March

March

யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் – எச்சரிக்கையுடன் இருக்கக் கோருகிறது ஈ.பி.டி.பி.

அரசியல் கட்சிகளின் பெயராலும் ஒருசில நிறுவனங்களின் பெயராலும் யாழ் குடாநாட்டில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே யாழ். குடாநாட்டு மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டுமென ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கேட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் நலன்புரி நிலையங்களில் இருப்போரை விடுவித்துத் தருவதாகக் கூறி சில சக்திகள் இதேபோன்று பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் குள்ளமான மனிதர் நேற்று திடீர் மரணம்!

shortman.jpgஉலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் நேற்று தமது 21 ஆவது வயதில் மரணமானார் என பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது.  2 அடி 5 அங்குலம் உயரம்  மட்டுமே கொண்ட சீனாவைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தவேளை அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த மனிதரான சுல்தான் கோசனுடன் இவர் உரையாடி மகிழ்ந்தார். இவரது திடீர் மறைவு சீன மக்களுக்குப்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் ஆரம்பமானபோது  சரத் பொன்சேகா இன்று முதல் தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நாளையும் இவர்  நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகளும் இன்று இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தனர்

சரத் பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 : மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல்,  குறைந்த பட்சம்  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும்,  இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A  = 5400 வாக்குகள்
கட்சி B  = 3600 வாக்குகள்
கட்சி C  = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி  முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது,  ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து,  5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும்,  கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும். 

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் +  நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)

எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது
தொடர்புடைய வாக்குகள்  = 11850 – (540+150)  = 11160
இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.

முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண்  = 11160 /  (10-1)  =  1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்,  குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி 

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

           கட்சி           போனஸ்    முடிவான எண்ணுக்கமைய
கட்சி   A                         01                                    04
கட்சி B                           –                                      02
கட்சி C                           –                                       01
சுயேட்சை 1                –                                         –
சுயேட்சை 2                –                                         –

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:

A கட்சி மீதி      354 வாக்குகள்
B கட்சி மீதி      903 வாக்குகள்
C கட்சி மீதி       137 வாக்குகள்
சுயேட்சை 2     மீதி     900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும்,  இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி  போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும்,  முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B  முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும். 

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய,  வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு

BTபிரித்தானிய அரசின் புதியதிட்டத்திற்கமைய பாரிய அளவில் வேலை பயிலுனர்களை சேர்த்துக்கொள்ளும் ஊக்குவிப்பில் பல நிறுவனங்களும் கம்பனிகளும் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. லண்டனில் இந்த திட்டத்திற்கு அமைய பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனமும் (British Telecom) பல புதிய இளம் சந்ததியினரை பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ள அறிவித்தல்களை வெளியிடப்பட்டுள்ளது.

கீழ் உள்ள இணையத்தளத்தில் மேலதிக விபரங்களை அறியமுடியம். இந்த பயிலுனர் திட்டத்தில் சேர விரும்புவோர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இணையத்தள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளக வேலை – பயிற்சி அலுவல்களைப் பற்றி அறிய தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.

T Sothilingam- 0784 6322 369

Good luck

http://www.btplc.com/careercentre/careerstart-apprentices/index.htm
Login to BT Apprenticeship Registration Form or go via www.bt4me.co.uk

சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று ஆரம்பம்

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி ஆரம்பமாகிறது. முதலாவது இராணுவ நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய முதல் அமர்வின்போது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை, 2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை ஆகிய இரண்டு பிரதான வகையிலான விசாரணைகளை முன்னெடுக்கவே இரு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும், 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய அமர்வின்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின்போது நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும், அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ. பி. ஜயலதிக்க ஆகியோரும், நீதிபதி அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னான்டோவும் செயற்பட வுள்ளனர்.

பொன்சேகாவின் கைது அரசியலமைப்புக்கு முரண், நாட்டில் ஜனநாயகம் இல்லை; முன்னாள் பிரதம நீதியரசர்

sarath_silva.jpg“கருத்து பேதத்துக்கு இடமில்லாவிடின் ஜனநாயகம் இல்லை என்பதே எனது கருத்து” என்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்றும் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக சரத் என் சில்வா மேலும் தெரிவித்ததாவது;

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அதிகாரமுள்ள நீதிமன்றத்தில் இன்னும் ஆஜர்படுத்தப்படாமல் இராணுவத்தின் தடுப்புக் காவலில் வைத்திருந்து தற்போது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இது சட்டபூர்வமானதா இல்லையா என்பதே இங்கு அடிப்படை பிரச்சினையாகவுள்ளது.

எமது நாட்டில் அரசியலமைப்பே உயரிய சட்டமாக இருக்கிறது. இதில் அடிப்படை உரிமைகள் என்பது பல வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறது. இதில் பிரதான அடிப்படை உரிமையாக தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. அப்படி அதை மட்டுப்படுத்தி யாதுமொரு நபரை கைது செய்யவோ அல்லது சிறைவைக்கவோ வேண்டுமெனில் அரசியலமைப்பின் 13(1) சரத்தின் பிரகாரமே அதைச் செய்ய வேண்டும். அந்த சரத்தில் தனிநபர் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது யாதுமொரு நபரை தனிநபர் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி கைது செய்யவோ அல்லது சிறை வைக்கவோ வேண்டுமெனில் நாட்டின் சட்டத்திற்கு அமையவே அதை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்படிக் கைது செய்யப்பட்ட நபரொருவர் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லைக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 13(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளை செயற்படுத்தும் ஏனைய சட்டங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 13(3), 13(4), 13(5) ஆகிய சரத்துகளில் விபரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் யாதேனுமொரு நபருக்கு தண்டனை வழங்கப்படும் முன்னர் சாதாரண நீதிமன்றத்தில் திறந்த விசாரணை நடத்தி சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்து சட்டத்தின் மூலமான ஏற்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

எனினும் இங்கு அது தலைகீழாக நடந்துள்ளது. குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கக் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. யாதுமொரு குற்றம் பற்றி தகவல் கிடைத்தால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து, அது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்ய செயற்பட வேண்டும் என அச் சட்டத்தின் 109 ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் யாதுமொருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணம் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 32 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர இராணுவ அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது இச் சட்டத்தின் 37 ஆவது சரத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்துக்குள் உரிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும். இதில் எதிலும் சரத் பொன்சேகாவின் உரிமை பாதுகாக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13(1), 13(2) சரத்துகள் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 109, 32, 37 சரத்துகள் என்பன இங்கு பாதுகாக்கப்படவில்லை.

இதேநேரம், இங்கு இலங்கைச் சட்டம் மட்டும் முக்கியமல்ல. எமது அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டரீதியான சட்டம் இருக்கிறது. எமது அடிப்படை உரிமைகளானது சர்வதேச ரீதியில் மனிதஉரிமைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் மனிதஉரிமைகள் சர்வதேச பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் 3 ஆம் மற்றும் 9 ஆம் சரத்துகளில் நாம் முன்பு கூறிய உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது தனிநபர் சுதந்திர உரிமை மற்றும் தன்னிச்சையான கைதிலிருந்து நபரொருவர் பெற்றிருக்கும் சுதந்திரம் என்பன இதில் அடங்கும். ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்திலும் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த இந்த சாசனத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை பங்காளியானது. அதன் பின்னர் இலங்கைக்கு ஒரு அரசு என்ற வகையில் நாட்டிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளது. எனவே தான் இந்தக் கைதானது அரசியலமைப்புக்கு மட்டுமல்லாது ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்திற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானது.

இதேநேரம் இந்தக் கைதானது இராணுவச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள். இலங்கை இராணுவச் சட்டமானது இராணுவத்தின் ஸ்தாபிப்புக்காகவும் நடப்புக்காகவும் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இராணுவச் சட்டத்தின் பிரகாரமான பல குற்றங்கள் இருக்கின்றன. எனினும் அவை அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே பொருந்தும். எனவே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்கள் யார் என்பது அந்தச் சட்டத்தின் 34 ஆவது சரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது சாதாரண இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், தொண்டர்படை அதிகாரிகள் அதன் சிப்பாய்கள் ஆகியோர் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனினும் இராணுவத் தளபதியை அதிகாரியாக கருவதே இங்கு சிக்கலாகியுள்ளது. எனினும் அப்படியொன்று நடக்க இந்தச் சட்டத்தில் இடமில்லை.

இராணுவச் சட்டத்தின் 162 ஆவது சரத்தில் “அதிகாரி எனும் சொல் வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது இராணுவத்தில் அதிகாரமளிக்கப்பட்டவர் மட்டுமே அதிகாரியாக வரைவிலக்கணப் படுத்தப்படுகிறார். எனவே அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்படும் சிப்பாய்களும் மட்டுமே இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி என்பவர் பற்றி இராணுவ சட்டத்தின் 2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அவர்களது பதவியுயர்வு, பதவி நீக்கம் என்பன சட்டத்தின் 12 ஆவது சரத்தின் பிரகாரம் மேற்கொள்ள முடியும். அத்துடன் சிப்பாய்கள் ஆட்சேர்ப்பு பற்றி இராணுவச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் குறிப்பிடப்படுகிறது.

இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

unp-logo.jpgபொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வெளியிடப்படவிருக்கின்றது. இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் வைபவத்தின் போது இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தல் விஞ்ஞாபனம் இரு பிரிவுகளாக வெளியிடப்படவிருக்கின்றது. இன்று பிரதான விஞ்ஞாபனம் வெளியாகும். அதேசமயம் பெண்களுக்கான ஒரு இணைப்பு விஞ்ஞாபனம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படவிருப்பதாக ஐ.தே.க.செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கு தமிழ் மக்களுக்கான தனது வேண்டுகோள் எனும் தலைப்பிலான பிரசுரமொன்றும் வழங்கப்பட விருக்கின்றது.

ஐ.தே.முன்னணியின் விஞ்ஞாபனம்ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கின்றது. மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள விருக்கின்றனர்.

இன்று காலை 10 மணிக்கு இடம் பெறும் இவ்வைபவத்தில் ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ அமரசிங்க,செயலாளர் ரில்வின் சில்வா, விஜித ஹேரத், அநுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் ஜனநாயக தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர்.

இன, மத, பேதங்களைத் தூண்டும் சக்திகளை தோற்கடிக்க மக்கள் அணி திரள வேண்டும் – ஜனாதிபதி

president.jpgகுறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு தேர்தல் என்ற போர்வையில் மீண்டும் நாட்டில் இன, மத, குல பேதங்களைத் தூண்டிவிட சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அந்நோக்கங்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் ஒன்று திரள வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். விருப்பு வாக்கு மோதல்களைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து செயற்படக் கூடிய காலம் உருவாகியுள்ளதென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சாகல ரஜமஹா விகாரையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் மேலும் உரை யாற்றிய ஜனாதிபதி: நாட்டின் அபி விருத்தியை வெற்றிகரமாக முன் னெடுத்துச் செல்வதற்கு நாட்டு மக்களின் உள ரீதியான அபிவிருத்தி மிக முக்கியமானது.

கடந்த காலங்களில் பிளவுபட்டு புலிகளுக்கு உரித்தாகியிருந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களை மீட்டு, ஒன்றிணைக்க எம்மால் முடிந்துள் ளது. மனிதாபிமான நடவடிக்கைகள் நடைபெற்ற காலங்களிலும் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தோம்.  கடந்த காலங்களில் பாதைகளை, வாய்க்கால்களை அமைப்பதற்கும் யுத்தத்தை காரணங் காட்டி வந்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் நாம் நாட்டை ஒன்றிணைத்ததோடு முழு நாட்டையும் அபிவிருத்திக்குள் ளாக்கும் செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.  கொங்கிரீட் பாதைகள், குடிநீர் வசதிகள் மட்டுமன்றி எதிர்கால த்திற்குத் தேவையான மின்சாரத் தைப் பெற்றுக்கொள்ளவென நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற பாரிய மின் உற்பத்தித் திட்டங்களையும் நடைமுறைப் படுத்தியுள்ளோம்.

ஒரே தடவையில் ஐந்து துறை முகங்களின் நிர்மாணப் பணிகள் நடைபெறுகின்றன. இத்துறைமுகங் கள் செயற்படத் தொடங்கியதும் நாட்டின் கைத்தொழிற்றுறைகளில் அபிவிருத்தி ஏற்படும். நாம் நாட்டின் சகல பிரதேசங் களிலுமுள்ள பிரதேச பாதைகளை அபிவிருத்தி செய்ததன் மூலம் இன்று எங்கும் சென்று வரக்கூடிய வழிபிறந்துள்ளது.

அதே போன்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் துறை முகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டு மைதானம் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமக்கு சிறந்த எதிர்கால சந்ததி அவசியம். அதனைக் கருத்திற் கொண்டே சகல நடவடிக்கைக ளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த பயணத்திற்கு வலுவூட்டும் மக்களுக்கு நாம் நன்றி கூறக் கடமை ப்பட்டுள்ளோம். எமக்குப் பலமான பாராளுமன்றமொன்று அவசியம். வடக்கு கிழங்கை மீள இணைத்து தனி ராஜ்யமொன்றை ஏற்படுத்த வென புலிகளின் ஆதரவாளர்களாகச் செயற்படுபவர்களுக்கு இந்த நாட் டைக் காட்டிக்கொடுக்க முடியாது.  பலமான பாராளுமன்றத்தை அமைக்க நாம் அனைவரும் ஒன்றி ணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமான பாராளுமன்றம் அவசியம்; ஆனால் பாரிய அமைச்சரவை எமக்கு அவசியமில்லை.  இந்நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தி மிக்கோரே எமக்குத் தேவை. அதற்காக புதிய இளைஞர்கள் ஒன்றி ணைந்துள்ளனர்.  அவர்களையும் இணைத்துக் கொண்டு நாம் இப்பயணத்தைத் தொடர்வோம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை வேட்பாளர்கள் சந்திக்கலாம்

dig.jpgபொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் தங்களது பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் அந்தந்த பிரதேசத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள வசதியாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவதுடன், பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.