13

13

“உருமாறிய புதிய கொரோனா வைரஸ் உலகின் 50 நாடுகளுக்கு பரவிவிட்டது” – உலக சுகாதார அமைப்பு தகவல் !

உலகின் 50 நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவைரஸ்  பரவல் தற்போது 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியகொரோனாவைரஸ்  தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும்கொரோனாவைரஸ்  அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்துகள்  இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்று பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகைகொரோனாவைரஸ்  பரவத் தொடங்கியுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இது எதிரொலித்துள்ளது.

உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தொடர்ச்சியாக முடக்கப்படும் ட்ரம்பின் சமூக வலைத்தள கணக்குகள் – யூடியூப் கணக்கும் முடக்கம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நாடாளுமன்றம் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதன் காரணமாகவே நாடாளுமன்ற கலவரம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனைத்தொடர்ந்து டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதி டிரம்பின் கணக்குகளை முடக்கி வைத்தன.

முடக்கப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் டிரம்ப் வன்முறையை தூண்டும் சில பதிவுகளை வெளியிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது.

அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் டிரம்பின் கணக்கு, ஜனவரி 20-ந் திகதி வரை (ஜோ பைடன் பதவியேற்பு விழா நடக்கும் நாள்) முடக்கப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளன.‌

இந்த நிலையில் பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் தனது யூடியூப் சேனலில் அண்மையில் பதிவிட்ட ஒரு வீடியோ சர்ச்சைக்குரியதாகவும் நிறுவன விதிமுறைகளுக்கு புறம்பானதாகவும் இருந்ததால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்பின் யூடியூப் சேனல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

70 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் – விசஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றம் !

1953ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்றார். எலியை வேட்டையாடும் பூனையை தத்தெடுப்பதற்காக சென்ற லிசா 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் அவர் கத்தியால், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு லிசாவுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரிடம் இறுதி ஆசைகுறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மரணதண்டனையை நிறைவேற்றிய அனைவரும் அதற்காக வெட்கப்படவேண்டும் என மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மற்றும் மருட்சியடைந்த பெண்ணை கொலைசெய்யும் வேட்கையில் இந்த அரசாங்கம் தீவிரமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாகவும் பின்னர் நீதிபதியொருவரின் உத்தரவு காரணமாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பிற்போடப்படப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தது.
குறிப்பிட்ட பெண் பிறக்கும்போதே மூளை பாதிப்புடன் பிறந்தவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தகுதியற்ற உடல்நிலையை கொண்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
சிறுமியாகயிருந்தவேளை அவர் தொடர்ச்சியாக குடும்ப உறவினர்களால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டார் என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

 

பறிக்கப்படுமா ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி விசாரணை நேற்றுமுன்தினம் தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதிகளான சிசிர டீ. ஆப்ரூ மற்றும் பிரீதீ பத்மன் சூரசேன, விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் குழாம் மூலம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தீர்ப்பை வெளியிட்ட மேற்படி நீதிபதிகள் குழாம் தலைவர் சிசிர டீ. ஆப்ரு தெரிவிக்கையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சட்ட மாஅதிபரினால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதித்தல் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.

அந்தவகையில் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவாளியாக தீர்ப்பிடப்படுகின்றாரென்றும் அவருக்கு 04 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான சுனில் பெரேராவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்தைகளையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் மோசடிக்காரர்களெனத் தெரிவித்துள்ளார். மேற்படி கருத்துக்களின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார். அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரென அவருக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நேற்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் பல்லன்சேனையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இதன்மூலம் இல்லாமல் போகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் தொகை !

இன்றைய தினத்தில் நாட்டில் 687 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 43,267 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 247 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

6,715 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 26 இந்திய மீனவர்கள் விடுதலை !

இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வழக்கின் காத்திரத்தன்மையை இந்திய மீனவர்கள் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நீதிபதி நேரயாகவே மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், மீனவர்கள் பயணித்த நான்கு படகுகள், மீன்களின் ஒலியை கண்டறிய பயன்படுத்தப்படுகினற எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட்ட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புககளில் கைது செய்யப்பட்டால் உடனடியாவே இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்து விடுதலை செய்தார்.

அத்துடன் குறித்த மீனவர்களே எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இறுதி இந்திய மீனவர்களாக இருக்க வேண்டும் என்றும் இந்த எச்சரிக்கையை மீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்களின் பொருட்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்றும் எச்சரித்து விடுதலை செய்தார். குறித்த வழக்கின் போது நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரேயே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் – சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் பெரியகல்லாறு பிரதான வீதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பேது சிறுமியின் மரணம் கொலையெனவும் குறித்த சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசமெழுப்பினர்.

ஊர்வலமாக பிரதான வீதியில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மட்டக்களப்பு –கல்முனை வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்திற்குள் அவர்களை கைது செய்வோம் என வழங்கி உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரண வீட்டுக்கு சென்று இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவரின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன் குறித்த சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டில் இருந்த போது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் அழைத்துச்சென்ற நிலையில் சிறுமி குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுமி சித்திரவதைக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த சிறுமி நீண்டகாலமாக துன்புறுத்தலுக்குள்ளாகிய நிலையில் சிறுமியை துன்புறுத்தியவர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூறுவது அவசியம். அதிலிருந்து எந்த ஆட்சியாளர்களாலும் விலகிச்செல்ல முடியாது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழினத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால் அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என இலங்கைக்கான  வதிவிடப்பிரதிநிஹனா சிங்கரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூறுவது அவசியம். அதிலிருந்து எந்த ஆட்சியாளர்களாலும் விலகிச்செல்ல முடியாது. பொறுப்புக்கூறல் செய்யப்படாது நல்லிணக்கம் சாத்தியமே இல்லை.இதற்கான அழுத்தங்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் வலுவடையும். இந்த விடயங்களை அரசாங்கத்திடம் திடமாக எடுத்துக் கூறும்படியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கும் இடையிலான சந்திப்பு  கொழும்பில் இடம்பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேர்தல் முடிவுகளின் பின்னர் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைவாகவே இந்தச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் முதலில் தற்போதைய அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டது. இதன்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசமைப்பு சாத்தியமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நான்: புதிய அரசமைப்பு கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கை கொள்ளவில்லை. ஒருவேளை புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டாலும், ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிவரும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசங்கள் அங்கீகரிப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்க மாட்டார்கள் என்பது உறுதியான விடயமாகும் என்று கூறினேன்.

அதனைத் தொடர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார்.

இதன்போது இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை விவகாரத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதனால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.
ஆகவே, இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.

மேலும்; மாறிமாறி எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் வியடத்தை நடைமுறைப்படுத்தும் மனோநிலையில் இல்லை என்பது கடந்த பத்து வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே தான் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச தரப்பை நாம் கோரிக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டேன்.

 

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முனையத்தை விற்க முன்னைய அரசாங்கம் ஓர் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுவதாக குற்றம் சாட்டி வர்த்தக சங்கத்தினர் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“யாழ்ப்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தில் நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப் புறப்பட்டோம்” – பிள்ளையான்

“யாழ்ப்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தில் நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப் புறப்பட்டோம்” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் 2005 சுட்டுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2015 ம் ஆண்டு பிள்ளையான் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக  மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தில் இடம்பெற்று ஊடகவியலாள் சந்திபிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் 2005 சுட்டுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 2015 ம் ஆண்டு பிள்ளையான் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளது.

தை பிறந்தால் வழிபிறக்கும் அந்த அடிப்படையில் என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே சிஜடியின் இடத்துக்கு செல்லுகின்றபோது ஊடகங்களுக்கு சொன்னேன் நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்க நினைக்கின்றது யாருக்கோ? எல்லாம் பாவிக்க முடியாத சட்டத்தை அப்பாவியாக அரசியல் செய்து கொண்டிருக்கின்ற எனக்கு பாவிக்க முனைகின்றது என தெரிவித்தேன்  ஆயிரத்து 869 நாட்கள் (1869) சிறைச்சாலையிலே வாடினேன் சிறைச்சாலை என்பது உணவில் இருந்து படுக்கையில் இருந்து மழை பெய்தால் குளிர்,மூட்டை புளுதி, போன்ற சொல்லமுடியாத துன்பங்கள் சிறைச்சாலையில் இருக்கின்றது. அப்படியெல்லாம் என்னை அடைத்து நசுக்கினர்.

காரணம் 2015 ஆண்டு வந்த நல்லாட்சி நூறு வீதம் தங்களோடு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த பரிசாக இதைச் செய்தார்கள. அவர்களுக்கு முட்டு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க மைத்திபால சிறிசேன அவருடைய கையொப்பத்தையிட்டதன் காரணமாக நான் வாடினேன்.

ஆனால் அடிக்கடி சிறைச்சாலையில் இருந்து வெளி வரும் போது என்னை வரலாறு விடுதலை செய்யும் என தெரிவித்தேன் எனக்கு நம்பிக்கையிருந்தது இந்த வழக்கில் எனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஜோசப்பரராஜசிங்கத்தை நான் கண்டதே இல்லை. அவருக்கு வாக்களித்ததும் இல்லை அவர் அருகில் பார்த்ததும் இல்லை.அவருடன் அரசியல் ரீதியான எந்த விரோதமும் எனக்கு இல்லை. அவர் மரணிக்கும் போது 2005ம் ஆண்டு அப்போது நான் அரசியலில் இருக்கவில்லை அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அரசியலுக்காக எந்தவிதமான முயற்சியும் எடுத்த மனிதனும் நான் இல்லை. 2008ம் ஆண்டு தான் முதல்முதலாக மாகாணசபை தேர்தலில் நான் போட்டிபோட்டேன் . அந்த நேரத்தில்தான் நான் முதலாவது வாக்கைச் செலுத்தினேன்.
ஆனால் அந்தநேரத்தில் முதலமைச்சராக வரவேண்டும்  என முன்னாள் அரசாங்க அதிபர் மௌனகுருசாமியை நிறுத்துவது அல்லது எமது கட்சிதலைவர் மறைந்த ரகுவை முதலமைச்சராக நியமிப்பது என்ற அடிப்படையில் தான்  நான் தேர்தலிலே போட்டியிட்டேன். இருந்தாலும் காலசூழல் என்னை முதலமைச்சராக்கியது.

எனவே அக்கிரமம் செய்து அரசியலுக்காக வரவேண்டிய தேவைப்பாடு இருக்கவில்லை. இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் என்று நடிக்கின்ற பொய்யான மக்களை உசுப்பேற்றுகின்ற வேடதாரக்கூட்டம் என்னை கிழக்கிலே வளர வைத்தால் அவர்களின் அரசியல் முடிந்துவிடும் அல்லது யாழ்ப்பாணத்திலே இருந்து வந்து இங்கு தேர்தல் கேட்க முடியாது என்று உறுதியாக நம்பியவர்கள். இந்த பயங்கரவாத சட்டத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்த பிதாமக்கள் அவர்களுடைய வாரிசுகளாக இருக்கின்றவர்களை நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதனுடாக என்னை அடைப்பதற்கு முயற்சி செய்து அடைத்தனர்.

நான் நீதிதுறையை நம்பி பலமுறை வாதாடினேன் என்னை கைது செய்த காலத்தில் மாகாணசபை உறுப்பினராக இருந்தேன் ஒரு மாகாணசபை உறுப்பினரை அடைப்பது என்பது அந்த மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கு சமன். இதை நீதிபதி தீர்ப்பிலே எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலே 2005,6,7, ஆண்டு பகுதிகளிலே எத்தனை கொலைகள் இடம்பெற்றது. ஜோசப்பரராயசிங்கம் என்ற அந்த மனிதர் 2005  தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் வெற்றி பெற்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டு கொலை செய்துவிட்டு  அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களுக்கு எந்தவிதமான விசாரணையும் இல்லை. ராஜன் சத்தியமூர்த்தி, கிங்சிலிராசநாயகம் கொல்லப்பட்டனர். அதேபோல பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை யாருமே கதைப்பதில்லை கேட்பதில்லை. ஆனாலும் மானிப்பாயில் பிறந்தார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாரிசுகள் என்ற அடிப்படையில் முன்நிறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் ஆராதனையில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டீர்கள். இப்போது இருக்கின்ற ஆண்டகைதான் அப்போது இருந்திருப்பார் அவ்வாறே மற்றும் ஆராதனையில் ஈடுபட்ட எவரும் என்னை கண்டார்களா?  அல்லது நான் சொன்னதாக உறுதியாக சொன்னார்களா? எந்தவிதமான கண்ட, தொழில்நுட்ப, சாட்சிகள் இல்லாமல் என்னை அடைத்தார்கள்.  ஆனாலும் அரசியல் காட்புணர்ச்சி கொண்டவர்கள் தங்களுடைய அரசியலுக்காகவும் ஊடகங்களின் வளர்ச்சிக்காக எங்களுடைய கைதுகளைப் பயன்படுத்தினர்களே தவிர  நாங்கள் அடிபட்டு குரல்வளை நசுக்குப்பட்டு எங்கள் குடும்பங்களும் கட்சி தொண்டர்களும் வீதிகளில் கண்ணீர்விட்டு திரிந்தபோது எந்த ஊடகமும் எங்களுக்கு உதவி செய்யவில்லை.

எனது தம்பியின் மனைவி அடிக்கப்பட்டு சி.ஐ.டி யினரால் ஒதுக்கப்பட்டபோது எந்த பெண்ணியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை. எவ்வளவோ?  அநியாயங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்திகாட்டியது யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சமதர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதிகளை தடுத்துவைக்க கூடாது என குரல் கொடுத்தனர். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் என்னை தண்டிக்க வேண்டும் என இரட்டை முகத்தைக் காட்டுகின்றனர்.  நான் ஒரு போராட்ட அமைப்பில் சேர்ந்து போராடியது குற்றமா, அல்லது இன்று நசுக்கப்பட்டிருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு பணி செய்வது குற்றமா? அல்லது வெறுத்து ஓதுகிய மாகாசபையை எடுத்து மாகாணசபை  முறமையை நம்புங்கள் அதனூடாக பணியைச் செய்யமுடியுமா என்று காட்டியது குற்றமா?

நீங்கள் எங்களை அகற்றிவிட்டு நீங்கள் அந்த இடத்தை தக்கவைப்பதற்கு கைக்கூலிகளை கொன்றுவிட்டு வேலை செய்வதற்கான திட்டங்களை வகுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுப்போய் இருக்கின்ற அசிங்க நிலமையை யாழ்ப்பாணத்தில் பார்க்கமுடியும் . நான் குற்றமற்றவன் வரலாறு என்னை விடுதலை செய்யும் எந்தவிதமான களங்கமற்றவன் நீதித்துறைக்கும் சட்டத்தரணி அணில் சில்வாக்கும் அவருடைய குழாமிற்கும் நன்றிகள்,

பலவேதனையான சம்பவங்களும் நீதிதுறையில் இடம்பெற்றது 3 வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றில் பிணை கேட்டிருந்தேன் அது மறுக்கப்பட்டது சுமந்திரன்  மற்றும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மங்களசமரவீர போன்றோர் தலையீடு செய்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் நீதிதுறையை தனக்கு சார்பாக பயன்படுத்தி மக்களையும் எங்களையும் பழிவாங்கியது என்பதற்கு நான் தான் சாட்சி ஆனால் இன்று எம்.பி ரஞ்சன் ராமநநாயக்கா முழுக்கமுமுக்க நீதித்துறையை கேவலப்படுத்தினார் என உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது . அந்த வழக்குடன் என்னுடைய வழக்கை சம்மந்தப்படுத்தி எதிர்கட்சியினர் பேசுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் என்ன?  பிள்ளையான் தண்டிக்கப்பட்டவரா? எதுவும் தெரியாமல்  முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்களை வெட்டி முதலைக்க போட்டது என தேர்தலுக்காக செய்தது போல் நல்லாட்சி அரசாங்கம் சம்பந்தன். சுமத்திரன் மற்றும் யாழ்ப்பாணத்தார் சிலரை மகிழ்சிப்படுத்துவதற்காக என்னை பயங்கரவாத தடைச்சட்டத்தில் குற்றம் சாட்டி அடைத்தனர்.

ரஞ்சன் ராமநாயக்காவினதும் எனது வழக்கும் சம்மந்தமில்லை கதைக்காமல் எங்களை உங்கள் அரசாங்கம் எப்படி பழிவாங்கியது நீதிதுறையை பயன்படுத்தினீர்கள் எத்தனை நீதிபதியுடன் பேசினீர்கள் என்பதை அறிந்து பாருங்கள். ஆனால் இந்த அரசாங்கம் ஜனாதிபதி தன்னுடைய பலத்தைப் பாவித்து விடுதலை செய்தார்கள் என்ற மாயையத் தோற்றுவிக்க முயல்கின்றர்.   நாங்கள் மேன்முறையீடு செய்திருந்தோம் அந்த மேன்முறையீடு: தீர்ப்பு 37 பக்கம் கொண்டது இதனை இரு நீதிபதிகள் 2020-11-17 தீர்பளித்தனர் இதில் 7 வழக்கிலே தீர்ப்பளிக்கப்பட்டதை எனது வழக்குடன் ஓப்பிட்டு காட்டியுள்ளார். மேல் நீதிமன்றம் இந்த இரண்டு சாட்சிகளை வைத்து வழக்கு நடத்தமுடியாது அதற்கான ஏதுக்கள் இல்லை என்று வழக்கை நிராகரித்தனை அடிப்படையாக வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவற்றையெல்லாம் விளங்கி கொள்ளாத எதிர்கட்சியினர் பிள்ளையான் ஒரு குற்றவாளி ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்ததாக ஒரு மாயைத் தோற்றுவிக்கின்றனர். நான் வழக்கு தொடர்பாக ஜனாதிபதியையோ பிரதமரையோ சந்தித்தில்லை ஏன் எனக்கு தெரியும் இந்த வழக்கை கொண்டு நடத்தமுடியாது என அதேபோல் என்னை கைது செய்த சி.ஐ.டி, ஷானி அபயசேகரா, அப்போது இருந்த டிஜஜிக்கு. மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட தெரியும். இந்த வழக்கு நடத்தமுடியாது என்று இருந்தாலும் சிலரின் மனங்களை குளிரவைக்கவேண்டும் மாகாணசபை நடத்த தேவையில்லை அதிகாரங்கள் தேவையில்லை. ஜ.நாடுகள் சபையில் கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றக் கூடாது என்றதற்கமைய என்னுடன் சோடிக்கப்பட்டது .

முழுக்கமுழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டேன் என்னை விடுதலை செய்வதற்காக கட்சி தொண்டர்கள் கணிசமாக உழைத்தார்கள் . இவற்றுக்கெல்லாம் முடிவு கிடைத்துள்ளது  சிறைச்சாலையில் அடைத்தாலும் மனங்கலங்கி அரசியல் விடுபட்டு ஓரம்கட்டி ஒதுங்கும் மனிதனல்ல நான் சிறையில் இருந்து கொண்டே 54 ஆயிரம் விருப்பு வாக்கைப் பெற்றவன். வடக்கு கிழக்கிலே எந்த தமிழரும் பெறாத வாக்கை மட்டக்களப்பு மக்கள் அளித்தார்கள். ஏன் இயல்பாகவே மட்டக்களப்பில் பற்றுள்ளவன் இறுதிவரைக்கும் நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அந்த நம்பிக்கையை மக்களே நான் செய்து காட்டுவேன். என்னுடைய உறுதி தன்மையையும் மட்டக்களப்பு மீது வைத்துள்ள பற்றையும்  தமிழர்களுக்கு  அதிகாரப் பகிர்வு தேவை  மாகாணசபை முறமைதான் வேண்டும் என்கின்ற நிலமையை நான் நடாத்தி காட்டுவேன் என்று சித்தம் கொண்டுள்ளேன் உறுதியாக இருக்கின்றேன்.

ஆகையால் சுமந்திரன் போன்றவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அல்லது சாணக்கியன் போன்றவர்கள் அங்கும் நின்று இங்கும் நின்று சிறுவயதிலே வெளிநாடு சென்று ஆங்கிலம் கற்று கண்டியில் நின்று படித்து நாங்கள் வரவில்லை.  மக்களுடன் நின்று 16 வயதிலே பாடசாலையை தூக்கி எறிந்துவிட்டு போராட்ட இயக்கத்துடன் சேர்ந்து 2005 பிரபாகரன் எங்களை அடித்து கொல்லும் வரைக்கும் போராடினோம். அதற்கு பின் யாழ்ப்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தில் நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப் புறப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பல தியாகங்கள் அழிவுகளை கண்ட ஒரு கட்சி இருந்தாலும் எங்கள் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படையில் அநியாயம் செய்யாமல் மக்களை கட்டியனைத்து 10 வருடங்களுக்கு பின்னர் உயர்ந்த வளர்ச்சியடைந்துள்ளோம்” என்றார்.