June

June

யாழ். அரச அதிபராக இமெல்டா சுகுமார் பதிவியேற்பு. முல்லைத்தீவு அரசாங்க அதிபராக நா.வேதநாயகன்.

Imelda_Sugumar_GAயாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த நா.வேதநாயகன் பதவியேற்கிறார்.

யாழ். அரசாங்க அதிபர் திரு கே.கணேஸ் 50 வருடகால அரச சேiயிலிருந்து இன்று ஓய்வு பெறும் நிலையிலேயே நாளை அப்பதவியை  முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எற்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த நா.வேதநாயகன் முல்லை அரச அதிபராக பதவியேற்கிறார்.

போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த யுலை மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ந.வேதநாயகன் அவர்களை நீதிமன்றம் இம்மாதம் 17ம் திகதி குற்றமற்றவர் என விடுதலை செய்தமை குறிப்பித்தக்கது.

இலங்கையின் புதிய வரவு செலவு திட்டம் – பதில் நிதியமைச்சர் வெளியிட்டார்.

இலங்கையின் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டப் பிரேரணை நேற்று (June 29 2010) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வருமானம் 817.8 பில்லியன் ரூபா எனவும், செலவினம் 1279.8 பில்லியன் ரூபா எனவும், துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபா எனவும் பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகமவினால் அறிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வருமானத்தின் நேரடி வரி வருமானமாக 729 பில்லியன் ரூபாவும், மறைமுக வரி வருமானமாக 878 மில்லியன் ரூபாவும் எதிர்பார்க்கப்படுவதாக  சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதே வேளை, 2010ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தின்படி மொத்த செலவினமாக 1279.8பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இதில் நடைமுறைச் செலவினமா 928.3 பில்லியன் ரூபாய்களும், மூலதனச் செலவினமாக 352.5 பில்லியன் ரூபாய்களும் மதிப்பிடப்பட்டுள்ளதாக சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

 இதே வேளை, 2010 ஆண்டிற்கான துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிட்ட அமைச்சர் இந்த வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை 8 வீதமாகக் குறைக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாண்டிற்கான செலவினம் 5.5வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம்; ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் போது அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக்கடன் கொடுப்பனவு எவ்வித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஒதுக்கீடுகள் தொடர்பாக அவர் விளக்கிய போது, இலங்கையில் 30 இலட்சத்தைக் கொண்ட மாணவ சமூகத்திற்கு இலவச பாடநூல்களை வழங்கவும் ஏனைய நலத்திட்டங்களுக்கும் 7300 மில்லியன் ரூபாவும், 74 ஆயிரம் பேரைக்கொண்ட காப்பிணித் தாய்மார் மற்றும், சிறுவர் நலத்திட்டங்களுக்கும் 2500 மில்லியன் டொலர் ரூபாவும், நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக 7500 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி திட்டத்திற்காக 9300 மில்லியனும், ஊழியர் இளைப்பாற்றுத்திட்டத்திற்காக 4500 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வொதுக்கீடுகள் தொடர்பாக அமைச்சர் தகவல்களை வெளியிட்ட போது, எதிர்கட்சியினர் கோசங்களை எழுப்பி ஆட்சேபனை எழுப்பினர். இவ்வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் கருதிய எவ்வித அம்சங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனம் ஒன்று மக்களின் பணத்துடன் தலைமறைவு!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட  இந்நிதி நிறுவனம் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான  சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500 வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது  இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர். சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர். இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு! கட்சியை பதிவு செய்ய முடியவில்லை!

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனியான கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் சிலர் அதன் தலைமைக்கு வலியுத்தி வந்தனர். அதன்படி நேற்று அக்கட்சி பதிவு செய்யப்படவிருந்தது.

இறுதி நேரத்தில் கூட்டமைப்பிருக்கிடையில் எற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இது கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கட்சியின் பதவி நிலைகள் தொடர்பாகவே அம்முரண்பாடுகள் எற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவமளிக்கும் விதமான முயற்சிகளில் அக்கட்சியின் உறுப்பினர்களான இரா.சம்பந்தரும். மாவை சேனாதிராஜாவும் ஈடுபட்டு வருவதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் எற்கனவே தோன்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் முடிவிலேயே கட்சி இயங்குவதாகவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமே தகவல்கள் பரிமாறப்படுவதில்லை முடிவுகள் எடுக்கப்படும் போது கலந்துரையாடப்படவில்லை என ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவும் இந்த மூக்கூட்டினால் எடுக்கப்பட்டு ஜனாநாயக நடைமுறைக்கு மாறாகவே பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.

இவ்வாறு தங்களிலும் மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களை அவர்கள் புலிகள் என்று முத்திரையைப் பயன்படுத்தி இரா சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடத்தை வழங்க மறுத்தார். அதனால் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும். தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக் கட்சியை புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம்காட்டி வந்தனர். அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதிய கட்சியாகப் பதிவு செய்யும் ஆர்வம் பெருமளவில் இல்லை. ஆனால் ஏனைய விடுதலை இயக்கங்கள் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் அடையாளங்களை தமிழரசுக்கட்சியின் அடையாளத்தினுள் புதைப்பது சற்று கடினமானதே.

இந்த முரண்பாடு எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

Arudkumar_Velayuthapillai_DrCharles_Antonythasஇலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் ‘அருட்குமார் இலங்கைப் பயணத்தின் முடிவில் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை’ என்றும் ‘குமரன் பத்மநாதனின் (கே பி) அபிவிருத்திப் பணிகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தார்’ என்றும் சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 29 2010) மாலை தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அருட்குமார் தமிழ்நெற் க்கு வழங்கிய செவ்வியில் குமரன் பத்மநாதன் ஒரு துரோகி என்ற வகையிலேயே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அருட்குமார் லண்டன் வந்த பின்னரேயே இவ்வாறு தனது கருத்தை மாற்றிக்கொண்டார்’ எனத் தெரிவித்தார். ‘தமிழ் சமூகத்தில் இன்னமும் சுயாதீனமாகக் கருத்தை வெளியிடுவதற்கான சூழல் ஏற்படவில்லை என்பதனையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது’ என்றும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

2006ல் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண கே பி யைச் சந்தித்தாக அருட்குமார் குறிப்பிட்டடுள்ளமை பற்றி சார்ள்ஸிடம் கேட்ட போது ‘அந்த உரையாடல் இடம்பெற்ற போது அருட்குமார் அங்கிருக்கவில்லை’ என்றும் ‘விமலதாஸ் அருட்குமாருக்கு கூறிய விடயத்தையே அருட்குமார் தவறாகப் புரிந்துகொண்டார்’ எனவும் சார்ள்ஸ் தெரிவித்தார்.

‘2006ல் தாய்லாந்தில் கபில ஹத்துரசிங்க பணியில் இருந்தபோது கே பியை தேடித் திரிந்தது பற்றிய விடயமே நகைச்சுவையாகப் பரிமாறப்பட்டது’ எனவும் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

அருட்குமார் குறிப்பிட்டது போல் ‘சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளுடைய பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி எதுவும் பேசப்படவில்லை’ என்று தெரிவித்த சார்ள்ஸ் ‘இலங்கையில் தமிழ் மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்றே  கேட்டுக்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்காகவே இந்த விஜயத்தை ஏற்பாடு செய்ததாக அருட்குமார் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த சார்ள்ஸ் ‘அவ்வாறான நோக்கம் இருந்ததாக தனக்குத் தெரியவில்லை’ என்றும் ஆனால் ‘தங்களுடைய நோக்கம் தமிழ் மக்களை மேம்படையச் செய்ய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

அருட்குமாரின் கருத்துக்கு மாறாக ‘நான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சில பணிகளைச் செய்ய முடியும் எனக் கருதுகிறேன். அதற்காக மீண்டும் இலங்கை செல்வேன். எனது மக்களுக்கு உதவித் திட்டங்களை முன்னெடுப்பதே எனது நோக்கம். அந்த மக்கள் பொருளாதார விடுதலையைப் பெறுவதே தற்போது மிக முக்கியமானது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இந்த விஜயம் தொடர்பாக பயணத்தை மேற்கொண்டவர்களது அறிக்கையொன்று தயாராகிக் கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார் சார்ள்ஸ். அருட்குமார் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கும் போது எவ்வாறு இந்த அறிக்கையை வெளியிட முடியும் எனக் கேட்டபோது ‘அவர் தவிர்ந்த ஏனையவர்களின் உட்பாட்டுடன் இன்னும் சில தினங்களில் அவ்வறிக்கை வெளியிடப்படும்’ என சார்ள்ஸ் தெரிவித்தார்.

சார்ள்ஸ் அன்ரனிதாஸ் இன் முழுமையான நேர்காணல் அடுத்தவாரம் முற்பகுதியில் தேசம்நெற் இல் முழுமையாக வெளியிடப்படும்.

இலங்கை சென்ற புலி ஆதரவுக்குழுவின் சார்ள்ஸ் – அருட்குமார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்து வெளியிட்டு உள்ளனர்!

 புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் சூடான சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. யூன் 15 முதல் யூன் 20 வரை லண்டன், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்டகுழு கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் அழைப்பில் இலங்கை சென்று திருப்பி இருந்தது. நாடு திரும்பியவர்கள் ஒரு வாரகாலமாக மௌனம் காத்தனர். தேசம்நெற், ரிபிசி ஊடகங்கள் இலங்கை சென்று திரும்பியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் மறுநாளே அவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்தனர்.

இந்த விஜயம் தொடர்பாக தேசம்நெற், ரிபிசி இல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிபிசி தமிழோசையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டவர்களில் ஒருவரான சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 28 2010) ஒரு நேர்காணலை வழங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை, ‘டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் பயணம் செய்யவில்லை. அவ்விஜயம் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை’ யென அவ்வமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நெற் டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நேர்காணலை இன்று (யூன் 29, 2010) வெளியிட்டது. ஆனால் இந்த நேர்காணல் இருநாட்களுக்கு முன் (யூன் 27 2010) பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நெற் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சார்ள்ஸ் இனதும் அருட்குமாரினதும் நேர்காணல்கள் முற்றிலும் முரண்பட்ட தகவல்களை வழங்குகின்றது. இலங்கைக்குச் சென்றது யார் யாரைச் சந்தித்தது, எங்கெங்கு சென்றது என்ற தகவலைத் தவிர ஏனைய உள்ளடக்கங்களில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களையும் தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த விஜயத்தினை கே பி யே ஏற்பாடு செய்ததாகவும் இந்த விஜயத்திற்கு முன்னதாகவே கே பி இங்குள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டதாகவும் இந்த நேர்காணல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சென்றவர்கள் கே பி யை முதலில் சந்தித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் படை அதிகாரிகளையும் சந்தித்தாக இவ்விருவருமே தெரிவித்துள்ளனர்.

சார்ள்ஸ் தனது பேட்டியில், ‘‘நாங்கள் இந்த அழைப்பிற்காக கனநாளாகக் காத்திருந்தோம். நாங்கள் வன்னி முகாம்களுக்கு, போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களுக்கு செல்ல விரும்புவதை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் பல காலமாகப் பதில் வரவிலை.’’ என்று தெரிவித்தவர், கே பி அவர்களின் ஏற்பாட்டால் இது சாத்தியமானதாகத் தெரிவித்தார். இவ்விஜயத்திற்கு முன்னதாக கே பி தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆனால் மற்றையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் சார்ள்ஸ் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த அருட்குமார், ‘‘என்னை வரச்சொல்லிக் கேட்ட ஆளிடம் நான் அங்கு வந்தால் பிரச்சினை இருக்காதா என்று கேட்க, அவர் சொன்னார், ‘ஸ்ரீலங்கன் கவர்மன்ற் செல்வராஜா பத்மநாதனுக்கால் தான் இதை அரேஞ் பண்ணுகிறது. அதால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. உங்களை ஒரு விஐபி போலத்தான் ரீற் பண்ணுவார்கள்’ என்று சொன்னார். அப்படி ஒரு உத்தரவாதத்தைத் தந்தபடியால்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.’’ என்று தெரிவித்து உள்ளனர்.

தங்கள் விஜயத்தின் போது பொதுமக்களைப் போராளிகளைச் சந்தித்தது பற்றி, ‘‘ஐடிபி காம்புகளுக்குப் போய் ஆட்களைச் சந்திக்க என்றுதான் போனது ஆனா அங்க வின்டோவால் பார்த்தமாதிரி எங்களை பிறியா சந்திக்கவிடவில்லை. எங்களைச்சுற்றி முன்னாலை பின்னாலை எல்லாம் சுற்றிக்கொண்டு நிண்டவை. ஆக்களை அங்கு என்ன நடக்குது என்று சொல்ல விடேல்லை. 16ம் திகதி கிளிநொச்சிக்குச் சென்றம். அங்கு மக்கள் ஒருத்தரையும் சந்திக்கவிடேல்லை. அடுத்தநாள் வவுனியாவில் 2007, 2008ல் இயக்கத்தில் சேர்ந்த போராளிகள் உள்ள பாடசாலைக்கு கூட்டிச் சென்றவை. அங்கையும் அவர்களுடன் தனிய கதைக்க விடாமல் அவை சுத்திக்கொண்டு நிண்டவை. பிறகு மனிக்பாமில் சோன் 4க்கு எங்களைக் கூட்டிச்செல்லக் கேட்க அவர்கள் அதை சாதுரியமாக விட்டுப்போட்டு சோன் 2க்கு கூட்டிச்சென்றார்கள். அங்க ஒராளிட்டை தம்பி எங்க இருந்து வந்தனி? என்ன படிக்கிறாய்? எந்தப் பள்ளிக்கூடம் என்று கேட்க அவருக்கு எந்தப் பள்ளிக்கூடம் என்று தெரியெல்லை. அவருக்கு கொன்ரினியூ பண்ணேலாமப் போச்சு அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு அவை ஆமியின்ர ஆள் என்று.’’ அருட்குமார் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி குறிப்பிடும் சார்ள்ஸ்,”மக்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பிரிஅரேஞ்மன்ற் மீற்றிங்கிலும் செய்யப்பட்டு இருந்தது. தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொது மக்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது. கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்களையும் சந்திக்கக் கூடியதாய் இருந்தது. விடுதலைப் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்று பார்க்கக் கூடியதாக இருந்து. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் ஏ எல் ஸ்ரூடன்சை மாத்திரம் தான் பார்க்கக் கூடியதாய் இருந்தது.’’

அருட்குமார் தனது பேட்டியில் சுயாதீனமாக யாருடனும் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்பயணம் முற்றிலுமாக இலங்கை அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயணம் என்பதை முழுமையாக அறிந்து சென்றிருந்த அருட்குமார் தன்னை சுயாதீனமாக மக்களையும் போராளிகளையும் சந்திக்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையை எப்படிப் பெற்றார். இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருடன் மேற்கொண்ட விஜயத்தில் என்ன சுயாதீனம் காண விளைந்தார். ஆனால் சார்ள்ஸ், ‘‘தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொதுமக்களையும் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது.’’ என்று பொசிட்டிவ் ஆகவே தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். சார்ள்ஸ் இவ்விஜயத்தை பொசிடிவ்வாகவே அணுகி உள்ளதை அவருடைய பல பதில்களில் இருந்து காணலாம்.

குமரன் பத்மநாதன் பற்றி அருட்குமார், ‘‘நான் இங்க இருந்து வெளிக்கிட்டுப் போகேக்க செல்வராசா பத்மநாதனுக்கால ஏதாவது செய்யலாம் என்று நினைச்சுத்தான் போனது. அங்க திரு கோத்தபாய ராஜபக்ச உள்ளுக்கு வரேக்க செல்வராஜா பத்மநாதன் எழுந்து அவரை ஆரத்தழுவ முற்பட்டார். அதே எனக்கு பார்க்க ஒரு அந்தரமா இருந்திச்சு. கபில ஹெந்தவிதாரனவின்ர மாஸ்டர் மைன்ட்ல தான் இதெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தான் நான் நினைச்சன். ஆனா பிறகு இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் சொல்கிறார் நான் இவரை 2006ல் சந்தித்தனான் என்று. எனக்கு 2006ல் எங்கு சந்திச்சவை என்று விளங்கேல்ல. என்னோட வந்த ஆக்களும் அதைத்தான் யோசிச்சு இருக்கினம். அந்தக் கேள்வியை திரு செல்வராஜா பத்மநாதனிடம் திருப்பிக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. அவர்கள் சொல்ல வாறது என்ன என்றால் உங்களுக்காளையோ வேறுவழியாலையே டயஸ்போராவை காலடியில் கொண்டுவருவம் இதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.’’ என்றார்.

குமரன் பத்மநாதன் பற்றிய சார்ள்ஸின் கருத்து அருட்குமாரின் கருத்தில் இருந்து முற்றாக மாறுபட்டதாக இருந்தது. ‘‘எங்கட மக்களை நாங்கள் பார்க்க விரும்புகிறம். எங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ரிப்பியுஜி காம்புகளையும் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தம். குறிப்பாக பழைய போராளிகளைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தம். நாங்கள் எடுத்த முயற்சிளை குமரன் பத்மநாதன் தான் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடியதான சூழ்நிலையை உருவாக்கி இருந்தார். தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை நாடிநிற்கிறேன். மக்களின் ஒத்தழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டிருந்தார். இப்படி ஒரு சூழ்நிலைக்குள் பத்மநாதன் அவர்கள் வந்தது எங்களுக்கு சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது…. ஆனால் நாங்கள் கண்டது கே பி தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். அவரின் கையில் விலங்கிடப்படவில்லையே தவிர எப்போதும் நான்கு பேர் காவலுக்கு நிற்பதை நாங்கள் கண்டோம். அவர் இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குக் கீழ் இருப்பதாகச் சொல்லலாம் ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்துடன் கோப்ரேற் பண்ணுகிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சில விசயங்களில் உறுதியாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.’’ என்று சார்ள்ஸ் குமரன் பத்மநாதன் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார். அருட்குமாரின் கருத்துக்கள் நம்பிக்கையீனத்தின் அடித்தளத்தில் இருந்து உருவாகி இருப்பதையும் சார்ள்ஸின் கருத்துக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

‘‘எல்ரிரிஈ இன் காசுகள் நிறைய வெளிநாடுகளில் இருக்கின்றது அந்தக் காசை நாட்டை கட்டியெழுப்ப பாவிக்க வேண்டும் என்று கேட்க அப்ப நான் கேட்டன் ரிஆர்ஓ வின் பண்டுகள வைச்சிருக்கிறீங்கள் தானே அதில ஸ்ராட் பண்ணங்கோ என்று. அதுக்கு அவர் நீங்கள முதலில் அந்தக் காசுகளைக் கொண்டுவாங்கோ அதுக்குப் பிறகிட்டு இதுகளைப் பார்ப்பம் என்றார்.’’ என நிதி பற்றிய விடயத்தில் அருட்குமார் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் பற்றி சார்ள்ஸ் குறிப்பிடும் போது, ‘‘அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் என்னவாக இருந்தாலும் தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல கண்மூடித்தனமாக நடப்பதற்கு. நாங்களும் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பணத்தை திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்பது பற்றிய எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.’’ எனத் தெரிவித்தார். 

இந்த விஜயம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவுத்தளத்தில் இது கணிசமான பிளவை ஏற்படுத்தி உள்ளது. அருட்குமாரின் கூற்றுப்படி இந்த இலங்கை விஜயத்தை அந்த நோக்கிலேயே அரசு திட்டமிட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அருட்குமார் குமரன் பத்மநாதனை பச்சையாகத் துரோகி என்று சொல்லாமல் சுற்றிவளைத்து அதனையே தனது நேர்காணலில் வெளிப்படுத்தி உள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இனவாதத்தை நியாயப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் அருட்குமார் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டமே கே பி இன் தமிழர் புனர்வாழ்வு மையம் – ரீஆர்சி என்கிறார் அருட்குமார்.

அருட்குமார், சார்ள்ஸ் உட்பட ஒன்பதுபேர் சென்று வந்த இவ்விடயம் அவர்கள் இலங்கை செல்வதற்கு முன்னரேயே உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடப்பட்டு வந்தது. ‘இவர்கள் செல்கிறார்கள் என்ன விடயம் எமக்கு முன்னரே தெரியும்’, என பிரிஎப் உடன் நெருக்கமாக பணியாற்றுபவர் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரிஎப் இந்த விஜயம் பற்றி தங்களுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை என நேற்று (யூன் 28 2010) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மரணமாகிய செய்தியை ஜிரிவி ஒலி பரப்பியது. அச்செய்தி ஒலிபரப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜிரிவி தாக்குதலுக்கு இலக்கானது. அதனைத் தொடர்ந்து ஜிரிவி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ”தலைவர் தலைமறைவாகி பாதுகாப்பாக உள்ளார்”, என அறிவித்தது. இது பற்றி ஜிரிவி ஊடகத்தினரிடம் கேட்டபோது. ”நாங்கள் என்ன செய்ய. ரிவியை நடத்த வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். உண்மை அறிய மக்கள் விரும்பாவிட்டால் என்ன செய்ய?” எனப் பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பீடுகையில் ‘’வந்த தொலைபேசி அழைப்புகளும் மிரட்டல்களும் போனை எடுக்கவே பயமாக இருந்தது’’ எனவும் தெரிவித்தார்.

அருட்குமாரின் கருத்துக்கள் ஆச்சரியமானதோ அல்லது புதியவையோ அல்ல. அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் அறிந்தே உள்ளனர். அருட்குமார் இலங்கை செல்வதற்கு முன்பே இக்கருத்தை அறிந்தே வைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கைதியாக உள்ளவருடன் சேர்ந்து சுயாதீனமாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என எவ்வாறு எண்ணி இலங்கை சென்றார் என்பது ஆச்சரியமானது. இல்லையேல் தகவல் பெறுவதற்காக சென்றிருக்க முடியும்.

சென்றவர்கள் செல்லமுன் அல்லது வந்தவுடன் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அருட்குமாருடைய தொலைபேசி கூட செயலிழந்த நிலையிலேயே இருந்தது. மாறாக ஊடகங்கள் தகவல் அறிந்து செய்திகளை வெளியிட்டு கேள்விகளை எழுப்பிய பின்னரே அழுத்தங்கள் காரணமாக மக்களுக்கு கதை சொல்லப் புறப்பட்டு உள்ளார். அதுவே இந்த முரண்பட்ட தகவல்களின் பின்னணி பற்றிய பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

மக்களுக்கு இந்த விஜயத்தில் நடந்த உண்மைகளை அறிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. இந்த விஜயத்தில் பங்கு கொண்ட ஏனையவர்களும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதன் மூலமே மக்கள் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து ஒரு முடிவுக்கு வரமுடியும். 

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

யாழ். விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதித் தூதுவரை கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.

British_High_Commission”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளனர்;  நேற்று (June 28 2010) யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதித்தூதுவர் மார்டின் புட்டினிஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

”யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றபட்ட ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.  வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள கொடிகாமம் இராமாவில் முகாமிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் மக்கள் முழுவதுமாக மீள்குடியேற்றப்படவில்லை.

வன்னியில் பரந்தளவு நிலப்பரப்புக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.  அப்பகுதிகளில் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது, ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வாறு செலவிடப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.”

இவ்வாறான விடயங்கள் கூட்டமைப்பினரால்  விளக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sampanthan_Rதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளன. கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்  கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை 6 மணிக்கு இச்ந்திப்பு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழ் மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் உடனடிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டியுள்ளமை குறித்து கூட்டமைப்பு தலைவரிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் கேட்கப்பட்டுள்ளது.

இரு பெண்களை பாலியல் வல்லறவுக்குட்படுத்திய இராணுவத்தினருக்கு பிணை வழங்க நீதவான் மறுப்பு!

Court_Symbolகிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை  மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி அரசாங்க அதிபர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் மீள்குடியேற்றம் பற்றிய மாநாடு

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி. ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

மீள்குடியேற்றப்ட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றம், வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்குவது என்பது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய