தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

ira1thiru.JPGபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும். புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் பற்றிய சில குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர். இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருகனாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்–7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

தகவல் ; முனைவர் மு.இளங்கோவன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *