12

12

“யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்புக்கும் அரசுக்கும் தொடர்பு எதுவுமில்லை” – அரசாங்கம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (12.01.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க துணைப் பேச்சாளர் உதய கம்மன்பில, இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

யுத்த நினைவுச் சின்னத்தை அழித்து பின்னர் அதை புனரமைப்பதற்கான முடிவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை அழிக்கும் முடிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த வாரம் ஆதரித்தது. அதாவது இந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவோடு இரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் இடித்தழிக்கப்பட்டது. இதற்கிடையில், மாணவர்களின் போராட்டத்தை அடுத்து போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புதிய நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா மற்றும் மாணவர்கள் இணைந்து இடித்தழிக்கப்பட்ட இடத்திலேயே அடிக்கல்லினை நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை !

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாதிரிகள் பெறப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதன் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று(12.01.2021) இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று சுயதனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !

நீதிமன்ற அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை பல்லன்சேன தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” – அமைச்சர் நாமல் ராஜபக்‌ச

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தனக்குக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தனக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின், நேற்றுமுன்தினம் காவற்துறை மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியினுள் ஹரின் பெர்னாண்டோவுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விடயங்களில் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

“நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே கிடையாது. அது 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது” – அமைச்சர் காமினி லொகுகே

“நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே கிடையாது. அது 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது” என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் காமினி லொகுகே இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துமாறு ஆரம்ப காலத்தில் இருந்து பலதரப்பினரால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் மாறுப்பட்ட பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் பிரித்து வழங்கினால் அங்கு சுயாட்சி தன்மையே நிலவும்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல எந்த மாகாணங்களுக்கும் ஒருபோதும் பிரித்து வழங்கப்படமாட்டாது.

இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விதிவிலக்கல்ல. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணசபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபை முறைமையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன.அவை திருத்தப்பட்டு மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும். எந்த இன மக்களின் உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது.

பொது சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெறாது” என அவர் தெரிவித்துள்ளார்.