05

05

வீணாகிப்போனது திமுத் கருணரத்னவின் சதம் – தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல இலக்குகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணரத்ன 103 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 66 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணி இலக்குகள் இழப்பின்றி 67 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடரும் நடைமுறை ஆரம்பம் !

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக அவர்களை பி.சி.ஆர் மற்றும் உடனடியாக என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸாரினால் 300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளது.

கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார பிரிவு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும் சிலர் குறித்த ஆலோசனைகளை கடைப்பிடிக்காததால் அவ்வாறான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, கொவிட் இரண்டாவது அலை ஆரம்பத்தில் இருந்து இதுவரை சமூக இடைவௌியை பேணாத மற்றும் முகக்கவசம் அணியாத 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பாராளுமன்றில் இரா.சாணக்கியனுக்கு கிடைத்த இன்னுமொரு முக்கிய பொறுப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் பாராளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன.

இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது யாழ்பல்கலைகழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று 04 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் தண்டணை வழங்கப்பட்ட மாணவர்கள் தம்மைத் தண்டணைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பிரதாய பூர்வ வாயிலில் நேற்று முதல் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மாணவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு ஒறுப்பை முடித்து வைத்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, நேற்று மாலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்ததோடு, நேற்று பின்னிரவில் மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தியிருந்தார்.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் இன்று மாலை வரை தமது உணவு ஒறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

சற்று முன்னர் மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்குச் சென்ற துணைவேந்தர் உணவு ஒறுப்பைக் கைவிடுமாறு மாணவர்களிடம் விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உள்நுழைவுத் தடையை நீக்கும் அதிகாரம் தனக்குண்டு என்பதையும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்து தமது வழமையான செயற்பாடுகளின் மூலம், அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பீடத்தின் விரிவுரையாளர்களின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாணவர்கள் தொடர்ந்தும் உணவு ஒறுப்பில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், மாணவர்கள் உணவு ஒறுப்பைக் கைவிட்டு, தன்னால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் திறவு கோலாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதற்கு மாணவர்களும் முன் வந்தனர். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், மாணவர் நலச் சேவை உதவிப் பதிவாளர்,  மாணவ ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில்  துணைவேந்தர் மாணவர்களுக்குப் பால் வழங்கி உணவு ஒறுப்பை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.

“சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்” – தர்மலிங்கம் சுரேஸ்

“சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (05.01.2021) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இன அழிப்பு விவகாரங்கள் அனைத்தும், ஒரு காலகட்டத்தில் சர்வதேச சமூகத்தினால் விசாரணை செய்யப்படும். அதன்மூலம் சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் தரப்புகளையோ தமிழ் மக்களின் போராட்டம் வீணாண போராட்டம் என்று கூறுபவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்ககூடாது. நாங்கள் சுமார் 50ஆயிரம் மாவீரர்களையும் ஒரு இலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களையும் யுத்தத்தில் இழந்திருக்கின்றோம். இதற்கான சரியான பரிகாரத்தினைப் பெறவேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் தேவை.

கடந்த காலத்தில் அது நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் போராட்டம் மெளனிக்கப்பட்டு 10வருடங்களை கடந்துள்ள நிலையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் தமிழ் தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்த தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலத்திலும் தற்போதைய காலத்திலும் உள்ள அரசாங்கங்களை பாதுகாத்து சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவைத்துள்ளார்களே தவிர பூகோள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை.

மாறாக இந்த அரசாங்கத்தினையும் போரில் குற்றமிழைத்தவர்களையும் சர்வதேச விசாரணைகள் ஊடாக விசாரிக்கப்படவேண்டியவர்களையும் பாதுகாத்துள்ளார்களே தவிர இதுவரையில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

இன்றுள்ள அரசியல் தலைமைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று தமிழ் மக்களின் அரசியல் இருப்பினையும் தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களையும் இனப்படுகொலை விவகாரங்களையும் வெளிப்படையாக சர்வதேசமும் தென்னிலங்கை மக்களும் அறியும் வகையில் தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றார். ஜெனிவா விவகாரத்தில் கூட தமிழ் மக்களின் குரல் ஒன்றாக ஒலிக்கவேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு முடிவினை எடுத்துள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக எந்த தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செல்வதற்கு தயாராகயிருக்கின்றோம்.

மாறாக இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் வகையிலும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையிலும் நகர்வுகளை மேற்கொண்டால் அவ்வாறானவர்களுடன் என்றைக்கும் கூட்டிணைந்து செயற்படமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

“துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளது. ஜனாதிபதி அவருக்கு நியாயத்தை வழங்கினால், எவரும் அதனை தவறு எனக் கூற முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை தொடர்பான விடயங்கள் அண்மையில் இலங்கை அரசியலில் பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் அது தொடர்பான விடுதலை மனு ஒன்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும் கையெழுத்திட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் முன்னர் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அறிக்கை ஒன்றை கோருவார். சட்டமா அதிபரிடம் கருத்துக்களை கேட்டறிவார்.

அதன்பின்னர் குற்றப்பத்திரிகை தொடர்பில் வாதாடிய சட்டத்தரணிகளிடம் கருத்துக்களை கேட்பார். இந்த அறிக்கைகளை ஜனாதிபதி நீதியமைச்சருக்கு வழங்க வேண்டும். இந்த அறிக்கைகளை ஆராந்த பின்னர் ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஜனாதிபதி தனியாக தீர்மானிக்க முடியாது. இது சம்பந்தமாக தீர்மானிக்க மூன்று தரப்பினர் உள்ளனர். நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் அகியோரே அந்த மூன்று தரப்பினர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எப்படி சட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டன. நீதிமன்றத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா, நீதிபதிகள் எப்படி வழக்கை விசாரித்தனர்.அரசியல்வாதிகள் நேரடியாக தலையிட்டனரா என்பன தொடர்பான சாட்சியங்கள் இருந்தால் அனைத்தும் அறிக்கையில் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி அணுசக்திக்கு தேவையான யுரேனிய அளவை அதிகரித்த ஈரான் !

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது.

அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், அணுசக்திக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தார். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீறியது. அந்த வகையில் யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக உயர்த்தப்போவதாக ஈரான் அண்மையில் அறிவித்தது. இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஹசன் ரூஹானி உத்தரவின்பேரில் போர்ட்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியதாக ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளமை உலக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் !

அபே ஜன பல கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக  பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அத்துரலியே ரதன தேரரின் பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் கடந்த தினம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும்”  – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும்; வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் நேற்று (04.01.2021) கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றியாளர்களுக்கான, சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாக இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிப்தியை வெளிப்படுத்தினர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களான வை. தவநாதன் மற்றம் கோ. ருஷாங்கன் ஆகியோரின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதுதொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது..

ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி !

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் ஊடாக மருந்தினை பெறுவதற்கு மருந்து உற்பத்தியாளர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிவழங்கப்பட்ட கொரோனா மருந்தினை உலகநாடுகள் மத்தியில் சமமாக விநியோகிப்பதற்காக உருவாக்கப்பட்டதே கொவக்ஸ் சர்வதேச திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மருந்தினை பெறுவதற்கு தகுதிவாய்ந்த நாடு இலங்கை என உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிவழங்கியுள்ளது.