April

April

ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’ – அமைச்சர் மேர்வின்

m-silva.jpgஊடகவி யலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-

பேனாவை கையில் எடுத்த அனைவரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவியலாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.

சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.

குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தி.மு. இன்று கடமை பொறுப்பேற்பு

dm-jayaratna.jpgஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமர் டி. எம். ஜயரத்ன இன்று தமக்கான பொறுப்புக்களைக் கையேற்கிறார். இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7.30 மணி சுபவேளையில் புதிய பிரதமர் தமது பதவிப் பொறுப்புக்களைக் கையேற்கவுள்ளார். இந்நிகழ்வில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்தது.

ஐ.தே.க..உயர்பதவிகளில் அடுத்த வாரம் பாரிய மாற்றம் செயற்குழு கூடித் தீர்மானிக்கும்

unp_logo_.jpgஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்காக கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவிருப்பதாக தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க அப்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இவ்வாரத்தில் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த வாரத்திலேயே கூடவிருக்கின்றது. தேர்தல் தோல்வியையடுத்து கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் கூடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;

saarc-logo.jpgபூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலைமைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.

சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதையிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதையிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

dutch_policeஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக நெதர்லாந்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சோதணையிட்ட பொலிசார் 40 000 ஈரோ பணம் மற்றும் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணணிகள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிடி க்கள் என்பனவற்றை கைப்பற்றி உள்ளனர்.

நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களில் உள்ள வீடுகளையும் கட்டிடங்களையும் பொலிசார் சோதணையிட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. நிதி சேகரிப்பது நிதி சேகரிப்பு நிகழ்வுகளை நடாத்தி நிதி சேகரிப்பது கலண்டர் டிவிடி என்பனவற்றை விற்பனை செய்து நிதி சேகரிப்பது சட்ட விரோதமான வாக்களிப்பை நடாத்தி நிதி சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் Tamil Coordinating Committee (TCC), the Tamil Rehabilitation Organisation (TRO), Tamil Youth Organisation (TYO), Tamil Women Organisation (TWO) and Tamil Arts and Cultural Organization Netherlands (TKCO), ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டனர். 2008ல் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து பலரைக் கைது செய்திருந்தது. அதன் பிற்பாடு இவ்வாண்டு ஜேர்மன் அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தும் இருந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல புரிந்துணர்வுடன் செயற்படுவோம்; அமிதாப்பச்சன்

amitabh-bachchan.jpgஇலங்கை யில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தக்கூடாதென பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வலியுறுத்தி தமிழ்க் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், சகலரினதும் உணர்வுகளுக்கு நிச்சயமாக தான் மதிப்பளிப்பேன் என்று அமிதாப் பச்சன் நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.

தமிழ்க் குழுவொன்று எனது வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலங்கையில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்த வேண்டாமென என்னைக் கேட்டுக்கொண்டது. இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது விஸ் கிராவ்ட் என்ற அமைப்பாகும். அதன் அதிகாரிகளிடம் நான் இதுதொடர்பாகக் கதைத்துள்ளேன். இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக என்னை வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளேன். இதற்கு உரிய அளவு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று இந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கான கௌரவத் தூதுவரான அமிதாப் பச்சன் தனது இணையத்தளத்தில் தெரிவித்திருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டிருக்கிறது.

மும்பாயில் உள்ள அமிதாப் பச்சனின் பிரதிக்ஸா பங்களாவிற்கும் ஜால்ஸா வாசஸ்தலத்திற்கும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் சிலர் ஊர்வலமாக சென்றுள்ளனர். கொழும்பில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் விழாவை பகிஸ்கரிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, கனடாவிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தமிழ் காங்கிரஸும் அமிதாப் பச்சன் இலங்கைக்கு செல்வது தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்

lightning-01.jpgதெல் தோட்டை ஹைத் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மின்னல் நேரத்தில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்த இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்தோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்போது கடும் காற்றும் வீசியது.

இவ்வேளையில், ஹைத் தோட்டத்தில் வீடொன்றிலிருந்த இராணுவ வீரரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடும் மின்னலின்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இராணுவ வீரர் அவ்விடத்திலேயே கருகிப் பலியானார்.

வீட்டில் வேறு ஆட்கள் இருந்தபோதும் அவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரது சடலம் பின்னர் தெல்தோட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதேநேரம்,கடும் மழையுடன் இங்கு பலத்த காற்றும் வீசியதால் பயன்தரு மரங்கள் உட்படபல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் அடியோடும் பெயர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்துமுள்ளன.

மயோன் முஸ்தபாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது ஓய்வுபெற்ற ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான நோக்கத்தில் இலஞ்சம் வழங்க முன்வந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் நேற்றுக் காலை இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.

இதில் 21 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் முகமட் முசம்மிலின் ஆதரவைக்கோரி அவருக்கு 4.3 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுத்ததாக மயோன் முஸ்தபா மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு முசம்மிலின் ஆதரவைக்கோரி இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கை மூலம் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மயோன் முஸ்தபா மீறியிருந்ததாக நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். தொலைபேசி அழைப்புகளின் பட்டியல், ஒலிநாடா, ஒளிநாடா பதிவுகள் என்பன நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தொடர்பான சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அததெரண செய்திச்சேவை நேற்று தெரிவித்தது

குற்றச்செயல்களை ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டலாம்

go-ra.jpgபயங்கர வாதத்துடன் உருவெடுத்த குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்துடன் உருவான பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள், குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளில் முப்படையினர் முழுமையாக ஈடுபட்டிருந்த அதேசமயம் அவர்களுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் பொலிஸார் வழங்கி வந்தனர். நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ பொலிஸாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதற்கு பொருத்தமான பொலிஸாரை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அந்த நாடு தொடர்பான சிறந்த பிரதி பலிப்பை அந்தந்த நாட்டின் பொலிஸாரின் மூலமே காண்பிக்க முடியும். அதனால் பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார். சமூகம் விரும்பும் சேவையை பொலிஸார் வழங்க வேண்டும். அதே சமயம் சமூகத்தின் மத்தியில் கெளரவத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பொலிஸார் தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொலிஸாருக்கு துறைசார் பயிற்சிகளும் கற்கைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலமே அவர்களிடமிருந்து சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனை நோக்கமாகக் கொண்டே இந்த பொலிஸ் அகடமி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறந்த பயிற்சிகளை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டும், அமுல்படுத்தும் பொலிஸாருக்கு மேலதிக பயிற்சிகளை வெளிநாடுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் நிலவிய காலகட்டத்தில் பொலிஸாருக்கு தேவையான பயிற்சிகள் வழங்க முடியாமல் போனது. தற்பொழுது வழங்கப்படும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

police.jpgவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். களணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.