இடம்பெயர் மக்களின் வைத்திய தேவைக்கு மருந்துகள் : சுவிஸ் அரசு சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

IDP_Camp_Aug09இடம் பெயர்ந்த மக்களின் அவசர வைத்திய தேவைக்குரிய ஒரு தொகுதி மருந்துகளை சுவிற்சர்லாந்து வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை ஆற்றி வரும் வைத்தியசாலைகளில் அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு தொகுதி மருந்துகளையே சுவிற்சர்லாந்து அரசாங்கம், சுகாதார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

‘அன்டி பயோடிக்’ மருந்துகளைக் கூடுதலாகக் கொண்ட இந்த மருந்துத் தொகுதி 71 லட்சம் ரூபா பெறுமதியுடையவை என்றும், இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய தேவைக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய 3ஆவது தொகுதியாக இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம், கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான வைத்திய சேவையில் அவசரமாகத் தேவைப்படும் 180 லட்சம் ரூபா பெறுதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை விரைவாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுவிஸ் அரசு ஆதரிக்கின்றது. அதேவேளை, மனிக்பாம் முகாம்களில் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவலைகொண்டிருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள், மனிதாபிமான பாதுகாப்பு மற்றும் அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்புக்கான நிறுவன ரீதியான தீர்வுகளுக்கு தனது ஆதரவையும் உதவிகளையும் வழங்குவது என்ற நிலைப்பாட்டை சுவிற்சர்லாந்து இந்த மருத்துவ உதவிகளின் மூலம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *