13

13

அமெரிக்காவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு ! – அடுத்த வருட இறுதி வரை மீட்சி இல்லை.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனால் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணரான அந்தோனி பாசி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம். என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது..

நிறுத்தபட்ட ஒக்ஸ்போர்ட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பணி மீண்டும் ஆரம்பம்!

ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்ட்டியூட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வருகிறது.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை சீரம் மருந்து நிறுவனம் நடத்தி வந்தது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியததைத் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை குறி்த்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மருந்து பாதுகாப்பானது எனத் தெரியவந்ததையடுத்து, மீண்டும் கிளினிக்கல் பரிசோதனையைத் தொடங்க பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது

இதுகுறித்து ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

“ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு  மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது .

எங்கள் மருந்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் வேறு எந்த தகவலையும் பரிமாற முடியாது.

கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் உடல்நலத்தில் அஸ்ட்ராஜென்கா தீவிரமான அக்கறை கொண்டு, உயர்ந்த தரத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

உலகளவில் உள்ள மருத்துவ வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடன் தொடர்ந்து இனி சேர்ந்து பணியாற்றி, கிளினிக்கல் பரிசோதனையை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்களை தெரிவித்து, மீண்டும் பரிசோதனையை தொடங்கக் கூறுவோம்.

கொரோனாவைரஸ் பரவல் சூழலில் எந்த லாபநோக்கமின்றி செயல்படுகிறோம் . கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் விவரங்கள் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்டவர்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்“ – சி.வி.கே.சிவஞானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா,  எம்.ஏ. சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்  போது பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் சி.வி.கே.சிவஜானம் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.

அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் சமர்ப்பித்து, விடையங்களை ஆராய்ந்து, அந்த குழுவில் யார் யார் இருக்கின்றார்கள் என ஆராய்ந்து தீர்மானித்து அது பரிசீலிக்கப்படும்.

ஆனால் அது மட்டும் இல்லை ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது.

சுமந்திரன், சிறிதரன் மற்றும் குணாளன் தொடர்பான முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றது. எனவே இந்த விடயங்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பின் புதிய செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” – சி.வி.கே.சிவஞானம்

அண்மையில் தமிழ்தேசியகூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர் பதவி விலகுவதாக தன்னுடைய ராஜினாமா வழங்கியதையடுத்து கூட்டமைப்பின் அடுத்த செயலாளர் விரைவில் தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் கே.சிவஞானம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்து துரைராஜா சிங்கம் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தவர். எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

பொதுச் செயலாளர் யார் என தீர்மானிக்கப்படவில்லை.ஆனால் அது தொடர்பில் பல தரப்பினரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் எனது நிலைப்பாடு புதிய செயலாளர் மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை நான் ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறி உள்ளேன் என்றார்.

“மாவை.சேனாதிராஜாவின் தோல்வி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை காட்டுகின்றது” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என கமாவைமாbருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனூடாகத் தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும். இதனை ஓர் இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.

இன்று எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தத் திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளத் தற்போது தீர்மானித்துள்ளோம்.

முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மக்களுக்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.

கடந்த காலத் தேர்தல்களின்போது சில தரப்பினர் சாராயப் போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதற்கான  ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் தோல்வியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை வரவேற்கக் கூடியது. இது எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை விமர்சிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை அரசு ஏற்றுக்கொள்ளும்” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திலீபன் ஓர் நோயாளி, நோயுற்றிருந்த திலீபனை பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்- கமால் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் மேலும் கூறுகையில்…

“பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்கைகள் அநீதியானவை அவற்றை நிறைவேற்ற முடியாது. தங்களது சட்டத்தரணிகள் சார்பிலும் போராடுகின்றனர். சட்டத்தரணிகளையும் சோதனையிடக் கூடாது என கோரியிருந்தனர். அந்த விடயம் அவர்களுக்கு தேவையற்றது.”

நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர். நான் பூசா சிறைச்சாலைக்கு சென்றாலும் என்னையும் சோதனையிடுவார்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சென்றாலும் சோதனையிடுவார்கள். இந்தச் சிறைச்சாலை அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாகும்.”

“இலங்கை வரலாற்றில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த ஒருவரே இருக்கின்றார் அவர் திலீபன்” ஆவார், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உயிரிழக்கவில்லை, திலீபன் ஓர் நோயாளி, நோயுற்றிருந்த திலீபனை பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.”

“இது தவிர ஏனையவர்கள் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள், ஏதேனும் ஓர் காரணத்திற்காக இவ்வாறு உண்ணாவிரதம் கைவிடப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பூசாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளுக்கு உணவு காணப்படுகின்றது தேவையென்றால் அவர்கள் உணவு உட்கொள்ள முடியும். சிலர் சாப்பிட மாட்டோம் என்று போராடி வருகின்றனர் இன்னும் சில நாட்களில் அவர்கள் சாப்பிடுவார்கள், அது ஒரு பிரச்சினையல்ல.”

“குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் தராதரம் அவர்கள் சீருடை அணிபவர்களா? என்பது பற்றியெல்லாம் நாம் கரிசனை கொள்ளப் போவதில்லை, அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்படும்” என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.