November

November

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” – பழனி திகாம்பரம் 

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வானொலி நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை நாட் சம்பளமா? என்பது பற்றி விபரிக்கப்படவில்லை.

இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கமாட்டார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மக்களின் வழிபாட்டு உரிமையை தடைசெய்யும் பொலிஸார் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்து மக்களால் கொண்டாப்படும் கார்த்திகை விளக்கீடு மக்களின் வீடுகள் ஆலயங்களில் கொண்டப்பட்டுள்ளது.

இருப்பினும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்ற படையினர் காவற்துறையினர் வீடுகளில் முன்னால் நிறுத்தப்பட்ட வாழைக்குற்றிகளை பிடுங்கி எறிந்துள்ளதுடன் விளக்கீட்டு பந்தங்களையும் அகற்றி அட்டகாசம் புரிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

விளக்கீடு கொழுத்தக்கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லையா? என முள்ளிவாய்க்கால் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

மாவீரர் நாள் அன்றும் பீல்பைக்மோட்டார்சைக்கில்களில்  துப்பாக்கி ஏந்திய படையினர் வீடுகளின் முன்னால் ஒழுங்கைகள் தோறும் பாரிய சத்தத்துடன் சுத்தி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்கால் மக்களை அச்சுறுத்தும் விதமாகவே படையினர் காவற்துறையினர் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

IMG 2087

இதேவேளை உடையார் கட்டு தெற்கு மற்றும் குரவில்  பகுதியில் படையினரின் முகாம்களுக்கு அருகில் உள்ள மக்கள் கார்த்திகை விளக்கீட்டினை செய்யமுடியாத நிலையில் படையினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை! 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை விடுவித்தனர்.

இதேவேளை, “மாணவன் கைது விடயம் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனை கைதுசெய்தமை தவறு எனச் சுட்டிகாட்டினேன்.

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்” என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மேலும்,  மாணவன் கைது பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியிலும் அவுஸ்ரேலியா அபாரம் – தொடரை இழந்தது இந்தியா !

இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான 2-வதும் தீர்க்கமானதுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 4 இலக்குகள் இழப்பிற்கு 389 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்ரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104  ஓட்டங்களும், டேவிட் வார்னர் 83 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 60 ஓட்டங்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ஓட்டங்களும் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 பந்துப்பரிமாற்றங்களில்  70 ஓட்டங்களும், பும்ரா 10 பந்துப்பரிமாற்றங்களில் 79 ஓட்டங்களும், முகமது ஷமி 9 பந்துப்பரிமாற்றங்களில் 73 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர் 390 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ஓட்டங்களில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது இலக்குக்காக விராட் கோலி உடன் கே.எல் .ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது பந்துப்பரிமாற்றத்தின் 5-வது பந்தில் 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்தியா 4 இலக்குகள்  இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்திருந்தது, கே.எல்.ராகுல் 66 பந்தில் 76 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ஓட்டங்களும், ஜடேஜா 24 ஓட்டங்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 இலக்குகள் இழப்பிற்கு 338 ஓட்டங்களே அடித்தது.
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
இதனால் அவுஸ்ரேலியா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் கைது !

தனது முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை திருகோணமலை சம்பூர் பகுதியில் வைத்து தாம் கைது செய்துள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு  (27.11.2020) இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் குறித்த இளைஞனை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளை முன்னிட்டு 34 பாடசாலைகளை தத்தெடுத்த கிரிக்கெட் வீரர் – குவியும் பாராட்டுக்கள் !

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற அடையாளத்தைக் கொண்ட சுரேஷ்ரெய்னா தனது 34ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ரெய்னா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ரெய்னா விளையாடத் தொடங்கினார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றார்.

தற்போது தனது 34ஆவது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக 34 பள்ளிகளைத் தத்தெடுத்து குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க சுரேஷ் ரெய்னா முன்வந்துள்ளார். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள்ப் பயன்பெறுவார்கள். இதுபோக 500 ஏழைப் பெண் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களும் வழங்கியுள்ளார் ரெய்னா.

இந்த உதவிகள் அனைத்தும்  சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அடுத்த வருடம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெறும். காஷ்மிர், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது மகள் பெயரில் இயங்கி வரும் கிரேசியா பவுண்டேசன் மூலம் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட சேவையை மேற்கொள்ள ரெய்னா ஆயத்தங்களை செய்து வருகிறார்.

சுரேஷ் ரெய்னாவின் இந்த தொண்டு உள்ளத்தைப் பாராட்டி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

“வன்னி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வொன்றை அரசு வழங்க வேண்டும்” – சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் !

“வன்னி மக்களின்  குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகளை வழங்காது நிரந்தரமாக குடிநீர் திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று(28) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வுகளை வழங்காது நிரந்தரமாக குடிநீர் திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது வரையில் 45 வீதமானவர்களுக்கே சுத்தமான குடிநீர் கிடைக்கின்றது. அதுவும் மழைநீர் அல்ல, நிலத்தடி நீரே அவ்வாறு குடிநீராக வழங்கப்படுகின்றது. இந்த நிலத்தடி நீர் சிறுநீர நோயாளர்களை உருவாக்குகின்றது.

நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டத்தில் வன்னி மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே குடிநீரை வழங்கவும் தூய்மையாகவும் நோய்கள் இல்லாத வகையிலும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்லாறு, பாலியாறு ஆகிய ஆறுகளின் ஊடாக அதிகளவினால நீர் கடலுக்கு செல்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வரும் மண்டைக்கள் ஆறு ஊடாகவும் அளவுக்கு அதிகமான நீர் கடலுக்கு செல்கின்றது. எனவே இந்த மூன்று இடங்களை மையப்படுத்தி நீர் தேக்கங்களை அமைத்து எமது பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்க முடியும்.

குடிநீர் எமது மக்களுக்கு அத்தியாவசியமானதாகும், அதேபோல் எமது மக்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறுவதை தடுக்கவும் வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“எமது மக்களின்  வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி என பேசுவது வேடிக்கையாக உள்ளது”  – கோவிந்தன் கருணாகரன்

“எமது மக்களின்  வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி என பேசுவது வேடிக்கையாக உள்ளது”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எம்மை பிரிவினைவாதிகளாக, இனவாதிகளாக ,பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள். எமது சார்ந்த, எமது பிரதேசம் சார்ந்த ,எமது மக்கள் சார்ந்த, அவர்களின் தேவைகள் சார்ந்த அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி, இவர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டுமென இந்த சபையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உற்பட பலரும் உரையாற்றுகின்றீர்கள், இது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது .இது உங்களின் அறியாமையா? என சந்தேகப்படத் தோன்றுகின்றது.

தயவு செய்து உலக விடுதலைப்போராட்ட நாயகர்களின் வரலாற்றை இதய சுத்தியோடு உங்கள் அறிவுக்கண் திறந்து நோக்குங்கள். ஆயுதப்புரட்ச்சி மூலம் மக்கள் விடுதலையை நாடிய எத்தனையோ தலைவர்கள் காலப்போக்கில் ஜனநாயக வழி வந்தமையே உலக வரலாறு. உதாரணத்துக்கு நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத், ஹசன் டி டீரோ ஆகியோரைக் குறிப்பிட முடியும். எமது நாட்டில் கூட 1971 இல் ஆயுதம் தூக்கி பின்னர் ஜனநாயகவழி வந்த ஜே.வி.பி.யினரை அன்று பயங்கரவாதிகள் என்றே அழைத்தனர். இன்று அவர்கள் மீது அப்படி ஒரு வார்த்தை பிரயோகத்தை நீங்கள் எவரும் பிரயோகிப்பதில்லை.

ஆனால் ஆயுதமேந்தி பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு வாக்குரிமை மூலம் இந்த உயரிய சபைக்கு வந்து நாம் உரையாற்றும்போது எம் மீது மட்டும் ஏன் உங்கள் குரோதம்? ஓர வஞ்சனை? ஏன் உங்கள் கண் மூடிய பார்வை? உங்கள் மனக்கதவை திறவுங்கள், உண்மையை உணருங்கள்” எனகுறிப்பிட்டுள்ளார் .

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” – வீரசேகரவுக்கு எம்ஏ.சுமந்திரன் பதில் !

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

“புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் ?  அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே  எம்.ஏ. சுமந்திரன் மேற்கன்டவாறு நேற்று  பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசியதாவது,

“அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர்.

அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.

600 வரையான சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை !

சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 600 கைதிகள் வரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது” என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.