13

13

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து பிள்ளையான் உட்பட்ட ஐவருக்கும் விடுதலை – வழக்கு தள்ளுபடி !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட முதலாம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.

இதன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை” – வீ. ஆனந்தசங்கரி

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை”  என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம்(13.01.2021) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் காலம் காலமாக கூறி வந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை. இந்தத் தைத்திருநாள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் தனது கொள்கையினை தளர்த்திக் கொண்டு, கடந்த 15 வருடங்களாக இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிக் கொண்டு வருகின்றது.

இந்தத் தைத்திருநாளில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து எமது தமிழ் மக்களை நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ வழிசமைத்துக் கொடுப்போம் என்று சபதம் எடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய தலைவர்களின் கனவை நனவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

“போரின் பின் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாண நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” – இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரிடம் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவிப்பு !

இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம் ’(11.01.2021)  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேயான வேற்றுமைகள், ஐக்கிய நாடுகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நன்மையை வழங்கலாம் என்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

அதன் பின்னர் ஜெனிவாவில் வரும் மார்ச் மாதத்தில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வட கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் “தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி பயணித்தால் போரின் பின்னர் வட கிழக்கிற்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்று அறிந்து கொள்ளலாம் என பதிலளித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஹெனா சிங்கர் தான் ஒரு முறை தான் வடக்கு நோக்கி வந்ததாகவும் அவ்விடங்கள் கிராமப்புறங்கள் போல காட்சியளிப்பதாகவும் கூறினார். அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், போரின் பின் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாண நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார். அவ்வாறு முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தம் என்றார்.

தேர்தல் பற்றிக் குறிப்பிடும் போது கொள்கைகளில் இருந்து பிறழ்ந்ததனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி வெகுவாகக் குறைந்தது என்று கூறினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதனுடைய ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களை மறந்துவிட்டதால் தான் மக்கள் மற்றைய கட்சிகளை நாட வேண்டியிருந்தது என்று கூறினார்.

தமிழ் மக்களுக்கு போரின் போதும் அதன் பின்னரும் நேர்ந்தவற்றைப் பற்றி முற்றாக அறிந்து கொண்டால் தான் ஐக்கிய நாடுகள் சபை வட கிழக்கிற்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த பல கொடூரங்களையும் துன்பியல் நிகழ்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால்தான் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

01.அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும்.

02.அங்குள்ள மாணவ மாணவியரின் கல்வி நிலை உயர வேண்டும்.

03.தொழில்களை உருவாக்க பல செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

04.விவசாயம் சம்பந்தமாகவும் மீன்பிடி சம்பந்தமாகவும் நவீன அணுகுமுறைகளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

05.குளங்கள் தூர்வாரப்பட்டு புனருத்தாரணஞ் செய்யப்பட வேண்டும். உள்நாட்டு மீன் வகைகள் இவற்றில் வளர்க்கப்பட வேண்டும்.

06.கிராமங்கள் தோறும் இருக்கும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும்.

07.கணினி வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். உள்ளூர் கிராம வீதிகள் செப்பனிடப்பட வேண்டும்.

08.வடக்கையும் கிழக்கையும் கிழக்குக் கரையோரமாக இணைக்க கடுகதி பெருந்தெருவொன்று அமைக்கப்பட வேண்டும் என இவ்வாறு பல விடயங்களை வதிவிடப் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தியுள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்..

முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகள் வந்த போது அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை திருமதி சிங்கர் அவர்களிடம் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கையளித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமா? என்று கேட்ட போது இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13வது திருத்தச் சட்டத்தை கைவாங்க முடியாது என்று கூறி தமிழர்களுக்குக் கூடிய வலுவுள்ள ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலேயொழிய 13வது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது என்று கூறினார்.

இவ்வாறு பலவாறான விடயங்கள் இரு தரப்பினரிடையேயும் ஆராயப்பட்டன. ஈற்றில் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

காட்டுத்தீயாய் இன்னும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 9.19 கோடி பேர் பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில்  இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 011 வருடங்களை கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.42 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

“நான் எந்த வன்முறையையும் விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. ஆனால் தன்மீது  குற்றம்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருப்பதாகவும், ஆனால் அவர் வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறினார்.
டெக்சாஸின் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு  பயணம்  மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நான் எந்த வன்முறையையும் விரும்பவில்லை. என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு  மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு பயங்கரமான விஷயம். கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, தனக்கு எதிரான சூழ்ச்சியின்  தொடர்ச்சியாகும் என தெரிவித்தார்.
ஆனால் கலவரத்தைத் தூண்டுவதற்கு எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை.

மீண்டும் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்த அமெரிக்கா !

கியூபா மீதாக தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதற்கு பன்நெடுங்காலமாக முயற்சித்த அமெரிக்காவால் அது முடியாது போகவே அமெரிக்க – கியூப இடையான பகை வேகமாக வளர ஆரம்பித்தது. குறிப்பாக கியூபாவின் ரஷ்ய சார்பு கொள்கை அமெரிக்காவின் மீது விழுந்த மிகப்பெரும் அடியாக காணப்பட்டதுடன் கியூபாவை அரசியல் அரங்கில் ஒடுக்கும் போக்கை அமெரிக்கா கைக்கொண்டது.

End the siege of Cuba — it's killing children | by David Gibney | Medium

கியூபாவில் கடந்த 1959 ஆண்டு  புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து 1960-ல் அமெரிக்கா, கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது. அத்துடன் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்த அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வந்தது.

பயங்கரவாத ஆதரவாளராக அறிவித்ததன் மூலம் கியூபாவுடன் குறிப்பிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்களுக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா அபராதம் விதித்தது. கியூபாவுக்கான வெளிநாட்டு உதவிகளை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையை தடை செய்தது.‌ இப்படி இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

அதனைத்தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்கியது. இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக மீண்டும் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ நேற்று வெளியிட்டார். ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அவர் கியூபாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் புகுந்த புதிய வகை வைரஸ் – தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் !

பிரித்தானியாவிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பி.சி.ஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பதாயிரத்தை நெருங்கும் இலங்கை கொரோனா தொற்றாளர்களின் தொகை – மேலும் நால்வர் பலி !

நாட்டில் மேலும் 588 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 672 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 603 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்னர்.

மேலும் நேற்றையதினம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

“மனித உரிமைக்கு பாதுகாப்பாக நாங்கள் தமிழர்களிற்கு ஆதரவாக உள்ளோம்” – பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தகுற்றங்களிற்கு இலக்கான ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவு கூறுவதற்காகவே இந்த தூபி உருவாக்கப்பட்டது என பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சிநாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

நினைவுகூருவதற்கான உரிமை என்பது நல்லிணக்க நீதி செயற்பாடுகளின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தூபியை அழிப்பது நல்லிணக்க முயற்சிகளை நேரடியாக அலட்சியம் செய்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இது தமிழர்களின் வரலாற்றையும் அடையாளத்தையும் அழிக்கும் நடவடிக்கை என பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைக்கு பாதுகாப்பாக நாங்கள் தமிழர்களிற்கு ஆதரவாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் எங்களின் கரிசனைகளைஇலங்கையிடம் எழுப்ப வேண்டும் தனது கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டும் என அவருக்கு எழுதியுள்ளதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது