாக இருந்தாலும் சரி அவர்களது அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியத் தயாரில்லை. நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப உரிய நேரத்தில் தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலா- பாராளுமன்றத் தேர்தலா? எதுவாயினும் மக்கள் எதிர்பார்ப்பவை நிறைவேற்றும் வகையில் அதற்கான தீர்மானத்தை கட்சி மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று கெத்தாராம விளையாட்டரங்கில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் பழமையான கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கென பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். தேடித் திரிகின்றார்கள்.

இத்தகைய பலவீனமுற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் உலகத்தை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குப் பலமேது? என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி; அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அது இலங்கை அரசியலில் புலிகள் தொடர்புபடாத தேர்தலாகவே அது இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.‘இனி நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இத்தேசிய மாநாட்டில் ஐந்து முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது வருடாந்த தேசிய மாநாட்டை நடத்தும் இக்காலகட்டமானது எமது நாட்டிற்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் முக்கியமானதொரு காலகட்டமாகும். இன்று இலங்கையில் பிறந்த ஒருவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தாம் இலங்கையர் என பெருமையாகக் கூறமுடியும். அதற்கான சூழலை நாம் உருவாக்கியுள்§¡ளம்.

உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதத்தை ஒழிப்பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அரசாங்கத்தைப் பாதுகாக்கச் செயற்பட்டவர்கள் கட்சி ஆதரவாளர்களே. நாட்டை மீட்கும் பயணத்திலும் நாட்டு மக்களோடு இணைந்து நாட்டைப் பாதுகாக்கச் சென்றவர்களும் அவர்களே. அதுமட்டுமன்றி கிழக்கில் தொடங்கி தெற்கு வரை நாம் நடத்திய மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சியையும் விட 25 இலட்சம் அதிகப்படி வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகள் எமது விடயத்தில் தலையிடாது, தடுத்து நிறுத்தியதும், நாம் எமது ஜனாதிபதியுடன் உள்ளோம் என உலகிற்கு வெளிப்படுத் தியதும் அவர்களே. இத்தகைய கட்சி ஆதரவாளர்களால் நாம் பெருமைப்படுகின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாநாட்டில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற பெருமை எமக்குள்ளது.  இன்று இந்த நாட்டில் சிறுபான்மை என்று எவருமில்லை நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளே. நாம் மஹிந்த சிந்தனையில் தெரிவித்த வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். எமது கட்சி ஜனநாயகக் கட்சியாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகலரும் எமது கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். நாம் எவருக்கும் பயந்து செயற்படவில்லை. மக்கள் தீர்மானமே எமது தீர்மானமாகும். மக்களே இந்நாட்டின் மன்னர்கள். நாம் ஒருபோதும் அதை மறக்க மாட்டோம். மக்கள் சேவையையும் நாம் மறக்க மாட்டோம். நாம் அனைவரும் இணைந்து இந்த அழகான தேசத்தை ஒரேகொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வடக்கிலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளும் கலை நிகழ்ச்சியொன்றை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

161109mainpic.jpg

பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியா முற்றாக மறுப்பு

சதிக்குப் பயந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் பிரதான பாதுகாப்பு அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கூற்றை இந்தியா முற்றாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் “பொன்சேகாவின் அந்தக் கூற்று எந்தவிதமான அடிப்படையும் அற்றது” என்று கூறியுள்ளார்.  ஜெனரல் பொன்சேகா பதவி விலகுவது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சதி தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து நாம் சிறிது வேதனை அடைந்துள்ளோம். இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என்று அவர் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை என இந்தியா நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை – இந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

sachin.jpgஇலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் டெஸ்ட் “டுவென்டி-20” போட்டிகளில் சேர்த்து 30 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதிக்கலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்டில் பங்கேற்க இந்தியா, இலங்கை வீரர்கள் நேற்று முன்தினம் ஆமதாபாத் வந்தனர். இவர்களுக்கு ஆமதாபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துடுப்பாட்ட வீரர் இந்திய சச்சின், கிரிக்கெட் அரங்கில் தனது 20 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை இவர் 159 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 12,773 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தவிர, ஒரு நாள் அரங்கில் 436 போட்டிகளில் விளையாடி 17,178 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இருபதுக்கு-20 போட்டியில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் 10 ஓட்டங்கள் எடுத்த சச்சின் இருபதுக்கு-20 போட்டிகளை புறக்கணித்து வருகிறார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் கிரிக்கெட் அரங்கில் 30 ஆயிரம் ஓட்டங்களை (12,773+17,178+10=29961+39=30,000) பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள், துறைமுகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள் மற்றும் துறைமுகங்கள் என்பன நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.
 

ஈஸ்ற்ஹாம் மோதல்! நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பு!! தமிழ் இளைஞர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!!!

Police_Vansலண்டணில் தமிழ் மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்ற ஈஸ்ற்ஹாமில் ஒக்ரோபர் 25 அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை அடக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். பேர்ச்சஸ் றோட்டில் இருந்து பிரிகின்ற சவுத்என்ட் றோட்டில் உள்ள தமிழ் மண்டபத்தில் ஒக்ரோபர் 24 இரவு நடந்த பார்ட்டியிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. இந்தப் பார்ட்டியில் லண்டனின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களும் பங்கு பற்றியதாகவும் அப்போதே இந்த மோதல் வெடித்ததாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு ஒக்ரோபர் 28ல் லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பொலிஸார் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். பொலிஸ் தரப்பில் இருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் இச்சந்திப்பிற்கு வந்திருந்தனர். தமிழ் சமூகத்தில் இருந்து குறிப்பாக ஒரு சிலரே சமூகமளித்து இருந்தனர்.

ஒக்ரோபர் 25 அதிகாலை இடம்பெற்ற மோதலில் கத்தி பொல்லுகள் உட்பட கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வன்முறையின் தன்மை மோசமானதாக இருந்ததாகவும் புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பார்ட்டி நடந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கற்கள் மரக்குற்றிகள் போன்றவற்றை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டதான புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த போது பெரும்தொகையானோர் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் சவுன்என்ட் றோட்டின் தொடக்கத்தில் இருந்து ஈஸ்ஹாம் அன்டகிறவுண்ட் ஸ்ரேசன் வரை மோதல் இடம்பெற்றதாகவும் அவ்வதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்படிருந்து என்றும் இவர்களில் மூவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். மோசமாகக் காயமடைந்தவர்களில் ஒருவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார். மோசமாகக் காயமடைந்தவர் ஸ்னெக் (பாம்பு) என்றும் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் ஒக்ரோபர் 28; பொலிஸ் சந்திப்பில் ஒருவர் தெரிவித்தார். தன்னுடைய நண்பனுக்கு தலையில் பாரிய அடி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 24 இரவு இடம்பெற்ற சம்பவத்தினால் அம்மண்டபப் பகுதி குற்றப் பரிசோதணைக்காக பொலாஸாரினால் எல்லையிடப்பட்டது. அதனால் அதே மண்டபத்தில் மறுநாள் நடக்க இருந்த பிறந்த தின வைபவம் நிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டது.

இக்குறிப்பிட்ட பார்ட்டி யாருடைய பிறந்த தினம் அல்லது திருமண நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட வில்லை என்றும் இது தமிழ் போன்கார்ட் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் லண்டன் குரலுக்குத் தெரியவருகின்றது. மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இப்பார்ட்டிக்கு வேண்டிய மதுபானம் மற்றும் உணவு வகைகளை ஈஸ்ற்ஹாமில் ஓடர் செய்ததையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் இளைஞர்களை குசிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பார்ட்டியே மோதலில் முடிவடைந்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்களுடைய விசாரணைகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் என்பன சிபிஎஸ் க்கு வழங்க்பட்டு அவர்களுடைய முடிவுகளின் படி குற்றங்கள் சம்பந்தப் பட்டவர்கள் மீது பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பிரித்தானியா விலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரியிடம் கேட்டபோது அவ்வாறான குற்றப் புலனாய்வுடன் தொடர்பான தகவல்களை தன்னால் பகிர்ந்தகொள்ள முடியாது என அவ்வதிகாரி தெரிவித்தார்.

முப்பது வரையான தமிழ் இளைஞர்களைப் பலிகொண்ட இந்த இளைஞர் குழுக்களின் வன்முறை ஒப்பிரேசன் என்வர் போன்ற நடவடிக்கைகளால் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இவ்வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.