January

January

குருந்தூர் மலைக்கு தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பொலிஸார் அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அண்மையில் முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் பார்வையிடுவதற்கு, முல்லைத்தீவு காவல்துறையினர் முறைப்பாட்டாளர் ரவிகரனை 29.01.2021 இன்று குருந்தூர் மலைக்கு அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மலைப்பகுதிக்குள் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் விபரங்களைச் சேகரித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – பக்கவிளைவுகள் எவையும் பதிவாகவில்லை !

நேற்று முன்னிலை பணியாளர்கள் உட்பட 5286 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் பக்கவிளைவுகள் குறித்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணியாளர்களும் முன்னிலை பணியாளர்களும் மருந்தை செலுத்திக்கொள்வது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை நாளையும் நாங்கள் மருந்துவழங்குவதை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பெருமளவு சுகாதார பணியாளர்களுக்கும் முன்னிலை பணியாளர்களுக்கும் மருந்துகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது” – வைத்தியசாலையிலிருந்து சுகாதாரதுறை அமைச்சர் !

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையால், கொரோனாத்  தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவால் வழங்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை முதலில் சுகாதாரப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைகின்றார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கொரோனாத் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தைத் தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

300 ஐ தாண்டிய கொரோனா உயிர்ப்பலி – மேலும் எட்டுப்பேர் பலி !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” – அமைச்சர் உதய கம்மன்பில

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் திரண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன.

அரசுக்கு எதிராகத் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தியோ அல்லது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அழுத்தங்கள் கொடுத்தோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது.

நாட்டின் இறையாண்மையை மீறி எவரும் அரசை நோக்கிக் கைநீட்ட முடியாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே நாம் செயற்படுகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டை சர்வதேசத்திடம் நாம் அடகுவைக்க மாட்டோம். அதைச் செய்வதற்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கவில்லை.

சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை எவரும் உதாசீனம் செய்ய முடியாது.

மக்களின் ஆணையே ஏற்றே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகினோம்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கொள்கை.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்காமல் தேசிய பிரச்சினைக்குப் பொதுவான ஓர் அரசியல் தீவையே எமது அரசு வழங்கும்.

நாட்டின் சட்ட திட்டங்களை மீறி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றீர்கள் எனத் தமிழ் சிவில் சமூக அமைப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

“இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது” – ஐக்கிய மக்கள் சக்தி

“இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது” என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நோக்குகையில், எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கை சவாலை எதிர்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.

ஆணையாளரின் அறிக்கையில் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்கள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக போர் முடிவடைந்து சுமார் 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் முறையான பொறிமுறை ஒன்றினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்தியமைக்குமாறே நாம் வலியுறுத்தினோம். எனினும், அரசு அதனை முழுமையாக இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை விரிவாகவும் ஆழமாகவும் ஆராயவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அதனை முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரின்போது அதற்கு முறையான பிரதிபலிப்பையும் வெளிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், அனைத்தையும் புறக்கணித்து விடவும் முடியாது. சர்வதேசத்தின் மத்தியில் ஏனைய நாடுகளின் உதவியின்றி எம்மால் தனித்துப் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டின் மீது சர்வதேசத்தால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். எனினும், நாம் இவை அனைத்தையும் நடுநிலையுடன் ஆராய்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் சபையுடனும் கலந்தாலோசித்து, நேர்மறையான தீர்வொன்றை நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமான செயற்பாடாகும் ”  என்றார்.

ஆரம்பமானது கொரோனா தடுப்பூசி போடும் பணி – இலங்கையில் போடப்படும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் இவை தான் !

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் ஆகும்.

இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக தொடும் போது வலி, வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும். லேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவானவை.

தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

“இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐ.நா மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நாங்கள் அவதானமாக ஆராய்கின்றோம்” – அமெரிக்கா

கடந்த 12 மாதங்களில் இலங்கையில் தண்டனையின்மையை ஆழப்படுத்துதல், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அதிகரித்துவரும் இராணுவமயப்படுத்தல், இனவாத தேசியவாத கருத்துகள், சிவில் சமூகத்தினர் அச்சுறுத்தல் போன்ற போக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து தெரிவிக்கும் ஐ.நா.வின் அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான வலுவான தீர்மானம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதை கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும் நடைமுறைகளும் மீண்டும் உருவாவதற்கு வழிவகுக்கின்றது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நாங்கள் அவதானமாக ஆராய்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கு இன்றே மதிப்பளிப்பதும், கடந்த கால விவகாரங்களைக் கையாள்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமான விடயம் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தாக்கத்தால் ஆண்மை குறைவு ஏற்படும்“ – ஜேர்மனிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் !

இதுவரை காலமும் கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த நாளங்களில் ரத்தம் உறையும். இதனால் இதயம் செயலிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் “கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 ஆரோக்கியமான ஆண்களுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா பாதித்த ஆண்களின் விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த வேதியியல் ஏற்றத்தாழ்வு உடலில் உள்ள டி.என்.ஏ. மற்றும் புரதங்களை சேதப்படுத்தும்.

விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள இந்த விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆணின் இனப்பெருக்க அமைப்பானது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பாதையாக கருதப்பட வேண்டும். ஆபத்தான உறுப்பு என்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உடலின் முக்கிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமல்ல நுரையீரல் திசுக்களை அணுகுவதற்கு வைரஸ் பயன்படுத்தும் அதே ஏற்பிகள் விந்தணுக்களிலும் காணப்படுகின்றன. இது ஆணின் இனப்பெருக்க உறுப்புகளையும் பாதிக்கும். விந்து உயிரணுவின் வளர்ச்சியையும் குறைக்கும். இனப்பெருக்க ஹார்மோன்களையும் சீர்குலைக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” – சீ.வி.கே.சிவஞானம்

“மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்” என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் ஊடகச் செய்திகளின் மூலமாக அறிய வந்துள்ளது.

குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகள் அல்லாத அரச பாடசாலைகள் அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயம் என்ற ரீதியில் இந்தப் பத்துப் பாடசாலைகளும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தவையாகும். அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்த நிர்வாக அதிகார மாற்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு பிரச்சினை அல்ல.

அவற்றை விட தேசியப் பாடசாலைகளுக்கு ஏதாவது மேலதிக வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாயின் அவற்றை மாகாண நிர்வாகத்தின் மூலம் வழங்க முடியும். அவற்றுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.

இந்நச் செயற்பாடு சமூகத்தில் தேசியப் பாடசாலைகள் ஏதோ தரமுயர்ந்தவை எனவும் ஏனையவை தரம் குறைந்தவை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாது. இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இல்லாத சூழ் நிலையில் இவ்வாறு செய்வது ஜனநாயக விரோதமானது என்பதையும் இச் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என்பதையும் எமது தீர்க்கமான வேண்டுகோளாக பதிவு செய்து கொள்கிறேன்.

தற்போது வடக்கு மாகாண சபையின் சட்டரீதியான நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.