09

09

யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்பு – தமிழக முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் !

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக  தலைமையில்தான் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம், cm ...

“இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூண் இரவோடிரவாக அழிக்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி தருகின்றது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகதமிழர்களை பெரும்வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும் அதற்கு துணைபோன யாழ்பல்கலைகழக துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என எடப்பாடி பழனிச்சாமி குறிபபிட்டுள்ளார்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்! பிரதமர் மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், “ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது” – பொ. ஐங்கரநேசன்

“துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது”  என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றிரவு (08.01.2021) பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ச சகோதரர்கள் அதற்கான சாட்சியங்களையும், தடயங்களையும் அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அவர்தம் உறவினர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியைத் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரைக் கொண்டே இடித்து அழித்துள்ளனர்.

நினைவுத்தூபிகள் பெறுமனே சீமெந்தாலும் கற்களாலும் ஆன உயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும் பாறையாகக் கருதப்படுகின்ற கருங்கல் தெய்வச்சிலையாக வடிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு புனிதம் பெற்று வணக்கத்துக்குரியதாக மாறுகின்றதோ அதேபோன்றுதான் நினைவுக்கற்களும், நினைவுத்தூபிகளும். இவற்றில் மரணித்துப் போனவர்களின் ஆன்மா குடிகொண்டிருப்பதாகவே அவற்றை அஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள்.

தமிழத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பை நல்கிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ. துரைராஜா அவர்கள் ஒரு துணைவேந்தராக பல்கலைக்கழகத்தை நல்வழி நடத்திச் சென்ற அதேவேளை, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை குறித்த தெளிவான பார்வையுடனும் செயற்பட்டிருந்தார். அதனாலேயே அவர் மாமனிதராகப் போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாக வேண்டாம். குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கான உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றியிருக்கமாட்டார்கள்.

மேலும் பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது. இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என தெரிவித்துள்ளார்.

“பல்கலைகழக தீர்மானத்துக்கு அமையவே நினைவுத்தூபி இடிக்கப்பட்டது ” – இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட விடயத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தனியார் ஊடகமொன்று வினவிய போதே, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிக்கலுக்குரிய சம்பவங்களின் போது பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் தம்மால் தலையீடு செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் எஸ்.சற்குணராஜா குறிப்பிடுகின்ற போது , “யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

 

தகவல் மூலம் – ஐ.பி.சி தமிழ்

கொரோனா அச்சமூட்டி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் – யாழ்.பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

மேலும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீளக்கட்டடி தரும்வரை நிறுத்தாத உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

No description available.

“யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள் ?” – முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கேள்வி !

“யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள்” என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றிரவு(08.01.2021)  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் தமது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு ட்விட் செய்துள்ளார்.

மக்களை பலவந்தமாக மறக்கச்செய்வதற்கான முயற்சிகள் மக்கள் முன்னரை விட அந்த விடயத்தை மேலும் நினைவில் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள் என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள அவர் “மக்களின் இழப்புகள் நினைவுகள் வலிகள் துயரங்கள் கண்ணீர்கள் ஏன் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன”  எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் வலிகளும் வேதனைகளும் கண்ணீரும் ஆயுதங்களை விட வலிமையானவை என்பது உங்களிற்கு தெரிந்திருக்கின்றது என அவர் பதிவிட்டுள்ளார்.

எந்த தலைவர்களின் உத்தரவு காரணமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களின் நினைவுத்தூபியை சிதைப்பதற்கு இரவின் இருளில் இயந்திரங்களை அந்த தலைவர்களே அனுப்புவது இழிவானது – இனவெறி -கொடுரமானது என கிரவுண்ட் வியுஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் அமாலினி டி சய்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸையும் அழிக்கும் திறன் கொண்ட பைசர் தடுப்பூசி – ஆய்வில் கண்டுபிடிப்பு !

சீனாவின் வுகானில் பரவ ஆரமபித்து உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன.

அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதற்குள் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது.

இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகளைக்கொண்டு மேற்படி வைரசுக்கு எதிராக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்த ரத்த மாதிரிகள் உருமாறிய புதிய வைரசை வெற்றிகரமாக தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக பைசர் நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பிலிப் டோர்மிட்சர் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா !

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் புகோல்ஸ்கி 62 ஓட்டங்களும், லபுஸ்சேன் 91ஓட்டங்களும், ஸ்மித் 131 ஓட்டங்களும் எடுத்து அணியை வலுப்படுத்தினர்.
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 இலக்கு இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரஹானே 5 ஓட்டங்களிலும் புஜாரா 9 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரகானே 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  பொறுமையாக ஆடிய புஜாரா, சுப்மன் கில் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். ரிஷப் பன்ட் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 244 ஓட்டங்களில் தனது சகல இலக்குகளையும் இழந்தது. ஜடேஜா 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 இலக்குகளை கைப்பற்றி இந்திய அணியின் ஓட்டக் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார். ஹாசில்வுட் 2 இலக்குகளையும், ஸ்டார்க் ஒரு இலக்கையும் எடுத்தனர்.
இதனையடுத்து 94 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” – மைத்திரி சிறிசேன புகழ்ச்சி !

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று(08.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க நாட்டில் புதியதொரு யுகத்தை உருவாக்கிய தலைவர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். சுமார் 400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டி நாட்டு மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்ததில் அவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார்.

1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க அரசாங்கத்தை மக்கள் தமது அரசாங்கம் என்று கருதினர். 3 வருடங்கள் குறுகிய காலத்திற்குள் அவர் பல சேவைகளை ஆற்றியுள்ளமையின் காரணமாகவே இன்றும் மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.

அவர் தலைமையிலான முற்போக்கான அரசியல் கட்சி நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. மனிதனொருவனின் பிரதான கடமை பிரிதொரு மனிதனுக்கு சேவையாற்றுவது என்பதே அவரது கொள்கையாகும். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவின் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையிலேயே சர்வதேசம் இலங்கையின் மீது அவதானம் செலுத்தியது.

இவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். அவரது முற்போக்கான அரசியல் முன்னெடுப்புக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மாத்திரமின்றி முற்போக்கு சிந்தனையுடைய அனைவராலும் தொடர்ந்தும் பின்பற்றப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது “தற்போதும் நான் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே நான் கூறினேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.” எனவும் அவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

“மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய மாவீரர் நினைவு தூபிகளும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்” – துணைவேந்தர் எஸ்.சற்குணராஜா விளக்கம் !

“மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய மாவீரர் நினைவு தூபிகளும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்”  என யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சற்குணராஜா கூறியுள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது. மேலும் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு அங்கு கூடிய மாணவர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்.

இதனை அகற்றத் தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பனவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம்” – இரா.சம்பந்தன் நம்பிக்கை !

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பிறந்துள்ள புதுவருடத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக இது இருந்தது. இது எமக்கு மிகவும் நம்பிக்கை மிகுந்த – திருப்திமிக்க சந்திப்பாகவும் உள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை விவகாரங்களில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். இங்குள்ள நிலைமைகளை ஆழமாக அறிந்தவர்.

மாகாண சபை முறைமைகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் புதிய அரசமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினோம்.

அவர் எமக்கு அளித்த பதில்கள் நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன. புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் நேரில் எடுத்துரைப்பார். இது தொடர்பில் அவர் எமக்கு வாக்குறுதியும் தந்துள்ளார்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும், இன்று எம்முடன் அவர் பேசிய விடயங்களும் ஒன்றாகவே உள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். இந்தக் கருத்துக்கள் எமக்கு  நம்பிக்கை மிகுந்தவையாக உள்ளன

தீர்வு விடயம் மற்றும் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான எமது பேச்சுகள் தொடரும்” என குறிப்பிட்டார்.