2010

2010

முல்லைத்தீவு வங்கியில் அடகு வைக்கப்பட்டு யுத்தத்தின் போது தொலைந்து போன நகைகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மக்கள் வங்கியில் நகைகள் அடகு வைத்து, யுத்தத்தின்போது அவை தொலைந்து போனவர்களுக்கு பவுண் ஒன்றிற்கு 32 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும், சேதங்கள் காரணமாக குறித்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட பொதுமக்களின் நகைகள் தொலைந்து போய்விட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்க வங்கி முன்வந்துள்ளது.

அடகு வைத்த மக்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலம் வரையும் இந்த நகைகளுக்கான வட்டி அறவிடப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

ஏழு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தொண்டராசிரியர் கைது.

மலையகம் நோட்டன் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஏழு சிறுமிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் 25 வயது தொண்டர் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரால் தரம் ஐந்தில் கற்கும் ஒன்பது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்ட ஏழு சிறுமிகளே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் இந்த நடவடிக்கை குறித்து நோட்டன் பொலிசாருக்க கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொண்டராசிரியரிடம் விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக குறித்த ஏழு சிறுமிகளும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், ‘உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான விரிவான கட்டுரையைப் படிக்க….
நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.
International Day for the Elimination of Violence Against Women – புன்னியாமீன்

http://puniyameen.blogspot.com

கிருஷ்ணா இன்று வருகை; சர்தாரி ஞாயிறன்று கொழும்பில்

ind-pak.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு – செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.  யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

இங்கிலாந்து பிரஜை பலி

இங்கிலாந்து நாட்டவர்கள் பயணம் செய்த கார் ஒன்று கெப் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தும் அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 5.00 மணியள வில் இடம்பெற்ற ரந்தெனிய விபத்தில் பிரிஸ்டியன் ஏம் வயது (59) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மனைவி ஜோன் பவுன்ரி என்பவர் படுகாயமடைந்தவராவார்.

புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ வதை முகாம் கண்டுபிடிப்பு

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் இந்த முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்து கொல்வதற்கே இந்த முகாம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது அங்கு நடத்தப்பட்ட தேடுதல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம், கடற்படை வீரர்களின் எலும்புக் கூடுகளே நேற்றும் நேற்று முன்தினமும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேலும் கூறினார்.

புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கிய அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நீண்ட விவாதம் ஒன்று தேசம்நெற் இணையத்தில் அண்மைக்காலமாக நடந்து கொண்டு உள்ளது. இவ்விவாதத்தில் வெவ்வேறு இணையத் தளங்களில் பங்கு பற்றியவர்களும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றுகின்றனர். கருத்தாளர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தியும் கருத்துக்களை முன்வைப்பதால் விவாதம் மேலும் ஆரோக்கியமாகி வருகின்றது. தேடலையும் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தேசம்நெற் வரவேற்று இவ்விவாதத்தைத் தொடர்கிறது.

முன்னைய பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த விவாதத்தளம் கனதியாகி உள்ள நிலையில் அதற்குச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. அதனால் இவ்விவாதத்தை பகுதி (2) ஆகத் தொடர்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் தற்போதும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அவர்களுடைய கடந்தகால வரலாறு சங்கடங்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் அந்த வரலாற்றை கடந்து செல்வதற்கு இவ்வாறான ஆய்வுகள் அவசியம். உண்மைகளை அறியாமல் அவற்றை அப்படியே கைவிட்டு நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. அதற்காகவே தென்னாபிரிக்காவில் உண்மையும் மீளுறவுக்கும் ஆன ஆணைக்குழு – Truth & Reconciliation Commission அமைக்கப்பட்டது.

ஆகவே இந்த வரலாறு தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவர தற்போதைய தமிழீழ விடுதலைக் கழக உறுப்பினர்களும் தலைமையும் முன்வரவேண்டும். அதற்கூடாக மட்டுமே தமிழீழ விடுதலைக் கழகம் தனது அரசியல் பயணத்தை தொடரமுடியும். அதைச் செய்யாதவிடத்து கடந்தகாலம் அவர்களைத் துரத்துவதை தவிர்க்க முடியாது.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை தாங்கள் எழுதி வருவதாக சிலர் தேசம்நெற் க்கு தெரியப்படுத்தி உள்ளனர். தேசம்நெற் இல் வரும் பின்னூட்டங்கள் தாங்கள் எழுதுகின்ற வரலாற்றுக் குறிப்பை செழுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் தேசம்நெற் கருத்தாளர்கள் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு உரிய கண்ணியத்துடன் தங்கள் உணர்வுகளுக்கு இடம்கொடாமல் தொடர்ந்தும் தாங்கள் அறிந்த உண்மைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கு உண்மையைத் தேடுகின்ற பலர் உலாவுகின்றனர். அவர்களுடைய தேடலுக்கும் ஆய்வுக்கும் உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக அமையும்.

தேசம்நெற்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)
http://thesamnet.co.uk/?p=23085

யாழ். அரியாலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வீட்டுத்திட்டத்தை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார்.

Ariyalai_Jaffnaஎதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா யாழ். அரியாலையில் இந்திய நிதியுதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஒன்றை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள ஆயிரம் வீட்டுத்திட்டத்தையே அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் துரையப்பா விளையாட்டரங்கில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உளவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுகளில் இந்தியத்தாதுவர் அசோக் கே. காந்தா, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.

Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பின் போது கலாசார சின்னங்கள் அகற்றப்பட மாட்டாது எனத் தெரிவிப்பு.

Sankiliyan_Statueபருத்தித்துறை வீதி அகலிக்கப்படவுள்ள நிலையில் அவ்வீதியிலுள்ள சங்கிலியன் சிலை அகற்றப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

சங்கிலியன் சிலை வீதி அகலிப்பின்போது அகற்றப்படலாம் என்கிற கவலை அப்பகுதி மக்களுக்கும் மற்றும் கலாசார உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சிலை அகற்றப்படமாட்டாது எனவும், அதற்கு மாற்று எற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வீதி அகலிப்பு பணிகளின் போது கலாசார சின்னங்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.