04

04

“கொரோனாவினால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் அதேநேரம்  நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்” – ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு !

“கொரோனாவினால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் அதேநேரம்  நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்”என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(03.01.2021) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள கட்டியெழுப்ப சுற்றுலா சபை தயாரித்த திட்டத்திற்கு முரணாகவே சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்திய நாடுகளில் இருந்து மாத்திரமே சுற்றுலாப்பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வர சுற்றுலா சபை திட்டம் வகுத்தது.

சுற்றுலா சபை தயாரித்த திட்டத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்று  பரவலை கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பட்டியலில் உக்ரைன் நாடு குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் நாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இதுவரையில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். எமது நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறக்கின்ற நிலையில் உக்ரைன் நாட்டு சனத்தொகையில் ஒரு மில்லியன் பேரில் 430 பேர் இறக்கின்றனர்.

எந்த நாடும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார தாபனம் அறிவிக்கவில்லை. சுகாதார பாதுகாப்பினை பின்பற்றி சுற்றுலா சேவையில் ஈடுப்பட சுற்றுலாத்துறை சேவையாளர்கள் தயார் நிலையில் உள்ள போது பிற தரப்பினர் அரசியல் செல்வாக்குடன் சுற்றுலாத்துறை சேவையில் தற்போது ஈடுப்படுகிறார்கள்.

உதயங்க வீரதுங்க அலரி மாளிகையின் விலாசத்தை தனது உத்தியோகபூர்வ விலாசமாக குறிப்பிட்டு சுற்றுலாத்துறை சேவையில் ஈடுப்படுகிறார். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சுற்றுலாத் ஊடாக கொவிட்-19 வைரஸ் கொத்தணி தோற்றம் பெறும் அபாயம் காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் சுகாதார தரப்பினர் எதற்கு. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் பொறுத்தமற்றதாக உள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும்  வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.  மறுபுறம் நாட்டு மக்கள் சிறை கைதிகளை போன்று பார்க்கப்படுகிறார்கள்.

உயர்வர்க்கத்தை திருப்திப்படுத்த அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கியது. இதன் தாக்கத்தை இவ்வருடம் எதிர்க் கொள்ள நேரிடும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம் !

யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

VideoCapture 20210104 100041

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

காவல்துறையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ஏன்?’ என தமிழர் தலைமைகள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் தமிழர் தலைமைகள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது படையினர் உண்மையில் நல்லொழுக்கம் மிக்கவர்வர்கள். மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்களை மீட்டவர்கள். அப்படியானவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது?

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட எமது படையினர் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் நாம் பல தடவைகள் கூறி விட்டோம். இதைத் தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டும். சுயலாப அரசியல் நடத்தும் அவர்கள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

செய்யாத குற்றங்களுக்காக எமது படையினரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்தத் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு கடந்த வருடம் விலகிவிட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் போர்க்குற்றங்கள் தொடர்பிலோ அல்லது சர்வதேச விசாரணை தொடர்பிலோ இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது. புதிய பிரேரணை எம் மீது திணிக்கப்பட்டால் அதையும் எதிர்கொண்டு வலுவிழக்கச் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.

உண்மையில் எமது படையினர் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அதற்கான விசாரணையை நாம் உள்நாட்டில் நடத்தலாம் அல்லது சர்வதேசத்தில் கோரலாம். அப்படி எதுவும் இடம்பெறாத நிலையில் எதற்கு விசாரணையை நாம் நடத்த வேண்டும்? எதற்கு சர்வதேச விசாரணையை நாம் எதிர்கொள்ள வேண்டும்” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“இலங்கை அரசு பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.” – ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை !

“இலங்கை அரசு பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அரசை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உதாசீனம் செய்யாத வகையில் அரசு நடக்க வேண்டும். தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு விலகியமை மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

கால அவகாசம் கேட்டாவது தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து தீர்மானங்களை உதாசீனம் செய்தமையால் மேலும் பல நெருக்குவாரங்களை இலங்கை சந்திக்க வேண்டி வந்துள்ளது. அதன் ஓர் கட்டமாக இம்முறை புதிய பிரேரணை ஒன்றை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அந்தப் பிரேரணை மிகவும் வலுமிக்கதாக இருக்கும் என்று தமிழ்த் தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில், போர்க்குற்ற விவகாரத்தை அரசு தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு சாதுரியமாக ஈடுபட வேண்டும். அதைவிடுத்து பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது எமது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும். எனவே, வீர வசனங்கள் பேசி சர்வதேச விசாரணைப் பொறிக்குள் இலங்கையைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டார்.

‘இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் அடுத்தடுத்துக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமையினை தொடர்ந்தே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையை தயாரிக்க தமிழ்தேசியக்கட்சிகள் இணக்கம் !

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காடு விருந்தினர் விடுதியில் நேற்று(03.12.2021) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கட்சிகள் சந்தித்துப் பேசின. மேலும், ஜெனிவா விவகாரத்தைக் கையாள இந்த மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம். ஏ. சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் கட்சியின் பிரதிநிதி ஒருவர் என மூவர் கொழும்பில் கூடிப் பேசுவது என்று முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் . தகவல் தருகையில், பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமைகள் கவுன்ஸிலில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை பூச்சியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோம்.

2012இலிருந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கிறது. அது தொடர்பிலும் பேசப்பட்டது. மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேலதிகமாக வட, கிழக்கை சேர்ந்த தமிழ்க் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடிய வகையில் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்க வேண்டியமை தொடர்பாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக மேலதிகமாக செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூக பிரதிநிதிகளின் அமைப்பும்,நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்ற விடயத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருக்கிறோம். மிக விரைவில் அது முன்னெடுக்கப்படும். அதனை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம்” என்றார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ். சிவகரனின் ஒருங்கிணைப்பில் நேற்று இடம்பெற்ற இந்தச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் திருமதி அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்